Sunday, December 2, 2007

நினைவுகளிலிருந்து குறிப்பெடுத்தல் அல்லது பூமரங்களைப் பற்றி சில குறிப்புகள்



---------- 1 -----------------
நினைவுகளே இல்லாதிருப்பது என்பதும், எண்ணங்களின் ஓட்டம் எதுவுமில்லாமல் அசையாத குளத்தினை ஒத்த இருப்பு என்பதும், சுலபத்தில் எவருக்கும் கிடைக்காத பொக்கிஷமாகத்தான் இருக்க வேண்டும்.எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் நம்மால் வாழ்வின் எல்லா நிமிடங்களையும் எதிர்கொள்ள முடிவதில்லை.தியானம்,பயம்,போதை போன்ற மூளையழிந்த சந்தர்ப்பங்களில் மட்டும்தான் நம்மால் சிந்தனை மற்றும் எண்ணச் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இயல்பில் இருக்க முடிகிறது.படுத்த உடனேயே தூங்கி விடுவது மிகப்பெரிய வரமாய்த்தான் இருக்கமுடியும். என்னால் எப்போதுமே என் சிந்தனைகளிலிருந்து விடுபடமுடிவதில்லை.ஏதாவது ஒன்று உள்ளே எப்போதும் ஒடியபடியே இருக்கும்.அப்படி சிந்தனைகளே இல்லாத அற்புத தருணங்களும் வாய்த்திருக்கிறது.

ஓஷோ தியான முகாம்களில் இந்த "ப்ளாங்க்" தருணங்களைப் பெற்றிருக்கிறேன்.குறிப்பாய் குச்வாடா தங்கலில் இந்த அற்புத உணர்வு கிட்டியிருக்கிறது.நள்ளிரவைத் தொடும்வரை வியர்க்க விறுவிறுக்க நடனமாடிவிட்டு அங்கிருந்த நீச்சல் குளத்தில் வானம் பார்த்தபடி மிதந்திருந்த இரவுகள் எனக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கின்றன. அதற்கடுத்தபடியாக விபாஸனா தியான நாட்களிலும் சிந்தனைகள் எதுவுமில்லாமல் இயல்பில் இருக்கமுடிந்தது.சென்னையடுத்த திருநீர்மலைக்கு சமீபமான ஒரு புத்தர் ஆசிரமத்தில் பத்து நாள் தங்கலின் போது கிட்டிய ஆசுவாசமும் அமைதியும் வேறெந்த தருணத்திலும் பெற முடியாதது.பெண்ணொருத்தியின் அருகாமையும் முத்தங்களும் ஒருவேளை எண்ணச் சிக்கல்களிலிருந்தும் மனவோட்டத்திலிருந்தும் விடுபடும் தற்காலிக தீர்வுகளாயும் இருக்கக்கூடும்.எதுவெப்படியோ சிந்தனைகளிலில்லாமல் இருப்பதைவிட ஆசுவாசமானது வேரெதுவுமில்லை.

---------- 2 ---------------

என் பள்ளிக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ், பிடிக்காத பாடம் அறிவியல். பழந்தமிழ் பாடல்களின் மீது பெரு விருப்பம் இருந்தது.என் பள்ளிக்காலத் தமிழாசிரியர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தனர்(சம்பந்தம்,குப்புசாமி,அருணாசலம்,ஆறுமுகம்)


அற்ற குளத்தின் அறு/ரு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி இருப்பார் உறவு

சிறு வயதில் நெட்டுரு போட்ட பாடல்.இந்தப் பின்னிரவிலும் நினைவுகளின் இடுக்கில் இருந்து பெயர்த்தெடுக்க முடிகிறது.இந்தப் பாடலை யார் எழுதியது? எதில் வருகிறது? என்றெல்லாம் நினைவிலில்லை.ஒரு சில வார்த்தைகளும் மாறியிருக்கலாம்.ஆனாலும் உறவுகள் குறித்து எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று.

பள்ளியில் பேச்சு,கவிதை,கட்டுரை என எந்தப் போட்டி வந்தாலும் நிச்சயம் ஏதாவது ஒரு பரிசை எனதாக்கி விட முடிந்தது.மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளிலும் என் பங்களிப்பும் பரிசும் தவறாமல் இருந்து வந்தன.நான் எழுதிய முதல் கவிதையின் தருணம் நன்றாக நினைவிலிருக்கிறது.ஒன்பதாம் வகுப்பில் கவிதைப் போட்டிக்காக கொடுக்கப்பட்டத் தலைப்பு நிலா.ஒரு சாயந்திரத்தில் மாடியில் அமர்ந்தபடி என் முதல் கவிதையை எழுதினேன். அந்தப் பிரதி இன்னும் கைவசமிருக்கிறது.இந்த முறை ஊருக்குப் போனால் அதை ஸ்கேனித்து பதிவிக்கும் எண்ணமும் இருக்கிறது.அந்தக் கவிதை இப்படித் தொடங்கும்

ஏ நிலாவே நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்
உன் கன்னல் செரியும் பேரொளி
என் முகத்தில் மட்டுமே நிறைந்திருக்கிறது
…….
என் பயமெல்லாம் உன்னை சைட்
அடிக்கும்
விண்மீண்களை நினைத்துதான்

இப்போது இந்த கவிதையை நினைத்தாலும் சிரிப்பும் வெட்கமுமாய் வருகிறது.எல்லா துவக்கங்களும் அபத்தமானதுதான்போல.

பத்தாம் வகுப்பு மாணவர் மன்றத் தேர்வில் தமிழில் மாவட்ட அளவில் முதல் மாணவனாய் வரமுடிந்தது.(95/100)ஆனால் இறுதித் தேர்வில் கோட்டை விட்டேன் (89/100)
நான் மாநில அளவில் தமிழில் முதல் மாணவனாய் வருவேன்
என எதிர்பார்த்திருந்த தமிழாசிரியர் ஆறுமுகம் கடைசியாய் சொன்னது இப்போதும் உறுத்தலாய் இருக்கிறது (என் தலையில மண்ணள்ளிப் போட்டுட்டியேடா!!)
---------- 3 ---------------
மரங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாய் பூ மரங்கள்.கிளைகள் முழுதும் பூத்திருக்கும் சிவப்புக் கொன்றை மரங்கள்,சின்னச் சின்னப் பூக்களாய் இடைவெளி விடாது நெருக்கமாய் பூத்திருக்கும் புங்கை மரங்கள்,மனதை மயக்கும் வாசனைகளோடு நீளமாய் பூத்திருக்கும் மரமல்லி மரங்கள், கசப்பும் மயக்கமுமாய் வாசனைகளைப் பரப்பி தரைமுழுவதும், இலைமுழுவதும் விரிந்திருக்கும் வேப்பம் பூ மரங்களெனப் பூ மரங்கள் என் நேசத்திற்குரியவை.எப்போதோ ஆனந்தவிகடனில் படித்த ஆபுத்திரனின் கவிதை ஒன்று..
மரங்களை விட அழகிய கவிதை வேறெதுவுமில்லை
….
இலைக் கரங்களால்
பிரார்த்திக்கும் விருட்சம்
தன் கோடை கால ஆடையை அணிந்திருக்கும்
….
தலையில் புறாக்கூடு சூடி நிற்கும்
……
கவிதைகள் என்னைப்போன்ற
முட்டாள்களால் எழுதப்படுகின்றன
மரங்கள் கடவுளால் மட்டுமே உருவாகின்றன
தேவதேவன் கவிதைகளிலும் மரங்களை அதிகம் பார்க்கலாம்.எதுவும் நினைவிலில்லாததால் பகிரமுடியவில்லை.

கொன்றை மரங்கள் விடுமுறை முடிந்த ஜீன், ஜீலை மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும் பெரிய கிளைகளில் ஏறி பூக்களைப் பறித்து அதன் தேங்காய் பூவை தின்று கொண்டிருப்போம். காய்களைப் பறித்து கொக்கி சண்டை போடுவது,முன்னமர்ந்திருப்பவனின் தலையை குறிவைத்தடிப்பதென கொன்றை மரங்களோடு கழிந்த நாட்கள் அற்புதமானவை.வீட்டின் முன்புறம் பெரிய புங்கை மரமொன்று இருந்தது. பின் கொல்லையில் மிகப் பெரிதாய் இரண்டு வேப்ப மரங்கள். ஏப்ரல் மாதத்திலேயே வேம்பும், புங்கையும் பூக்கத் தொடங்கிவிடும்.அதிகாலையில் எழுந்து முன்வாசலுக்கோ தோட்டத்திற்கோ வரும்போது ரம்மியமான பூக்களின் வாசனை மெல்லிய கிறக்கத்தைக் கொடுக்கும்.தரையில் படுக்கை விரித்திருக்கும் பூக்களை என் அம்மா எவ்வித சலிப்புமில்லாமல் வாரி தெருவில் கொட்டுவாள்.குப்பைமேடும் பலவகைப் பூக்களோடு மிகுந்த அழகாய்த் தோற்றமளிக்கும்.

மரமல்லிப் பூக்கும் காலம் அலாதியானது மழைக்காலத்தில்தான் அவைப் பூக்கும்.டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரம்முழுக்க வெள்ளையாய், நீளமாய் பூக்க ஆரம்பித்துவிடும். இரவில் பெய்த மழையில் நனைந்தபடி தரை சேர்ந்திருக்கும் பூக்கள் எழுப்பும் வாசம் நம்மை வேறொரு உலகத்திற்கு அள்ளிக்கொண்டு போகும். எல்லாவற்றையும் இழந்துவிட்டிருந்தாலும் மரமல்லி மரங்கள் மட்டும் என்னோடு இப்போதுமிருக்கின்றன நான் வசிக்கும் கராமாவில் இருக்கும் பூங்காவில் நிறைய மரமல்லிப் பூமரங்கள் இருக்கின்றன. எந்த நாட்டிலிருந்தாலும் பூக்களும் மரங்களும் எவ்வித வித்தியாசங்களையும் காண்பிப்பதில்லை.சிந்தனை மிகும் சாயந்திரங்களில் இப்போதெல்லாம் தஞ்சமடையும் இடம் மரமல்லி மரத்தடியாகத்தான் இருக்கிறது.தனிமை மிகுந்து கசப்பும் துயரமுமான மாலைகளில் யாரேனும் பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்துகொண்டு இம்மரங்களை இறுகக் கட்டி முத்தமிட்டு வருகிறேன்.

12 comments:

Anonymous said...

nice prose da

happy to read like tis

cheers
ram

Anonymous said...

இப்படி மரத்தையே கட்டிப்புடிச்சிக்கிட்டு எவ்வளவு காலத்துக்காத்தான் இருக்கப் போறீரோ தெரியலை :-) திருந்துங்கடே!

சாத்தான்குளத்தான்

ஆடுமாடு said...

அய்யனார் உங்கள் சுய விளம்பரம் பிடித்திருக்கிறது.
என்னைப் போலவேதான் நீங்களும். தமிழில் நான்தான் எப்போதும் பர்ஸ்ட். இதற்காகவே புண்ணியவான்கள் கல்லூரியிலும் தமிழ் படிக்க வைத்தார்கள்.
'மழை' பற்றி நாளிதழ் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றது என் முதல் கவிதை.
மழை கொடுமையில் வெள்ளம் வந்து 10பேர் இறந்திருந்தார்கள் அப்போது. அந்தக் கவிதை இப்படி ஆரம்பிக்கும்:

நாளைய கல்வெட்டு
உன்னை கோழை
என்று சொல்லட்டும்.
.....
தூதனுப்பாமல்
போர் தொடுத்தது நியாயமா?

-இப்படிச்செல்லும் கவிதை பிரசுரமானபின் தொகுதியில் என்னையும் கவிஞராக்கிட்டாய்ங்கல்ல.(இப்ப நினைச்சாலும் வெக்கம் வெக்கமா இருக்கு)
ஒண்ணுமில்ல... உங்க பதிவை படிச்சதும் சின்ன வயசு ஞாபகம் ஓவர்ப்ளோவாயிச்சு.
ஒகே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்; இந்தப் பதிவு தேவையற்றது என்று நினைக்கிறேன்.

நம்மைப் பற்றிய கதையைச் சொல்லும் ஆர்வம் தவிர்க்க முடியாதது. முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். (அதற்குத்தான் புனைவுகளில் நம் கதையை ஒளித்து வைத்து விடுவது.!).

கோபிநாத் said...

\\சிந்தனை மிகும் சாயந்திரங்களில் இப்போதெல்லாம் தஞ்சமடையும் இடம் மரமல்லி மரத்தடியாகத்தான் இருக்கிறது.\\

அப்ப தான் இப்படி எல்லாம் பதிவு போட முடியும்..;))
(நான் என்ன சொல்லவரேன்னு புரியுதா!?) ;)

Anonymous said...

ம்..

கட்டிப்புடிக்க வேர ஏதாச்சிம் இருக்கா அண்ணாச்சி :)

கவிஞர் ஆடுமாடு
இனிமே உங்கள இப்படியே கூப்பிடவா


மிதக்கிற எல்லாத்தையும் எழுதிட்டிருக்கேன் சுந்தர்..தீவிரத்தன்மைலாம் எதுவும் இன்னும் இல்ல..சொல்லப்போனா இங்க எழுதி இருக்கும் எல்லாமே வெட்டிதான்

விமலா said...

நேர்த்தியான,எளிமையான பதிவு..
நினைவுகளிலிருந்து/சிந்தனைகளிலிருந்து அவை சொற்களாக உருமாறி
சுற்றி வளைப்பதிலிருந்து, தப்பித்தல்,ஏதேனும் சாத்தியமிருக்கிறதா..என்ன?மரணம் வரை
இல்லையென்றே நினைக்கிறேன்.
..................
என் பள்ளியில் நிரம்ப இருக்கும்
பூவரசம்,வேம்பு..புங்கை மரங்கள்..மற்றும் அதனடியில் சொரிந்துள்ள மலர்களின் நினைவில்
சில கணம் நெகிழ்ந்திருந்தேன்..nostalgic..

Unknown said...

அய்யனார்,
எண்ணங்களின் இருப்பே வாழ்வின் இயக்கம். உங்களின் thoughtsphere க்குள் இருந்து இருந்து வெளியே வந்துவிட்டால் நீங்கள் இயங்க வேண்டிய தேவையும் இல்லை. இருக்க வேண்டிய தேவையும் இல்லை.

என்றாவது ஒரு நாள் கனவுகள் அற்ற தூக்கம் உங்களுக்கு வாய்க்கப்பட்டிருக்கும். அப்போது (உதாரணமாக) இரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை நீங்கள் உங்களின் எண்னக்களைத் தொலித்து இருப்பீர்கள். உங்களின் thoughtsphere அந்த காலத்தில் எதுவும் பதிவி செய்யப்பட்டு இருக்காது.

தூக்கம் என்பதும் ஒருவித தற்காலிக மரணமே. உடல் உழைப்பால் அயர்ந்த சாமானியனின் தூக்கத்தில் (கனவுகள் அற்ற) எப்போதும் இந்த "ப்ளாங்க்" தருணங்கள் எப்போதும் இருக்கும்.

**
ஒஷோ வந்ததால் இங்கெ வந்தேனோ??

ஆடுமாடு said...

//கவிஞர் ஆடுமாடு
இனிமே உங்கள இப்படியே கூப்பிடவா//
பாஸூ இந்த ஏரியாவுக்குள் கொஞ்சம் எட்டிப் பாருங்க.

http://kadananathi.blogspot.com/

Ayyanar Viswanath said...

நன்றி விமலா

பழைய நினைவுகளை கிளர்வதென்பது சற்று ஆபத்தான விதயம்தான் என்றாலும் அவ்வப்போது சில பூக்களையும் அதில் கண்டெடுக்க முடியும்..

வேம்போடும் புங்கையோடும் வாழ்ந்திட்ட மனிதர்கள் கொடுத்துவைத்தவர்கள்தாம்..

Ayyanar Viswanath said...

பலூன் மாமா
ஓஷோ ன்னு எழுதும்போதே உங்கள நெனச்சிகிட்டேன் :)
சாமான்யனின் தூக்கத்திற்கு மட்டுமில்லை வாழ்விற்கும் உண்மைத்தன்மைக்கும் வெகு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத்தான் படுகிறது...

ஆடுமாடு
உங்கள் கவிதைப் பக்கம் பார்த்தேன் அதிகம் எழுதுங்கள் எழுத எழுத எழுத்து...

Ayyanar Viswanath said...

கோபி உன்ன விட்டுடன்யா :)

இன்னா சொல்ல வர்ர ஒண்ணும் பிரியலியே

Featured Post

test

 test