Wednesday, February 7, 2018

முன்பின் எந்தச் சாயல்களுமில்லாத இன்றைப்போல


லாகிரி வஸ்துக்களைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறேன். ஒப்பீட்டளவில் பெரும் தீங்கைத் தரும்  இணையம் மற்றும் ஃபேஸ்புக் புழக்கத்தையும் குறைத்துவிட்டேன். அலுவலகக் கணினியில் ஹென்றி மில்லர் - தற்போது செக்ஸஸ் -1, காரில் முரகாமியின் Dance Dance Dance  ஒலி நூல்,  ஐபோனில் What we talk about When we talk about Running, Mac இல் நார்கோஸ் தொடர், டிவியில் சத்யஜித்ரே என எல்லாவற்றையும் பிடித்தமானதாக மட்டும் மாற்றி வைத்திருக்கிறேன். மாலை வேளைகளில் குடும்பத்தோடு வேதாத்திரி மகரிஷியின் எளிய உடற்பயிற்சிகள். வியாழக் கிழமைகளில் ஷீரடி சாய்பாபாவை நோன்பிருந்து வணங்குதல் என பெளதீக இருப்பும்  ஒழுங்கமைவில் சென்றுகொண்டிருக்கிறது. மனமும் உடலும் நீரூற்றிக் கழுவிட்ட சிவப்பு சிமெண்ட் தரை போல இருக்கிறது. அத்தனைக் குளுமை. சுகந்தம். மெளனம். அமைதி. ஏகாந்தம்.

சகலமும் ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. தலைக்குள் எப்போதும் கேட்கும் இரைச்சல் இல்லை. இனி வேண்டுவது, ஆவது, சென்றடைவது என்றெல்லாம் எதுவும் கிடையாது. வழக்கமான பழக்கத்தின் விளைவால் வார இறுதியின் மாலைகள் மட்டும் சற்றுச் சவாலாக இருக்கிறதுதாம் ஆனால் அதைக் கடந்துவிடவும் முடிகிறது.

வார நாட்களைப் போலவே வார இறுதியிலும் அதிகாலையில் விழிப்பு வந்துவிடுகிறது. பிடித்தமாதிரியான காஃபியைத் தயாரித்து அருந்துகிறேன். இங்கு வந்து வசித்த வீடுகளில் தற்போது வசிக்கும் இந்த வீடே ஒப்பீட்டளவில் மிக விசாலமான, வெளிச்சமான வீடு. வீட்டிற்கு முன் கட்டிடங்களில்லாத வெளியும் கிடைத்திருப்பதால் வெளிச்சமும் காற்றும் வீட்டை நிரப்புகின்றன. பால்கனியில் நின்று  உயர்ந்திருக்கும் கட்டிடங்களோடு மெளனமாய் உரையாட முடிகிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு பர் துபாய் வீட்டில் வசித்தபோது  வீடுகளைப் பற்றி குளிர் நினைவுகள் என்றொரு குறிப்பை எழுதினேன். அந்த வீட்டிற்குப் பிறகும் ஐந்து வீடுகள் மாறினேன். இது நான் வசிக்கும் முப்பதாவது வீடு. அதேப் புன்னகைதாம் ஆனால் அயற்சியில்லை.

அடுத்து எழுத வேண்டிய நாவல் குறித்தான எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகின்றன. திருவண்ணாமலை ட்ரிலாஜியின் கடைசி நாவலைத்தான் ஓரிதழ்ப்பூவிற்குப் பிறகு எழுத வேண்டும் என  திட்டமிட்டிருந்தேன்.  என்னுடைய ஏழு வயதில் ஜப்தி காரியந்தல் கிராமத்திலிருந்து திருவண்ணாமலை தேனிமலைப் பகுதிக்கு வந்து குடியேறினோம். தண்டராம்பட்டு  சாலையை ஒட்டியே என் பாட்டி நிலம் வாங்கி வீட்டைக் கட்டினார்கள். வீட்டு முகவரி பார்வதி நகர் என்றாலும்  வீடிருக்கும் பகுதி தேனிமலைதான்.

தேனிமலைப் பகுதியில்  1980 களில்  24 மனை தெலுங்கு செட்டியார்களும் ஒரு குழுவாக வந்து குடியேறினார்கள். துணிகளை மூட்டை கட்டியும் சைக்கிளில் வைத்துமாய் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று விற்று வருவார்கள் என்பதால் அவர்களைப் பொதுவாக மூட்டைக்காரர்கள் என அழைப்பார்கள்.  அவர்களுக்கு முன்பே  தேனிமலையில் ஒட்டர்கள் வசித்து வந்தனர். பன்றி வளர்ப்பு அவர்களின் முதன்மையான தொழிலாக இருந்தது. இந்த இரு சமூகங்களுக்கிடையே இருந்த நட்புறவும் விரோதமும்தான் பிரதான கதைக் களம்.

90 களின் இறுதியில் எங்கள் பகுதி மெல்ல அடையாளமிழந்தது. தாமரைக் குளத்திலிருந்து ஆரம்பித்து பார்வதி நகர் வரைக்குமாய் விரிந்திருந்த பசுமையான வயல்களை, குளங்களை, குட்டைகளை, கிணறுகளை அழித்துவிட்டு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளை அமைத்தது. என் கண் முன்னால் நிகழ்ந்த இந்த மாற்றம் ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருந்தது. அவ்வளவு கொண்டாட்டமான என் பால்யம் திடுதிப்பென வெளிறிப்போனது.

என்னுடைய முதல் இருபது வருட வாழ்வையும் இதன் பின்னணியில் சேர்த்து எழுதி திருவண்ணாமலை   ட்ரிலாஜியை நிறைவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் இதற்கு இன்னும் சில தகவல்கள் தேவைப்படுகின்றன. தேனிமலைப் பகுதியில் எஞ்சியிருக்கும் சில முதியவர்களை சந்திக்க வேண்டும். எனவே தற்போதைக்கு என் எந்த சாயல்களுமில்லாத ஒரு நாவலை எழுதிப் பார்க்கும் ஆவல் எழுந்திருக்கிறது.  புதிர், காமம், குடி, வன்முறை எல்லாமும் அலுப்பாகத் தோன்றுவதால் முற்றிலும் புதியதொரு எண்ணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்றின் எந்தச் சாயல்களுமில்லாத இன்று எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது என்பதை நேற்றைக் கொன்றவர்களே அறிவர்.

No comments:

Featured Post

test

 test