Wednesday, December 26, 2007

பிரசவக் குறிப்புகள் அல்லது தாய்மை பற்றிய சிலாகிப்புகள்





கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும் அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த மருத்துவர், வலிவந்த நொடிமுதல் என் இன்னொரு தாயாக உடனிருந்த களைப்பில் "காலையில் பார்க்கிறேன். அவள் சரியாக இருக்கிறாள்" எனச் சொல்லி நகர்ந்து நள்ளிரவுதாண்டிய இருளில் மருத்துவமனை வாசல்வரை போயிருப்பார். உடல் அசையாத மயக்கத்திலும் என் உதடுகள் அசைத்துக் கேட்கிறேன் "where is Bonnie?"
"அவர் ஓய்வுகொள்ளப் போயிருக்கிறார், காலை மறுபடியும் உன்னைப் பார்ப்பார், உறங்கு" என்று உடனிருந்தவர்களின் குரல்கள் காதுகளை எட்டவில்லை. தொடர்ந்து அதே பல்லவியை அழுத்தமாகவும் பாடத் தொடங்குகையில் பயந்துபோன செவிலிகள் ஓடிப்போய்ப் பிடித்தே வந்துவிட்டார்கள் தன் வாகனம் கிளப்பிக்கொண்டிருந்த மருத்துவரை. "Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான்.

செலவநாயகியின் ஒரு கிறுக்கியாக வாழும் ஆசையிலிருந்து...


பனி படர்ந்த முன்னிரவுகளில் ஆளரவம் அடங்கிய வீதிகளில் சற்றே முன்புறம் சரிந்த வயிறுமாய் தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட ஸ்கார்ப் மற்றும் முழுக்கை ஸ்வெட்டர் அணிந்த மனைவியை நடைக்கு கூட்டிப்போகும் ஆண்களைப் பார்க்கும் போது ஒரு மலர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இன்றைய வாழ்வில் பதினோரு மணி வாக்கில் பூங்காவிற்கு செல்ல நேரிடுகையில் இது போன்ற ஒரு சோடியையாவது பார்க்க நேர்கிறது.ஓசூரில் டைட்டன் குடியிருப்பில் வாழ்ந்த சமயங்களில் பெரும்பாலான இரவுகளில் இதுபோன்ற தம்பதியினரின் அந்நியோன்யத்தை, கிசுகிசுப்பை,குழைவை எதிர்கொள்ள நேர்ந்ததுண்டு.வறண்ட இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு உண்மையான நேசத்திற்கான நம்பிக்கைகளை மீள்பதிவித்துக்கொள்வேன்.

பிரசவிப்பது என்பது உயிர்களுக்கான இயல்பு இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? என்பது போன்ற வறட்டுத்தனமான அணுகுமுறைகளோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை.தாய்மை என்ற ஒரே தனித்தன்மைக்காக மட்டும் ஒரு பெண் எத்தனை அபத்தமானவளாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம் எனத்தான் தோன்றுகிறது. பிரசவங்களை எதிர்கொள்ளும் நேரங்களில் ஏற்படும் பயம் மிக அடியாழத்திலிருந்து எழுவதை அதன் வெளிப்பாட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும். என் பால்யங்களில் கன்றிலிருந்து வளர்க்கப்பட்ட பசுமாடு அதன் கன்றை ஈன்றெடுத்த தருணம்தான் என்னுடைய முதல் பயம், முதல் படபடப்பு, முதல் ஆச்சர்யமுமாய் இருந்தது.ஈன்ற சில நிமிடங்களில் அதன் துள்ளல்களில் கிடைத்த பரவசம் மிக மங்கலாய் நினைவிலிருக்கும் அற்புத நிகழ்வு.

கன்றினுக்குப் பிறகு என் சகோதரியின் பிரசவம்தான் என்னை பயப்படவும் நெகிழவும் வைத்தது.ஒரு நண்பகலில் அரசுமருத்துவமனை வாசலில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி புதிதாய் பழக்கமாயிருந்த சிகெரெட்டினை மட்டும் துணைக்கழத்தபடி மனதிற்குள் இல்லாத கடவுள்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தேன்.எனக்குள்ளிருந்த பெண் தன்மைகள் எட்டிப்பார்த்த தருணங்களில் அதுவும் ஒன்று.அவளுக்கு திருமணமான பின்னரும் அபத்தமாய் எதையாவது உளறிக்கொட்டுவது போல் எனக்குப் பட்டால் சத்தமாய் குரலெழுப்பியோ அல்லது மிக மோசமாய் கடிந்துகொண்டோ என் அறிவுஜீவித்தனத்தை நிரூபித்துக்கொள்வேன். ஒன்றிரண்டு முறை அறைந்தும் இருக்கிறேன்.அவளின் பிரசவத்திற்கு பின்பு எத்தனை முட்டாள்தனமாய் அவள் நடந்துகொண்டாலும் அறைய கைகள் எழுவதே இல்லை பின்பு அது கடிந்து பேசுவதையும் நிறுத்திவிட வழிவகுத்தது.பிரசவ தருணங்களில் சாலையில் சிகெரெட் புகைத்துக்கொண்டிருந்த எனக்கே இத்தனை மாற்றங்கள் வந்தது ஆச்சர்யத்தைத் தந்தது. கணவர்கள் பிரசவ தருணங்களில் பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருப்பது மிகவும் தேவையான அவசியமான ஒன்று.பெண்ணை உடல்ரீதியிலான புரிதல்களோடு அணுகுவதன் மூலமே எப்போதுமே மாற்ற இயலாத நம் அடிப்படைத் தன்மைகளை சிறிதளவேணும் குறைக்க இயலும்.

80 திலிருந்து 90 வரைக்குமான தமிழ் திரைப்படங்கள் பெண்களைக் குறிவைத்தே எடுக்கப்பட்டது. தொலைக்காட்சி பெண்களை வீடுகளில் விழுங்குவதற்கு முன்பு வரை பகல் காட்சி முழுக்க திரையரங்குகள் பெண்களைத்தான் நிரப்பி வைத்திருந்தது.அப்போதைய வியாபாரிகள் பெண்களை ஈர்க்க புகுத்திய யுக்திகளில் பிரசவமும் அலைக்கழிப்பும் முதன்மையானது.உணர்ச்சி பொங்கும் தாலி வசனங்கள், இறுதிக் காட்சி தீ மிதிப்பு வகையறாக்களைக் காட்டிலும் இந்த யுக்தி அதிகக் கண்ணீரை வர வைத்தது. கதாநாயகனின் தங்கை, அக்கா, மனைவி களுக்கு பெரும்பாலும் பெரும் மழை கொட்டும் நள்ளிரவுகளில்தான் பிரசவ வலியெடுக்கும் சொல்லிவைத்தார்போல வில்லன்கள் நிறைமாத கார்ப்பிணியை தரையிலிழுத்துப்போவர் பாதி வழியிலேயே குழந்தை பிறக்கும் அந்த பெண் கால்கள் இடையில் இரத்தம் சிந்தி இறந்து போவாள்.பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறுதான் எடுக்கப்பட்டன.இவைகள் பிரசவம் குறித்த பயங்களை ஏற்படுத்தியிருந்தது. பார்வையாளனான எனக்கே இத்தனை பயங்களெனில் பிரசவிக்கும் பெண்ணுக்கு எத்தகைய மன உளைச்சலை இத் திரைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதை யோசிக்கும்போது இவ்வியாபாரிகளின் குரூர முகம் கண்முன் வந்து பெரும் வெறுப்பை உண்டாக்குகிறது.

நண்பனின் தொணதொணப்புகளுக்கு செவி சாய்த்து ஒரு ஆயுள்காப்பிட்டுக்காக வேண்டி மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்தேன்.அந்த மருத்துவமனை கிருஷ்ணகிரியின் மய்யத்தில் இருந்தது.கிருஷ்ணகிரி மிகவும் பின் தங்கிய ஏழை மக்களால் நிறைந்தது நான் சென்றிருந்த காலை வேளை ஏகப்பட்ட நோயாளிகளால் நிறைக்கப்பட்டு நிற்க இடமின்றி ஒண்டிக்கொண்டிருந்தேன்.முந்தய தினத்தில் இரவுப் பணி முடிந்து வந்திருந்ததால் சோர்வு அப்பட்டமாய் கண்ணில் மிதந்தது.தேகத்தில் எலும்பைத் தவிர கொஞ்சம் சதைகளையும் கொண்டிருந்த பெண்ணொருத்தி தன் பருத்த வயிற்றுடன் மாடிப்படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தாள்.கையில் குளுகோஸ் பாட்டிலோடு அப்பெண்ணைத் தாங்கியபடி ஒரு செவிலியும் குறுகலான படிக்கட்டுளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் இந்த நிலையில் இப்பெண்ணை இம்மாதிரி கொண்டு வருகிறார்களே எனப் பதைத்து பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்பெண் சறுக்கி விழுந்தாள். சின்னதாய் ஒரு கூச்சல் அப்பெண்ணின் பனிக்குடம் உடைந்ததை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியில் படபடப்பாய் வந்தது நின்றுகொண்டிருந்த நான் மயங்கி விழுந்தேன்.அந்த பெண்ணை ஒரு மருத்துவர் கூட்டமும் என்னை சில மருத்துவர்களும் சூழ்ந்து கொண்டனர் கண் விழித்துப் பார்த்தபோது என்னை ஒரு பெஞ்சில் கிடத்தியிருந்தனர் வெட்கமும் அவமானமும் ஒரு சேர பிடுங்கித் தின்றது.சுற்றி இருந்த வலிய நெஞ்சினர் கொல் லென சிரித்தனர்.அந்த மருத்துவர் இந்த மாதிரி இருக்கியே எனக் கடிந்து கொண்டார்.அதற்குப் பின் மருத்துவமனைக்கு செல்வதையே நான் பெரும்பாலும் தவிர்த்து வந்தேன்.

இந்த பயங்களுக்கு யார் காரணம் எனத் தெரியவில்லை.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மை சிதைத்துக்கொண்டிருக்கிறது வணிக ரீதியிலான வெகுசன ரசனைகள்.

12 comments:

பத்மா அர்விந்த் said...

தலைப்பை படித்த போதே செல்வநாயகியின் பதிவு நினைவுக்கு வந்தது. இத்தனை அழகாய் பிரசவ உணர்வுகளை எழுதக்கூட முடியுமா என்ற ஆச்சரியம் என்னுள் அதை மறக்கவிடாமல் செய்திருந்தது. பதிவை திறந்தால், முதலிலேயே அவருடைய அந்த அருமையான பத்தி.

திரைப்படங்களில் இது மிகவும் மிகைப்படுத்தப்படுகிறது.

seethag said...

அய்யனார் தாய்மையைப பற்றி சிலாகிப்பதல்ல பிரச்சினை .பெண்களுக்கு அவர்கள் உடல் மீதே உரிமைகள் இல்லாதபோது சிலாகிப்பது ஒருவிதமான போதை என்றே தோன்றுகிறது. . வெளிநாட்டில் வாழும் சில இவ்திய பெண்கள் எத்தனை முறை சோழ கேட்டிருக்கிறேன்,'ஐயோ குழஅந்தையை யாராவது பார்த்துக்க மாட்டாங்களான்னு இருக்கும்' என்று.

ஆனால் தாய்மையை எக்கச்காகமாக புனிதமாக்கி நம்மூரில் எந்த பெண்ணாவது குழ்ந்தை வளர்ப்பை ஒரு வேலையாக சொன்னால் இந்தப் புனிதப்படுத்துவதன் மூலம் எத்தனை குற்ற உணர்ச்சி உண்டக்குகிறோம்.

நம்மூரில் எங்கே நாம் post natal depression விழிப்புணர்வுடன் உள்ளோம்?

Mangai said...

Its really good.

Radha Sriram said...

சீதா சொல்வதுபோல் தாய்மையை ஓவெர் புனிதப்படுத்துதலில் எனக்கும் உடன்பாடு இல்லை. தாய் என்றாகிவிட்டால் அவளை சாதாரண உணர்வுகள் நிறைந்த பெண் என்பதற்க்கும மேலாக அவளை,"godliness" உள்ளவளாக சித்தரிப்பதை திரைபடங்கள் நிறுத்த வேண்டும். இதனாலேயே பல இளம் தாய்மார்கள் குழம்பி போய்விடுகிறார்கள்.

Ayyanar Viswanath said...

பத்மா

நேற்று ஐஸ்கிரீம் தின்றபடி கணவன் கைப்பிடித்து என்னைக் கடந்துபோன ஒரு கர்ப்பிணியை பார்த்துக்கொண்டிருந்தபோது செல்வநாயகியின் வரிகள் மனதில் ஓடின.அந்த வரிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நீட்சிதான் இப்பதிவு :)

சீதா
தாய்மை காதல் மற்றும் உறவுகளின் எவ்வித வடிவமாயிருந்தாலும் அதை மிகைப்படுத்தும்போது அருவெறுப்பை உண்டாக்கி விடுகிறது.உள்ளாழ்ந்த அன்பு என்பதே இல்லையோ என்கிற பயமும் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு..

Ayyanar Viswanath said...

நன்றி மங்கை

ராதா

தாய்மையை சிதைப்பது / புனிதப்படுத்துவது இரண்டுமே சம அளவில் திரைப்படங்களில் சிதைக்கப்படுகிறது.சிலாகிப்பது கவிஞர்களுக்கான அடிப்படையென்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் :)

செல்வம் said...

உங்கள் பதிவு மிக அருமை.ஆணின் பார்வையில் பிரசவம் என்பது நன்றாக இருந்தது.செல்வநாயகி அவர்களின் பதிவிற்கான இணைப்பு மிகவும் நன்று.அவருடைய பதிவை இன்று தான் படித்தேன்.(நான் கொஞ்சம் இந்த உலகிற்கு புதுசு என்பதால்)நான் படித்த மிகச் சிறந்த பதிவுகளில் அவருடையதும் ஒன்று,அறிமுகத்திற்கு நன்றி.

கோபிநாத் said...

நல்ல பதிவு அய்ஸ் ;)

இராம்/Raam said...

அய்யனார்,

=D> =D> =D>

செல்வநாயகி said...

அய்யனார்,

சங்கிலி விளையாட்டொன்றில் ஆழியூரான் மாட்டிவிட்ட காரணத்தால் கொட்டித் தீர்த்துக்கொண்ட குறிப்புகள் அவை. அவை இப்படியெல்லாம் உங்களைத் தொடர்ந்து வந்து இம்சிக்கும் என்று அப்போது நான் நினைத்தேயிருக்கவில்லை:))

ஆனால் உங்களின் அனுபவக்குறிப்புகள் இன்னும் நிறையச் சொல்கின்றன.

நன்றி உங்களுக்கும், பத்மா, செல்வத்துக்கும்.

Anonymous said...

செல்வம், கோபி, இராம்
மற்றும்
செல்வநாயகி

நன்றி

Jazeela said...

சுயவிளம்பரம் எங்கன்னு தேடிக்கிட்டு இருந்தேன் :-)

//என்னை ஒரு பெஞ்சில் கிடத்தியிருந்தனர் வெட்கமும் அவமானமும் ஒரு சேர பிடுங்கித் தின்றது// தெரியாத ஒரு உயிருக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டு மன அழுதத்தில் ஏற்படும் மயக்கத்திற்கு 'பயமென்று' பெயரா? பரவாயில்லையே அப்பட்டமான ஆணியவாதி தாய்மை பற்றியெல்லாம் சிலாகிக்கிறாரே!

Featured Post

test

 test