Friday, November 13, 2009

குளிர் நினைவுகள்


குளிர்பதனப் பெட்டியின் உர்ர் தான் இன்றைய விழிப்பில் கேட்ட முதல் சப்தம். இந்த சப்தத்தின் மீது எண்ணத்தைக் குவித்தபடி படுத்துக் கிடந்தேன். காலைப் பரபரப்புகள் இல்லாத இந்த விடுமுறைத் தினத்தைப் போல எல்லா தினங்களும் இருந்தால் எப்படியிருக்கும் என்கிற நினைவின் கனவுத் துழாவல்களோடு கடிகாரத்தின் நகரும் முள்ளின் சப்தமும் சேர்ந்து கொண்டது. இந்தப் புதிய வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. நகரத்தின் இரைச்சல்களிலிருந்து சற்றுத் தள்ளிய வீடிது. இதுவரை எத்தனை வீடுகளில் வசித்திருப்பேன் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீடாய் நினைவு படுத்தத் துவங்கியது. என் கிராமத்து வீடு, திருவண்ணாமலை வீடு, கிருஷ்ணகிரி அறை, காட்டிநாயனப் பள்ளி அறை, ஓசூர் தர்கா அறை, அண்ணாமலை நகர் வீடு, அண்ணாமலை நகர் அறை, டவுன்ஷிப் வீடு,பாண்டிச்சேரி நடேசன் நகர் வீடு, ரெட்டியார் பாளையம் அறை, எல்லப் பிள்ளைச் சாவடி வீடு, முதலியார் பேட்டை அறை சென்னை ஜாபர்கான் பேட்டை அறை,திருவள்ளூர் நேரு நகர் அறை, பூங்கா நகர் வீடு, ஆயில் மில் அறை, மதுரை வீடு, ஷார்ஜா பேங்க் ஸ்டீரீட் வீடு, துபாய் அல்கூஸ் அறை, கராமா அறை, டெய்ரா அறை, ஷார்ஜா வீடு மீண்டும் டெய்ரா அறை இப்போது இந்த பர் துபாய் வீடு. இது நான் வசிக்கும் இருபத்தி நான்காவது வீடு. புன்னகையும் அயர்ச்சியும் ஒரே சமயத்தில் எழுந்தது.

எது என்னை இப்படி விரட்டியடித்துக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. எல்லா வீட்டின் சித்திரங்களையும் வரிசையான காட்சிகளாக மாற்றி சுழலவிட்டுப் பார்த்தேன். முன் பின் கால வரிசைப்படி வேகமாய் நினைவுகளில் வீடுகளை நகர்த்தியும் பின்பு மெது மெது வாய் நகர்த்தியுமாய் நினைவுகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அலுக்கவே சடாரென எழுந்து திரைச்சீலையை சரக் கென விலக்கினேன். பளிச் வெள்ளை வெயில் திடீர் மிரட்சியாய் இருந்தது. சடார் சரக் பளிச் என்ன ஒரு ரிதம்! என நினைவு சப்தங்களில் முன்பும் பின்புமாய் அலையத் துவங்கியது.

நினைவைக் கட்டி இழுத்து நிகழில் பொருத்தினேன். மணி என்ன என சரியாய் தெரியவில்லை. எட்டரை அல்லது ஒன்பது இருக்கலாம். இங்கு குளிர் துவங்கி விட்டது.வெயிலுக்கு கருணை வந்து விட்டது. தூர தேசப் பறவைகள் வரத் துவங்கி விட்டன. கடல் புறாக்கள் அதிகம் கண்ணில் பட ஆரம்பித்து விட்டன. எல்லா காலத்திலும் இருக்கும் புறாக்கள் மிகுந்த அசட்டையாய் தரைத் தளத்தில் நடந்து கொண்டிருந்தன. குளிருக்கு ஒண்டும் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எல்லாப் பூனைகளையும் கொன்றிருப்பார்களோ என்கிற எண்ணம் பயத்தைத் தந்தது. இந்த நகரம் இன்னும் சரியாய் விழிக்கவில்லை. இரவு முழுக்க விழித்திருந்து விட்டு அடுத்த நாள் நண்பகல் வரை தூங்கும் இந்த நகரம் என்னை மட்டும் சீக்கிரம் எழுப்பி விட்டு விடும். மனித சஞ்சாரங்கள் குறைந்த காலையை நினைவுகளோடு போராடியபடி குளிரோடு அணுகுவது இதமாகத்தான் இருக்கிறது.

தேநீர் குடித்தால் என்னவெனத் தோன்றிற்று. தேநீர் தியானமுறை நினைவிற்கு வந்தது. சமோவாரில் தேநீர் கொதிக்கும் சப்தத்தின் மீது தியானித்தபடி, தயாரானவுடன் அதன் வாசனையை உள்ளிழுத்தபடி, தேநீரை மெதுவாய் மிக மெதுவாய் மிகமிக மெதுவாய் உறிஞ்சிக் குடித்தபடி நகரும் நாட்கள் மிகுந்த நிறைவுகளைத் தரக் கூடும். தியானம், நிர்வாணம், அமைதி, சலனமின்மை என எல்லாவற்றிலிருந்தும் இப்போது விலகிக் கடந்து வந்தாயிற்று. நினைவுகளோடு போராடப் பழகி விட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் நினைவே மிகப் பெரிய துணையாகவுமிருப்பதால் ஓஷோ, ஜேகே வையெல்லாம் பரணில் தூக்கிப் போட்டாயிற்று. எனக்கானத் தேநீரைத் தயாரிக்க எனக்கான உணவைச் சமைக்க எப்போதும் பிடித்திருக்கிறது. தேயிலையில் பால் கலப்பது வன்முறைதான் என்றாலும் எனக்கிதுதான் வசதி. செம்மண் நிறத்தில் லேசாய் ஏல வாசனையோடு டீ தயாரித்துக் குடிக்க எனக்குப் பிடித்திருக்கிறது. என் முடி வெள்ளையாவதற்கு இதுதான் காரணமென இவள் சொல்வதை நினைத்தபடியே மேலதிகமாய் ஒரு கரண்டி தேயிலையைக் கூட்டினேன். காலையில் புகைக்க எனக்குப் பிடிக்காது. உடல் மாசுபடுவதைக் காட்டிலும் இந்த அதிகாலைக் குளிர் காற்றில் புகை நாற்றத்தைக் கலப்பதில் விருப்பமிருந்ததில்லை. எனக்கு இரவுகளில்தான் புகை தேவைப்படும். குளிரில் நடுங்கியபடி மொட்டை மாடியில் புகைக்கும்போது காற்று மாசாவதை நினைத்துக் கொள்வதில்லை.

பால்கனியில் நடக்கையில் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது. பால்கனியில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி வாய்விட்டுப் படிக்கும் சிறுமியொருத்தி மீன் தொட்டியில் உலவும் மீனைப் போலிருக்கிறாள் என்கிற குறுங்கவிதையது. மிக வழக்கமான காட்சியை சாதாரண வார்த்தைகளில் புனைவிற்கு தள்ளுவது அல்லது தன் கவிதைப் படிமங்களை இயல்பிற்கு கொண்டு வருவது, இதில் அதையும் அதில் இதையும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டே கோர்ப்பது இவைதாம் இவர் கவிதைகளில் கவித்துவத்தை கொண்டு வரும் யுக்தியாக இருக்கிறது. யாருமில்லாத அமைதியான காலையில் சத்தமாய் ஒரு கவிதையை சொல்லி முடித்தவுடன் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் தெரியவில்லை.

முழுக்க முழுக்க தன் வயமான இத்தனிமை எப்போதும் சலிப்படையாதிருக்க எனக்கு இலக்கியமும் திரைப்படமும் உதவியாய் இருக்கிறது. குற்ற உணர்வில் திளைக்காதிருக்க வாழ்வு இன்பமயமானதுதான் என்பதை நம்ப வார இறுதி விடுதிகளும் சக நண்பர்களும் உதவுகின்றனர். இவையெல்லாம் இல்லாத பிறருக்கு எது விடுதலையாய் இருக்க முடியும் என யோசித்துப் பார்த்தேன். பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையாய் இருக்கலாம். ஒட்டு மொத்த மனித இனமும் எதிலிருந்தாவது விடுபடுவது/எதிலாவது சிக்கிக் கொள்வது என்கிற இரண்டு நிலைப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரைத் தளத்தில் கோடு போட்ட காகிதம் ஒன்றை மென் காற்று மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தது. புறா அக்காகிதத்தின் மீது வந்தமர்ந்தது. கோடு போட்ட காகிதம் ஒன்றில் பென்சிலில் கோழிக் கிறுக்கலாய் என் பக்கத்தில் பிடித்த வரிகளை எழுதி வைத்துக் கொண்ட நண்பியொருத்தியின் நினைவு வந்தது. அவள் அந்தக் காகிதத்தை ஸ்கேனித்து அனுப்பியிருந்தாள். எதையோ வீட்டில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் காகிதம் தட்டுப்பட்டதாயும், ஒரு வருடத்திற்கு முன்பு என் பக்கத்தை மிகுந்த விருப்பங்களோடும், எரிச்சலோடும், கோபங்களோடும் படித்துத் திரிந்ததாயும் அவ்வப்போது பிடித்தவற்றை ஏதாவது ஒரு காகிதத்தில் எழுதி, எங்காவது தொலைத்து விடுவது வழக்கமானதெனவும் சொல்லியிருந்தாள். மிகவும் இணுக்கி இணுக்கி அந்த ஒரு பக்கத்தில் நான் எழுதிய வரிகள் எழுதப்பட்டிருந்தன. இணையம் அறிமுகமாவதற்கு முன்பு வரை நானும் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை / காட்சிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அதே வழக்கத்தைக் கொண்ட இன்னொருத்தி எழுதி வைத்துக் கொள்வது என் வரிகளாய் இருக்கிறதென்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இம்மாதிரிக் குளிர் காலையில், தேநீரோடு, காட்சிகளை விழுங்கியபடி, பிடித்தமான நினைவுகளில் மூழ்குவதும் ஒரு கட்டத்தில் சலிக்கவே செய்கிறது. சலிக்கும் நொடிதான் இசை கேட்பதற்கான துவக்கம். இந்துஸ்தானியையும் கஜலையும் மென்மையாய் கசியவிடும்போது தயவு செய்து யாராவது என் மூளையில் இந்த இந்தி / உருது மொழியை ஏற்றிவிடுங்களேன் எனக் கத்த வேண்டும் போலிருக்கும். என்னால் ஏன் இம்மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

சென்ற வருடத்திற்கு முந்தின குளிர்காலத்தில் கராமாவிலிருந்தேன். விடுமுறை தினங்களில் சீக்கிரம் எழுந்து நடைக்குப் போவது வழக்கமாய் இருந்தது. குளிர் விரவிய தெருக்களில், பனி மூடிய அகலமான சாலைகளில் ஏதேனும் ஒரு விநோதப் பறவை தட்டுப் படலாம். அகலமான இறக்கைகளில் அடர் நீலத்தில் தூரிகையால் பட்டையாய் கோடிழுத்தது போன்ற தீற்றல் கொண்ட பறவையொன்றை இது போன்ற ஒரு நடையில்தான் பார்த்தேன். பின்பொரு பறவையின் முகம் கொண்ட சிறுமியையும் செம்பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்ட நடுத்தர வயதுப் பெண்ணையும் அவ்வப்போது கடந்து போவேன். இருவரிடமும் கேட்காமலேயே விட்டுப் போன ஒரு கேள்வி என்னிடம் இருந்தது. உங்களை மனித உருவாய் போகக் கடவதென சபித்த பறவையின் பெயர் என்ன?
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...