Wednesday, August 1, 2007

எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறைசங்கமித்திரையை குறுகலான டெம்போ அமர்வுகளுக்கிடையில்தான் முதலில் பார்த்தேன்.பேருந்து நிலையத்திலிருந்து லாஸ்பேட் போகும் டெம்போவினுள் குறுகி உட்கார்ந்து போகும் சுகம் சற்று அலாதியானதுதான்.மிக நெருக்கமாய் மனிதர்களுடன் பயணிப்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.தொடர்ந்து ஒரே இடத்தில்,ஒரே சம்பவங்கள்,ஒரே மனிதர்களென கடந்து போகும் நாட்கள்
மிகவும் இதமானவை.சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரே மனிதர்களை ஒரே இடத்தில் ஒரே கால அவகாசத்தில் பார்ப்பது சற்று அபூர்வம்தான்.பாண்டிச்சேரியில் இது சாத்தியம்.டெம்போ ஸ்டேண்டில் காலை எட்டு மணிக்கு ராஜா டெம்போவில் நான் உட்பட நான்கு பேர் தினசரி அதே டெம்போவில் உடன் வருவர்.இது ஒரு மாதிரி பழகிவிட்ட சுகம்.வேறெந்த வசதி அந்த சமயத்தில் கிட்டினாலும் அதைத் தவிர்க்கத்தான் தோன்றுகிறது.சங்கமித்திரை அந்த நால்வரில் ஒருவள்.

தமிழ்சினிமாக்களில் நிகழ்வது போலத்தான் தொடர்ந்து ஒரு மாதமாய் அதே டெம்போவில் பயணித்தாலும் சின்னதாய் புன்னகைத்துக் கொள்ளக்கூட இல்லை.அஜந்தா தியேட்டர் சிக்னலில் நான் இறங்கி கொள்வேன்.சங்கமித்ரா லாஸ்பேட் வரை போவாள்.சில்லறை இல்லாத ஒருநாளில் நாளை தருகிரேனென ராஜாவிடம் சொல்லிவிட்டு இறங்கிப் போனேன்.அவள் இறங்குமிடத்திலும் சில்லறை பிரச்சினை எழவே எனக்கும் சேர்த்து காசு கொடுத்திருக்கிறாள்.மறுநாள் அது தெரியவரும்போது புன்னகைத்தாள்.உடனேவெல்லாம் பழகிவிடவில்லை.ஏதோ ஒரு புள்ளியில் இருவருக்குமான தடைகள் இணைந்திருந்தது.சனவரி மாத நேரு பூங்கா மலர் விழாவில் கூட்டத்தில் ஒருத்தியாய் அவளை சந்தித்தபோது அலோ சொல்ல முடிந்தது.இப்படியாய் சின்ன சின்ன சந்திப்புகள்.மெல்ல இருவரும் நட்பானோம்.

ஒருநாள் தொலைபேசினாள் மதியம் கடற்கரைக்கு வர முடியுமா என கேட்டாள். மதிய நேரங்களில் கடற்கரைக்குப் போக எனக்கு மிகவும் பிடிக்கும் ஆளில்லாத அந்த மொட்டை வெயிலில் பூவரச மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருப்பேன்.சிந்தனைகள் இல்லாது நுரைதெறிக்க எழும் அலைகளை பார்த்துக் கொண்டிருப்பது பிடித்தமான ஒன்றாக இருந்தது.

எண்களை சங்கமித்ராவைப்போல் யாராவது ஞாபகம் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.சில சம்யங்களில் என் தொலைபேசி இலக்கமே எனக்கு மறந்துபோய்விடுகிறது.கூகுள் விக்கிபீடியா என்றெல்லாம் வந்துவிட்டபிறகு மூளையின் தேவை அவசியமில்லாமல் போய்விடுகிறது.அபத்தமாய் சிந்திப்பதற்க்கு பதிலாய் சும்மா இருப்பது சுகமாய்த்தான் இருக்கிறது.இப்போதெல்லாம் மூளை என்கிற வஸ்து நமக்கிருக்கிறதா என யோசித்து சிரித்துக் கொள்வதுண்டு.

சங்கமித்ரா ரகுமானை முதலில் பார்த்தது 1997 ஆகஸ்ட 4 ம்தேதி மதியம் 3 மணிக்கு ரகுமான் சங்கமித்ராவை காதலித்ததாய் சொன்னது 1997 நவம்பர் 4 ம் தேதி இருவரும் ஒன்றாய் பேருந்தில் இரவில் பயணித்தது 1997 டிசம்பர் 30.சங்கமித்ராவை ரகுமான் வீட்டுக்கு நண்பர்களோடு நண்பர்களாய் கூட்டி சென்றது 1998 ஜீலை 3ம் தேதி.ரகுமான் சங்கமித்ராவை முத்தமிட்டது 1998 ஆகஸ்ட் 4 மதியம் 3 மணிக்கு.ரகுமானுக்கு சென்னையில் வேலை கிடைத்த நாள் 1999 மே 28.சங்கமித்ரா ரகுமானைப் பற்றி வீட்டில் சொன்னது 1999 நவம்பர் 23 . சங்கமித்ராவின் அப்பா ஒரு நள்ளிரவில் ரகுமான் வீட்டிற்க்கு போய் அவன் அம்மவை மிரட்டியது 1999 டிசம்பர் 3. கடிதமெழுதி வைத்துவிட்டு சங்கமித்ரா வீட்டை விட்டு வெளியே வந்தது 1999 டிசம்பர் 21 இரவு மணி 11,பேருந்து எதுவும் கிடைக்காமல் லாரி ஒன்று அவளுக்காய் நின்றபோது மணி 12.30 அந்த லாரி போகுமிடம் குமாரபாளையம் எனத் தெரிந்து மகிழ்ந்து குமாரபாளயம் சங்கரி வீட்டிற்க்கு போய் சேர்ந்தது விடியற்காலை 4.30.ஒரு வாரத்திற்க்குப் பிறகு ரகுமான் தொடர்பு கொண்டு பாண்டிச்சேரியில் நண்பன் வேலை செய்யும் நிறுவனத்திற்க்கு அப்ளிகேசன் போடச் சொல்லியிருக்கிறான்.இண்டர்வியூ நடந்தது 2000 சனவரி 7 ம் தேதி. பொங்கல் கழிந்து 16 ம் தேதி வேலையில் சேர்ந்திருக்கிறாள்.

ரகுமான் அம்மாவிற்க்கு இவளை பிடிக்காமல் போனது.நேரடியாக சொல்லாவிட்டாலும் அம்மா உயிரோடு இருக்கும்வரை கல்யாணம் நடக்காதென இருவருக்கும் திட்டவட்டமாய் தெரிந்த நாள் பிப்ரவரி 3 ம் தேதி.அம்மா மனசு மாறும்வரையோ அல்லது இறக்கும் வரையோ காத்திருப்பேன் என இவள் அவனிடம் சொன்னது பிப்ரவரி 5.வாரம் இரண்டு முறை அவனும் இரண்டு முறை இவளுமாய் தொலைபேசிக்கொண்டிருந்ததும் சில மாதங்களிலேயே பறிபோயிற்று நல்ல வாய்ப்பு வந்திருக்கிறதென மலேசியாவிற்க்கு ரகுமான் போனது 2000 ஏப்ரல் 27ம் தேதி.

இரண்டு வருடங்களில் பதினோரு முறை அவன் தொலைபேசியதாயும் அவன் தொடர்பு எண் எதுவும் தரவில்லை எனவும் சொன்னாள்.அவன் அம்மாவை சமீபத்தில் பார்த்ததாகவும் அவள் முன்பை விட ஆரோக்கியமாய் இருப்பதாயும் சொன்னாள்.அடுத்த வருடம் அவன் ஊருக்கு வரும் தகவலும் அவன் அம்மாவின் மூலம்தான் தெரியவந்ததாம்.அந்தரங்கம் தெரிந்து கொண்டபிறகு வெகு நெருக்கமாய் உணர முடிந்தது.எல்லா சனிக்கிழமை மதியங்களிலும் சினிமாவிற்க்கோ கடற்கரைக்கோ சென்றோம் பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போனது.ஆனால் ரமணிசந்திரனிடமிருந்து அவளை விடுவிக்க முடியவில்லை.வேறெந்த புத்தகத்தையும் அவளால் படிக்க முடியவில்லை என சிரித்தபடியே ஒரு நாள் சொன்னாள்.

ஏப்ரல் பதினேழாம் தேதி அவளுக்கும் ஏப்ரல் பதிமூன்றாம் தேதி எனக்கும் பிறந்த நாள் இதென்ன இப்படி இருக்கிறதென் சிரித்தபடி நடுவில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து 2002 ஆம் ஆண்டின் ஏப்ரல் 15 ம் தேதியை இருவரும் தத்தம் பிறந்த நாளாய் கருதி கொண்டாடினோம்.அன்றுதான் சங்கமித்ராவின் அறைக்கு முதலில் போனேன்.பேச்சிலர் ஆணின் அறைக்கும் பெண்ணின் அறைக்கும் பெரிதாய் வித்தியாசம் ஒன்றுமில்லை.என்ன..சிகெரெட் நாற்றமில்லை அவ்வளவுதான்.இருப்பினும் குறுகலான அந்த அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.எப் எம் ஓடிக்கொண்டிருக்க பேசியபடியே சமைத்தாள்.எப்போது பேசினாலும் நாட்கள் தேதிகளை துல்லியமாய் குறிப்பிட்டு பேசுவது அவள் வழக்கம்.இதெப்படி முடிகிறது என என் கேள்வியை சின்னதாய் ஒரு புன்னகையின் மூலம் தவிர்த்து பழக்கமாயிடிச்சி என்றாள்.
சங்கமித்ராவின் அறைத்தோழி பூங்கொடிக்கு 30 வயதிற்க்கு மேல் இருக்கும்.திருமணமாகி விவாகரத்தும் ஆகி விட்டதென பிறிதொரு சந்தர்ப்பத்தில் சங்கமித்ரா சொன்னாள் அதுவும் நான் வலிந்து கேட்டபின்பே.

ஒரு வருடம் நீடித்தது இந்த நட்பு. மீண்டும் என் மாறுதலின் நிமித்தமாய் சென்னைக்குப் போய்விட்டேன்.ஈஸிஆர் ரோடில் 4 மணிநேரத்தில் வந்து பார்க்கும் தொலைவுதான் என்றாலும் ஏனோ அவளை மீண்டும் சந்திக்க தோணவில்லை எனது சோம்பலை நேரமில்லை என்ற சமாளிப்புகளுடன் அவளிடம் தொலைபேசும்போது சொல்வேன்.ஒரு நள்ளிரவில் ஏனோ எனக்கு பிடித்தவர்கள் வெகு சீக்கிரத்தில் என்னை விட்டு விலகிப்போய்விடுகிறார்கள் என சொல்லியபடி தொலைபேசியை வைத்தாள்.மீதமிருந்த இரவை அவளின் துயரம் மிகுந்த சொற்கள் என்னை ஆக்ரமித்து தூங்கவிடாமல் செய்தது.

ஒருவேளை தலைக்குனிந்த, ஓரக்கண்ணால் பார்க்கும் வழக்கம் கொண்ட, எல்லாவற்றுக்கு மறுத்தும் தனியான சந்தர்ப்பங்களில் மறுத்தைவிட அதிக துணிவாய் விழைந்தும், கிறக்கமாய் பேசும், பொய் சொல்லும், அடிக்கடி துப்பட்டாவையோ, புடவையின் மாராப்பையோ அட்ஜஸ்ட் செய்தபடி பேசும் ஏனைய பெண்களில் ஒருத்தியாய் அவள் இல்லாதிருந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.ஏனோ தெளிவான பெண்களின் மேல் சராசரி ஆணிற்க்கு இருக்கும் பயம் எனக்கப்போது இருந்ததும் அவளை பார்ப்பதை தவிர்த்ததிற்க்கு காரணமாய் இருந்திருக்ககூடும்.

சரியாய் ஒரு வருடம் கழித்து அவளை பார்க்க போயிருந்தேன் அதே அலுவலகம்தான் ஆனால் வீடு மாறியிருந்தாள்.சாரத்தில் ஒரு அடுக்குமாடிகுடியிருப்பில் அவள் வீட்டிற்க்கு சென்றபோது மகிழ்ந்துபோனாள்.வீடு சுத்தமாய் இருந்தது.மிகுந்த ஆவலுடன் திருமணமாகி விட்டதா என கேட்டேன் அவள் ரகுமானுக்கு ஆகிவிட்டது என்றாள்.என்னிடம் சொல்ல வார்த்தைகள் எதுவும் வரவில்லை. 2003 பிபரவரி பதினாலாம் நாள் இரவு 11.45 க்கு ரகுமான் தொலைபேசியில் அழைத்திருக்கிறான் தன் அம்மாவின் பிடிவாதம் தகர்க்க முடியாத ஒன்றாயிருக்கிறது எனவும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும்,நாம் பிரிந்து விடுவதுதான் சரியென தோன்றூகிறதெனவும் அவளை மறந்து விடச்சொல்லியபடியுமாய்ச் சொல்லித் தொடர்பை துண்டித்திருக்கிறான்.சங்கமித்ராவின் உடல் முழுதும் பற்றி எரிந்திருக்கிறது.கசப்பும் வேதனையும் உள்ளிருந்து மிகுந்தெழுந்து அருவெருப்பில் குமைந்து போயிருக்கிறாள்.ஆனால் அவள் அழவில்லை.குளியலறையின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு எரிச்சல் தீரும் வரை குளித்திருக்கிறாள்.பின் சரியாய் துவட்டப்படாத தலையோடு இரவு 1.35 க்கு தூங்கி கொண்டிருந்த பூங்கொடியை உலுக்கி எழுப்பி அவள் உதடுகளில் வன்மமாய் முத்தமிட்டதாய் சொன்னாள்.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...