Thursday, November 5, 2009

பவா வைப் பற்றி சில குறிப்புகள்

From தனிமையின் இசை

மிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் ஓசியில் கிடைத்த ஒயினை மூக்கு முட்டக் குடித்த கிறக்கத்தோடு சென்னை வந்திறங்கினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது. காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.

என் வாழ்வில் அபூர்வமாய் வந்துவிட்டுப் போன தேவதைகள் வாழ்வின் மீதான என் நம்பகத்தன்மைகள் குறித்து பெரிதும் கவலை கொள்வர். நான் மிகுந்த வறட்டுத் தனமாய் இருக்கிறேன், வெறும் அவநம்பிக்கைகளை மட்டுமே சுமந்தலைகிறேன் என்றெல்லாம் அவர்கள் பதறி மாய்ந்து, மாய்ந்து என் நிலைப்பாட்டை மாற்றப் பெரிதும் மெனக்கெடுவர். திமிர்,அலட்சியம், அசட்டை என என் பிரத்யேகமான வெவ்வேறு குணாதிசயங்களின் மூலம் எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டு அவர்கள் கடந்து போன பின்னர் கழிவிரக்கத்திலாழ்வதுதான் இதுவரைக்குமான என் வாழ்வாய் இருந்து வருகிறது. முதன் முறையாய் வாழ்வென்பது நெகிழ்ச்சியானது, அன்பாலானது, சக மனிதன் ஒருவனை எவ்வித முகாந்திரமுமில்லாது நேசிக்க முடியும் என்பன போன்ற நம்பிக்கைகளை, மனிதர்கள் அத்தனை போலித்தனமானவர்கள் அல்ல என்கிற இணக்கத்தை பவா வின் மூலமாய் கண்டறிய முடிந்தது.

பவா வின் வரவேற்பில் ஒரு குழந்தையின் குதூகலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதே குதூகலம் நிரம்பி வழியும். அன்பை, நேசிப்பை சரியான நேரத்தில், சரியான மனிதர்களிடத்தில், மிகச் சரியாய் சொல்ல முடிவது / வெளிப்படுத்த முடிவது என்னைப் பொறுத்தவரை மிக அபூர்வமான குணமாகத்தான் இருக்க முடியும். (என்னால் ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்ததில்லை) பவா வின் இயல்பே நெருக்கமும் இணக்கமுமான ஒரு குழைவு நிலைதான். ஒருவரை இதனால்தான் பிடிக்க வேண்டும் அல்லது ஒருவருடன் இதனால்தான் பழக வேண்டுமென்கிற துய்ப்பு சூழல் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களையெல்லாம் பவா காற்றில் பறக்கவிட்டார். என்னிடம் சொல்வதற்கு அவரின் இத்தனை வருட வாழ்வு இருந்தது. எனக்குத்தான் அவரிடம் சொல்ல புத்தகங்களையும் அந்நிய வாழ்வையும் தவிர வேறொன்றுமில்லாமல் போனது.

பவாவின் வீட்டில், நிலத்தில், கடையில், பயணிக்கையில், ஏரிக்கரையில், விடுதிப் பூங்காவில், விடுதி அறையில், என நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா இடங்களிலும் விடாது பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தொடர்ந்த பேச்சில் நான் மெல்ல இளகத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் தினம் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேசாவிடின் அந்த நாளே முழுமையாகாத உணர்வும் வரத் துவங்கியது. என் வாழ்வின் மிக இலேசான நாட்களாக, நம்பிக்கையும் அன்புமான நாட்களாக இந்த விடுமுறை தினங்கள் இருந்தமைக்கு பவாதான் காரணமாக இருந்தார்.

பவா வை அவரின் குழந்தமை சிதையாது பார்த்துக் கொள்வதின் மிக முக்கியப் பங்கு தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளரான, மலையாளத்திலிருந்து பல காத்திரமான படைப்புகளை தமிழில் அதன் ஆன்மாவோடு கொண்டுவந்த ஷைலஜா மற்றும் அவரின் குடும்பத்தாரினுடையது. உலகின் எங்கோ ஒரு மூலையில் பிளாக்கில் பினாத்துகிறேன் என்கிற அறிமுகம் கூட எனக்கான அன்பைத் தருவதற்கு இவர்களுக்கு தேவையில்லாத ஒன்றுதான். நான் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே போதுமானதாகவும் வாசிப்பவன் என்பது அதிகப்படியான குணமாகவுமாய் இவர்களுக்கு இருக்கிறது.

ஒரு மின்சாரம் போன மதியத்தில் ஷைலஜா தன் கைகளினால் உருண்டையாக்கித் தந்த சோற்றுக் கட்டிதான் இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு. வீட்டில் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தப் பின் மதிய அமைதியில் எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அன்பைச் சேர்த்துப் பிசைந்த அந்தச் சோற்றுக் கட்டி அமிர்தமாய் இருந்தது. வம்சி மற்றும் மானஸியோடு நாங்களும் ஷைலஜாவின் பிள்ளைகளானோம்.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இதுவரை நான் அறிந்திராத ஒன்றாகத்தான் இருந்தது. பேச்சினூடாய் பகிர்ந்து கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் யாவும் இயல்பு வாழ்வு குறித்தான என் முன் முடிவுகளை தகர்ப்பதாய் இருந்தது. எனக்குப் பிடித்தமான ஆளுமைகளில் தொடங்கி அடுத்த வீட்டு மனிதர் வரைக்குமாய் விரிந்திருந்த பவாவின் நட்புலகில் விரோதிகளோ பிடிக்காதவர்களோ இல்லை.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவரின் வாழ்வு முறையும் புதிதாக இருந்தது. புகழ்,பணம், பிரபல வெறி என எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒதுங்கி கலையை வாழ்வாகவும், வாழ்வைக் கலையாகவும் நேசித்து வாழும் மனிதர்களையும் அவர்களின் படைப்புகளையும் நான் காண நேர்ந்தபோது நெகிழ்ந்து போனேன். நான் உழன்று கொண்டிருக்கும் இயங்கிக் கொண்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் உலகத்தையும் அதில் கடக்க நேரிடும் சக மனிதர்களையும் அந்தச் சூழலில் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எத்தனை மோசமான வாழ்வை நானும் என் சக உலகத்தவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்தது திருவண்ணாமலையில் வாழும் ஸ்பெயின் ஓவியர் காயத்ரி காமுசும் அவரது கணவரான ஆனந்தும் தான். இருவரைப் பற்றியும் விரிவாக பிறகொருமுறைப் பதிகிறேன்.

நான் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் மனிதர்களிடத்துமிருந்தும் ஏன் விலகி வந்துவிட்டேன்? என்றெல்லாம் எனக்குள் யோசனைகள் மிக ஆரம்பித்தன. வாழ்வை வறட்சியாக அணுக எனக்கு சில தோல்விகளும், பல புத்தகங்களும், சில துரோகங்களும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கண்கள் விரியாதுச் சிரிக்க, அழுத்தமில்லாது கைக் குலுக்க இந்த அந்நிய வாழ்வும் சிநேகமற்ற மனிதர்களும் பழகிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வை நேசிக்க, மனிதர்களை முன்முடிவில்லாமல் அணுக, எதிர்பார்ப்பில்லாத அன்பு சாத்தியம் என்கிற நம்பிக்கைகளையெல்லாம் எவரிடமிருந்தும் இதுவரை நான் பெற்றிருக்கவில்லை. இந்நம்பிக்கைகளை என்னில் துளிர்விட பவாவும் ஷைலஜாவும் அவரின் குடும்பமும் அவரின் நண்பர்களும் காரணமாய் இருந்திருக்கிறார்கள்.

விடைபெறும் நாளின் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்பு கூட பவா அவரின் கல் வீட்டில் அமர்ந்தபடி அவரின் நெகிழ்ச்சியான சத்தமான குரலில் பாவண்ணனின் கதையொன்றினை சொல்லிக் கொண்டிருந்தார். நானும் என் சகோதரனும் ஷைலஜாவும் அவரது குரல் வழி உலகில் பயணித்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்தினுக்கு சைக்கிளில் பயணிக்கும் ஆசைகள் மிகுந்த குமாஸ்தா ஒருவன் மிகப் பாடுபட்டு கடனுக்கு காத்திருந்து சைக்கிளொன்றை வாங்குகிறான். பயணத்தில் அவனோடு சிறுவன் ஒருவனும் சேர்ந்து கொள்ள இருவரின் பயணமும் சுகமாய் தொடர்கிறது. குமாஸ்தாவினுக்கு சைக்கிள் மீதிருந்த காதலை விட அச்சிறுவனுக்கு அதிகமான காதலிருப்பதை உணர்ந்து கொள்ளும் குமாஸ்தா சைக்கிளை அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு பஸ் ஏறுவதாய் கதை முடியும். இந்தக் கதையை எழுதியவரின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி தன் குரலில் அவ் உலகை படைக்கும் பவாவின் வார்த்தை வண்ணங்களில் முழுவதுமாய் கரைந்து போனோம்.

விமானத்தைப் பிடிக்கச் சென்னைக்கு விரைந்த அவ்விரவில் தொலைபேசியில் பவா வின் குரல் கேட்க என்னால் முடியவில்லை. வாழ்வில் எப்போதாவது அடைக்கும் தொண்டை அப்போது அடைத்துக் கொண்டது. என்னால் எப்போதும் அழமுடிவதில்லை என்பது உண்மைதாம் நண்பர்களே!

23 comments:

குப்பன்.யாஹூ said...

காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.


அருமை அய்யனார்

உங்களோடு இணைந்து நானும் பவாவை பாராட்டி கொள்கிறேன்.

எனக்கு என்ன வார்த்தை சொல்லி பின்னோட்டம் எழுதுவது என்று தெரிய வில்லை.

மனிதம் அன்பு போன்றவற்றிக்கு முன்னாள் பணம், பதவி எல்லாம் சிறு தூசு என்பதை பவா, உங்களின் நட்பு, தோழமை உணர்த்துகிறது.

வாழ்க அய்யனார், வாழ்க பவா செல்லதுரை (19 Ti எம் சாரோனில்)

குப்பன்.யாஹூ said...

இந்த பதிவை படித்து என் கண்களில் தாரை தாரை யாக கண்ணீர், என் மனைவி சிரிர்க்கிறார்.

மூன்றாம் பிறை, நாயகன், பருத்தி வீரன் அன்பே சிவம் படம் பார்த்த பொழுது ஏற்பட்ட உணர்வு உங்களின் இந்த பதிவு படிக்கும் பொழுது உணர்கிறேன். (எந்த வித மிகை படுத்தலும் இல்லை)

எழுத்துக்களில் உணர்ச்சிகளை உணர வைத்துளீர்கள் அய்யனார் பாராட்டுக்கள்.

seethag said...

what a contrast between your post on Chris (into the wild) and bava?

Was it planed ayynaar?The previous one talks of some one running away from humanity to find LOVE and the latest one on someone who is able to be himself among all the humanity.and feel teh LOVE.Well ,soon some one can do PH.D about posts ayyanaar.

மாதவராஜ் said...

நெகிழ்வான பதிவு. உங்கள் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டு இருப்பது போல உணர்கிறேன்.....

Ayyanar Viswanath said...

குப்பன் யாகூ

உங்களின் அன்பிற்கும் நெகிழ்விற்கும் மிக்க நன்றி

சீதா

உங்களின் பின்னூட்டம் படித்துச் சத்தமாய் சிரித்துவிட்டேன். வாழ்வு குறித்தான பார்வைகள் In to the wild chris ற்கும் பவா விற்கும் மாறுபடவில்லை எனத்தான் தோன்றுகிறது. உண்மை என்பதே நம் நம்பிக்கைகள் சார்ந்துதான் இருக்கிறது. இதுதான் உண்மை என்றோ இதுதான் வாழ்வென்றோ நம்மால் திட்டவட்டமாய் வரையறுக்க முடியாமல் போய்விடுகிறது. நேற்றைய நானிற்கும் இன்றைய நானிற்குமான வித்தியாசங்கள்தான் என் வாழ்வை குறைந்த பட்ச உயிர்ப்புடன் நகர்த்த உதவியாய் இருக்கிறது. எப்போதும் இரு வேறு புள்ளிகளில் சிக்கி அலைவுறும் இயல்பினனாகத்தான் நான் இருக்கிறேன் மற்றபடி ஆராய்ச்சி செய்யுமளவிற்கு இந்தப் பக்கத்தில் பொது வாய் எதுவுமில்லை. தனிப்பட்ட சுயத்தின் வெவ்வேறு மனநிலைப் புலம்பலாகத்தான் ஒரு பார்வையாளன் மனநிலையிலிருந்து என்னையும் என் எழுத்துக்களையும் பார்த்துக் கொள்கிறேன்.
தொடர்ந்த வாசிப்பினுக்கு நன்றியும் அன்பும்.

மிக்க நன்றி மாதவராஜ்

இளவட்டம் said...

///மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது.///

உண்மை அய்யனார்.உணர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

மிக மிக உணர்ச்சிகரமான பதிவு அய்யனார்.

Unknown said...

நெகிழ்ச்சியான பதிவு அய்யனார். பவாவும் சைலஜாவும் புத்தகம் வேண்டும் என்று சொன்னவுடன் எனக்கு கொரியர் அனுப்புவார்கள். காசோலை அனுப்புகிறேன் என்றால் நேரில் வரும் போது தந்தால் போதும் என மறுத்துவிடுவார்கள். சென்ற புத்தகக் கண்காட்சியில் அவர்களை சந்தித்தது, இதோ ஓராண்டு கடந்துவிட்டது...

குப்பன்.யாஹூ said...

Seetha - let me take the liberty to appreciate your comment on behalf of Ayyanaar.

Yes you are right, some one (even I can) think about doing PHD on Ayyanaar's writings (blogs).

He is one of the greatest writer(blogger).

In the previous post he talked about loneliness, no more humans and in this post he writes about benefits of people.

This contrast is the LIFE's essence.

The sad part is , these kind of posts should get 200+ comments but got 7 or 10 posts.

Seetha - when you get time read these blogs too:

http://yalisai.blogspot.com/2009/05/blog-post_25.html

http://gayatri8782.blogspot.com/2007/09/blog-post.html

http://angumingum.wordpress.com/2009/08/24/uberhero/

யாழினி said...

சத்தமில்லாத ஒரு அழுகை போல...
உணர்வுகளில் அழகான வெளிபாடு உங்கள் எழுத்து...

கதிர் said...

என்ன ஒய்

பீலிங்ஸ் ஆப் துபாயா மாறீட்ட. வெள்ளிக்கெழம அதுவுமா பாசம் ரொம்ப பொங்கிடுச்சு போல.

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம்...

....சரியான மொழி...!

யாத்ரா said...

ரொம்ப நெகிழ்வாக உணர்கிறேன்,

//உங்கள் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டு இருப்பது போல உணர்கிறேன்.....//

எனக்கும் இப்படித் தானிருக்கிறது.

Ayyanar Viswanath said...

நன்றி இளவட்டம்.

உமா நேரில் பார்த்தால் தந்துவிடுங்கள் :)

குப்பன் யாகூ மீண்டும் நன்றி.

யாழினி நன்றி

எலே டம்பி எனக்குலாம் பீலிங்க்ஸே வர கூடாதா:)

நன்றி தமிழன்

நன்றி யாத்ரா

Ganesh-Vasanth said...

அய்யன்னர்,

பதிவு உலகிற்கு நான் புதிது.புத்தகங்கள் மேல் உள்ள காதல் எனக்கு பதிவு உலகின் மேல் ஒரு விருப்பம் வர தடையாய் இருந்தது, ஆனால் ப்ராஜெக்ட் விசயமாக USA வந்ததில் இருந்து பதிவுலகின் மேல் ஒரு வெறியே வந்து விட்டது.எல்லா பதிவர்களின் பதிவுகளையும் 4 மாதத்தில் படித்து முடித்தாயிற்று.பவாவை பற்றிய இந்த பதிவு வாழ்கையை அதன் போக்கில் இன்பத்தோடு அணுக வேண்டியதின் அவசியத்தையும் உணர்த்தியடோது மட்டுமன்றி ஒரு சில நட்புகளின் அவசியத்தையும் உணர்த்திற்று.என்னை பொறுத்தவரை லோக்கல் or லோ கிளாஸ் நட்பிடம் இருக்கும் உண்மை பெரும்பான்பையான சமயம் மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை.பவா போன்ற நட்பு கிடைத்ததிற்கு உங்களுக்கு என் வாழ்த்துகள்.(எப்போதும் எங்கேயும் எல்லோரையும் கலாய்த்து கொண்டிருக்கும் என்னை பீலிங்கோடு பின்னூட்டம் போட வைத்ததற்கு நன்றி)

அகநாழிகை said...

அய்யனார்,
வாழ்வினூடே கிளைக்கும் நேசங்களின் நெகிழ்ச்சியை அருமையாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை சந்திக்க வந்து, பவா அண்ணைனை சந்தித்ததும், ஒரு மயக்கக்காலையை பண்ணையிலும், மதிய உணவை பாட்டுப்பாடிக்கொண்டே சாப்பிட்டு வீட்டில் அனுபவித்ததும், எனக்கும் மறக்க முடியாத அனுபவமாய் இருந்தது. இதைச் சாத்தியமாக்கிய உங்களுக்கும் பவா, ஷைலஜா, கண்டராதித்தன், வேல்கண்ணன், அசதா, ஸ்டாலின், ச.முத்துவேல் அனைவருக்கும் என் அன்பு.

- பொன்.வாசுதேவன்

சென்ஷி said...

//ன்னை பொறுத்தவரை லோக்கல் or லோ கிளாஸ் நட்பிடம் இருக்கும் உண்மை //

:-)

உங்களைப் பொறுத்தவரை எதை நீங்க லோக்கல் or லோ கிளாஸ் நட்புன்னு பிரிச்சு வைக்கறீங்களோ அப்பவே அந்த நட்பு செத்துப்போயிடுங்க. நீங்க உங்களை தன்மையா வச்சுக்கிட்டு நட்பை தராசாக்கிட்டீங்க.. எனக்கு இது ரொம்ப தப்பான பார்வையா படுது !

சென்ஷி said...

அய்யனார் உன் எழுத்துக்களின் வழி வாழித்த பவாவை நேரில் சந்திக்கவும் ஆவலாய் உள்ளேன்!

சென்ஷி said...

//வாழித்த//

வாசித்த... மன்னிக்க் எழுத்துப்பிழையாகிடுச்சு :(

ரௌத்ரன் said...

என்னை யார் என்னவென்று கூட அவருக்கு தெரியாது..எனக்கும் கூட உதவியிருக்கிறார் பவா.

இதற்கெல்லாம் என்ன அர்த்தம் அய்யனார்.ஒரு தனிப்பதிவாக என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.முபாரக்கிடமிருந்து புத்தகங்களை பெற்று கொண்ட பிறகு.

வால்பையன் said...

நான் தான் இந்த வேண்டுகோள் விடுத்திருந்தேன்!

பவாவை பற்றி முழுமையாக அறிய தந்தமைக்கு நன்றி!

பவாவின் படைப்புகளையும் அறியபடுத்தினால் தன்யனாவேன்!
(பெயர்கள்)

Ayyanar Viswanath said...

கணேஷ் வசந்த் : நன்றி

ஆம் வாசு அந்த ஞாயிற்றுக் கிழமை பகல் பொழுது எப்போதும் மறக்க முடியாததுதான்.சாத்தியமாக்கிய உங்களுக்கும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

சென்ஷி பின்னூட்டங்களுக்கு நன்றி

ரெளத்ரன்
உங்கள் புத்தக பட்டியலை பார்த்தேன்
பதியுங்கள் :)

வால் பவாவின் சிறுகதைகள் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற பெயரில் தொகுப்பாக வந்துள்ளது. நன்றி.

காமராஜ் said...

பெருகி வழியும் அன்பினால் புவிநிறைக்கும் பவாவை.
நாங்கள் ஒருகோடி பவா என்றே சொல்லுவோம்.
அன்பு,பூ,பாடல்,சிநேகம் இவற்றை கோடிகளில் மட்டுமே
அளவிடும் அன்புருகும் மனிதனும் வீடும் மக்களும்.

நல்ல நினைவு கூறல்.

Marie Mahendran said...

அன்பு அய்யனார் வணக்கம் என் புத்தகம் வந்த தகவல் உங்கள் தளத்தை பார்த்த பின்புதான் உறுதியானது. நன்றி. என் புத்தகத்தையும் தாங்களின் தளத்தில் இனைத்தால் நன்றி.சாத்தியம் உள்ளதா?

Featured Post

test

 test