Tuesday, December 22, 2009

தனிமையின் இசை - என்னுரை

கடந்த மூன்று வருடங்களாய் என் வலைப்பூவில் எழுதப்பட்ட கவிதை வடிவ மாதிரிகளின் தொகுப்புதாம் இவை. எழுதப்பட்ட தருணங்களில் இவை அச்சிற்கானவை என்கிற தயாரித்தல்கள் எனக்கில்லாமல் இருந்தன. சுய புலம்பல்களாகவும், மிகவும் தன் வயமான உலகின் வெளிப்பாடாகவும், இருத்தலின் ஆசுவாசமாகவும் இவ்வடிவங்கள் என்னிலிருந்து தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கலாம். எழுதப்படும் வரையிலிருந்து எழுதப்பட்ட பின்பு வரை அதே வார்த்தைகள் தரும் உணர்வு வெவ்வேறாய் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் பெருமித மகிழ்வுணர்வைத் தரும் இதே வார்த்தைக் கோர்வைகள் பின்பொரு நாளில் ஏளனத்தையும் சலிப்பையும் உண்டாக்கி விடுகின்றன. எப்போதைக்குமான மகிழ்வுகளையும் எப்போதைக்குமான இழத்தல்களையும் காலம் மிகச் சுலபமாய் கடந்து போகிறது.

இக்கவிதைகளில் மிகப் பிரதானமாய் இருப்பது நான் தான். என்னிலிருந்து என்னைக் கண்டறிவதே மிகக் கடினமாய் இருக்கிறதெனக்கு. மற்றவர், மற்றது இவைகளின் மீதெல்லாம் எனக்குப் பெரிதாய் அக்கறையோ வருத்தமோ இல்லாமலிருந்திருக்கிறது என்பதை இத் தொகுப்புகள் அறியத் தருகின்றன. போலித்தனம் குறைவான நார்சிச மனம் என்கிற சுய மதிப்பீடுகள்தாம் தொடர்ந்து இயங்க குறைந்த பட்சக் காரணமாய் இருக்கிறது. இதற்கானதென்று அறியாத என் புற அலைவுகளில் கிடைத்த ஏமாற்றமும் அந்நிய வாழ்நிலங்கள் தந்த அயற்சியும் அக அலைவுகளை நோக்கி இடம் பெயரச் செய்தன. புறம் அகம் இரண்டையும் ஒரே கோட்டில் சமன் செய்வதுதான் இக்கவிதைகளின் உயர்ந்த பட்ச சாத்தியமாக இருக்கிறது.

பிறழ்ந்த மனதின் பல்வேறு இடுக்குகளிலிருந்து வெளியேறும் வார்த்தை பூதங்கள் வெளித்துப்பும் கோர்வைகள் மயக்கத்தையும் பயத்தையும் இரு தரப்பிலும் உண்டாக்குகின்றன. எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வார்த்தைகளில் பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கைகள் கவிதை வடிவத்தின் மீதான காதலை வலுவூட்டுகின்றன.

அலைந்து திரிந்து பிறழ்ந்து தற்போது மய்யமாகிப் போன விளிம்பு மனதின் அந்தந்த நிலைப்பாடுகள் இவைகள் என்பதைத் தவிர்த்து இக்கவிதைகள் குறித்து எழுதியவனாய் சொல்ல வேரெதுவுமில்லை. இதுவே மிகையாகவும் இருக்கலாம். மற்றபடி எவரும் பேசாததையோ எவராலும் சொல்லிவிட முடியாததையோ நான் பேசிவிட மெனக்கெடவில்லை. என் வாழ்வு எனக்குத் தந்ததை வன்மமாகவும், குரூரமாகவும், இரகசியக் கிசுகிசுப்பாகவும் உங்களிடம் கடத்த முயன்றிருக்கிறேன். அந்தந்த உணர்வுகளை அந்தந்த மாதிரியே இவைகள் உங்களுக்குள் கடத்தியிருந்தால் அதுவே இதற்கான நிறைவாய் இருக்க முடியும். அப்படி இல்லாமல் போனாலும் அஃது எவரின் குறைபாடுமில்லை.

வலைப்பூ வாசகர்களுக்கு, இணைய நண்பர்களுக்கு, சக வலைப்பதிவர்களுக்கு, வலைப்பூத் திரட்டிகளுக்கு என் முதல் நன்றியும் அன்பும். எனக்கான ஆசுவாசத்தை, நிறைவை அல்லது அதைப் போன்ற ஒன்றை இக்காலகட்டங்களில் எனக்குக் கிடைக்க இவ்விணைய வெளி உதவியாய் இருந்திருக்கிறது. எப்போதும் விழிப்பாய் இருந்த எழுத்துச் சோம்பலனை சக வலைப்பூக்களும் பதிவர்களும் எழுந்து சோம்பல் முறிக்க உதவியிருக்கின்றனர்.

எதிர்பார்ப்புகளற்ற அன்பை எல்லா விதங்களிலும் எனக்குத் தந்துகொண்டிருக்கும் பவாவும் ஷைலஜாவும் இப்புத்தத்தின் மூலமாய் இவ்வுலகில் பிரவேசிக்க வைத்திருக்கிறார்கள். என்னுள் புதிய நம்பிக்கைகளை, துளிர்ப்புகளை மலரச் செய்திருக்கும் இவர்கள் என் வாழ்வில் அபூர்வமானவர்கள்.

நூறு பக்கங்களுக்கு மேல் விரல்கள் நோகத் தட்டச்சி, நேர்த்தியான முகப்பு அட்டையை மிகுந்த சிரத்தையுடன் உண்டாக்கி இவ் உள்ளடக்கத்தில் குறைந்திருக்கும் அழகியலை புத்தக வடிவத்தின் மூலமாய் கூட்டிய வம்சி நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும்.

வலையெழுத வந்ததிலிருந்து இன்று வரை என்னை வாசித்தும், விமர்சித்தும் சகித்தும் கொண்டிருக்கும் தமிழ்நதிக்கு என்னுடைய அன்பு.

நன்றி என்கிற ஒற்றைச் சொல்லினை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வேண்டிய மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் என் சந்தர்ப்பத் துய்த்தல்களை சில நேரங்களில் புன்னகையோடும் சில நேரங்களில் அசூசையோடும் பார்த்துக் கொள்கிறேன்.

அய்யனார்
துபாய்
30 நவம்பர் 2009
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...