Thursday, February 15, 2018

வண்ணத்துப் பூச்சிகளின் விடுதலை : Titli


டிட்லி தன் புத்தம்புது மனைவியை அவளுடைய காதலனுக்கு கூட்டிக் கொடுக்க வண்டியில் அழைத்துச் செல்கிறான் . பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் நீலு, எதிர் காற்றில் அலையும் தன் முடிக்கற்றைகளை ஒதுக்கியவாறே  டிட்லியின் பெயர் காரணத்தைக் கேட்கிறாள்.  டிட்லியின் அம்மாவிற்கு முதல் இரண்டு குழந்தைகளும் பையன்கள், மூன்றாவதாய் பெண் குழந்தை வேண்டுமென விரும்பியவள் அக்குழந்தைக்கு டிட்லி என்கிற பெயரையும் தேர்வு செய்து விட்டிருக்கிறாள். ஆனால் மூன்றாவதாகவும் ஆண் குழந்தையே பிறப்பதால்  ஏமாற்றமடைபவள், தேர்வு செய்த பெயரை மாற்றிக் கொள்ள விரும்பாமல் டிட்லி என்கிற பெயரையே தனக்கு வைத்துவிட்டதாக சொல்கிறான். நீலுவிற்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறது.

 டிட்லி தன் மனைவியை அவளுடைய காதலனிடம் கொண்டு போய் விடுகிறான். நீலு, டிட்லியின் முன்பே தன் காதலனான பிரின்சை அணைத்துக் கொள்கிறாள். இருவரும் ஓர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கிறார்கள்.  நீலுவின் மூலம் கிடைக்கும் இரண்டரை லட்ச ரூபாய் பணத்திற்காக டிட்லி இதையெல்லாம் செய்கிறான். அப்பணத்தைக் கொண்டு புற நகரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்த ஒப்பந்தத்தை வாங்கிவிடுவான். அதன் மூலம் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் நரகத்துளையிலிருந்து விடுதலை அடைவான்.

 குடும்பத்தாரின் நிர்பந்தத்தால் டிட்லியை மணந்து கொள்ளும் நீலு, தன் காதலன் பிரின்ஸ் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற உடன் தன்னை மணந்து கொள்வான் என்கிற கற்பனையில் எல்லா எல்லைகளுக்கும் நகர்கிறாள். இறுதியில் அவன் தன்னை வஞ்சித்ததை உடைந்த கையோடு உணர்கிறாள். குடும்பம் என்கிற பெயரில் தன் அண்ணன்கள் செய்யும் முட்டாள்தனமான குரூரத் திருட்டுக் கொலைகளுக்குத் துணைபோகும்  டிட்லியும்  வதைபடுகிறான்.  இந்த இரு நசுக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகளும் மேலும் நசுங்கி தங்களின் பறத்தலை சாத்தியப்படுத்த முனைவதாக படத்தை முடிக்கிறார்கள்.



நேற்றிரவு இவ்வளவு ஆழமான, நேரடியான படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன்.  டிட்லி 2014 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. கான் திரைப்பட விழா உட்பட உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளியிருக்கிறது. தமிழ்சூழலில் சரியாக கவனம் பெறாததால்  எப்படியோ தவற விட்டிருக்கிறேன்.

டிட்லியின் குடும்பமும் வீடும்  அசாத்தியமாகச்  சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு நுணுக்கமான கதாபாத்திர வடிவமைப்பும் கதைக்களமும் இந்திய சினிமாவில் நிகழ்ந்திருப்பதற்கு உண்மையில் நாம் பெருமைப் பட வேண்டும். ஒரு உணவு மேசை கூட நுழைய முடியாத எலிப் பொந்து போன்ற வீடு. அதில் ஒருவர் உணவருந்திக் கொண்டிருக்கும்போது இன்னொருவர் சப்தமாக தொண்டையைச் செருமி காறி உமிழ்ந்து பல்லைத் துலக்கிக் கொண்டிருப்பர். டிட்லி யை அவனது அண்ணன் விக்ரம் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும்போது தந்தை வரிக்கியை டீயில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.  நிதர்சனமும் உண்மையும் சாதாரண மக்களின் மீது அறையும் ஆணியை திரைப்படம் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஒரு நகரம் இராட்சதத்தனமாக வளரும்போது அது அங்கிருந்த எல்லாவற்றையும் தின்றுவிட்டுத்தான் மேலெழுகிறது. மண், மனிதர்கள் அவர்களிடைய இருந்த நேயம் என எல்லாமும் இந்த நகர வளர்ச்சியில் அழிந்து போகின்றன. இந்தத் தன்மை இந்திய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் சினிமாவில் நேரடியாகச் சொல்லப்பட்டதில்லை. டிட்லி திரைப்படம் குறியீட்டு வடிவில் இந்த அழிவைப் பேச முனைகிறது.

டிட்லி கதாபாத்திரம் தன்னுடையை விருப்பத்தை அடைந்த பிறகு  அங்கிருந்து கீழே விழுகிறது. இதற்காகவா எல்லாம் என விரக்தியடைந்து தொடர்ச்சியாக வாந்தியெடுத்து மீண்டும் யதார்த்தத்திற்கு வருகிறது. தன்னைப் போலவே வஞ்சிக்கப்பட்ட இணையிடம் மீண்டும் செல்கிறது. இந்த கருத்தாக்கமும் இலக்கியத்தில் பேசப்பட்டதுதான். எல்லாம் அடைந்த பின் ஏற்படும்  விரக்தி உணர்வு, இதை ஒட்டியும் ஏராளமான படைப்புகள் இலக்கியத்தில் பதிவாகி இருக்கின்றன. தமிழில் மோகமுள் நாவல் இதை பதிவு செய்தது.

வன்முறையோடு இயைந்த  வாழ்வை அழுந்தந்திருத்தமாய் திரையில் கொண்டு வந்திருக்கும் இயக்குனர் கானு பேலின் முதல் படம் இது.  இத்திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த லலித் பேல் உண்மையில் கானு பேலின் தந்தை. அண்ணனாக விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரன்வீர் ஷோரி. இவர் கொங்கனா சென்னின் முன்னாள் கணவர். கானு பேல் டிட்லிக்கு முன்பு ’Love Sex Aur Dhokha’ திரைப்படத்தை எழுதியிருக்கிறார்.

’ஆன்கோன் தேகி’ படம் நினைவிருக்கிறதா? 2014 இல் வெளிவந்த இன்னொரு பிரமாதமான படமது.  அதை இயக்கிய ரஜத் கபூர், திபாகர் பேனர்ஜி, அருண் ஷோரி  போன்றவர்கள் இயங்கும் கவர்ச்சி வெளிச்சமற்ற  பேரலல் சினிமா உலகமும் இந்தியில்தான் இயங்கி வருகிறது. இந்த காத்திரமான ஆட்கள் சத்தமே இல்லாமல் பிரமாதமான திரைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் கொடுத்து வருகிறார்கள். இனி இவர்களின் மீதும் ஒரு கண்ணை வைக்க வேண்டும்.


No comments:

Featured Post

test

 test