Tuesday, April 13, 2010

முப்பது வருடங்கள்

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?
- தேவதேவன்


முப்பது வயதைக் கடந்திருக்கிறோம் என நினைக்கையில் லேசான ஒரு திடுக் மனநிலை அல்லது நம்ப இயலாத ஒரு வியப்பு புன் முறுவலைப் போலத் தோன்றி விட்டு மறைகிறது. ஆனாலும் முப்பது வருடங்களை நான் கடந்துதான் வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை வருடங்கள் மீதமிருக்கின்றன என நினைத்துக் கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பளிக்கிறது. அசையாது அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மரணத்தின் முன்புதாம் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மரணம் நமக்களித்த கொடைதாம் இந்த வாழ்வு. எப்போது வேண்டுமானாலும் அந்தக் கொடையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மரணம் தயங்குவதில்லை. மேலும் அது திரும்பப் பெற்றுக் கொள்ளும் கணம் அத்தனை இலகுவாய் எவருக்கும் இருப்பதில்லை. நான் என்னளவில் அந்த கணத்தின் இறுக்கத்தை சிறிது குறைக்க விரும்புகிறேன். இந்த வாழ்வின் இந்த பயணங்களின் இந்த அலைவுகளின் குறைந்த பட்ச வெற்றியென்பது மரணத்தை இலகுவாக்குவதுதான். நானும் என் சகோதரனும் அடிக்கடி சொல்லிக் கொள்வதுதான் இது. மரணம் ஒரு தியானத்தைப் போல, ஒரு விடுபடுதலைப் போல, ஒரு திறப்பைப் போல அணுகப்பட வேண்டும். அதற்கான மன நிலையை எட்டுவதுதான் என் வாழ்நாள் சாதனையாக இருக்கக் கூடும். A perfect pure death என சொல்லிப் பாருங்கள் கிளர்ச்சியாக இருக்கிறதல்லவா?

இன்றைய பதினைந்து நிமிடக் காலைப் பயணத்தில் முப்பது வருடங்களை நினைவில் சக்கரமாய் சுழற்றிப் பார்த்தேன். மிக இலகுவாய் நகர்ந்து போகும் இந்த நாட்களை விட வியர்வையில் குளித்தபடி வெயிலில் அலைந்து கொண்டிருந்த இருபதின் ஆரம்ப நாட்கள் மிகுந்த உயிர்ப்புத் தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது. பத்து வருடத்திற்கு முன்பு நான் எட்டுவதற்கான உயரங்கள், அடைய வேண்டியவை, கைப் பற்ற வேண்டியவை என்பன போன்ற ரீதியிலான நீளமான பட்டியல்களும் பேராசைகளுமிருந்தன. அந்த விரும்புதல்கள் இன்னொரு வகையில் வாழ்வை உற்சாகமாகவும் வைத்திருந்தன. வெற்றி, தோல்வி, கொண்டாட்டம், துயரம் என்பதினை அடி மனதிலிருந்து அந்தந்த உணர்வுகளின் வேர்சுவையை ருசிக்க முடிந்தது. இப்போதும் அதே உணர்வுகள் இருக்கிறதுதாம் என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் நான் அதிலிருந்து விலகுகிறேன். அதன் ஆழத்தினுக்கு என்னால் பயணிக்க முடியவில்லை. பாதியிலேயே நான் நடிப்பது எனக்கே உறைத்துவிடுகிறது. மீண்டும் அவ்விருபதினுக்கு,அப்பதின்மத்தினுக்கு செல்ல முடிந்து விட்டால் பின்பு எப்போதுமே அங்கிருந்து நகராமல் எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும். சற்றுக் கலைந்த நினைவுகளில் பதின்மமும்,இருபதும் தந்த அயற்சிகள் லேசாய் எட்டிப் பார்த்தன. இன்னும் சற்று வசதியாக இருக்கட்டுமே என நினைவை இன்னும் பின்னோக்கி விரட்டினேன்.அணிந்திருக்கும் கால்சட்டை முழுக்க தெருப்புழுதியும், ஆற்று மணற்துகள்கள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்துவிட்ட செம்பட்டை தலை முடியோடும் சுற்றித் திரிந்த என் சிறு வயது பிம்பத்தில் நினைவைப் பொருத்தி விடுகிறேன். இதில் எந்த சிக்கல்களுமில்லை.

எல்லா வளர்ந்த ஆண், பெண்களிலும் ஒரு சிறுவனோ சிறுமியோ நிரந்தரமாய் விழித்திருப்பார்கள் போலும். என் சிறுவனை எவரும் நினைவுறுத்தத் தேவையில்லாது அவன் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அந்த கணங்கள் மிகப் பிரத்யேகமாகிவிடுகின்றன. அந்த கணத்தின் உற்சாகத் தளும்பலை எது கொண்டும் அடக்கி விட முடிவதில்லை. அந்த கணத்திலேயே தொடர்ந்து நீடிப்பதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாய் இருக்க முடியும். மனதளவில் நான் அந்த வயதை விட்டு நகராமல்தான் இருக்கிறேனோ என்கிற சந்தேகங்கள் எழ ஆரம்பிக்கின்றன. எப்போதுமே இழந்ததை விரும்பும் மனதின் பகல் கனவுதாம் இவ்வெண்ணங்கள் என்பது உறைத்தாலும் கனவினை நாடும் மனம் நிகழில் ஒரு போதும் பொருந்துவதில்லை.

இன்றைய தினத்தில் நன்றி உணர்வு பெருக்கெடுக்கிறது. இந்த இயற்கை, இந்த மனிதர்கள், எனக்குச் சமீபமான சக உயிரினங்கள், என எல்லாத் தரப்பிலிருந்தும் நான் அன்பைப் பெற்றிருக்கிறேன். எந்த பற்சக்கரத் தாடைகளும் கடித்துக் குத்தி கிழித்துவிடாமல் இந்த வருடங்களை நான் கடந்திருக்கிறேன். அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இன்றைக் கருதுகிறேன். கோபத்தின் விதையை, வன்மத்தின் வளர்ந்த செடியை, துரோகத்தின் மறைவுக் கொடியை நான் பலரின் சிறு தோட்டங்களில் ஊன்றியிருக்கலாம். அவைகளுக்கான காரணங்கள் அந்தந்த நிமிடங்களின் உணர்வுத் தெறிப்புகளேயன்றி எப்போதைக்குமான வன்மங்கள் அல்ல. எனக்கு இணக்கமில்லாதவர்கள், என்னை வெறுப்பவர்கள், என் மீது உமிழ நினைப்பவர்கள் அனைவருக்கும் என் அன்பு முத்தங்கள்.

இதே நாளில் பிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சக வலைப்பதிவர் வால் பையன், தங்கை அருள்மொழி பாலாஜி மற்றும் முகமற்ற முகவரியற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மின்னஞ்சல்,தொலைபேசி,ஆர்குட்,முகப்பு பக்கம் மூலமாக வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றியும் அன்பும்.

36 comments:

வால்பையன் said...

பிறந்தநாள் அன்று இவ்வளவு சிந்திக்கமுடியுமா!?

நான் பெரிய மங்குணியா இருந்திருக்கேன் தல!

இங்கேயும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

என்னை வாழ்த்தியதற்கும் நன்றி தல!

ஆயில்யன் said...

//விரும்புதல்கள் இன்னொரு வகையில் வாழ்வை உற்சாகமாகவும் வைத்திருந்தன. வெற்றி, தோல்வி, கொண்டாட்டம், துயரம் என்பதினை அடி மனதிலிருந்து அந்தந்த உணர்வுகளின் வேர்சுவையை ருசிக்க முடிந்தது//


எஸ்ஸு !

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)

நேசமித்ரன். said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யனார்

:)

காமராஜ் said...

அய்யனார் சந்தோஷம்,பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய்ய எழுதவும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Pirandha Naal Vazhtukkal...Kadantha oru madama unga valayai Isaithukkondirukiraen Thanimayil..Ungal ezhuthu & anubavam en manaottangalil iyaindhu payanikiradhu..romba nerukkama unaruhiraen..nan 1 varusham dubaila kuppai kottiyadalo ennamo...Punaivugalil Thilaikum Suyam,Suyam Karaintha Veli,Prethyaegap Punnagaigal,Pinnaveenathuva Pirathigal,Karunira Peria Vizhigal,Irulil Olirum Pasparas nu oru vithyasamana Varthai Kalanjiyam Ungal Ezhuthil Therikiradhu..Ayal Vasthal Idaiyidaiyae Ulloorapparavumm Manapprizhvu Ungal Ezhuthil Ethirolikkiradhu..Envaraiyil Edhugai Monai Than Kavithainu Nenchitrindhaen..Mudhal Mudhala ippa Thaan Kavithaiya Vasikkave Theriraen..thirumba thirumba vasikraen.Manamarntha vazhukkal...Nedu Naal Vazhvadharku..NAWAS UTHUMAN

தமிழ்நதி said...

இன்னிக்குப் பிறந்தநாளா உனக்கு? சொல்லவேயில்லை:) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார். இன்னுமின்னும் நிறையப் படி, எழுது. நண்பர்களாகிய எங்கள் அன்பு உனக்கு எப்போதும் உண்டு.

தேவன் மாயம் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!!

ஆடுமாடு said...

வாழ்த்துகள் ஐயா.

ஆடுமாடு said...

இந்த மாசம் பிறந்தநாள் மாசம்னு நினைக்கிறேன்.

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அய்யனார்! :-)

ரீவைண்டிங் போஸ்ட் - சூப்பர்!

கோபிநாத் said...

மீண்டும் வாழ்த்துக்கள் அய்ஸ் ;))))

இந்த வருஷமும் விருந்து கிடைக்காதா!! ;))

Unknown said...

நண்பா பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
முப்பது வருடங்களிலே நீ அடைந்த அனுபவம் உன்னை மரணத்தை நோக்கி சிந்திக்க வைத்திருக்கிறது என்றால், நான் என்ன சொல்வது. என்னுடைய பாட்டிக்கு 98 வயது ஆன பின்னும் தினமும் அவர்களைப் போய்ப் பார்த்தால்தான் என்னுடைய பொழுது விடிகிறது.

அன்புடன்
சந்துரு

anujanya said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்ஸ். இடுகையையும் வழமை போல .... அருமை. தமிழ் நதி சொல்வது போல் இன்னும் நிறைய வாசித்து, உங்கள் மொழி மூலம் எங்களிடம் பகிர்வது தொடர்ந்து நடக்க வேண்டும்.


அனுஜன்யா

ராம்ஜி_யாஹூ said...

எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யனார்.

பதிவு மிக அருமை.

காதலர்கள் உங்கள் பதிவை கடன் வாங்கி காதல்லிக்கு வாழ்த்து சொல்லலாம்

Umabathy said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

selventhiran said...

சகா, இசைபட வாழ்!

Anonymous said...

nice post ayyanaar.belated birthday wishes......jaseela naufal.:)

சென்ஷி said...

பொறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா

கண்ணா.. said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யனார்..


என்னாது..முப்பது வயதுதான் ஆகுதா..??!!! நம்ப முடியவில்லை..


இதுக்குதான் யாரையும் எழுத்தின் மூலம் அனுமானிக்க கூடாதுன்னு சொல்றது.

:)

sivaG said...

சித்திரைத் திருநாள் &பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

ச.முத்துவேல் said...

/மரணம் நமக்களித்த கொடைதாம் இந்த வாழ்வு/

எப்புடி இப்படில்லாம்?

டிஸ்டர்ப் பண்ற எழுத்து, சிந்தனைகள்.

வாழ்த்துக்கள் அய்யனார்.

ஈரோடு கதிர் said...

அருமையான எழுத்து வாசம்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அய்யனார் :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அய்ஸ் :)

Anonymous said...

பிறந்த நாளன்று பீர்,பார்ட்டி என கொண்டாடும் சூழலில்
வாழ்வின் நிலை எண்ணி சிந்தனை வயப்பட்ட நீவிர் நல்ல
சிந்தனையாளர்தாம். உம்மை அறிஞர் குழாமிலிருந்து
விடுவிக்க குசும்பன் தலைமையில் பீராபிஷேகம் செய்யக்
காத்திருக்கிறோம் :)
Jokes a part ;
You are a good man. Keep it up.

Radhakrishnan said...

//இதே நாளில் பிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சக வலைப்பதிவர் வால் பையன், தங்கை அருள்மொழி பாலாஜி மற்றும் முகமற்ற முகவரியற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

மனதை தென்றலாக வருடிய வரிகள், அருமையான இடுகை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

KARTHIK said...

// கணத்தின் உற்சாகத் தளும்பலை எது கொண்டும் அடக்கி விட முடிவதில்லை. அந்த கணத்திலேயே தொடர்ந்து நீடிப்பதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாய் இருக்க முடியும்.//

வாழ்துக்கள் அய்ஸ் :-))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் அய்யனார் :))

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் அய்யனார்!

ஸ்ரீவி சிவா said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யனார்.

பிறந்த நாளன்று மரணம் பற்றிய குறிப்புகள் எழுதும் அளவுக்கு மனத்தெளிவு. வேறென்ன வேண்டும்?

நிறைய எழுதுங்கள். தமிழ் நதி சொன்னதை சுயநலத்துடன் வழிமொழிகிறேன். :)

Jegadeesh Kumar said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நம் மரணம் குறித்துமட்டுமே நம்மால் இவ்வளவு அக்கறையொடு சிந்திக்க முடிகிறது இல்லையா?
மரணத்தைப் பற்றி நானும் கொஞ்சம் உளறியிருக்கிறேன். அவகாசமிருந்தால் பார்க்கவும்.
www.jekay2ab.blogspot.com

இப்னு ஹம்துன் said...

வாழ்த்துகள் சார் :)

butterfly Surya said...

வாழ்த்துகள் அய்யனார். இன்னும் பல சிகரங்களை தொட வேண்டும்.

பனித்துளி சங்கர் said...

/////எப்போதுமே இழந்ததை விரும்பும் மனதின் பகல் கனவுதாம் இவ்வெண்ணங்கள் என்பது உறைத்தாலும் கனவினை நாடும் மனம் நிகழில் ஒரு போதும் பொருந்துவதில்லை//////

புதுமையான சிந்தனை .

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன்

Featured Post

test

 test