Tuesday, November 17, 2009

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்தொன்பது வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். இதிலும் பெரிதாய் பேசப்பட்டவர் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. 1936 ல் டி.பி ராஜலட்சுமி மிஸ் கமலா என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கிறார். அதற்குப் பின்பு வந்த மதுரை வீரன் (1938) படத்தையும் இவர் இயக்கினார். இவருக்குப் பின்பு கிட்டத் தட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்து தெலுங்கில் மீனா என்கிற படத்தை 1973 இல் விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய ராம் ராபர்ட் ரஹீம் என்கிற படம் 1980 இல் தமிழில் வெளிவந்தது. எண்ணிக்கையளவில் இன்றும் எந்தப் பெண் இயக்குனரும் விஜயநிர்மலாவைத் தொட்டிருக்கவில்லை. இடையில் பானுமதியும் சாவித்ரியும் ஆசைக்கு ஓரிரு படங்கள் இயக்கிப் பார்த்துக் கொண்டதோடு சரி அதற்கும் இடையில் யாராவது வந்து போனார்களா அல்லது வராமலே போனார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை. பின்பு பல வருடங்கள் கழித்து சுஹாசினி இந்திரா மூலமாய் பிரவேசித்தார். பலமான பின்னணி இருந்தும் அவரும் சோபிக்கவில்லை. அவருக்குப் பின்பு வந்தவர்களாக ப்ரியா, மதுமிதா மற்றும் சமீபமாய் நந்தினி. எழுபத்தொன்பது வருட தமிழ் சினிமாவில் பத்திற்கும் குறைவான பெண்களே இயக்குனர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம்.

பார்வையை சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ணா சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்னாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குனர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை. பெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்திற்கு மேல் நகர இந்திய மனங்கள் அனுப்பதிப்பதில்லையா? அல்லது இந்தத் துறையைப் பொருத்த வரை பெண்களும் தங்களின் மூளையை விட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் சினிமாவில் பெண்பார்வை, பெண் உணர்வு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிய ஆண்கள் திரையில் நம் முன் வைத்ததெல்லாம் அபத்தங்களையும் ஆபாசக் குப்பைகளையும்தான். பெண்ணிய இயக்குனர் என அடையாளப்படுத்தப் பட்ட பாலசந்தருக்கு நாயகி ஜாக்கெட் மாற்றுவதைக் காட்டுவதே மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இம்மாதிரியான குப்பைகள் பெருகாமலிருக்கவாவது பெண் இயக்குனர்களின் பங்கு தமிழ் சூழலுக்கு அவசியமாகிறது. இதுவரை தமிழ் சினிமாக்களில் எழுதப்பட்ட காதல் பாடல்களில் பெண் தன்மையே / பார்வையே இல்லை என்கிற அதிர்ச்சி வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் கேட்டதும்தான் எனக்கு எழுந்தது. இதுவரை பெண்களின் காதலுணர்வுகளாய் ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் துருத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கமும் அபத்தமும் மட்டும்தான் என்பதை உணர ஒரு பெண் பாடலாசிரியரின் பங்கு அவசியமாகிறது. பெண்ணியம் என்பது கருப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணிற்கும் வெவ்வேறானது. சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.

பெண் தன் காதல் உணர்வைச் சொல்வதாய் ஒரு பாடல் எழுதப்படக்கூட தமிழ்சினிமா எழுபது வருடங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாய் போயிற்று. இப் பரிதாப நிலையில் நாம் பெண் இயக்குனர்களை எப்படி எதிர்பார்க்க? இம்மாதிரியான சூழலிலிருந்து அவ்வப்போதாவது வெளிவரும் பெண்களை வரவேற்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் அவர்களின் படங்களின் மீதான விமர்சனங்களையும் கவனமாக அணுக வேண்டியதும் அவசியமாகிறது.

சம கால பெண் இயக்குனர்களில் ஒருவரான ப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படம் காதல் உணர்வு, கனவில் மிதத்தல், சாந்தமான நாயகன், இழையோடும் நகைச்சுவை, ஏகத்துக்கும் பெண்மையென நல்லதொரு பொழுது போக்கு படமாக இருந்தது. இருப்பினும் அவருடைய அடுத்த படமான கண்ணாமூச்சி ஏனடா பெரும் ஏமாற்றத்தையே தந்தது. மதுமிதாவின் வல்லமை தாராயோ படமும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் இருவருக்குமான அடுத்த நகர்வுகள் சாத்தியமா? என்பதை அவர்களிடமே விட்டு விடுவோம்.

ப்ரியாவின் உதவி இயக்குனரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை கோவையில் பதிவுலக நண்பர்களுடன் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. சம கால தமிழ்படங்களிலிருக்கும் பெரும்பாலான இம்சைகள் இப்படத்தில் இல்லை. நேர்த்தியான நாயகி, சின்ன சின்ன முடிச்சுகளாய் சிக்கல்கள், சுவாராஸியமான விடுவிப்புகள், மெளலியின் தரமான நடிப்பு என நல்லதொரு பொழுது போக்குப் படமாய் இருந்தது. தமிழில் கலைப்படங்களுக்குத்தான் சாத்தியமில்லையென்றால் நகைச்சுவைப் படங்களுக்கும் அதே போன்றதொரு தேக்க நிலைதான் இருந்து வருகிறது. பொய் சொல்லப் போறோம், திரு திரு துரு துரு போன்ற படங்கள் எப்போதாவது வந்து இந்தத் தேக்கத்தை உடைக்க முயலுகின்றன. ஆனாலும் திரைப்படம் வசூலித்தே ஆக வேண்டுமென்கிற நிர்பந்தங்கள் இருப்பதால் நம் சூழல் ரசிக சிகாமணிகளின் விருப்பத்தினை நிறைவு செய்யவே குப்பைகள் படங்களாக வடிவம் கொள்கின்றன. இந்தத் திரைப்படம் வசூலித்ததா எனத் தெரியவில்லை வசூலித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி. நந்தினிக்கு பாராட்டுக்களும் வாழ்த்தும்.

பணத் தேவை, கடுமையான போட்டி, மந்தமான வியாபாரச் சூழல், இழுத்து மூடும் திரையரங்குகள், வணிகக் குறி, ரசிகவிசிலடிச்சான் குஞ்சுகள், தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு விசிடி போன்ற நெருக்கடிகள் ஓரளவிற்கு சுமாரான படங்கள் வந்தால் போதும் என்கிற கட்டத்தினுக்கு பார்வையாளனை நகர்த்தி விடுகின்றன. அதையும் நிறைவேற்றச் சாத்தியமில்லாத நம் பண முதலை தயாரிப்பாளர்கள், ஸ்டார்கள், தலைகள், தளபதிகள், வீரர்கள், புயல்கள், கபோதிகள், கவிர்ச்சி கன்னிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாரையும் ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் விட்டு வந்தால் போதும் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.

திரைப்படத் துறையில் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஓரிரு பெண்களை வலைப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. சந்திரா, தேன்மொழி தாஸ் போன்றோர் இலக்கியப் பின்புலத்தோடு திரையில் இயங்கிவருகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமாசக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார். இவர்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...