Tuesday, September 15, 2009

இந்தி திரைப்பட இசையும் அற்புத ரகுமானும்

என்னுடைய இந்தி மொழியறிவைப் பொறுத்தவரை இன்னமும் ஏ காவ் மே! ஏ கிஸான்! என்ற அளவில்தான் இருக்கிறது. மலையாளத்தை தடம் பிடித்த அளவிற்கு இன்னமும் இந்தியை முழுமையாய் பிடித்து விட முடியவில்லை. பதின்மங்களில் இந்திப் பாடல் கேட்பதில் ஒரு வித பெருமிதம் இருந்தது. என்னுடைய சகோதரன் நல்ல பாடல்களாய் தேடித்தேடி பதிந்து வைக்கும் கேசட்டுகளை கல்லூரிக்கு எடுத்துச் சென்று பிலிம் காட்டுவதில் எனக்கு அப்போது அலாதி மகிழ்ச்சி இருந்தது. இந்தி பாட்டு கேக்குறான்! இங்கிலீஷ் புக் படிக்கிறான்! என்றெல்லாம் பெண்கள் என்னைப் பற்றிச் சொல்வதாய் கற்பனை செய்து கொண்டு மகிழ்வேன். பின்பு மெல்ல பெண் வசீகரங்கள் போய் பாட்டும் புத்தகமும் மட்டும் ஒட்டிக் கொண்டன. தொண்ணூறாம் வருட இறுதிகளில்தான் நான் "தேரே மேரே பீச்சுமே" வைக் கேட்டு உருகினேன். ஒரு வார்த்தை கூட புரியாதெனினும் உயிரைப் பிழியும் சோகம் அந்தப் பாடலில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் "ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்?" படத்தையும் பார்த்தேன். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி இந்தி மசாலா திரைப்படங்களின் இசை, கதை, காட்சியமைப்புகளை பத்து வருடங்களுக்கும் மேலாக வேறு தளத்தினுக்கு நகர்த்தாமல் வைத்திருந்தது. மெகா பேமிலிகள், எக்கச்செக்க பாட்டுகள், ஒரு காதல், ஒரு கல்யாணம், ஒரு சாவு என்கிற மசாலா பார்முலாக்களுக்கு முன்னோடியாக இருந்த படமிது. மேலும் இதில் வரும் "தீதி தேரா" வை விட "பெஹலா பெஹலா" பாடலும் "ஹம் ஆப்கே" என்கிற டைட்டில் பாடலும்தான் எனக்கு அதிகம் பிடித்தது. ஒரு படத்தின் பிரபலமான பாடலை விட அதிகம் பேசப்படாத பாடலே என்னை எப்போதும் ஈர்க்கிறது.

ஹம் ஆப்கே விற்குப் பிறகு நான் வசித்த நகரங்களில் வெளியான வணிக இந்தித் திரைப்படங்கள எல்லாவற்றையும் பார்க்கத் துவங்கினேன். "தில்வாலே துல்ஹேனியா", "தில்தோ பாகல் ஹை", " ராஜா இந்துஸ்தானி" என தொடர்ந்த இந்த இந்தி பட ஆர்வம் "குச்குச் ஹோதா" விற்கு பிறகு வடிந்து போனது. ஒரு கட்டத்தில் "என்னா படம் எடுக்கிறானுங்க அரைச்ச மாவயே அரைச்சிட்டு ராஸ்கல்ல்ல்ஸ்!!" என இந்தியை முற்றாக புறக்கணித்துவிட்டேன். ஆனாலும் இந்திப் பாடல்கள் கேட்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டாயிரம் வருடத்தின் துவக்கத்தில் "ஏக் லடுகி கோ தேகா சோ ஏசா லகா" தான் விழித்தெழுந்ததும் கேட்கும் பாடலாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சியமைப்பும் நன்றாக இருக்கும். இப்படிப் பட்டும் படாதவாறு இருந்த என் இந்தி இசை ஆர்வம் ரகுமானின் இந்தி நுழைவினுக்குப் பிறகு ஒரு வடிவத்தினுக்கு வந்தது. ரகுமான் இசையமைக்கும் எல்லா இந்தி பட கேசட்டுகளையும் வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். தில் சே, யுவா பாடல்களை இந்தியில் கேட்க இன்னும் பிடித்திருந்தது.

நான்கு மாதத்தினுக்கு முன்பான ஒரு இரவில்தான் தில்லி 6 பாடல்களை கேட்டேன். பத்து பாடல்களையும் முழுதாகக் கேட்டபின்பு இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போயிருந்தேன். ரகுமானின் இசை கேட்ட உடனே பிடிக்கும் இசை அல்ல. நாட்பட நாட்பட போதை மிகும் திராட்சை மதுவினைப் போன்றது. ஆனால் தில்லி 6 பாடல்கள் ஏற்கனவே நன்கு ஊறிய மதுவாக இருந்தது. கேட்ட உடனே பிடித்த பாடல் மஸாக்களி தான். அதில் திளைக்கும் உற்சாகத்தினையும் பொங்குதல்களையும் முழுமையாய் அனுபவித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். "மெளலா மேரே!" பாடல் பித்த நிலையின் உச்சம். சூபி தியான நிலையின் இன்னொரு வடிவம் இந்தப் பாடலின் ஆன்மாவினை ஒத்திருக்கலாம். கொண்டாட்டமும், மகிழ்வும், குழைவும், உருகுதலும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட பாடல் இது. நான்கு மாதத்தினுக்கும் மேலாய் என்னைக் கட்டிப் போட்ட பாடல் இதுவெனச் சொல்லலாம். 'தில் கீரா கஹி பல் தஃபதன்' என்கிற பாடல் இன்னொரு அற்புதம். கடைசி இரண்டு நிமிடங்கள் அற்புதத்தின் உச்சம். மெதுவாய் ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகம் கூட்டி நம்மை நிறைக்கும் தந்தி அதிர்வுகள் உடலுக்குள்ளும் பாய்வதை எதைக் கொண்டும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. இந்தப் பாடல் முடிந்த பின்னும் உடல் அதிர்வதை ஒவ்வொரு முறையும் உணரமுடிகிறது. ரகுமானின் மீது மிகப்பெரிய காதலை வரவழைத்த பாடல் "ரெஹ்னா து!" காற்றில் வார்த்தையை லயத்தோடு அடிவயிற்றிலிருந்து துப்பும் வித்தையைத்தான் ரகுமான் அவரது குரலில் நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் பாடலை விட, இசையை விட, ரகுமானின் குரல் எனக்குப் பிடித்திருந்தது. மற்ற ஆறு பாடல்கள் என்னை வசீகரித்ததே தவிர இந்த நான்கு பாடல்களைப் போல பைத்தியம் பிடிக்க வைக்க வில்லை.

இதற்கு முன்பு ஒரே திரைப்படத்தின் பாடல்களை அல்லது ஒரே ஆல்பத்தை தொடர்ச்சியாய் நான்கு மாதங்களுக்கு மேலாய் கேட்டதில்லை. தில்லி 6 பாடல்களை கேட்டிராத நாளே இல்லையெனத்தான் சொல்லவேண்டும். இன்றைய தினம் வரை குறைந்துவிடாத ஈர்ப்புடன் இவ்விசை இருக்கிறது. இதுவரைக்குமான ரகுமானின் இசை வாழ்வில் தில்லி 6 ஒரு அற்புதம். இதை அவராலே தோற்கடிக்க முடிந்தால் அதுவே ரகுமானின் சாதனையாகவிருக்கும். இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வமே எனக்கு இல்லாமலிருந்தது. இந்த இசைக்கு முகங்களையோ, நடன அசைவுகளையோ பொருத்திப் பார்க்க நான் விரும்பவில்லை. டிவிடி வாங்கி வெகு நாள் கழித்து கடந்த வாரம்தான் நண்பர்களோடு பார்த்தேன். இசையை சிதைக்காமல் படமாக்கியிருந்த விதம் மிகுந்த ஆறுதலாய் இருந்தது. "ரெஹ்னா து" இசையும் "மெளலா மேரே" பாடலும் படம் முழுக்க சிதறியிருந்தது மிகுந்த மகிழ்வைத் தந்தது. படத்தில் நிறைய விசயங்களை பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். எதையும் திணிக்காமல் காட்சிகளை அதன் போக்கில் விட்டிருப்பது நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. " தில் கீரா கஹி பல் தஃபதன்" பாடலுக்கான கற்பனையும் ரசிக்கும்படி இருந்தது. மஸாக்களி பாடல் படு கச்சிதமாய் படமாக்கப்பட்டிருந்தது. தில்லி 6 இந்தி(ய) சினிமாக்களில் நல்லதொரு மாற்றமாகத்தான் இருந்தது.

தில்லி 6 தந்த அதே கிறக்கத்தை அன்வர் படப்பாடல்களும் தந்தன. சொல்லப்போனால் அன்வரில் வரும் "மெளலா மேரே மெளலா" பாடலை தில்லி 6 க்கு முன்பிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் ரகுமானின் பிரம்மாண்டத்தின் முன்பு Mithoon Sharma, Pankaj Awasthi க்களின் இசை காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அர்ஸியோனுக்கு சற்றும் குறைந்திடாத பாடல்தான் "துசே நைநோ" நண்பர் வெங்கியின் மூலம்தான் இப்பாடலை நான் தவறவிட்டிருந்தது தெரிய வந்தது. அவருக்கு என் நன்றி. மேலும் இப்படத்தில் வரும் மூன்று நிமிட பாடல் வரிகளில்லாத இசை ஆலாபணைகள் இந்த இரவுகளை அழகாக்கிவிட்டுப் போகின்றன.

இவ்விரண்டு தொகுப்புகள் தந்த உற்சாகம் இந்துஸ்தானி, கஜல் மற்றும் சூஃபி இசையைத் தேட வைத்தது. சென்ற வாரத்தில் சில கஜல் மற்றும் சூஃபி குறுந்தட்டுக்களை வாங்கினேன். Nayyara Noor, Noorjehan, Farida Khanum, Shahita Parveen, Munni Begum, Abida Parveen, Reshma போன்ற கஜல் பாடகர்களின் தொகுப்புகளும் கிடைத்தது. இப்பெயர்களை கஜல் மற்றும் உருதுக் கவிதைகளில் நன்கு பரிச்சயமான ஆசாத்திடம் சொன்னபோது
அவர் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்தான் என்றார். விரைவில் வரப் போகும் ஓய்வு நாட்களில் இந்த இசைகள் என் அமைதிப் பொழுதுகளை நிரப்பலாம்.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...