Tuesday, August 7, 2007

உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்



நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்வில் இளைப்பாறிய இடங்களைப் பற்றிய அக்கறையையோ/பிரக்ஞையையோ எதிர்பார்ப்பது எத்தனை அபத்தமானதென்பது எனக்குப் புரிகிறதுதான்.இருப்பினும் இழந்தவைகளை எப்போதும் விடாது தொடர்ந்தபடி இருக்கும் மனதின் அலைவுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை.
-----------×××----------------
அவ்வப்போது உன் முகம் (ஒருமுறைகூட நேரில் சந்தித்திராத) வந்து கலைத்துப்போடுகிறது ஒழுங்குகளுக்கான சாத்தியக்கூறுகளை. உன் சிரிப்பு (உன் சிரிப்பினில் பொன் சிரிப்பினில் என் மனதில் பாதியும் போக.. ‘இந்தப் பாடல் எப்போதும் உன்னை நினைவுபடுத்துகிறது இந்தப் பாடல் உனக்குப் பிடித்த காரணம்தானோ என்னவோ எனக்கும் பிடித்துப்போனது.தினம் இந்த பாடலை தவிர்க்க முயன்று கேட்டுத் தொலைக்கிறேன்) காதல்,காமம்,கவிதை துயரம், அழுகை, கோபம், பொறாமை,திமிர்,கர்வம்,பொய்,வஞ்சம் என மாறிக்கொண்டே இருக்கும் மனதின் காட்சிகளை எவ்வித அலங்காரங்களுமில்லாமல் அப்படியே என்னிடம் அனுப்பிவைத்தாய்.(புனிதங்களின் தடம் பற்றி வந்திருந்த மிக நேர்மையான பிம்பம் எனக்கு. உண்மைகளின் வெப்பத்தை கவித்துவ முலாம் பூசித் தணிவித்து எனக்கான சிகரெட்டினை பற்ற வைத்துக்கொண்டிருந்தேன்) அவற்றின் அழகு குறித்து சிலாகித்தபடியிருக்கும் நொடியின் முடிவில் விகாரத்தின் குரூர முகம் முன் வந்து பல்லிளிக்கும்.வெறுத்துத் திரும்புகையில் நீ தளர்த்தும்போது பிய்ந்த உள்ளாடையின் ஊக்குகளிலொன்று மிகுந்த கிறக்கத்தின் குறியீடென காட்சிப்படிமங்களினூடாய் தெரியவரும்.பின் உன்னை கிளர்வுகளோடு பின் தொடர்கையில் உன் முதுகுத் தண்டின் குறுக்கே போடப்பட்ட (மண்ணின் காவலர்களின் கூர்மையான கத்தியல் கிழிக்கப்பட்ட) கோட்டின் தடத்தை கண்டு மனம் வெதும்பும்.

என் முன் ஆசுவாசத்தோடு உடைகள் களைந்து அமர்ந்துகொண்டு புகைத்துக்கொண்டிருந்தாய் மணிக்கணக்காய், நாள்கணக்காய், மாதக்கணக்காய்..

சலிப்பின் பிரதிநிதிகளான இருவரும் எவ்வித ஈர்ப்பில் நூற்று முப்பத்தி ஏழு நாட்கள் இணைந்திருந்தோம் என்பதற்க்கான காரணங்கள் இன்னமும் பிடிபடவில்லை.அவற்றைக் கண்டறிந்து நாட்களை நொடிகளாக மாற்றிய பின்பு வரும் கூட்டுத்தொகையின் எண்ணிக்கையளவின் பக்கங்களில் ஒரு புத்தகமொன்றை என் கடைசி நாளிற்க்குள் எழுதிவிட வேண்டும். நீ என்னுடைய பிரதியென்றும் உன் முன் அமர்ந்து பேசுவது கண்ணாடியில் என் பிம்பத்தை பார்த்துக்கொள்வது போன்றொரு உணர்வை தருகிறதென்றும் அவ்வப்போது இருவரும் சொல்லிக்கொண்ட விநாடிகள் மனதிற்க்குள் இனம்புரியாதொரு இணக்கத்தைத் தந்தது.முதல் முறை ஒரு பெண்ணின் விரல் தீண்டலின் சிலிர்ப்பையோ அல்லது ஏதாவது ஒரு விலகளில் பாதி பளிச்சிட்ட அவளின் முலைத் துள்ளல்களில் ஏற்பட்ட கிளர்வுகளையோ ஒத்திருக்கிறதென நான் சொல்லியபோது விடாது ஆறு நிமிடங்கள் சிரித்தாய். ஒப்பீடுகள் முட்டாள்தனமானவை அவை நிகழ்வை சிதைக்கிறதென சிரிப்பு முடிந்த அமைதிக்குப்பின் இறுகிய குரலில் சொன்னாய்.எப்போதும் எதையோ ஒப்பிடும் நீ! நிகழின் பிரதி இல்லை வார்த்தைகளால் கட்டமைத்துக்கொண்ட பாசங்கு மிருகமென எனக்கே தெரியாத என் பிம்பத்தை சிதைத்தாய்.மிருகமொன்று அழிந்த திருப்தியில் புதியதொரு ஏதோ ஒன்றின் (மிருகமென்றும் புனிதமென்றும் எப்படி சொல்லிக்கொள்ள முடியும் நாளை வேறொருவர் இப்பிம்பத்தை சிதைக்கலாம்) பளபளப்புடன் உன்னை நெருங்கியபோது நீ உன் எச்சிலையும் யோனி ஈரத்தையும் துப்பாக்கி குண்டு துளைத்திருந்த துளைவழி கசிந்த குருதியைக் கொண்டுமாய் பளபளப்பை பழசாக்கினாய்.பளபளப்பான ஒன்று போலித்தனமாய் மட்டுமே இருக்கமுடியும் உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியுமென்றாய்.உன் சித்தாந்தங்கள், கொள்கைகள், நுட்பமான அலசல்கள்,மனதிற்க்குள் புதைந்த உண்மையின் வெளிக்கொணரல்கள் மூலமாய் அறிவுஜீவிகள் பெருமளவு வாழும் தீவிலொன்றிலிருந்து புலம்பெயர்ந்தவள் என்பது வெகு தாமதமாய் தெரியவந்தது.

உன் சொந்தத் தீவிலிருந்து தப்பிக்கையில் வீடுகளெங்கிலும் மிகுந்திருந்த துயரங்களையும் தெருக்களில் வழிந்துகொண்டிருந்த வலிகளையும் சேகரித்து வந்திருப்பதாய் சொன்னாய். ஒரு நாள் மிக ரகசியமாய் நீ சொன்னது அதிர்வையும் மகிழ்வையும் ஒருங்கே தந்தது.எமது சிறுமிகளை புணர்ந்த சிலகுறிகளை வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.அவற்றை ஐஸ்துண்டங்களுக்கிடையில் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.அவை நான் வளர்த்து வரும் சிறுமிகளுக்குப் பூச்சாண்டிகளாக இருந்துவிட்டுப் போகட்டும் மேலும் அக்குறிகளின் நாகரீக வெளிப்பாடு பல்லிளிப்பாகவோ நேர்த்தியான கவிதையாகவோ இருக்ககூடுமென்று எம் சிறுமிகளுக்கு அறிவுறையும் சொல்லி வருகிறேன் என்றாய்.அன்றிலிருந்து நான் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

தனிமைப் புணர்வுகளின் சிலாகிப்பை நான் வேறெந்த பெண்ணிடமும் கேட்டதில்லை புகைத்தபடி சுய மைதுனம் கொள்வதின் பேரின்பத்தை யாரிடமும் சொல்லிவிடாதே எனக் கேட்டுக்கொண்டாய்.சில ரகசியங்களை பகிர்ந்து கொள்வதிலிருக்கும் ஆபத்துக்கள் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையென்றும் ரகசியங்களின் வழித்தடம் ஒரு கொலையிலோ அல்லது தற்கொலையிலோதான் முடியக்கூடும் என்றும் எச்சரித்தாய்.
-----------×××----------------
கொல்வது ஒரு கலையென்ற ஹிட்ச்காக்கின் ரசிகன் நான்.ரகசியங்களை உடைப்பதில் எனக்கிருக்கும் ஆவல் உனக்குத் தெரியாதது. பகிரங்கப்படுத்துதல்களின் மூலம் சுளிக்கப்படும் முகங்களின் அழகின் மேல் எனக்கு கவர்ச்சி அதிகம். ஆகவே பெண்ணே! (இப்பிரதியை எழுதும்போதே நினைத்துக் கொள்கிறேன்) அதிரப்போகும் புனிதங்களின் பாதுகாப்பான உலகத்தையும் அலறித் துடிக்கப்போகும் வெயில் படாத தொட்டிச்செடிகளின் கூக்குரல்களை பற்றியுமான பயத்தை விடு.உன் விழியுயர்வில் எரிந்துபோகலாம் பாசாங்குகளின் வழித்தோன்றல்களனைத்தும்.
-----------×××----------------
இப்பிரதியில் அவளுக்குப் பிடித்தவை

1. இழந்தவைகளை எப்போதும் விடாது தொடந்தபடி இருக்கும் மனதின் அலைவுகள்.
2. உண்மைகளின் வெப்பத்தை கவித்துவ முலாம் பூசித் தணிவித்து எனக்கான சிகரெட்டினை பற்ற வைத்துக்கொண்டிருந்தேன்
3. நீ தளர்த்தும்போது பிய்ந்த உள்ளாடையின் ஊக்குகளிலொன்று
4. சலிப்பின் பிரதிநிதிகளான இருவரும்
5. ஏதாவது ஒரு விலகளில் பாதி பளிச்சிட்ட அவளின் முலைத் துள்ளல்கள்
6. எப்போதும் எதையோ ஒப்பிடும் நீ! நிகழின் பிரதி இல்லை
7. பளபளப்பான ஒன்று போலித்தனமாய் மட்டுமே இருக்கமுடியும் உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்
8. அக்குறிகளின் நாகரீக வெளிப்பாடு பல்லிளிப்பாகவோ நேர்த்தியான கவிதையாகவோ இருக்ககூடும்
9. ரகசியங்களின் வழித்தடம் ஒரு கொலையிலோ அல்லது தற்கொலையிலோதான் முடியக்கூடும்
-----------×××----------------

4 comments:

த.அகிலன் said...

//உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்//

மெய்தான்...வடிவங்கள் ஏதுமற்று மனசின் ஆழங்களிற்குள் நீந்திக்கொண்டேயிருக்கும் உண்மை ஒரு மீன்குஞ்சைப்போல..

வாசித்து முடிந்தபின்.மனசுக்குள் இருந்து துள்ளி பெருங்கடலுள் விழத்துடிக்கிறன எனது மீன்குஞ்சுகள்.உண்மை சிதைவுகளால் ஆனதுதான்

Ayyanar Viswanath said...

நன்றி அகிலன்

Anonymous said...

amazing!!!

தமிழ்நதி said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்தேன். 'அய்யனார்! கனவுகளிலிருந்து விழித்துக்கொள்ள விருப்பமில்லையா..?'என்று கேட்க வேண்டும்போலிருக்கிறது. ஆனால், நீங்கள் கனவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது வலிக்கிறது; அது வேண்டியதாகவும் இருக்கிறது சில சமயங்களில்.

Featured Post

test

 test