Thursday, February 22, 2018

Narcos : நமுத்த வாழ்வின் பரவசம்


பாப்லோ எஸ்கோபார்  - கொலம்பியாவை உலகறியச் செய்த பெயர். பாப்லோ கொல்லப்பட்டு கால் நூற்றாண்டு ஆகப் போகிறதென்றாலும் இன்று வரை  இந்தப் பெயர் தந்து கொண்டிருக்கும் ஈர்ப்பை தொடர்ந்து வெளிவரும் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சினிமாக்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அசாதாரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் நம்முடைய நமுத்த சாதாரண வாழ்வில் இருக்கும் ஒரே பரவசம் . எனவேதான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், டான் கள், கொள்ளைக் கூட்டத் தலைவர்கள், போதை மருந்து மாஃபியாக்கள், நடிகர்கள், குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் போன்றோரின் சொந்த வாழ்வை ஒட்டிய படைப்புகள் எப்போதும் வெற்றியில் சோடை போவதில்லை.

நார்கோஸ் மிக நேரடியாக கொலம்பியாவின் போதை மருந்துக் கும்பல் தலைவனான பாப்லோ எஸ்கோபாரின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது. வாழ்வைப் பதிவு செய்வதில் இருக்க வேண்டிய நேர்மை இந்தத் தொடருக்கு இருக்கிறதா என்றால்   இதுவரை இல்லை. அதாவது இரண்டு சீசன்கள் வரை. எனவே மூன்றாவது சீசனைப் பார்க்கும் ஆர்வம் விட்டுப் போயிற்று. ஆனால் வெற்றியைக் குறிவைத்து எடுக்கப்படும் தொடர்களில் இருக்க வேண்டிய சகலமும் நார்கோஸ் தொடரில் இருக்கிறது. பணக்கார வாழ்வின் பகட்டு, குடி, காமம், அதிகாரம் மற்றும் இவற்றோடு சம பங்கு இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. எனவே இயல்பாகவே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மிக வேகமாக இத்தொடரைப் பார்த்தும் விடுகிறோம். ஆனால் இறுதியில் இத்தொடர் புதிதாக எதையாவது  சொல்லியிருக்கிறதா என யோசித்தால் வெறுமை தான் எஞ்சுகிறது. ஏற்கனவே நாம் பார்த்து சலித்த இலத்தீன் அமெரிக்க டான் களின் வாழ்வு, கொக்கைன் கடத்தல் பின்னணி, அமெரிக்க அரசின் அடுத்த நாட்டின் மீதான ’அக்கறை’ என ஏற்கனவே பார்த்து சலித்த விஷயங்கள்தாம் தொடரை ஆக்ரமித்திருக்கின்றன . மேலும் டான்கள் தங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் செண்டிமெண்ட் காதல், மனைவி அம்மா பாசம் என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விஷயங்கள் யாவும் திகட்டிப் போனவை. ஒருவேளை காட் ஃபாதர் வரிசைப் படங்கள், ஸ்கார்ஃபேஸ், குட் ஃபெலாஸ், மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் மாதிரியான படங்களைப் பார்த்திராதவர்களுக்கு இந்தத் தொடர் நல்ல அனுபவத்தைத் தரலாம்.

நார்கோஸ் தொடரின் சிறப்பம்சம்  என்னவென்று பார்த்தால் இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நிஜக் காட்சித் துணுக்குகள்தாம். கதையின் போக்கை ஒட்டியே 1970 -90 களில் கொலம்பியா மற்றும் அமெரிக்காவில் நடந்த நிஜ சம்பவங்களையும் டாக்குமெண்டரிக் காட்சிகளாக இணைத்திருப்பது தொடரின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது.  பாப்லோ எஸ்கோபராக நடித்திருக்கும் பிரேசில் நடிகரான Wagner Moura வின் பிரமாதமான நடிப்பும் நம்மைத் திரையோடு ஒன்ற வைக்கின்றது. கொலம்பியச் சூழல், நடிகர்கள், பின்னணி இசை, லேப் கள் எனப்படும் கொக்கைன் மருந்து தயாரிக்கும் இடங்கள், பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏராளமான துணை நடிகர்கள் என தொடருக்கான உழைப்பு பிரம்மாண்டம்தான் என்றாலும் திரைக்கதை ஒரே விஷயத்தையே சுற்றிச் சுற்றி வருவதால் அலுப்பையும் தவிர்க்கமுடிவதில்லை. அமெரிக்கத் தூதரகத்தின் உள்ளடி வேலைகள், கொலம்பிய அதிபரின் அரசியல் நகர்வுகள், அவரும் துணை அதிபரும் பாப்லோவை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளில்  தென்படும் முதிர்ச்சியற்ற தன்மை  போன்றவை  தொடரை மேலும் பலகீனப்படுத்துகின்றன.

 பாப்லோ எஸ்கோபரின் அசலான வாழ்வைத் தேடி வாசித்தால் தொடரில் சொல்லப்பட்டிருப்பதை விடக் கூடுதல் சுவராசியம் கொண்டதாக இருக்கிறது. நார்கோஸ் தொடர் எஸ்கோபரின் கொக்கைன் சாம்ராஜ்யத்தின் துவக்கத்தையும் உச்சத்தையும் சரிவையும் பிரதானமாக முன் வைக்கிறது. ஆனால் பாப்லோ கொக்கைன் உலகிற்கு வருவதற்கு முன்னரான வாழ்வு இன்னும் அசாத்தியத் தன்மை கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பவனாக, சில்லறைத் திருடனாக, கார் திருடனாக, அடியாளாக மெல்ல மெல்ல வளர்ந்து கொக்கைன் உலகில் நுழைந்திருக்கிறார். உலகக் குற்றவாளிகளின் வரலாற்றில் பாப்லோ எஸ்கோபர்தான் மிகப் பெரிய செல்வந்தர். 1990 களில் பாப்லோவின் வருட வருமானம் 30 பில்லியன் அமரிக்க டாலர். ஆம் பில்லியன். எவராலும் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வாழ்வை பாப்லோ எஸ்கோபர் வாழ்ந்திருக்கிறார்.  ஏராளமான வசிப்பிடங்கள். வீட்டிற்குள்ளேயே மிருகக் காட்சி சாலை வைத்திருந்ததாகவெல்லாம் விக்கி சொல்கிறது. வியப்புதான் மேலிடுகிறது.



நார்கோஸ் போல கவர்ச்சி சாயம் பூசாத அசலான பாப்லோ எஸ்கோபரின் வாழ்வை தேடி வாசிக்க அல்லது பார்க்க விருப்பமாக இருக்கிறது.  பாப்லோவின் நிருபர் காதலி - தொடரில் வலேரியா - எழுதிய Loving Pablo புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தழுவி ஜேவியர் பார்டம் - பெனலோப் குருஸ் நடிப்பில் சென்ற வருடம் ஒரு ஸ்பானிய படமும் வெளியாகி இருக்கிறது. திரைப்படத்திற்கு வரவேற்பு இல்லை என்பதாக விமர்சனங்கள் சொல்கின்றன. பாப்லோவைக் குறித்தான நேஷனல் ஜியாக்ராபியின் டாக்குமெண்டரி ஒன்று கிடைத்திருக்கிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.






No comments:

Featured Post

test

 test