நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக
.........
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
சிவாஜிக்கு அடுத்தபடியாய் கற்றது தமிழுக்குதான் அதிக பதிவுகள் வந்திருக்கின்றன.வலையில் படத்தை விலாவரியாய் அலசி பிழிந்து காயப்போட்டாயிற்று.குசும்பன், தருமி, ஆடுமாடு, கொங்குராசா,உண்மைத் தமிழன் என கலந்து கட்டி விமர்சித்திருந்தது படம் ஏதோ ஒரு விதத்தில் எல்லாரையும் பாதித்திருப்பதையே தெளிவுபடுத்தியிருந்தது.படத்தில் ஏகப்பட்ட நெருடல்கள் இருந்தாலும் பிரபாகரையும் ஆனந்தியையும் அத்தனை எளிதில் கடந்துபோய்விட முடியவில்லை.தருமி ஐயா சொல்லியிருந்தது போல ஏதோ ஒரு சங்கடம் படம் பார்த்து முடித்தபின்னும் இருந்துகொண்டேயிருந்தது. இரவு பத்து மணி காட்சிக்கு கலேரியாவில் என்னோடு சேர்த்து பதினோரு பேர் மட்டுமே திரையரங்கில் அமர்ந்திருந்தோம்.ஓய்வான மனநிலையில் கூட்டமே இல்லாத நல்ல திரையரங்கில் இரவு காட்சிக்கு உகந்ததாய் இருந்தது கற்றது தமிழ்.
ஜீவா வின் நடிப்பில் நல்ல மெருகு டிஷ்யூம் படத்திலும் இவரின் இயல்பான நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.பிரபாகர் கதாபாத்திரம் சில குறைகளோடு நன்றாகவே இருந்தது.மண்டைக்குள் மணியொலிக்க தனியறையில் தவிக்கும் காட்சி சிறப்பாய் வந்திருந்தது.அம்பாசமுத்திரம்,அச்சன் கோவில்,பாளையங்கோட்டை,திருவண்ணாமலை,மகாராஷ்டிரா,சென்னை என திரைப்படத்தோடு நாமும் அலைந்து விட்டு வந்த உணர்வை ஒளிப்பதிவு ஏற்படுத்தியிருந்தது.குறிப்பாய் திருவண்ணாமலை வீட்டில் எடுக்கப்பட்டிருந்த சில காட்சிகள்,மலை சுற்றும் வழியில் பதிவித்திருந்த கொஞ்ச நேரமே வந்து போகும் காட்சிகள்,அந்த வடநாட்டு மலைக்கிராம வெட்ட வெளி,ஆரம்பத்திலும் முடிவிலும் வந்து போகும் ரயில் குகை யென சிறப்பான இடத் தேர்வுகள்.கதை சொல்லும் பாணியில் எடுக்கப்பட்ட படங்கள் தமிழில் மிக குறைவு (இதற்கு முன் விருமாண்டி) இதில் வசனங்களும் மிக இயல்பாய் கவித்துவமாய் வந்திருந்தது. “பத்து வார்தைக்கு ஒருமுற நெசமாத்தான் சொல்றியான்னு எந்த பொண்ணாவது கேட்டா அவதான் ஆனந்தி” “கடிதம் எழுத தேவப்படுறதெல்லாம் ஒரு பெயர் மட்டும்தான் மத்தபடி அத அவங்க படிக்கிறாங்களா அவங்களுக்கு போய் சேருதாங்கிறதெல்லாம் முக்கியமில்லை. ””சாவுதான் என்னோட விசிட்டிங்க் கார்டு”.எல்லாவற்றையும் விட இறுதிக் காட்சி ஒரு மேஜிக்கல் ரியலிச கவிதை..
கொஞ்சம் யூமாவாசுகியின் கதாபாத்திரம்போல ஆரம்பித்த பிரபாகரை அப்படியே விட்டிருக்கலாம்.எதை எதை யோ திணித்து பிரபாகர் முழுமையடையாது போனது வருத்தமே.
திரைப்படம் போவதற்கு முன்பு நாஞ்சில் நாடனின் எட்டுத் திக்கும் மத யானை நாவலை படித்து முடித்திருந்தேன்.பி.காம் கடைசி வருடம் படிக்கும் பூலிங்கம் தன் வகுப்பில் படிக்கும் பெண்ணிடம் வெகு சாதாரணமாய் பேசிய காரணத்திற்காக தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு அபபெண்ணின்(செண்பகம்)தகப்பனாரால் அவமானப்படுத்தப் படுகிறான்(டீகடையில் நையப்புடைக்கிறார்கள்).வன்மம் கொண்ட பூலிங்கம் அவரின் வைக்கோல் போருக்கு தீவைக்கிறான் உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான்.ஆந்திரா,கர்நாடகா,கோவா என அலைந்து திரிகிறான்.பெரும்பாலும் ரயில் நிலையங்கள்,ப்ளாட்பாரங்கள் என நாட்கள் போகிறது.ரயிலில் ஐஸ்கிரீம் விற்பது,கோவாவிலிருந்து மது புட்டிகள் கடத்துவது.போதை மருந்து கடத்தல், லாரியில் ஓடுவது என வாழ்வு மாறிக்கொண்டே இருக்கிறது.எங்காவது யாராவது எதிரியாக முளைத்து விடுத்துவிடுகிறார்கள்(பல சமயங்களில் இவனே இவனுக்கு).
ஒருவழியாய் பாம்பாயில் ஒரு பெரிய சாராய வியாபாரியிடம்(அண்ணாச்சி) தஞ்சமடைகிறன்.மிகுந்த பாதுகாப்புகளோடு சாராயம் கடத்துகிறான்.நண்பர்கள் வட்டம்,புதிதாய் தொழில் ஆரம்பித்தல் (வேன் வாங்கி ஆள் போட்டு ஓட்டுகிறான்) என நிலைபெறுகிறது.இவனின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான செண்பகம் பம்பாய்கு திருமணமாகி வருகிறாள்.அவளின் கணவரிடம் அல்லல்படுகிறாள்.பூலிங்கம் அவளை அவனிடமிருந்து மீட்டு புதிதாய் வாழ்வை தொடங்குகிறான்.
ஒரு தேர்ந்த திரைக்கதை போன்ற எழுத்து நாஞ்சில் நாடனுடையது.மனக்கண் முன் காட்சிகளாக விரியும் வார்த்தையாடல்கள்.மிகத் தெளிவான,ஆர்வமான எழுத்து என வாசிப்பின்பத்திற்கு நாஞ்சில் நாடன் முழு உத்திரவாதம்.இவரின் மற்றொரு நாவலான சதுரங்க குதிரைகள் பற்றிய கதிரின் குறிப்புகள் இங்கே.இவரின் தலைகீழ் விகிதங்கள் நாவலை தங்கர் சொல்ல மறந்த கதை என படமாக்கி இருந்தார்.நாவல்களை திரைப்படமாக்குவதின் சிக்கல்கள்,தமிழில் ஏன் சிறந்த நாவல்கள் திரைப்படமாவதில்லை என்பது குறித்து பிறிதொரு முறை பேசலாம்.
7 comments:
இன்னும் ராம் பார்க்கவில்லை. எட்டுத்திக்கும் மதயானை முன்பே படித்து விட்டேன். நீங்கள் சொல்வதைப்போல், நாஞ்சில் நாடனின் நடை நம்மை நாவலுக்குள் இழுத்துக் கொள்ளும்.
இன்னும் கற்றது தமிழ் பார்க்வில்லை. நாஞ்சில்நாடனின் எட்ட திக்கும் மதயானைகள் சில வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அந்நாவலின் பம்பாய் வாழ்வு பற்றியும் விரிவாக பேசப்பட வேண்டிய ஒன்று. அவரது எழுத்து நம்மை உள்ளிழுக்கக் கூடியதுதான்.
எட்டுத்திக்கும் மதயானை பார்சல்ல்ல்ல்.
எடுப்புக்கு ஒரு தொடுப்புக்கு நன்றி.
ராம் என்ன சொல்றாருன்னு பாருங்க.
http://indiainteracts.com/videos/2007/10/19/ChatRoom--Director-Ram/
தாமோதர்,ஜமாலன்,கதிர் பகிர்தலுக்கு நன்றி
அய்யனார் 'நெசமாத்தான் சொல்றீயா?' என்று அஞ்சலி ஸ்டைலில் கேட்கலாம் போலிருக்கிறது.யூமா வாசுகியின் கேரக்டரையும் பிரபாகரையும் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மற்றபடி நாஞ்சில் நாடனின் எழுத்துக்களில் ஏதோ ஒன்று இழுக்கிறது. நன்றி. என்ன எழுதவென்று யோசித்துக்கொண்டிருந்தேன். நாவலை திரைப்படமாக்குவது குறித்தான சிக்கலை பற்றிய ஐடியாவை தந்திருக்கிறீர்கள்.அதற்காக இன்னுமொரு முறை நன்றி.
ஆடுமாடு
யூமா வாசுகியின் கதாபாத்திரம் போல ஆரம்பித்த ன்னுதாங்க சொல்லியிருக்கேன் :)
எனக்கு அப்படித்தான் பட்டது.தன்னப்பத்தி பிரபாகர் சொல்ல ஆரம்பிக்கும்போது..ஆனந்திக்கு எழுதும் கடிதம்..ஸ்கூல் வாத்தியார்.. சிகரெட்.. தனிமை..அந்த அறை..தற்கொலைக்கு முனைவது.. இதெல்லாம் எனக்கு மஞ்சள் வெயில் நாயகனை நினைவு படுத்திச்சு அப்புறமா தடம் புரண்டதென்னமோ வாஸ்தவம்...
எப்படியோ உங்களுக்கொரு நல்ல தலைப்பு கொடுத்ததில சந்தோசம் :)
Post a Comment