Wednesday, October 24, 2007

பதினான்காம் நகரமும் நானும் பிற நகரங்களும் மனிதர்களும்



என் நகரத்தை எனக்காக இவர்கள் தருவதற்கு முன் பதிமூன்று நகரங்கள் இருந்தது.பதிமூன்று சிக்கலான எண் என்பதால் அதனை மாற்ற வேண்டி எல்லா நகரத்தின் கடவுளர்களும் பதினான்காவது நகரமாக என் புதிய நகரத்தை ஒரு பதிமூன்றாம் தேதி நள்ளிரவில் தோற்றுவித்தனர்.தலைவனாக என்னைத் தேர்ந்தெடுக்க இவர்களுக்கு தேவைப்பட்ட தகுதியெல்லாம் பதிமூன்றாம் தேதி நான் பிறந்திருந்தது மட்டுமே.ஒரு நகரத்தின் தலைவனாக எவ்வித தனித்தகுதியும் தேவைப்படாததின் மூலம் இவை சனநாயகத்தின் வழித்தோன்றல்களாக மட்டுமே இருக்கமுடியும் என்பது புலனாகும்.

இங்கிருக்கும் மற்ற நகரங்களின் குடிமக்களைப்போல என் நகரத்தின் குடிமக்களுக்கும் தனி அடையாளம் வேண்டி என் நகரத்தின் கடவுளிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன்.முதலில் அவர் கொம்புகள் வைப்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.அதில் எனக்கு உடன்பாடில்லை,ஒரு மனிதனை கண்டவுடன் அவனின் 'அகம்' அடையாளம் காணப்படக்கூடியதாய் இருக்க வேண்டுமென பிடிவாதமாயிருந்தேன்.முடிவில் துளைகள் வைப்பதும்,குணத்திற்குப் பொருந்தா உடலின் பாகத்தினை மறையச் செய்துவிடுவதுமான முடிவிற்கு வந்தோம்.இப்போது இந்த நகரத்தில் வாழும் நூற்று இருபத்தி இரண்டு பேருக்கும் அடையாளம் வந்துவிட்டது.அவை கீழ்கண்டவாறு இருக்கும்

1.கால்கள் தரையில் பரவாது மிதந்து செல்வோர் கவிஞர்கள்,கலைத் தன்மை கொண்டவர்கள்.(இவர்களுக்குத் தேவைப்படாத கால்கள் கடவுளின் மூலமாய் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது).
2.அன்பில்லாத,இரக்கமில்லாத கடுமையான குணம் உடைய, இறுக்கமான நபர்களுக்கு இதயம் இருக்குமிடத்தில் பெரிய துளை இருக்கும்(நாளையடைவில் தன் குணத்தை மாற்றிக்கொண்டால் துளைகள் அடைந்து விடும்)
3.ஆண்மை இல்லாதோருக்கு வயிற்றிக்கு கீழ் பெரிய துளையொன்று இருக்கும்(பெண்கள் ஏமாறுவது தவிர்க்கப்படும் அதன் மூலம் கள்ளக் காதல்,கொலை,துரோகம் போன்ற குற்றங்கள் இல்லாமல் போகலாம்.தினத் தந்தி போன்ற நாளிதழ்கள் உருவாகாமலேயே போகக் கூடும்)
4.காதலித்து கொண்டிருப்போருக்கு உதடுகள் தேவையில்லை என முடிவெடுத்து உதடுகளை திரும்ப பெற்றுக்கொண்டாயிற்று.(காதல் மனம் சம்பந்தப் பட்டதுதானே உதடுகள் எதற்கு?)
5மேலும் ஆண் பெண்களுக்கான குறியமைப்புகளையும் மாற்றியமைத்தாயிற்று.முதல் முறை கலவி கொள்ளும் ஆண்,பெண் இருவரும் கடைசி வரை வேறொருவருடன் கலக்க முடியாத அளவிற்கு குறிகளின் தகவமைப்பு மாறிவிடுவது போன்ற அளவீடுகளை வடிவமைத்தாயிற்று(இந்த வடிவமைப்பிற்காக என் நகரத்தின் கடவுள் பதிமூன்று நாட்கள் இரவு பகலாக உழைத்தார்.ஒன்பதாம் நாள் இரவு இது சாத்தியமில்லை என்றதிற்கு நான் பிடிவாதமாய் நின்றேன்.ஒரு முறை காதலில் தோற்றுப்போனதால் இனி காதல் தோல்வி அல்லது ஏமாறுதல்/ஏமாற்றுதல் என்பதே இருக்ககூடாது என பிடிவாதமாய் நின்றேன்.ஒருவழியாய் பதினான்காம் நாள் பிறக்க பதிமூன்று நொடிகள் மீதமிருக்கும் நொடியில் இதனை வடிவமைத்தார்)

என் நகரத்தின் குடிகள் மகிழ்வாயிருந்தனர்.அவ்வப்போது எழும் பிரச்சினைகளையும் நான் சமயோசிதமாய் தீர்த்து வைத்தேன்.உதாரணத்திற்கு என் நகரத்தில் கவிஞன் என்பது பொதுப்படுத்தப்பட்ட ஒன்று.(கால்களை பிடுங்கி கொண்டோம்)ஆனால் நவீன கவிஞர்கள் ஓர் நாள் திரண்டு பிரமிள்,ஆத்மாநாம்,தேவதேவன் சாயலில் எழுதிக்கொண்டிருக்கும் எங்களுக்கும் வைரமுத்து,வாலியை அடியொற்றும் அவர்களுக்கும் கால்கள் இல்லாதிருப்பதன் மூலம் இரு பிரிவினரும் ஒருவராக கருதப்படும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அது தங்களுக்கு கவுரவ குறைச்சல் எனவும் குமைந்தனர்.பின்பு நான் நவீன கவிஞர்கள்,சாதா கவிஞர்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்தேன்.சாதா கவிஞர்களுக்கு ஒரு காலைத் திரும்ப கொடுத்துவிட்டு, நவீன கவிஞர்களை அப்படியே விட்டுவிட்டேன்.நானொரு சனநாயகத்தின் அடியொற்றி என்பதால் என்னால் எல்லோரையும் திருப்தி படுத்த முடிந்தது.மேலும் தெருவிற்கொரு மதுக்கடை திறந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் எவனும் ஆழமாய் சிந்திப்பதில்லை.பின்நவீன புத்தகங்கள்/பிரதிகள் போன்றவைகளை தடை செய்திருப்பதாலும்,நிர்வாண நடனத்தை தேசியமயமாக்கி இருப்பதாலும் என் குடிமக்கள் மகிழ்வாயிருந்தனர்.

நானொரு அரசியல் உயிரி.எனக்கான அரசியலின் முடிவுகள் பெரும்பான்மை குரலின் வெளிப்பாடாக இருந்தும் எனக்கு சிறுபான்மைகளின் மேல் கவர்ச்சி இருந்தது.சக நகரங்களின் தலைவர்கள்,அவர்களின் நகர அமைப்புகள் இவற்றின் மீது பொறாமை இருந்தது.காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் நகரம் எனக்கு அதிக பொறாமையைத் தூண்டியது.அவரின் நகரத்தில் பிணங்கள் நாறுவதில்லை.பூமிக்கடியில் புதைக்கப்பட்ட பிணங்களை எத்தனை ஆண்டுகள் கழித்து தோண்டி எடுத்தாலும் அவை புத்தம் புதிய மனித உடல்களாகவே இருந்தது.போர்ஹே,கால்வினோ,நெருடா நகரங்கள் சிறுபான்மையின் கவர்ச்சிகளோடு என்னை ஈர்த்தது.ரமேஷ் ப்ரேம் மாலதி மைத்ரி சகிதமாய் எனக்கு அருகாமையிலிருந்த நகரம் என்னை பொறாமையின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.அவர்களின் உலகத்தில் பிணங்கள் வேறு வடிவமெடுக்கிறது.ஒரு மனிதன் பல்வேறு பிணங்களக மாறுவதற்கான சாத்தியம் அவர்களின் உலகிற்கு இருந்தது.பிணத்துடன் பேச,உறங்க,வாழ அவர்கள் தலைப்பட்டிருந்தனர்.

என் நகரம் இத்தனை வசீகரம் இல்லையெனினும் அங்கே பிரச்சினைகள் இல்லாதிருந்தது மகிழ்வளித்தது.

நான் அவ்வப்போது கதாபாத்திரங்களின் நகரத்திற்கு சென்று வருவேன்.பால்யத்திலும் பதின்மங்களிலும் எனக்கு பிடித்திருந்த மனிதர்கள் வாழும் நகரத்திற்கு போய் வருவேன்.கடைசியாய் இரண்டு நாட்களுக்கு முன்பு போயிருந்தபோது தெரு வழக்கம்போல் குதூகலமாய் இருந்தது.கபீஷ்,ஜோ,எக்ஸ்ரே கண்,சுப்பாண்டி ஒரு புறமும் மாயாவியும் பிலிப்பும் இன்னொரு புறமுமாய் ஓடிப்பிடித்து விளையாடியதில் எழுந்த தூசிக்கு முகம் பொத்தி யமுனா வீட்டில் நுழைந்தேன்.யமுனாவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருந்தது.அம்மணி மட்டும் வந்து போகிறாள் என்றும் செண்பகம் எட்டியே பார்ப்பதில்லை என்றுமாய் குறைபட்டுக் கொண்டாள்.
இப்போதெல்லாம் இந்த வீதி மாறிப்போய் விட்டது.இங்கே யார் யாரோ வருகிறார்கள்.இந்த நகரத்தின் வீதிகள் அடர்வுத் தன்மை கொண்டு வருகிறது எவர் பேசுவதும் புரியவில்லை.எல்லாரும் கிறுக்கு பிடித்தவர்களைப்போல பேசிக்கொள்கிறார்கள்
என குறைபட்டுக் கொண்டாள்.நான் மெல்ல சிரித்துக் கொண்டேன்.விடைபெறுவதற்கு முன் யமுனா தி.ஜா வை பற்றிக் கேட்டாள்.
எல்லாருக்கும் சிலை வைக்கும் நகரத்தில் அவரின் சிலை இருக்கிறதா?
என்றதற்கு நான் இல்லையென்றேன்.மேலும் பூநூல் போட்டவர்களுக்கு சிலை வைப்பதில்லை என்றேன்.
நிறைய பேர் இருந்தார்களே ஒருத்தருக்கு கூடவா இல்லை?
என்றதற்கு நினைவு வந்தது போல் நகுலனுக்கு மட்டுமிருப்பதாய் சொன்னேன்.
நகுலனா!அந்த ஆள் ஒரு பைத்தியம்! நேத்து வந்து இங்க உட்கார்ந்திருந்தது ரொம்ப நேரம்..
என்றாள் நான் சத்தமாய் சிரித்தபடி பூநூல் போட்டும் பைத்தியமானவர்களுக்கு மட்டுமே சிலை வைக்கப்படும் எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

7 comments:

Anonymous said...

இதெல்லாம் ஆவரதில்லை,ஆவரதில்லை,ஆவரதில்லை. பதினைந்தாவது நகரம் படைத்து என்னைத் தலைவனாக்கு.

கோபிநாத் said...

ஏதே கனவுல நடக்கற மாதிரி இருக்கு!!

ரூபன் தேவேந்திரன் said...

அய்யனார் இடையில் உங்களின் எழுத்து அலுப்பு தட்டியது போல் இருந்ததால் வாசிக்காது இருந்தேன். இன்றைக்கு வாசித்தேன். நன்றாக இருக்கிறது. முடிந்தால் முதல் விட்டவையையும் வாசிக்க முயற்சிக்கிறேன்.

ஜமாலன் said...

அய்யனார்..

நீண்ட நாளைக்குப் பிறகு (இதன்பொருள் இங்கு கிடைக்கவில்லை என்பதுதான்) ஒரு நல்லப் படைப்பாற்ல் மிக்க எழுத்தைப் படித்ததேன்.

//நானொரு அரசியல் உயிரி.எனக்கான அரசியலின் முடிவுகள் பெரும்பான்மை குரலின் வெளிப்பாடாக இருந்தும் எனக்கு சிறுபான்மைகளின் மேல் கவர்ச்சி இருந்தது.//

முக்கியத்தவம் வாய்ந்த வாசகங்கள். துவங்கிவிட்டீர்கள் படைப்பகளை என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய...

இன்னம் சில உறுப்பில்லா மனிதர்கள் பற்றியும் எழுதுங்கள்...நிறைய பேர் உள்ளனர்..

முபாரக் said...

அய்யனார்,

நானிருக்கும் நாட்டில் மதுபானக்கடைகளோ, கஞ்சாவோ கிடைப்பதில்லை. ஆயினும் உங்கள் எழுத்துக்கள் எனக்கான அந்த விழைவைச் செய்கின்றன.

சினேகபூர்வம் முபாரக்

Ayyanar Viswanath said...

கோபி :)

கோசலன்
அதிகமா எழுதுவதால அலுப்பு தட்டுதோ :)


நன்றி ஜமாலன்

Ayyanar Viswanath said...

முபாரக்

எனக்கேற்பட்ட போதையை உங்களுக்கும் கடத்த முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி..சரி சரி ஒரு முற துபாய் வந்து போங்க ரீ சார்ஜ் பண்ணிடலாம் :D

Featured Post

test

 test