Monday, October 8, 2007
என் பக்கமும் உங்களின் விமர்சனங்களும்
இந்தப் பக்கத்தில் இது நூறாவது இடுகை.எண்ணிக்கைகளின் மீது பெரிதாய் ஆர்வமில்லையெனினும் கணக்கீட்டு அடிப்படையில் 100 என்பது நிறைவாகத்தான் இருக்கிறது.இந்த வருடம் பிப்ரவரி கடேசி நாளுக்கு முந்தைய தினம் ஆரம்பிக்கப்பட்டது இந்த தனிமையின் இசை.தொடங்கிய சில நாட்களிலேயே வலைப்பக்கத்தின் பெயர் அர்த்தமிழந்தது.பெற்றது நண்பர்கள் எனத் தேய்ந்த வார்த்தைகளை இங்கே மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.கற்றது அதிகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வலைப்பதிவும் தமிழ்மணமும் ஒரு போதையை ஏற்படுத்தி இருக்கிறது.அடிக்ட் என்ற வர்த்தையை கூட பயன்படுத்துவது சரியாகத்தானிருக்கும்.தமிழ்மணமேட்டிஸ் என்கிற சொல்லாடலையும் முன்பே உபயோகித்திருக்கிறேன்.சமூக பிரக்ஞை அல்லது கண்ணில் படுவதை எல்லாம் எழுத்துக்களாக்கிப் பார்க்கும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி அல்லது கிறுக்குகுணம் புதிதாய் வந்து சேர்ந்திருக்கிறது.இப்போதெல்லாம் நேரிலோ தொலைபேசியிலோ பிறரிடம் பேசுவதைக் காட்டிலும் சாட்டுவது மிகவும் பிடித்தமானதாகவும் இணக்கமானதாகவும் இருக்கிறது.
இன்னும் சொல்லப்படக்கூடியதாய் புதிதான பல குணாதிசிய மாற்றங்களும் வலைக்கு வந்த பின் ஏற்பட்டிருக்கிறது.எல்லாவற்றையும் விட கிடைத்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையும் அன்பும் மலைப்பூட்டக் கூடியதாய் இருக்கிறது.இன்றைய தினம் வரை எந்தவித ஆபாச பின்னூட்டங்களும் வரவில்லை என்பதில் சிறுமகிழ்ச்சியே ( நீயே அசிங்க அசிங்கமா எழுதுற உன்னவிட அசிங்கமா எவனால எழுதிட முடியும்)
சன்னாசியின் பழைய வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது அடையாளங் காணப்படுவதின் சிக்கல்களை குறித்து எழுதியிருந்தது (ஐ.பி விலாசம் கண்டறியும் யுக்திகளை வலையில் சேர்த்திருப்பது தன்னுடைய பிரைவசியை பாதிப்பதாய் சொல்லியிருந்தார்)ஆச்சர்யப்படுத்தியது.ஏதோ ஒரு அடையாளத்திற்கான உந்துதல்களின் விழைவுதான் நமது எழுத்து என்கிற என் நிலைப்பாடு சற்றே மாறிப்போனது உள்ளே தகிக்கும் அல்லது வெளிப்பட ஏங்கும் சொற்களின் எழுத்து வடிவமாக மட்டுமே இனி இந்த பக்கம் இருக்கும் என்கிற எண்ணம் அப்போது தோன்றியது.
மற்றபடி மலிந்த விளம்பர யுக்திகள் எதிலேயும் ஆர்வமில்லை.பெரும்பாலான விவாதங்களையும் தவிர்த்துவிடுவது விளம்பரமாதலின் பயம்தான்.வலை நண்பர்களின் மூலம் தெரிந்துகொண்ட புதிய திறப்புகள் இந்தப் பொழுதை மிகுந்த இணக்கமாக்குகிறது.சலிக்கும்வரை எழுதிக்கொண்டிருப்பேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இந்தப் பொழுதில் நன்றி சொல்லப்பட வேண்டிய நண்பர்களின் பட்டியல் மிக நீளம்.
இந்த பக்கம் குறித்தான உங்களின் பகிர்வுகள்,விமர்சனங்களை எதிர் நோக்குகிறேன்.புரியவில்லை/ஆபாச வர்த்தைகள் போன்ற பொத்தாம் பொதுவான கருத்துக்களை விட புதிதாய் ஏதேனும் குறைகளை சுட்டினால் மகிழ்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
36 comments:
எளிதான விஷயங்கள எளிமையான சொற்களை கொண்டு எழுதலாம். எளிதில் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகள போட்டு எழுதறதுதான் பெரும்பாலானவர்களின் குமுறல்.
ஜெயமோகனின் வார்த்தையாடல்கள் போல. :)
உங்களோட புனைவுகள படிச்சவங்க சன்னாசி, பெயரிலி, போன்றவர்களின் புனைவுகளை முதல்ல படிச்சிருந்தாங்கன்னா யாரும் உங்கள கலாய்ச்சிருக்க மாட்டாங்க.
தொடங்கிய கொஞ்ச நாள்லயே எல்லாருடைய கவனத்துக்கும் போயிட்டு வந்திங்கன்னா அதுக்கு காரணம் கவிதைகளும், புனைவுகளும்தான் கொஞ்சம் புழக்கத்தில் இல்லாத சொற்கள்தான் பெரும்பாலான கவிதைகளை அடைத்திருக்கின்றன.
ஒண்ணு படிக்கிற மக்கள் பழகிக்கணும், இல்லன்னா நீங்க நிறுத்திக்கணும்.
எனக்கென்னவோ ரெண்டும் நடக்குற மாதிரி தெரியல.
கடலை போடறது ஜாஸ்தியா ஆகியிருக்குன்னு சொல்றிங்க. அது உங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும்தான் ஒரு கட்டத்துல போரடிச்சிடும்.
நல்லா இருக்கிங்களா?
எப்படி போகுது லைப்?
இந்த கேள்விகளுக்கு எத்தனை நாள்தான் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியும்?
எண்ணிக்கைகளின் மீது ஆர்வமில்லையென ஆர்வம் கொண்டவர்களை கலாய்ப்பது ஏன்? அந்த ஆர்வம் கொண்டவர்களின் பட்டியல் வெளியிட்டால் என்ன?
செஞ்சுரி வாழ்த்துக்கள்.
எல்லோரும் 100 வது பதிவு போட்டா வாழ்த்து சொல்லுவாங்க மேலும் பல நூறு அடிக்க என்று, இங்கு அதை நான் சொன்னால் என்னை தம்பி அடிப்பார்!!! லொடுக்கு அடிப்பார்... இருந்தாலும் நானும் பதிவு போடனும் அதுக்காகவாது நீங்க பல நூறு அடிக்க வாழ்த்துக்கள் அய்ஸ்...
"அபுதிதாய் ஏதேனும் குறைகளை சுட்டினால் மகிழ்வேன்."
ஒன்னே ஒன்னு நீங்க போடும் படம் எல்லாம் பயமாக இருக்கு!!!!
அய்யனார்,
இம்மாத அம்ருதாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. படிப்பவனுக்கு புரியாமல் எழுதுவதென்பது Intellectual Masturbatiஒன் என்று திருவாய் மலர்ந்தருளியிக்கிறார் கட்டுரையாளர்.
எனக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தது. ஒன்று சு.ராவிடம் ஏதாவது படைப்பு புரியவில்லையென்றால் எத்தனை முறை படித்தீர்கள் என்பாராம். எட்டாம் வாய்ப்பாட்டை எத்தனை முறை படித்திருப்போம்?
ஆனால் இலக்கியம் என்பது ஒரு முறையில் புரிந்துவிட வேண்டும் என்பது எத்தனை பெரிய முட்டாள்த்தனம்.
இரண்டாவது வலையுலகில் உங்கள் கவிதைகள் உள்ளாகும் விமர்சனம்.
படைப்பாளியின் வாழ்வியல் அனுபவம் வறண்டிருக்கும் போது, படைப்பின் வறட்சித்தன்மையை தவிர்க்க முடியாது. ஆனால் படைப்பில் வறட்சித் தன்மை இருக்கிறது என்பதனைக் கூட படைப்பை புரிந்து கொள்பவனால் மட்டும்தான் சொல்ல முடியும்.
படைப்பின் ஒவ்வொரு கூறும், படிப்பவர்கள் அத்தனை பேருக்கும் புரிந்துவிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் ஒரே பார்வையில் ஒட்டுமொத்தமாக புரியவில்லை என்று சொல்பவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றுதான் சொல்வேன்.
உங்களின் ஒரு அனுபவத் துகளை நீங்கள் படைப்பாக பதிவு செய்யும் போது, அந்த அனுபவம் வாசகனுக்கு ஏற்பட்டிருப்பின் அவன் புரிந்து கொள்வான் அல்லது அவன் அறிந்திருக்கும் வேறு விதமான அனுபவத்தோடு தங்களின் அனுபவத்தை பொருத்தி புரிந்துகொள்வான் அல்லது இன்று புரியாவிடினும் இன்னும் சில நாட்கள் கழித்து உள்வாங்கிக் கொள்வான்.
இன்றைய வாசகனுக்கு புரியவில்லை என்றாலும் என்றேனும் ஒரு நாள் படிக்கும் நாளைய வாசகனுக்கு புரியும்(ஆத்மாநாம் சொன்னது).
தங்களின் கவிதைகள் தொடர்ச்சியாக புரியவில்லை என்ற விமர்சனத்திற்குள்ளாவதை கவனித்திருக்கிறேன். ஆனால் உங்கள் கவிதைகள் வாசகனை யோசிக்கச் செய்பவை. அவன் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கவிதையின் சில படிநிலைகளைத்தாண்டதவனால் உங்கள் கவிதைகளை நெருங்கவியலாது. அவனுக்கு அதற்கான பயிற்சி தேவைப்படுகிறது.
உங்களின் சில கவிதைகள் அயற்சியைத் தந்திருக்கின்றன. ஆனால் அது தவிர்க்கவியலாது. ஒவ்வொரு கவிஞனின் ஏதேனும் ஒரு கவிதையாவது வாசனுக்கு அயற்சியைத் தந்துவிடும். நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
தங்களின் கவிதைக்கென ஒரு கவிதை மொழி இருக்கிறது. தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருங்கள். ஆனால் நீங்கள் சென்றடைய வேண்டிய தூரமும், வாசகர்களும் மிக அதிகம். சிறுவட்டத்திற்குள்ளாக மட்டுமே நின்றுவிடமாட்டீர்கள் என நம்புகிறேன்.
மிக்க அன்புடன்
வா.மணிகண்டன்
அண்ணே உங்க பதிவ அதிகம் படிச்சதில்லை.
இவ்ளோ சூப்பரா, உணர்வு பூர்வமா, தெளிவா எழுதி இருக்கீங்க. அப்புறம் ஏன் உங்க பிளாக பார்த்து பயமுறுத்தராங்கனு எனக்கு புரியல.
//சலிக்கும்வரை எழுதிக்கொண்டிருப்பேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.//
இந்த போஸ்ட் மாதிரியே(புரியர மாதிரி) எழுதனீங்கனா எல்லாரும் படிப்பாங்க படிப்பாங்க. போன போஸ்ட், அதாங்க 99-வது போஸ்ட் மாதிரி எழுதினா ......
நூறுக்கு ட்ரீட் உண்டா?
நூறுக்கு ட்ரீட் நீ ஏண்டா கேக்கறேன்னு சில குசும்பர்கள் கேக்க வாய்ப்பிருக்கு.
நான் சொன்னது இந்த 100.
//
ஒண்ணு படிக்கிற மக்கள் பழகிக்கணும், இல்லன்னா நீங்க நிறுத்திக்கணும்.
எனக்கென்னவோ ரெண்டும் நடக்குற மாதிரி தெரியல.
//
வெட்டி பாலாஜி எல்லாருக்கும் புரட்சி பட்டம் கொடுத்து புரட்சி பண்ணிகிட்டிருந்தார்.
அய்யனார் புரட்சிக்கே புரியாதவர்ன்னு குடுத்திருந்தார்.
அவர மாதிரி ரொம்ப நாளா வலைல இருக்கிறவங்களுக்கே இந்த கதினா புதுசா வந்து அய்ஸ்கிட்ட மாட்டறவங்களோட நிலமை பரிதாபம்தான்.
//புரியவில்லை/ஆபாச வர்த்தைகள் போன்ற பொத்தாம் பொதுவான கருத்துக்களை விட புதிதாய் ஏதேனும் குறைகளை சுட்டினால் மகிழ்வேன்//
:)
யாருக்காவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே.. உனக்காக உன்னை மாற்றிக் கொள் என்ற வரிகளுக்கு உதாரணமய்யா நீ....
நீ விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன்ய்யா.... நேர்ல வரும் போது ஒரு நாள் இரவு பேசுவோம்... தக்க முன்னேற்பாடுடன் :)
தோழரே நூறுக்கு வாழ்த்துகள். விமர்சனங்கள் செழுமைப்படுத்தத்தான். குத்தி கிழித்துவிட வேண்டும்னு விமர்சனம் எழுதறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க. நதியில் செல்லும் இலையை நாக்குகள் தடுக்காது. உங்கள் நதி குளுமையாக இருக்கிறது. தினமும் குளிக்க நான் ரெடி. வாழ்த்துகள்.
இன்னும் ஆயிரம் அடிக்க வாழ்த்துகிறேன்.
அய்யனார்!இந்தப் பின்னூட்டத்தை இரண்டாவது தடவையாக எழுதுகிறேன். முதலாவது இட்டது எங்ஙனமோ தொலைந்துபோயிற்று. உங்கள் பதிவுகளின் கவித்துவ மொழியாடலால் ஈர்க்கப்பட்டு மீண்டும் மீண்டும் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். கவிதைகளைக் காட்டிலும் கட்டுரைகள் பிடித்திருக்கின்றன. ஹேமா பற்றிய பதிவு மனம் கலங்க வைத்தது. உங்கள் எழுத்தைப் பின் நவீனத்துவம் சார்ந்தது என்கிறார்கள். மனிதர்களைப்போலவே எழுத்துக்கும் முத்திரை குத்துவதிலோ ஒரு சிமிழுக்குள் அடைப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. இவ்வுலகின் மீது வெறுமை கவிந்துவருவதான ஒரு தோற்றப்பாட்டினை உங்களது பல பதிவுகளில் உணர்ந்திருக்கிறேன். அதிகம் புழக்கத்தில் இல்லாத சொற்பயன்பாடும் உங்களது சிறப்புகளில் ஒன்று. ஒன்றே ஒன்று சொல்லலாமா.. தனிப்பட்டவர்கள் 'இது நான்தானோ'என்று நினைத்து மருகும்படியான சில பதிவுகளை-துரோகிக்கப்பட்டதான தொனியிலான பதிவுகளை வாசிக்கும்போது கொஞ்சம் நெருடலாக இருந்தது. துரோகம் என்பது ஆளாளுக்கு வேறுபடும். ஆனால்... என்ன எழுதுவதென்று தீர்மானிக்க வேண்டியவர் நீங்கள்தான். நான் என்ன உணர்ந்தேன் என்பதைச் சொல்லவே அதைச் சுட்டினேன். மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யனார்!
அய்ஸ் 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் ;)))
\\\\ிமர்சனங்களை எதிர் நோக்குகிறேன்.புரியவில்லை/ஆபாச வர்த்தைகள் போன்ற பொத்தாம் பொதுவான கருத்துக்களை விட புதிதாய் ஏதேனும் குறைகளை சுட்டினால் மகிழ்வேன்.\\
அய்ஸ் இதை படிச்சதும் சிரிப்பு தான் வருது....நான் சொல்ல வேண்டியதை சிவா சொல்லிட்டாரு...உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுங்க அம்புட்டு தான் ;)))
தம்பி
நான் யாரையா கலாய்ஞ்சேன் .. அதெல்லாம் நாம பேசிக்கிரதுதான் மத்தபடி எல்லாருக்கும் தனித்தனி உலகம்தானே...
நன்றி ஜே கே....
குசும்பர்ர்ர்
இனி கவனமா தேர்ந்தெடுக்கிறேன்
மணி
விரிவான பகிர்தல்களுக்கு நன்றி..இந்த இண்டலெக்சுவல் மாஸ்ட்ருபேசன் / டெர்ரரிஸம் என்பதெல்லாம் இயலாதோரின் உளறல்கள் என்பதில் எனக்கெந்த சந்தேகமுமில்லை. அதிக பூச்சுகளை தவிர்த்து கடினமான மொழியில்(இந்த கடினமான என்பதில் கூட எனக்கு உடன்பாடு இல்லை எல்லாமே தமிழ்தானே) சிக்கலான கூறுகளை முன் வைக்கும் படைப்பாளிகளை இது போன்ற வக்கிர பெயர்களில் அடைப்பதற்கென்றே ஒரு கூட்டமிருக்கிறது.மேலும் எல்லாருக்கும் புரியும்படிதான் எழுதப்படவேண்டுமெனில் நமது பரப்பில் குத்து பாடல்களை தவிர்த்து வேறெந்த இலக்கியமும் எழுதப்பட்டிருக்காது.
நம்மிடையே இருக்கும் சிக்கல் நம்மால் மாற்றங்களையோ புதிதானவைகளையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான்.பழகிய மூளையின் பாதுகாப்பான இடங்களில் ஆசுவாசமாய் கொட்டாவி விடுவதுதான் இலக்கியம் என்பது நமது பரப்பில் எழுதப்படாத சட்டம்
மங்களூர் :)
யோவ் புலி போனமுற வந்தப்ப எஸ்கேப் ஆயிட்ட அடுத்த முற வரும்போதாவது எங்களோட தங்குறா மாதிரி வாய்யா ..தம்பி எப்பவும் முன்னேற்பாடுகளோடதான் இருப்பான் ஒண்ணும் பிரச்சினையில்லை :)
ஆடுமாடு
பகிர்தல்களுக்கு நன்றி தோழர்
நன்றி உண்மைத்தமிழன்
தேங்க்ஸ் பாபா :)
தமிழ்
எழுத வந்த புதிதிலிருந்து இன்று வரை உங்களின் அன்பும் என் மீதான அக்கறைக்கும் வெறுமனே நன்றி என்பது அபத்தமாய் படும்..இந்த நேரத்தில் இந்த பகிர்தல்கள் மிகுந்த நிறைவளிக்கின்றன..
துரோகம் என்பது ஆளாளுக்கு வேறுபடுகிறது தமிழ்..துரோகம் என்கிற சொல்லாடல் கூட மிகுந்த சுயநலமானதுதான்..தனிப்பட்ட ஒருத்தனின் தனிப்பட்ட முட்டாள்தனங்களை எப்படி அவன் காதல் என்றழைத்துக்கொள்கிறானோ அப்படியே அந்த ஏமாற்றங்களுக்கும் அவன் துரோகம் என்ப் பெயரிட்டு கொள்கிறான் மற்றபடி உணமை நிலைக்கும் புலம்பல்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை...
உதாரணத்திற்கு மஞ்சள் வெயில் நாயகனை போலத்தான் பெரும்பாலான இளைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள் நம்புவதற்கே கடினமான அவர்களின் சிக்கலான மனக்கூறுகள் மட்டுமே சிறந்த படைப்புகள் உருவாக காரணமாயிருக்கிறது
நன்றி கோபி
வாழ்த்துக்கள் அய்யனார்
வாழ்த்துக்கள் தல! :)
அய்யனார் முதலில் 100 க்கு வாழ்த்துக்கள்.
வலைப் பதிவு என்பது நம் மனதின் அபிலாஷைகளின் எழுத்துப் படிமம்.நமக்கு பிடித்தவை பிடிக்காதவை எல்லாம் எழுதலாம்.படிப்பவரின் விருப்பத்திற்கேற்ப விமர்சனம் அமையலாம்.
ஆபாசம் என்பது நம் பர்வையின் கோணம் தானே.
புரியற மாதிரியோ அல்லது புரிந்து கொள்ள முடியாத வார்த்தைப் பிரயோகங்களோ ஆக்கப் பூர்வமானவையே
மாற்றம் என்றுமே வரவேற்புக்குரியவை.கவனம் ஈர்ப்பவை.
தயக்கமின்றி உங்க பாணியிலேயே தொடருங்கள்.
நாங்கள் கலாய்ப்போமே தவிர எதிரிகள் இல்லை.
இந்திரஜித் , கப்பி நன்றி
டீச்சர் பகிர்விற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி
அய்யனார், நான் விரும்பி வாசிக்கும் பதிவுகளில் உங்களின் வலைப்பதிவும் ஒன்றென இங்கே பதிவு செய்துவிடுகின்றேன். ந்ன்றி.
மிகவும் தாமதமாக பதிவிற்கம் உங்கள் எழுத்துக்கும் வந்து சேர்கிறேன்.
100-க்குவாழ்த்தக்கள்.
உங்கள் ரமேஷ்-பிரேம் கட்டுரைகள் படித்தேன். புதிய இலக்கிய நூல்கள் படிக்கவாய்ப்பில்லாததால் அவற்றை வாசிக்க முடியவில்லை. சவுதிக்க ஒர குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் நூல்களை கொண்டுவர முடியாது. இருப்பினும்.. அவர்களது முதல் நாவலான "எழுதப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும்"- என்பதற்கு ஒரு விரிவான விமர்சனம் காலக்குறி நகலச்சு இதழில் எழுதி உள்ளேன். 10-ஆண்டுகளுக்கு முன்பு அவை வந்த புதிதில். அதன்பின் தங்களது கருத்துக்களை படிக்க நேர்ந்தது. பிரேமின் ஆரம்பகால எழுத்துக்களில் இருந்து அவரை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் உங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள். தனிப்பட்ட முறையில் அவர் எனது நண்பர் என்பதற்காக இதனைக் கூறவில்லை.
எம்.ஜி. சுரேஷ் குறித்த உங்கள் நிலைபாடே என்னுடையதும். அது ஒருவகை கடைவிரிப்பு. இப்படி பல கடைவிரிப்புகள் உள்ளன. அவை வேண்டாம் இங்கு..
உங்கள் எழுத்துநடை வசீகரமானது. அனுபவங்களை உள்வாங்கும் விதமும். தொடருங்கள்... தொடர்வோம்.. கருத்தாடலையும். உங்கள் புத்தக மற்றம் திரைப்பட்டியலும் பன்முக வாசிப்பை காட்டுகிறது. அரசியலற்ற எந்த எழுத்தும் சாத்தியமில்லை. உங்களுக்கான அரசியலை உங்கள் எழத்தின்வழி உணர முற்படுகிறேன். இலக்கிம் என்பதை உளப்பகுப்பாய்வின் நனைவிலி என்கிறார் லக்கான்.. Litrature is unconcious of Pscoanalysis. இலக்கியத்தை வாசிப்பது உளப்பகுப்பாய்வின் நினைவிலியை அடைவதற்க ஒரு வழி அல்லது இலக்கியம்வழியாக உளப்பகுப்பாய்வ சாத்தியம் என்பதுதான். நானற்ற ஒரு சமூகத்தில் வாழ்வதே இவ்வகை சிதைவான இலக்கிய இயக்கமாக இருக்கிறது. தொடரலாம் வருங்காலங்களில் நமது உரையாடலை.
வாழ்த்துக்கள் அய்யனார்!
வாழ்த்துக்கள் அய்யனார்...
வந்த கொஞ்ச காலத்துலயே நீங்க எல்லாரும் படிக்கக்கூடிய ஆளாக மாறியதுக்கு காரணமே வித்தியாசமான முறை எழுத்துத்தான். புரியலன்னாலும் எல்லாரும் வந்து படிச்சு புரிஞ்சுக்க முயற்சி செய்யறாங்களே !! :) மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
நன்றி டிசே
ஜமாலன்
பாராட்டுகளுக்கு நன்றி..எனக்கான அரசியல் என் எழுத்துக்களில் வெளிப்படும் என்பதென்னவோ உண்மைதான் ஆனால் எனக்கான அரசியல் என்னவென்பதுதான் இன்னமும் எனக்கு பிடிபடாமல் இருக்கிறது.அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அதன் நேர்மையோடு வெளிப்படுத்துதலைத் தவிர எனக்கான 'இதை' இன்னமும் கண்டிபிடித்துவிடவில்லை.
மற்றபடி உங்கள் எழுத்துக்கள மிகவும் பிடித்திருக்கிறது.சமயம் கிடைக்கையில் விரிவாய் பேசலாம்
செல்வநாயகி மற்றும் முத்துலக்ஷிமிக்கு
நன்றியும் அன்பும்
வாழ்த்துக்கள், அய்யனார்!
அய்யனார்,
என் மூன்றாம் கட்டளை உங்களுக்கு மிகவும் பொருந்தும் போலும்.
தொடருங்கள்.
வாழ்த்துக்கள்...
நன்றி தென்றல்
தருமி ஐயா
பெரும்பாலான கட்டளைகள் ஒத்துப்போகின்றன :)பகிர்விற்கும் அன்பிற்கும் நன்றி
வாழ்த்துக்கள் நண்பா...!
வணக்கம் அய்யனார்...
100க்கு வாழ்த்துக்கள்.
அய்யனார் என்ற கவிஞனை விட அய்யனார் என்ற கட்டுரையாளனை விட அய்யனார் என்ற கதைச்சொல்லியை எனக்கு பிடிக்கும். உன் பலம்/இடம் அது தான் என்பது என் எண்ணம். அந்த சங்கமித்திரை கதை தந்த அதிர்வு இன்னும் நினைவிலிருக்கிறது. திரைப்படங்களைக் குறித்த பதிவுகளில் பழைய சரலத்தன்மை இல்லையென தோன்றுகிறது. ஒரு வேளை நானே போட்ட தேநீரை அருந்தியபடியே படித்ததனால் தோன்றிய எண்ணமாகவும் இருக்கலாம்.
உன்னுள் இருக்கும் கதைசொல்லிக்கு தீனி போட்டபடி இரு.
மீண்டும் வாழ்த்துக்கள்.
சித்தார்த்.
100 க்கு வாழ்த்துக்கள்.. அய்யனார். நான் முதன்முதலாய் உங்கள் பக்கம் வந்தபோது நீலி கவிதை தான் முதலில் படித்தேனென்று நினைக்கிறேன். உங்கள் அரூபதர்ஷினி வெகு நாட்களுக்கு நியாபகங்களிலிருந்து விடுபடாமல் அடம்பிடித்திருந்தாள்! 20 வது பதிவிலிருந்து இந்த 103 வரை கவிதை, கட்டுரை, விவாதம், சிறுகதை, புனைவு, விமர்சனம் என எல்லா பரிமாணங்களிலும் சலிக்காமலும், தவிர்த்துவிட முடியாமலும், எப்போதும் பிரமிப்பூட்டியபடியுமிருக்கும் உங்கள் எழுத்து வெகுவாய் அசர வைக்கிறது.
தொடர வாழ்த்துக்கள்..
மன்னிக்க... உங்கள் பக்கம் வெகு தாமதமாய்தான் வருகிறேன் எப்போதுமே.. :)
நன்றி ஆழி
சித்தார்த்
நீ இன்னாயா கத சொல்லி அது இதுன்னு பீதிய கெளப்புற :)
தொடர்ந்த வாசிப்பிற்கும் அன்பிற்கும் நன்றி காயத்ரி..வருகை மட்டும்தான் முக்கியமே தவிர முன்பா பின்பா என்பதில்லை :)
Post a Comment