ஓரிதழ்ப்பூ
...........
அய்யனார்
விஸ்வநாத்
………
திருவண்ணாமலை
மலைக்கும் அந்த நகரத்துக்கும் அசாதாரணங்கள்
நிறைந்த வசீகரங்கள் பல இருக்கின்றன. பெரிய
கோபுர வாசலில் இருந்த மண்டபம்
(தீ விபத்தில் அது சரிந்துவிட்டது) என்னை
ஈர்த்தது போல வெவ்வேறு விதங்களில்
அவை உலகத்தின் பல திசைகளிலிருந்து மனிதர்களை
ஈர்க்கின்றன. ஆன்மிகம், பக்தி, கிரிவலம், தத்துவம்
எல்லாம் மேலுக்கான காரணங்கள் மட்டுமே.
‘மரம்’ நாவலின் பிரதான பாத்திரங்களை
உருவாக்கிவிட்டு அவர்களை எங்கே உலாவ
விடுவது என்று சுமார் ஆறு
மாத காலங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது திருவண்ணாமலை
நிலவெளியை ஞாபகம்கொண்டதும் சட்டென்று அவர்கள் அங்கே குடியேறிவிட்டார்கள்.
அப்படித்தன்
அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ நாவலில் வரும் பாத்திரங்கள்
அந்த வினோத நிலவெளியில் பொருந்திப்
போயிருக்கிறார்கள். அகத்திய முனி, சாமிநாதன்,
ரவி, அங்கையர்க்கன்னி, மலர்ச்செல்வி, சங்கமேஸ்வரன், துர்க்கா, அமுதா, ரமா எல்லோருமே
தங்களுக்குள் ஒரு அசாதாரணத்தை சுமந்து
திருவண்ணாமலை மண்ணில் வலம்வருகிறார்கள்.
‘கொம்பில்லா
இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு
தெளிந்து உண்டு நீங்கி நிலையில்
நிறுத்து பிளவில் பூக்கும் மலரை
யறிய வேணுங் கண் யறிந்த
கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து
யடைவாய் உன்மத்தம்’
என்ற புதிரில் ஒளிந்திருக்கும் ஓரிதழ்
பூவை இருநூறு ஆண்டுகளாகத் தேடியும்
கிடைக்காமல் பொதிகை மலையிலிருந்து திருவண்ணாமலைக்கு
வருகிறார் அகத்திய முனி.
ஒரு நாள் ரவி கோபத்தில்
அவரிடம் சொல்கிறான், “ங்கொம்மா, பாவடையத் தூக்கிப் பாரு
இருக்கும்” என. விடை கிடைத்த
மகிழ்ச்சியில் திளைக்கிறார் முனி. பிறகொருநாள் ‘அண்ணாமலை’
தான் அந்த ஓரிதழ்ப்பூ என்றும்
கண்டுகொள்கிறார்.
ரமணாஸ்ரமம்,
சேஷாத்திரி மகரிஷி ஆஸ்ரமம், கந்தாஸ்ரமம்,
தேனிமலை, சமுத்திரம் ஏரி என ஒரு
நாடங்க அரங்கு போல திருவண்ணாமலை
மயக்கம் கொள்ள முனி, சாமி,
ரவி, துர்க்கா, அங்கை எல்லோரும் நாடக
நடிகர்களாக மாறிவிடுகிறார்கள். யாதார்த்தத்தில் காலூன்றாத அவர்களின் வினோதப் பண்புகளே இந்த
நாவலின் பெரிய வசீகரம். காமமும்
காதலும் போதையும் பைத்திய நிலையும்
அவர்களை இயங்கும் விசைகளாகின்றன.
‘மான்’ என்ற படிமம் ரொமான்டிஸத்தை
நோக்கி நாவலை இழுத்தாலும் பெரும்
காமத்தை நோக்கிய பாத்திரங்களின் விழைவு
அதை ஈடு செய்துவிடுகிறது.
நம்ப முடியாத, நாடகீயமான சம்பவங்களே
நாவலின் கட்டமைப்பு என்பதால் நாவலுக்கு பலவீனமாக
இல்லாமல் அவையே பலமாகவும் மாறிவிடுகின்றன.
இந்த நாவல் வேண்டி நிற்கும்
தத்துவார்த்த தளம் ஒன்று கைகூடாமல்
போனதும் நடந்திருக்கிறது.
மண் வாசனை உத்தரவாதத்தோடு, வட்டார
மொழிப் பேசி, ரத்தமும் சதையுமான
மனிதர்கள் உலாவும் யாதார்த்த வகை
என்ற பாதுகாப்பான எல்லைக்குள் நீதிக் கதைகள் எழுதுபவர்களுக்கு
மத்தியில் அபூர்வமாக மலர்ந்துள்ளது கனவுத் தன்மை கொண்ட
இந்த ஓரிதழ்ப்பூ.
..........
வெளியீடு
கிழக்குப் பதிப்பகம், பக்கங்கள் 166, விலை ரூ.150.
No comments:
Post a Comment