Showing posts with label ஜப்பான். Show all posts
Showing posts with label ஜப்பான். Show all posts

Sunday, February 18, 2018

Dance Dance Dance - Haruki Murakami


ஹாருகி முரகாமியின் நாவலான  Dance Dance Dance ஐ ஒலி வடிவில் கேட்டு முடித்தேன். ஒலி வடிவம் எனக்கு மிகப் பழகிய ஒன்றுதான். பதின்மத்திலிருந்தே ஓஷோ பேச்சுக்களை கேசட்டில் திரும்பத் திரும்பக் கேட்டுத் தேய்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் ஒலி வடிவம் எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. ஆனால் நாவல்களை ஒலி வடிவில் இதுவரை முழுமையாகக் கேட்டதில்லை. சென்ற வருடம் The Girl with the Dragon Tattoo நாவலைக் கேட்க ஆரம்பித்து, அலுப்படைந்து  பாதியிலேயே நிறுத்தினேன். அதற்குப் பிறகு ஒலி வடிவ நாவல்களை முயற்சிக்கவில்லை. இந்த வருட முயற்சியில் வெற்றி. பதிமூன்று மணி நேர  Dance Dance Dance ஐ மிகுந்த ஆர்வத்துடன் கேட்டேன். இதில் முக்கிய பங்கு இந்நூலை வாசித்த குரல் கலைஞரான Rupert Degas க்கு உரித்தானது. கேட்பதற்கு மிகக் கச்சிதமான குரல் இவருடையது. குரல்களின் வித்தியாசங்கள் வழியாய் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிய விதமும்  அபாரம். மிகவும் ஒன்றிப்போய் கேட்டேன்.

டான்ஸ் டான்ஸ் டான்ஸ் முரகாமியின் ஆறாவது நாவல். மூன்றாம் நாவலான A Wild Sheep Chase ன் தொடர்ச்சி. இதிலேயும் ஷீப் மேன் எனப்படும் புனைவுக் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. ஒப்பீட்டளவில் எனக்கு Wild Sheep Chase நாவலே பிடித்திருந்தது. டேன்ஸ் நாவலில் மிக அலுப்பூட்டும் அளவிற்கான ஒரே விவரணைகள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக இளம்பெண் யூக்கிக்கும் கதை சொல்லிக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் அவ்வளவு அலுப்பூட்டின.

கதை சொல்லி நாவல் முழுக்க குடித்துக் கொண்டும் தின்று கொண்டுமிருக்கிறார். அவரின் மிகத் திட்டமிடப்பட்ட துல்லியமான நாட்கள் சில இடங்களில் அபார உணர்வையும் சில இடங்களில் அலுப்பையும் தருகின்றது. முதல் அத்தியாயங்களில் வந்து கொண்டே இருக்கும்  டால்பின் ஹோட்டல்  குறித்த மிக நீண்ட விவரணைகள் எரிச்சலை வர வழைக்கின்றன. யாராவது கதை சொல்லியுடன் தின்றும் குடித்தும் கலவியும் கொள்கிறார்கள். அதைக் குறித்தும் மிக நீளமான வியாசங்கள். அடேய் முரகாமி போதும்டா என்கிற அளவிற்கு சில பகுதிகள் அலுப்பூட்டின. நாவலின் மிக சுவாரசியமான விஷயங்களாக நான் கருதியவை.

1. கதாபாத்திரங்களை இணைத்த முறை. வெவ்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஒரே இழையின் கீழ் கொண்டு வந்தது. உதாரணம் : கீக்கி - மே - ஜூன் இவர்களை இணைக்கும் சங்கிலியாக கோதண்டா.

2. கோதண்டாவிற்கும் யூக்கிக்கும் இடையே உள்ள தொடர்பு.

3. யூக்கியின் குடும்பம் குறித்தான சித்தரிப்பில் இருந்த புதுத் தன்மை . எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும் என நம்பும் எழுத்தாளர் அப்பா, வேலை என்று வந்து வந்துவிட்டால் சகலத்தையும் மறந்து போகும் புகைப்பட நிபுணரான அம்மா.
இவர்களுக்கிடையே அல்லாடி தனிமையில் விடப்படும் பதிமூன்று வயது யூக்கி.  மேலதிகமாய் அப்பாவின் நண்பன். அம்மாவின் ஒற்றைக்கை நண்பன்.

4. ஹவாய் குறித்தான விவரணைகள் - அங்கு நிகழும் விநோத சம்பவம்.நிகழ்ந்த / நிகழவிருக்கும்  மரணங்களை எலும்புக் கூடுகளோடு இணைத்திருப்பது.

5. பால்ய நண்பர்களான கதைசொல்லியும் கோதண்டாவும் முதலில் சந்திக்கும் அந்த இரவு. இருவரும்  சகல மதுவகைகளையும்  குடித்துத் தீர்க்கிறார்கள். எல்லாம் குடித்து ஓய்ந்த பிறகு கோதண்டா விலை மாதுக்களை அழைக்கிறான். கதைசொல்லி மே வோடும் கோதண்டா உடன் வரும் இன்னொரு பெண்ணுடனும் கலவி கொள்கிறார்கள். இந்த சம்பவங்களின் விவரணைகள் துல்லியத்தின் உச்சம்.

6. நடிகனான கோதண்டாவின் வாழ்க்கை. அவனுக்கும் அவன் மனைவிக்குமான விநோத உறவு.

7. மறைந்து போதல் குறித்தான கருத்தாக்கம். உடல்கள் சுவரின் வழியாய் இன்னொரு உலகில் நுழையும் மாயத்தன்மை.

8. நாவலின் புத்தம் புதுத் தன்மை. இந்நாவல் வெளியான வருடம் 1988. முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவலில் இருந்த சமகாலத் தன்மை வியப்பூட்டியது. ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆழமான கற்பனையூக்கம் முரகாமியிடம் மிகுந்திருக்கிறது எனவேதான் அவர் காலம் கடந்தும் அப்படியே நிற்கிறார்.


முரகாமியின் பிரதானக் கதாபாத்திரங்கள் அபாரமான இசை ஞானம் கொண்டவை. டான்ஸ் கதைசொல்லியும் தொடர்ச்சியாய் அறுபதுகளின் ராக் அண்ட் ரோல் இசையைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான். நாவலைக் கேட்டுக் கொண்டிருந்த நாட்களில் நானும் பீச் பாய்ஸ் குழுவினரின் பாடல்களை யூடியூபில் தேடிப் பார்த்தேன்.  பீட்டில்ஸ் குழுவினரின் இசை எனக்கு பரிச்சயமானதுதான் என்றாலும் பீச் பாய்ஸை மிகவும் பிடித்திருந்தது.

ஒப்பீட்டளவில் நார்வேஜியன் வுட், காஃபா ஆன் த ஷோர், வைண்ட் அப் பேர்ட் உயரங்களுக்கு இந்நாவல் இல்லை. எனவே வாசிக்காமல் வைத்திருக்கும் முரகாமியின் முதல் இரண்டு நாவல்களை Hear the Wind Sing மற்றும் Pinball ஐ தவிர்த்துவிட்டு After Dark ஐ எடுத்திருக்கிறேன்.

ஆனால் முரகாமியின் நாவல்களை வாசிக்கும் நாள்களில் ஒரு வித ஒழுங்கமைதி நமக்குள்ளேயும் வந்து விழும். அந்த அமைதியை இந்த நாவலும் தந்தது. ஓஷோ எப்போதும் விழிப்புணர்வில் இருக்க வேண்டியதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார். முரகாமியின் நாவல்களும் அதைத்தான் செய்கின்றன. ஆழமும் அகலமுமான விழிப்புணர்வு. தன்னைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கவனிப்பது. இந்தத் தன்மை இந்த நாவலிலும் இருக்கிறது. A wide beautiful awareness of being.




Thursday, May 25, 2017

தினசரிகளின் துல்லியம் - முரகாமியின் ஸ்லீப்

இரண்டு நாட்களாக ஹருகி முரகாமியின் ’ஸ்லீப்’ என்கிற கதை தொந்தரவு செய்கிறது. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது. ஸ்லீப் கதையின் நாயகிக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். ஆனால் அது ’இன்சோம்னியா’ அல்ல. தூக்கம் வராது அதனால் தூங்காமல் இருப்பாள் . பதினேழு நாட்களாக தூங்கியிராத அந்தப் பெண் கதாபாத்திரத்தை எவ்வளவு முயன்றும் நினைவில் இருந்து துரத்த முடியவில்லை.  கணவனும் மகனும் தூங்கிய இரவில் வரவேற்பறையில்  அமர்ந்து கொண்டு  ரெமி மார்டின் சகிதமாய் அவள் வாசிக்கும் அன்னா கரீனா நாவலை மனம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்கிறது. நான் அன்னா கரீனாவை வாசித்ததில்லை. இச்சிறுகதைக்குப் பிறகு அன்னா கரீனாவை வாசிக்கும் ஆவல் எழுந்திருக்கிறது.

’ஸ்லீப்’ எனும் இச்சிறுகதை முரகாமியின் ’The Elephant Vanishes’ தொகுப்பில் இருக்கிறது. 1989 இல் எழுதப்பட்ட சிறுகதை. ஆரம்பகால முரகாமியின் சிறுகதைகளில் தினசரிகளைக் குறித்தக் கச்சிதமானச் சித்திரம் இருக்கும்.  ஒரு கதாபாத்திரம் காலை ஆறு பதிமூன்றிற்கு எழுந்து இரவு பத்து முப்பத்தி நான்கிற்குத் தூங்கப் போவது வரைக்குமான சம்பவங்களை நிகழ்வுகளை அல்லது எதுவுமே நிகழாதத் தன்மைகளையும் மிகத் துல்லியமாக விவரிப்பது முரகாமியின் கதை சொல்லும் முறை. ஒரே ஒரு அசைவைக் கூட விடாமல் சொல்லிவிடுவதுதான் இவர் தனித் தன்மை. சில கதைகளில் அலுப்பூட்டும் அளவிற்கு தினசரிகளின் துல்லியம் வந்து விழுந்து கொண்டே இருக்கும். வரிசைக் கிரமம் மாறாத முறைமைகளைக் கொண்டிருக்கும் இவர் கதாபாத்திரங்கள் ஒருபோதும் தினசரிகளில் அலுப்படைவதில்லை. மேலும் அத் தினசரிகளில் ஆழமாய் ஊன்றிப் போக முயலுகின்றன.

முரகாமியின் கதைகள், கதை மாந்தர்கள் என்னுடைய தினசரிகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். செய்யும் எந்த ஒன்றிலும் கவனம் அல்லது நுணுக்கம் குறித்தான பிரக்ஞையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நல்ல எழுத்தும் இலக்கியமும் மனதை விசாலப்படுத்தும் என அறிந்திருக்கிறோம் ஆனால் செயலின் ஒவ்வொரு தன்மையையும் கச்சிதப்படுத்தும் வாழ்வு முறை எனக்கு முரகாமியின் வழியாகத்தான் வந்தது.

ஸ்லீப் கதையின் நாயகிக்கு முப்பது வயது. ஆரம்பப் பள்ளிக்கு செல்லும் ஒரு மகன். கணவன் பல் மருத்துவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பவர். நண்பர்களோ குடிப்பழக்கமோ கொண்டாட்டங்களோ இல்லாதவர். படுத்த உடன் தூங்கிவிடுபவர். மகனுக்கும் அவரின் அத்தனை சாயல்களும் இருக்கும். இவளுக்கு வாழ்வின் மீது பெரிதாய் புகார்கள் கிடையாது. எல்லாமும் சரியாக இருக்கும். காலை எழுந்து சிற்றுண்டி தயாரித்து கணவனையும் மகனையும் காலை எட்டு பதினைந்திற்கு ஒரே மாதிரி பத்திரம் எனச் சொல்லி வழியனுப்புவாள். அவர்கள் இருவரும் ஒரே மாதிரி தலையசைத்து ’டோன் வொர்ரி’ எனச் சொல்லிவிட்டுப் போவார்கள். அவர்கள் சென்ற பிறகு இவள் கடைக்குப் போய் தேவையானதை வாங்கிவருவாள். இவளிடம் ஒரு பழைய ஹோண்டா சிவிக் இருக்கிறது. வீட்டிற்கு வந்ததும் வீட்டைத் துடைப்பது, துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவாள். பதினோரு மணி ஆனதும் மதிய உணவைத் தயாரிப்பாள். கணவன் மதிய உணவு அருந்த வருவான். சேர்ந்து சாப்பிடுவார்கள். திருமணம் ஆன புதிதில் மதிய உணவிற்குப் பிறகு அவன் நெடுநேரம் வீட்டில் அவளோடு இருப்பான். அவை மகிழ்ச்சியும் இளமையும் நிரம்பிய காலங்கள். இப்போது அப்படியல்ல ஓரு மணி நேரத்திற்குள் திரும்ப மருத்துவமனை சென்றுவிடுவான். அவன் போன பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு அருகாமையில் இருக்கும் ’ஹெல்த் க்ளப்’ பிற்குப் போய் நீச்சலடிப்பாள். அழகு குறித்தும் ஆரோக்கியம் குறித்துமான கவனம் அவளுக்கு உண்டு. பின் மதியத்தை வாசிப்பது, ரேடியோ கேட்பது, ’விண்டோ ஷாப்பிங்’ செய்வது போன்ற வெவ்வேறு வகையில் செலவிடுவாள். மாலையானதும் மகன் வருவான். அவனுக்கு நொறுக்குத் தீனி கொடுத்துவிட்டு  விளையாட அனுப்புவாள். இரவுணவைத் தயாரிப்பாள். ஆறு மணிக்கு விளையாடிவிட்டு திரும்பும் சிறுவன் வீட்டுப் பாடங்கள் செய்வான் அல்லது கார்டூன் பார்ப்பான். கணவன் வந்ததும் இரவுணவு.  எட்டரை மணிக்கு மகன் தூங்கப் போவான். பிறகு இருவரும் மொசார்ட் அல்லது ஹேடனைக் கேட்பார்கள். இவளுக்கு இருவரின் இசைக்குமான வித்தியாசம் எப்போதும் பிடிபட்டதில்லை. அவன் இசை கேட்டுக்கொண்டே செய்தித்தாள் வாசிப்பான். பிறகு தூக்கம். அவ்வளவுதான். இந்த வரிசைக் கிரமம் எந்த வகையிலும் மாறாது. மாறாமல் இருக்க அனைவரும் மெனக்கெடுவார்கள்.

ஒருநாள் இவளுக்கு தூக்கம் வராமல் போய் விடுகிறது. தூங்காமல் இருப்பதால் ஏற்படும் எந்த அசெளகரியங்களும் இருக்காது. வழக்கம்போலவே இருப்பாள். ஆனால் தூங்க மாட்டாள். கல்லூரி காலத்திலும் ஒரு மாதம் இப்படித் தூங்காமல் இருந்தாள். தூக்க மாத்திரை, குடி என எதைப் பயன்படுத்தினாலும் தூக்கம் வராது. உடலும் மனமும் அவ்வளவு விழிப்பாகவும் புகை மூட்டமாகவும் இருக்கும். தனக்கு இருந்த சிக்கலை அவள் யாரிடமும்  - இப்போதுபோலவே - சொல்லவில்லை. ஒரு நாள் அந்தத் தூக்கமின்மை போய்விடும். தொடர்ச்சியாக இருபத்தேழு மணி நேரம் தூங்கி எழுந்து சரியாகிவிடுவாள். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் பிரச்சினை இப்போது வந்திருக்கிறது.

இந்தத் தூக்கமின்மை வருவதற்கு முன்னால் அவளுக்கு பயங்கரமான கனவு ஒன்று வரும். இம்முறை ஒரு வயோதிகன் அவள் காலின் மீது நீரைக் கொண்டிக் கொண்டிருப்பதாய் கனவு வந்தது. ஒரு ஜாரில் நீரை நிரப்பி அவள் பாதங்களின் மீது நிறுத்தாமல் கொட்டிக் கொண்டிருக்கிறான். அவளால் கத்தவோ அல்லது எழுந்து ஓடவோ முடிவதில்லை. தன் கால்கள் விரைத்து நகரமுடியாமல் போய்விடுவோமோ என பயந்து அலறி அக்கனவில் இருந்து விழிக்கிறாள். அவ்வளவுதான். தூக்கமின்மைக்கு வந்து விட்டாள். எழுந்து வியர்வையால் நனைந்த தன் உடைகளை மாற்றிக் கொண்டு ஹாலிற்கு வருகிறாள். ஒரு முழுக் கோப்பை பிராந்தியைக் குடிக்கிறாள்.  திருமணத்திற்கு முன்பு நன்கு குடிப்பாள். கணவனுக்கு  குடிப்பழக்கம் இல்லாததால் அது நின்று போயிருக்கும். எப்போதோ பரிசாய் கிடைத்த ஒரு ரெமி மார்டின் பாட்டில் வீட்டில் இருக்கும்   கனவு தந்த பயத்திலிருந்து விடுபட நரம்புகளை சாந்தப்படுத்த குடிப்பாள். மேலும் ஒரு கோப்பை குடித்ததும் அவளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல் அன்னா கரீனா புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பாள். அவ்வளவுதான் அந்த உலகத்திற்குள் விழுந்துவிடுவாள். அவளுடைய பழைய இளம் உலகம் விழித்துக் கொள்ளும். முடிவு என்ன என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கதையை வாசித்து முடித்ததும் ஓர் அபரிதமான புத்துணர்விற்குள் தள்ளப்பட்டேன். என்னைச் செயலின்மைக்கு நகர்த்தியவையும் புத்தகங்கள்தாம். இப்போது அதே புத்தகங்களே செயலூக்கியாக இருக்கும் முரணை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

முரகாமியின் The Elephant Vanishes  தொகுப்பு  1980 லிருந்து 1991 வரைக்குமாய் அவர் எழுதிய சிறுகதைகளை உள்ளடக்கியது. மொத்தம் பதினேழுச் சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு மன உணர்வுகளைத் தூண்டிப்பார்க்கும். இத்தொகுப்பின் முதல் சிறுகதையான The Wind-up Bird and Tuesday's Women பின்னாளில் ’வைண்ட் அப் பேர்ட் க்ரோனிகள்’ நாவலின் முதல் அத்தியாயமாகவும் இடம் பெற்றது. இச்சிறுகதையின் தொடர்ச்சியாக ’வைண்ட் அப் பேர்ட்’ நாவலை எழுதியிருப்பார். வேலை இல்லாத ஒரு  மத்திம வயது ஆண் கதாபாத்திரத்தின் தினசரி மிகப் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும்.  The Dancing Dwarf, Lederhosen போன்ற பிற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தன. லெடர்ஹோசன் என்கிற ஜெர்மானிய உடை ஒரு பெண்ணின் அத்தனை வருட வழமையை உடைத்துப் போடும் விநோதமான கதை. விநோதங்களின் அரசனான முரகாமி தினசரிகளில்  இருந்து அதைக் கண்டெடுக்கிறார் என்பதுதான் இன்னும் விசேஷம்.

Featured Post

test

 test