1. சிற்றிதழ் வாசிப்பனுபவம் வலையுலக வாசிப்பனுபவம் இரண்டினைபற்றிய உங்களின் அனுபவங்களை சொல்லுங்களேன்?வெகுசன இதழ்கள் தந்த சலிப்பு மற்றும் போதாமை என்னைச் சிற்றிதழ்களுக்கு நகர்த்தியது. வாசிப்பின் துவக்கமாக கணையாழியாகவே இருந்தது.பெரும்பான்மைகளே நிறைந்து பிதுங்கும் புத்தக கடைகள் சிற்றிதழ்களுக்கான இடங்களைத் தந்திருக்கவில்லை. கணையாழியைத் தொடர்ந்து வாங்கவே பல கிலோமீட்டர்களை பயணிக்க வேண்டியிருந்தது. ஓசூரில் வாழ்ந்திருந்த காலகட்டத்தில் ஆதவன் தீட்சண்யாவின் விசை இதழ் படிக்க கிடைத்தது.பெரும்பான்மைகளின் தரங்களை பின்னுக்குத் தள்ளும் வடிவமைப்பு,காத்திரமான உள்ளடக்கங்கள் சிற்றிதழ் எனும் வடிவங்களை வேறு தளத்தினுக்கு நகர்த்தியிருந்தது.அந்த இதழ் தந்த பரவசம் பல சிற்றிதழ்களுக்கு ஆண்டு சந்தாவினை அனுப்ப ஒரு ஊக்கியாக இருந்தது.நம் மொழி தாண்டிய பிற மொழி படைப்புகளின் செறிவான மொழிபெயர்ப்பு, புதிது புதிதாய் அறிமுகமான இசங்கள், கவிதையின் காத்திரமான புதுத்தளம் என சிற்றிதழ்கள் மிகப்பெரிய போதையாய் இருந்தன.குறிப்பாய் ஆத்மா நாம் நடத்தி வந்த ழ இதழை சொல்லலாம்.சிற்றிதழ்களுக்கு முன்னோடியான சி.சு செல்லப்பாவின் எழுத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிப்ப்பிடித்தேன்.இன்னமும் அச்சு வடிவிலான பழைய சிற்றிதழ்களின் மேல் தீராத காதலிருக்கிறது.இலக்கிய தாகம் அல்லது வாசிப்பின்பம் தாண்டியும் சிற்றிதழ்கள் ஒரு இயக்கமாக வளரமுடியும் என்பதற்கு நிறப்பிரிகை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.தமிழின் சொற்பமான அறிவுஜீவிகள் தங்களது உக்கிரமான பார்வைகளை,மாற்றுக்களை விரிவான தளத்தில் பகிர்ந்து கொண்ட நிறப்பிரிகை வாசகனுக்கு உலகச் சிந்தனையின் நீரோட்டத்தில் கலக்க உறுதுணையாய் இருந்ததெனச் சொல்லலாம்.பழமைகளின், போலிகளின், பம்மாத்துக்களில் பதுங்கி கிடந்த 'உண்மை' நிறப்பிரிகை மூலமாக மெல்ல வெளியே வந்தது.பல மாற்றுச் சிந்தனைகளை நம் தளத்தில் உயிர்த்தெழச் செய்தது.காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்கள் சிற்றிதழ்களுக்கான சமரசமில்லா நிலைப்பாடிலுமில்லாது வெகுசன இதழ்களுக்கான மிகை போலித்தனதனங்களுமில்லாது தங்களுக்கான மித சமரசங்களை உள்ளரசியல்களோடு நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.இவை பொதுப்புத்தி சார்ந்த இலக்கிய வாசகனின் தாகத்தை தீர்த்து வைக்க மெனக்கெடுகின்றன.
துபாய் வந்தபின்பு அறிமுகமான இணைய வாசிப்பு விரிவான வாசிப்பிற்கு உறுதுணையாய் இருந்தது.விரல் நுனியில் எல்லாவற்றையும் படித்து விட முடிந்தது. குறிப்பாய் கீற்று இணைய தளம் சிற்றிதழ்களை மொத்தமாய் சேகரித்து தருவது வாசகனுக்கு மிகுந்த உவப்பானது.தலித் இயக்கம்,பெரியாரியல் என நம்சூழல் சார்ந்த மொழியறிவு பெற இவ்வாசிப்பு மிகுந்த உறுதுணையாய் இருந்ததெனச் சொல்லலாம்.வலைப்பூக்கள் வாசகனாக மட்டுமே இருந்த என்னை எழுத்து சார்ந்தும் இயங்கத் தூண்டின.நாட்குறிப்புகளில் தீர்த்துக் கொட்டிய என் உள்ளெழுச்சிகளை அதே காத்திரத்தொடு வலைப்பூவிலும் எழுதும் சுதந்திரம் எனக்குக் கிட்டியது.வலைப்பூ நமக்குப் பிடித்தமானதை எழுத, பிடித்தமானதை தேர்ந்தெடுத்து வாசிக்க உதவியாய் இருக்கிறது.நண்பர்களுடனான விவாதங்கள் உரையாடல்கள் சரியான புரிதலுக்கு வழிவகுக்கின்றன.எல்லா தளங்களிலும் இருக்கும் பிரச்சினைகள் வலைப்பூவிலும் இருக்கிறதுதான் என்றாலும் நமக்கானதை தெரிவு செய்து கொள்ளும் சுதந்திரம் இன்றளவும் நம்மிடமே இருப்பது எத்தனை ஆறுதலான ஒன்று!
2. இன்று பல சிற்றிதழ் எழுத்தாளார்களும் இணைத்தில் இணைந்து விட்டனர் இவர்களின் வருகைபற்றி?வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.தமிழர்கள் தமிழ்நாடு தாண்டியும் உலகம் முழுவதும் விரவியிருப்பதால் சிற்றிதழ்கள் கிடைப்பதற்கான சூழல்கள் மிகவும் அரிதாகின்றன. இணையம் இத்தேக்கத்தை உடைக்கிறது.இணையத்தில் வலைப்பூக்கள் அறிமுகமான புதிதில் பேரெழுத்தாளப் பிதாமகர்களின் கடுமையான விமர்சனங்களைத் தாண்டி வரவேண்டி இருந்தது. அச்சு வடிவங்கள் மட்டுமே இலக்கிய வடிவங்களாக முடியும். இணையம் பத்து நொடி பரவசத்திற்கானது என்பன போன்ற அரிதான தத்துவங்களையெல்லாம் கேட்டுத் துன்புற வேண்டியிருந்தது இன்று அது மெல்லத் திரிவடைந்து பேரெழுத்தாளர்களும் இணையத்தினை நோக்கிப் படையெடுப்பது நல்லதொரு மாற்றமே.சமீபத்தில் பிரம்மராஜனின் வரவும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நாகார்ச்சுனன் தன் பங்கினுக்கு மிகக் காத்திரமான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சூழலில் பிரம்மராஜனின் வருகையும் பங்களிப்பும் அவசியமானது.மிதமான இலக்கியப் படையல்களை எஸ்ராமகிருஷ்ணனும், ஆபத்தான அரசியல் விளையாட்டை ஜெயமோகனும், வாசிப்பின்பத்தை மட்டுமே பிரதானமாக்கும் சாருவும் சிற்றிதழ் பேரிதழ் சூழல்களிலிருந்து வந்தவர்களே. அப்போது இணையத்தினை பழித்தவர்களுள் ஒருவரான ஜெயமோகன் இன்று ஏகப்பட்ட ஹிட்ஸ் என பேசிக்கொள்வது சிரிப்பைத்தான் வரவைக்கிறது. நிறப்பிரிகையில் மிக முக்கியமானவரான வளர்மதியும் தொடர்ச்சியாய் இணையத்தில் தன் பங்களிப்பை செய்து வருகிறார்.
3. தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது (அ) வாசித்துக்கொண்டிருப்பது சலிப்பை தருவதில்லையா!இல்லை.சொல்லப்போனால் செய்ய வேண்டியது வேறு எதுவும் இல்லை.தொடர்ந்து வாசிப்பதும் எழுதுவதும் என் சுய விருப்பத்தினுக்காகவே.என் உள் சார்ந்த ஏதோ ஒன்று இச்செயல்களின் மீது ஆர்வம் உடையதாய் இருக்கின்றது.நிறைவு அல்லது அதைப்போன்ற ஒன்றினை ஒரு நல்ல பிரதி எனக்குத் தருகிறது.எனக்கு இணக்கமான பிரதி ஒன்றினை வாசித்து முடித்ததும் ஏற்படும் அதீத உணர்வுப் பெருக்கம் என் வெறும் பொழுதுகளை நிரப்பி விட்டுப் போகிறது.பிம்பங்களை உருவங்களாக்கும் முயற்சிகளில் என்னைச் செலுத்தி அந்த பிம்ப உருவாக்கங்களில் கிளர்ந்து அலைவது என்னை இன்பங்களில் திளைக்கச் செய்கிறது.வெகு சுமாரான ஒரு படைப்பை நிகழ்த்திக் காட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளில் சொல்ல இயலாதது.எழுத்து எழுதுபவனை எழுதிக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு மிக இணக்கமாக இருக்கிறது.
4. சுஜாதாவிற்கு பின் இன்று சிறுபத்திரிக்கையில் தீவிரமாக இயங்கிய பல எழுத்தாளர்கள் திரைதுறைக்கு வந்துவிட்டனர் இப்பொழுது இவர்களின் படைப்பினைஎப்படி அணுகிகிறீர்கள் ஏன் எனில் சினிமா எழுத்து மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது அங்கே எழுத்தாளார்கள் சமரசம் செய்துகொள்கிறார்கள் அவர்களிடம் கேட்கபடும் இத்தகையகேள்விக்கு வெளிப்படும் ரெடிமேட் பதிலாக இருப்பது டீம் ஒர்க்!பொதுவாகவே சமரசங்கள் மீது எனக்கு மிகப்பெரும் சலிப்புகள் இருக்கின்றன.கலையும் கலைஞனும் சமரசங்களுக்கு அப்பாற்பட்டவை. உன்னதங்கள் எனக்கொண்டாடப்படுபவைகள் சமரச அரசியல்களில் சிக்கிக் கொள்ளாதவைகளாய் மட்டும்தான் இருக்க முடியும். எழுத்தாளர்கள் திரையில் தமது அடையாளத்தை நிறுவ மெனக்கெடாதது மிக எரிச்சலான ஒன்று. வெகுசனதிரையில் ஒரு இலக்கியவாதியால் மாற்றுக்களை கொண்டு வரமுடியாது என்பதெல்லாம் பொதுபுத்தி சார்ந்த கற்பிதங்களே.குறைந்த பட்சம் தான் இயங்கும் தளத்தின் தரத்தையாவது மெருகேற்றலாம்.ஆனால் அதற்கான எந்த முயற்சியினையும் எழுத்தாளர்கள் எடுத்ததாய் தெரியவில்லை. கூட்டுமுயற்சி என்பதெல்லாம் சப்பைக்கட்டாய் மட்டும்தான் இருக்க முடியும். தேவை, பிழைப்பு என்கிற இரண்டு பிரம்மாண்டங்களின் முன்பு படைப்பாளி தன்னை அடகு வைத்துவிடுகிறான்.இலக்கியத்திற்கு ஒரு முகமும் சினிமாவினுக்கு ஒரு முகமுமாய் இடத்தினுக்கு தகுந்தாற்போல் முகமூடியை மாற்றிக்கொள்ளும் எழுத்தாளர்களின் மீது பரிதாபமும் எரிச்சலும் ஒரே சமயத்தில் எழுகின்றன.சமீபத்தில் திரைப்பட பாடலாசிரியை தாமரை பேட்டி ஒன்றில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆங்கில வார்த்தைகளை சேர்க்க வேண்டி இருந்ததால் அந்தப்பாடலை மட்டும் தான் எழுத ஒப்புக்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
5. சினிமாவின் முன் எழுத்தாளனுக்கான அடையாளம் தொலைந்துகொண்டுவருதாக எண்ணத்தோன்றுகிறதா?ஆம்.சொல்லப்போனால் சினிமாவில் எழுத்தாளனுக்கான எந்த அடையாளத்தையும் பார்வையாளன் உணரமுடிவதில்லை.உதாரணத்திற்கு சமீபத்தில் வந்த தாம்தூம் திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். இத்திரைப்படத்திற்கு வசனம் எஸ்.ராமகிருஷ்ணன். இத்திரைப்பட வசனங்கள் வெகுசன இதழில் கூட பயிற்சிபெறாத ஆளுமை ஒருவர் வசனமெழுதி இருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதே தரத்தில்தான் இருந்தது. எஸ்.ராவின் நவீன மொழியாளுமையின் குறைந்த பட்ச சாத்தியங்களைக்கூட அவரால் அத்திரைப்படத்தில் செய்து காட்டமுடியவில்லை.குறைந்த பட்சம் காதல் காட்சிகளிலாவது மொக்கை வசனங்களை குறைத்துக்கொள்ள மெனக்கெட்டிருக்கலாம் ஆனால் அதற்கான எந்த முயற்சியினையும் அவர் எடுக்கவில்லை.இச்சூழலில் எழுத்தாளனின் அடையாளத்தை எங்கே
போய் தேட?.
6. குழும நட்பு வலைதள நட்பு பற்றிவலைக்கு வந்த பின்பு கிடைத்த நட்புகள் மிகுந்த ஆசுவாசமாய் இருக்கின்றன.எனக்குப் பிடித்தமானவைகளைப் பகிர்ந்து கொள்ள நாட்குறிப்பை மட்டுமே நம்பியிருந்த நான் வலைக்கு வந்த பின்னர் என்னைப் போன்ற பல நண்பர்களை சந்திக்க முடிந்தது.முகமற்ற நட்புகளும், குரல் மட்டும் அறிந்த நட்புகளும் இதில் அடக்கம்.தொடர்ச்சியாய் இயங்க இந்நட்புகள் பேருதவியாய் இருக்கின்றன.கோபி கிருஷ்ணன் சொல்வது போல் என் முகமறியாத் தோழிகளே /தோழர்களே உங்களால்தான் நான் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.
7. துபாயில் இயங்கிவரும் தீவிர தமிழ் இலக்கிய அமைப்பு பற்றி அல்லது அங்குள்ள இலக்கிய வாசிப்பு நண்பர்களுக்கிடையேயதன சந்திப்பு பற்றிதுபாயில் தடுக்கி விழுந்தால் ஒரு தமிழர் அமைப்பை நீங்கள் காணநேரிடலாம். அவ்வமைப்புகளில் குழு மனப்பான்மை தவிர்த்து குறிப்பிட்டு சொல்ல வேறெதுவும் இல்லையெனினும் நண்பர் ஆசிப் மீரான் இலக்கியம், திரைப்படம் மற்றும் வாசிப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களை அமைப்பு சார்ந்து இயங்க உதவிவருகிறார்.மற்றபடி வலையின் பிரபலமான பல பதிவர்கள் இங்கு வசிப்பதால் பிடித்தமானவற்றை பகிர, தீவிரமாய் உரையாடல்களை நிகழ்த்த இச்சூழல் மிகுந்த இணக்கமாய் இருக்கிறது.எல்லாவற்றையும் விட நட்பு மிகப் பிரதானமாய் முன்னிருத்தப்படுவதால் ஒரே தளத்தில் இயங்கும் ஒத்த/மாற்று கருத்துடைய நண்பர்கள் பலர் ஒரே சூழலில் வசிப்பதும் அவ்வப்போது சந்தித்துக்கொள்வதும் மிகுந்த மகிழ்வானது.வேலைப்பளு, நெருக்கடியான பணி போன்ற சூழல்களிலும் இங்குள்ள நண்பர்கள் தொடர்ச்சியாய் தத்தமது தளத்தில் சீராய் இயங்குவது பாராட்டப்பட வேண்டியது.
8. உங்களின் வலைப்பக்கத்தில் சமீபமாக நீங்கள் எழுதிய காதல் கவிதைகான வெளிப்பாட்டின் பிண்ணனியல் உங்களின் மணநாளும் காரணமா?இருக்கலாம்.என் எழுத்துக்களில் எனது அனுபவங்களை, என் வாசிப்புகளை, என் விருப்பங்களைத் தவிர்த்து பெரிதாய் வேறெதுவும் இல்லை.அடர்வான கசப்பான சூழலில் மிகக் குரூரமாய் எழுதிப்பார்ப்பதும் மிக லேசான தருணங்களில் மகிழ்வாய் எழுதிப் பார்ப்பதும் என் இயல்பாய் இருக்கிறது.தருணங்களில் வாழ்வதைத் தவிர்த்து மிகப் பிரதானமாய் எவ்வித வாழ்வையையும் கொள்கையினையும் நான் கடைப்பிடிக்க விரும்பாததால் என் எழுத்து என் வாழ்வை மட்டுமே பிரதிபலிக்கிறது.
14 comments:
புது வடிவம்! இந்த வடிவம் நெருக்கமாவதற்கு சில நாட்கள் தேவைப்படலாம் அய்யனார்... வருடக் கணக்கில் மாற்றாமல் இருந்த விசயம் மாறியிருக்கிறது...
பகிர்வுக்கு நன்றி!
கலக்கல் தல..
//3. தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது (அ) வாசித்துக்கொண்டிருப்பது சலிப்பை தருவதில்லையா!//
இந்த கேள்விக்கான பதில் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..
//பிம்பங்களை உருவங்களாக்கும் முயற்சிகளில் என்னைச் செலுத்தி அந்த பிம்ப உருவாக்கங்களில் கிளர்ந்து அலைவது என்னை இன்பங்களில் திளைக்கச் செய்கிறது.//
Awesome..
அய்யனார் வாழ்த்துக்கள் :-))
அய்யனார், வாழ்த்துகள். பதில்களும் கேள்விகளும் நன்றாகயிருந்தன.
வாழ்த்துகள் நண்பா :)
புதுவீடு சூப்பர் அய்ஸ்.
பாண்டிதுரையின் கேள்வியும் உங்க பதிளும் ரண்டுமே அருமைங்க.
உன்னாலே உன்னாலே படத்தோட வசனம் ஈர்த்தளவுக்கு தாம் தூம் பீமா ரண்டுமே பேசப்படல.
அய்யனார், வலைப்பூவின் புதிய வடிவமைப்பு நல்லாருக்கு... ஆனா உங்கட சகபயணிகள் காணக்கிடைக்காததுதான் நெருடலா இருக்கு... ஏன் திடீர்னு நீக்கீட்டிங்க....?
அய்யனார்...உங்க பிளக்கில் பூந்த தான் பலரை சந்தித்து கொண்டிருந்தேன்...இப்படி சொல்லாம கொல்லாம நீக்கி புட்டீங்களே??
தமிழன்,சரவணக்குமார்,லேகா,சுந்தர்ஜி,
ப்ரேம் மற்றும் கார்த்திக் பின்னூட்டங்களுக்கு நன்றி..
அனானி புதிய வடிவத்தை மாற்றும்போது நீங்கிவிட்டது விரைவில் சேர்த்துவிடுகிறேன்..
naala pathivuuu
nalla pathivu ayyanar
//எனக்கு இணக்கமான பிரதி ஒன்றினை வாசித்து முடித்ததும் ஏற்படும் அதீத உணர்வுப் பெருக்கம் என் வெறும் பொழுதுகளை நிரப்பி விட்டுப் போகிறது.பிம்பங்களை உருவங்களாக்கும் முயற்சிகளில் என்னைச் செலுத்தி அந்த பிம்ப உருவாக்கங்களில் கிளர்ந்து அலைவது என்னை இன்பங்களில் திளைக்கச் செய்கிறது.வெகு சுமாரான ஒரு படைப்பை நிகழ்த்திக் காட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளில் சொல்ல இயலாதது.எழுத்து எழுதுபவனை எழுதிக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு மிக இணக்கமாக இருக்கிறது.//
ரசித்தேன் அய்யனார். ஆழமான பதில்கள். செறிவான விளக்கங்கள். ஓடி ஒளியும் அய்யனார் ஒளிவட்டங்களை தவிர்க்க முடியாதென்று சொன்னது நினைவில் நிற்கிறதா? வாழ்த்துக்கள்
ஆழ்ந்த புலமை அக்கறையும் கூட
Post a Comment