ஓரிதழ்ப்பூ-
அய்யனார் விஸ்வநாத்
------------------------------------------------------
அய்யனாரை
நான் முதலில் சந்தித்தது ஜெயமோகன்
தங்கியிருந்த விடுதியில். அங்குதான் முதலில் கேட்டேன் இந்தத்
தலைப்பை.
...
வெயில் கொளுத்தும் களம். மற்ற உணர்வுகளுக்கு
இடம் இருக்குமா? இந்த உலகமும் மனிதனும்
உருவான காலத்திலேர்ந்தே ஆணும் பெண்ணும் உறவாடிய
சிக்கல்களும் தோன்றியிருக்க வேண்டும். மனதின் அடித்தளத்தில் உருவாகும்
அர்த்தமற்ற அல்லது அர்த்தமுள்ள நிஜமான
உணர்வுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில்
தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய கதை.
அது
ஒரு மலைகளால் சூழப்பட்ட வெயில்
நகரம். தன்னுடைய எண்ண சூழல்களை
வைத்து பிடித்தும் பிடிக்காமலும் போகும் இடங்கள். சங்கமேஸ்வரன்
மலர்விழியின் ஆசைக்கு அவளைக் காவுக்
கொடுத்துவிட்டு மான் முகத்தோடு, சிறு
வயது முதல் மானைப் பற்றிய
கனவுகளோடு வளர்ந்து, நரி முகத்தோடு வரும்
ரவியைக் கைப்பிடிக்கும் அங்கையை வசீகரிக்கிறான்.
எப்போதும்
குடியோடும் அமுதாக்காவின் நினைவுகளோடும் அங்கையை அண்ட முடியாமல்
இருக்கும் ரவி.
பூவைத் தேடி
அல்லது பூவின் அர்த்தத்தைத் தேடி
, துர்காவில் முங்கி கண்டெடுத்த மாமுனி.
துர்காவின் அரை புருஷன் சாமிநாதன்.
இவர்களிடயே நிகழும் பத்து பதினைந்து
நாட்களின் சங்கமம்.
மலையை விட்டு
மாமுனி கடும் கோபத்தோடு இறங்குவதோடு
தொடங்கி ரவி வீட்டைவிட்டு இலக்கில்லாமல்
வெளியேறும் வரை முன்னும் பின்னும்
பயணிக்கும் அதே சமயத்தில் நகரத்தின்
மொத்த சீதோஷ்ண நிலையையும் பதிவு
செய்கிறார்.
மலையும், மலைச் சார்ந்த
மழையும், கொளுத்தும் வெயிலும் , விஸ்கி மற்றும் ஏமாற்றங்களும்
கொண்ட கதம்பம். நுகர்ந்தால் நாசியில்
குருதி பெருகிடும் மலரை ஒத்து இந்தக்
கதையில் போதை சலிப்பின்றி பயன்படுத்தப்
பட்டிருகிறது.
தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம்,
போதை அல்லது அதிகமான புத்துணர்ச்சி
என்ற இரண்டு தீவிர நிலைமைகளைக்
கொண்டு நகர்கிறது.
நல்ல பசி வேலையில்
உள்ளிறங்கும் உணவுப் போல சரசரவென்று
சரியும் எழுத்து.
குளத்தின் மீது
எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் வெவ்வேறு
தவளைப்பாய்ச்சல் போல எழுத்து – ஒவ்வொரு
முறை படிக்கும் பொழுதும் வெவ்வேறு உணர்வுகளை
உயிர்த்தெழச் செய்கிறது.
பெண்களே ஆண்களின் உந்து
சக்தியாக இருந்திருக்கிறார்கள். அகத்தியராக நினைத்துக் கொள்ளும் நபர் துர்காவில்
கண்டதும், ரவி தேடிய அமுதா
அக்காவிலும், சங்கமேஸ்வரன் மலர்விழியில் கண்டதும் இந்த சக்திதான்.
சம்பவங்கள் துரத்தத் துரத்த ஓடுபவன்
ஒருவன், தன் வினையில் இலக்கில்லாமல்
ஓடுகிறவன் இன்னொருத்தன் என்று வாழ்க்கை ஒரு
சின்ன வட்டத்தில் சுழற்றி சுழற்றி அடிக்கும்.
நம்மில் பல பேர் அதை
உணராமலே வெகு வாழ்க்கையைக் கடந்து
விடுவோம்.
எழுத்தாளன் ஒரு கணம் நின்று
திரும்பிப் பார்த்து விட்டுச் செல்கிறான்.
அதனாலேயே ஓடிய வேகத்துக்கு ஒரு
ஆசுவாசம் போல ஆற்றுப் படுத்தும்
அவனுடைய எழுத்துக்கள்.
ஊரைப் பற்றிய விவரங்கள்
நாவலின் ஊடே விவரிப்பது காட்சியின்
நம்பகத்தன்மைக்கு வலு சேர்கிறது.
“திருவண்ணாமலை
ஒரு வறட்சிப் பகுதி. வெயில்
நகரம். இந்த உயரத்தில் பார்க்கும்
பொழுது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன.
ஒரு நாள் கூட இவ்வளவு
மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற
எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம்.”
நாவலை உருவாக்குவதில் நாவலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. சில இடங்களில் உரையாடல்கள்
தேவைக்கு அதிகமாகவும் , சில அம்சமான விவரணைகளுக்குப்
பிறகு வரும் வட்டார உரையாடலும்
நெருடலாக இருக்கிறது. இந்த நாவலின் பிரதான
பாத்திரம் ரவியின் தோல்விக்கான காரணம்
அவனின் பொறுப்பற்றத் தன்மையும் (ஆனால் அவன் பாவமாகவே
படைக்கப் பட்டிருப்பான்) காரணமோ என்றும் யோசிக்க
வைக்கிறது.
மாமுனியின் பாத்திரம் அட்டகாசம். கனவுப் பாதையில் கொஞ்ச
நேரம் இவ்வுலகை மறக்க வைக்கிறார்
.
இந்தாருங்கள் ஓராயிரம் பூக்கள் அய்யனார்.
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment