இந்த ஆவணப்படம் குறித்தான முதல் பதிவிற்கு வந்த எதிர்வினைகள், என் ஒரு பக்க சாய்வைக் குறித்து கேள்வி எழுப்பின. ஒருவேளை ஷீலா தந்த வியப்பில் மிகையாக எழுதுகிறேனோ என எனக்கே சந்தேகம் தோன்றியதால் நான்கைந்து நாட்கள் இதை எழுதுவதை தள்ளிப்போட்டேன். இப்போது மனம் சமநிலைக்கு வந்திருப்பதாகவே உணர்கிறேன்.
எல்லாத் தரப்புகளையும் இந்தத் தொடர் உள்வாங்கியிருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு. முடிந்தவரை உண்மைகளைச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார்கள். ஷீலாவின் இடத்தைப் பறித்துக் கொண்ட Ma Prem Hasya (Francoise Ruddy) மரணமடைந்து விட்டதால் அவரின் தரப்பு மட்டும் இதில் பதிவாகவில்லை. ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் எதனால் ரஜனீஷ் அவ்வளவு மோசமாக ஷீலாவை வெறுத்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் துல்லியமாக நமக்குக் கிடைத்திருக்கும்.
ஷீலா தன் பதினாறாவது வயதில் ரஜனீஷை மும்பையில் வைத்துச் சந்திக்கிறார். குஜராத் படேல் சமூகத்தைச் சேர்ந்த ஷீலாவிற்கு ரஜனீஷை அவரின் தந்தை இரண்டாம் புத்தா என்கிற அடைமொழியோடு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்த சந்திப்பை ஷீலா அவ்வளவு பரவசத்தோடு நினைவு கூர்கிறார். அவரின் கண்களைப் பார்த்த நொடியில் தான் முழுமையடைந்ததாகவும் அந்த கணத்தில் இறந்துபோகவும் தயாராக இருந்ததாகவும் சொல்கிறார். பின்னணியில் காண்பிக்கப்படும் புகைப்படங்களும் அவ்வளவு உண்மையாக இருக்கின்றன.
பதினேழாவது வயதில் ஷீலாவை அவரது பெற்றோர் உயர்கல்வி பயில நியூஜெர்ஸிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஷீலா அங்கே மார்க்கை சந்திக்கிறார். My first love, the beautiful man என மார்க் குறித்து விழிகள் விரியப் பேசுகிறார். உயர் சமூக இளைஞர்களின் ஹிப்பிக் கொண்டாட்ட வாழ்வாக இவர்களின் காதல் இருந்ததைப் புகைப்படங்கள் வழியாய் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்கிற்கும் ரஜனீஷைப் பிடித்துப் போகவே இருவரும் பூனே ஆசிரமத்திற்கு வந்து சேர்கின்றனர். சில வருடங்களில் மார்க் கேன்சரில் இறந்து போக, ஷீலா பூனா ஆசிரமத்திற்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.
ஷீலா தன்னை ஒரு மார்க்கெட்டிங் ஆளாகத்தான் முன் நிறுத்திக் கொள்கிறார். தியானம் செய்வதில் அவருக்கு ஆர்வமில்லை. தியானத்தை ஒரு பொருளாக, பணத்தைக் கொண்டு வரும் பொருளாக மட்டுமே பார்க்கிறார்.
இந்தியாவில் 70 களின் இறுதியில் ரஜனீஷ் பரவலாக சென்றடைகிறார். அதே நேரம் அவருக்கு கணிசமான எதிரிகளும் உருவாகின்றனர். ஒரு முறை அவரின் மீது கத்தி வீசப்படுகிறது. அரசியல்வாதிகளையும் தன்னுடைய கிண்டல்களால் முறைத்துக் கொள்ளவே கம்யூனில் ஒரு வித சமனில்லாத நிலை நிலவுகிறது. மேலும் ஏராளமான பணமும் குவிகிறது.
ஷீலா அமெரிக்காவிற்கு சென்று விடும் யோசனையைச் சொல்கிறார். ரஜனீஷ் உடனே அதை அங்கீகரிக்கிறார். ஒரேகன் மாநிலத்தின் ஆண்டலோப் பகுதியில் 65000 ஏக்கர் நிலத்தை ஷீலா வாங்குகிறார். எதற்குமே பயனில்லாத இடம். கரடுமுரடான மலைக் குன்றுகளையும் பாறைகளையும் கொண்ட முரட்டு நிலம். ஷீலா அந்த நிலத்தைப் பண்படுத்துகிறார். சொற்ப வருடத்தில் அந்தப் பிரதேசத்தையே நவீன நகரமாக மாற்றிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகளின் வீடியோ ஃபுட்டேஜ் களைப் பார்க்க பார்க்க ஆச்சரியம் மேலெழுகிறது. 80 களில் இருக்கும் கட்டுமாண வசதிகள், உபகரணங்களைக் கொண்டு அதிவேகமாக ஒரு நகரத்தை உருவாக்க முடியும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஷீலா அதை நடத்திக் காண்பிக்கிறார்.
அதி நவீன தியான அரங்கங்கள், தனித்தனிக் குடியிருப்புகள், டைனிங் ஹால்கள், நீச்சல் குளங்கள் என பிரம்மிக்க வைக்கும்படியாய் ஒரு நகரம் தயாராகிறது. மேலும் விவசாய நிலங்களை உருவாக்கி அதில் கம்யூனிற்குத் தேவையான காய்கறிகளையும் பயிரிட்டுக் கொள்ளும்படியான வசதிகளையும் ஏற்படுத்துகிறார்கள்.
ரஜனீஷ் ஏர்வேஸ் என்கிற பெயரில் கம்யூனில் ஒரு விமான தளமே உருவாகிறது. நான்கைந்து விமானங்கள் நிற்கின்றன. வரிசையாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், குவியும் மக்கள் கூட்டம் என மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமான ரஜனீஷ்புரம் உருவாகிறது. நீளமான சிவப்பு அங்கி மற்றும் ஓஷோ உருவம் பதித்த டாலைரைக் கொண்ட மணியை அணிந்த ஆயிரக்கணக்கான சந்நியாசிகள் ரஜனீஷ் புரத்தை நிறைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கோப்பான அமைப்பின் பின்னால் ஷீலா இருக்கிறார். கம்யூனின் ஒவ்வொரு அசைவும் ஷீலாவிற்கு தெரிகிறது. ரஜனீஷின் தனியறை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் ரகசிய ஒலிக்கருவிகள் பதிக்கப்பட்டு எல்லாப் பேச்சுக்களும் பதிவு செய்யப்படுகின்றது. கொஞ்சம் நாடகத்தனமாக சொல்லப்போனால் அங்கு ஷீலாவிற்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையமுடியாது.
ஷீலா தினமும் மாலையில் ரஜனீஷை சந்திப்பார். அப்போது ரஜனீஷ் மெளனத்திலிருந்தார். அவர் சந்திக்கும் ஒரே நபர் ஷீலா மட்டும்தான். ஷீலா எல்லா விஷயங்களையும் ரஜனீஷிடம் பகிர்ந்து கொள்வார் மேலும் அவரின் விருப்பத்தையும் கம்யூனின் அடுத்த கட்ட நகர்வையும் ரஜனீஷ் சொல்லியதாக சந்நியாசிகளிடம் அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களிடம் ஷீலா சொல்வார். இந்த ஒரு வழிப் பாதையில் நான்கு வருடங்கள் யாரும் குறுக்கிடவில்லை.
கம்யூனிற்குப் பிரச்சினைகள் எப்படி உருவாகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.
1. 50 குடும்பங்கள் வசிக்கும் ஆண்டலோப் பகுதி முழுக்கவே வெள்ளையர்கள் வசித்து வந்தனர். இயல்பாகவே அவர்களிடம் நிற உணர்வும் கடவுள் பக்தியும் மிகுந்திருந்தது. திடீரென உருவான ரஜனீஷ்புரத்தின் பிரம்மாண்டமும் அங்கு குவியும் ஆட்களும் அங்கிருந்து வரும் சப்தங்களும் அவர்களின் இயல்பைக் குலைத்தது.
மெல்ல ரஜனீஷ் புரத்தின் மீது மிகுந்த வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் ரஜனீஷ்புரக் குடியிருப்பில் வெடிகுண்டு ஒன்று வெடிக்கிறது.
2. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நிறவெறி பிடித்த உள்ளூர்காரர்கள்தாம் என ஷீலா நினைக்கிறார். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே கம்யூனின் பாதுகாப்பிற்கான ஒரே வழி என ஷீலா நம்புகிறார் எனவே ரஜனீஷ்புரத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலிலும் ஈடுபாடு காண்பிக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவரான கிருஷ்ண தேவா ஆண்டலோப்பின் மேயராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அமெரிக்காவின் ஜனநாயக சட்டங்கள் ஷீலாவிற்கு தன் எல்லைகளை விரிவாக்க உதவியாக இருக்கின்றன. மேலும் எங்கெல்லாம் வழிகளை உருவாக்க முடியுமோ அங்கெல்லாம் ஷீலாவால் ராஜபாதையையே போட்டுக் கொள்ளும் ஆற்றல் இருந்தது.
3.அடுத்ததாக 1984 ஆம் ஆண்டின் வாஸ்கோ கவுண்டி தேர்தலில் வெற்றிபெற ஷீலா தேர்ந்தெடுத்த வழிதான் அவரே சொல்வதுபோல எவராலும் கற்பனை கூட செய்து பார்த்திராத ஒன்று. நாடெங்கிலும் உள்ள ஆயிரம் வீடற்ற மனிதர்களை/ நோயாளிகளை அழைத்து வந்து கம்யூனில் தங்க இடமும் உணவும் கொடுக்கிறார். நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதிகளையும் செய்து தருகிறார். அவர்களுக்கு கம்யூனில் வேலையும் தரப்படுகிறது. அரசாங்கத்தாலும் சக மனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள் ஷீலாவின் மூலம் மீண்டும் ஒரு அடையாளத்தையும் புது வாழ்வையும் பெறுகிறார்கள். ஆனால் ஷீலாவின் உண்மையான நோக்கம், நடைபெற இருக்கும் தேர்தலில் ஆயிரம் பேரையும் தமக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதுதான். ஆயிரம்பேரும் பதிவுசெய்து கொள்ளப் போகும் நாளில் அதை எதிர்பார்க்காத ஒரேகன் மாநில அரசு, தேர்தலுக்கு முன்னரான வாக்காளர் பதிவை ரத்து செய்கிறது. தம் திட்டத்தில் தோல்வி அடையும் ஷீலா கணிசமான நபர்களை - தொந்தரவு செய்யும் நபர்களை என ஷீலா குறிப்பிடுகிறார் - வெளியேற்றுகிறார். அதில் ஒரு நபரால் கழுத்து நெறிக்கப்பட்டு சாகும் நிலையை அடைந்து தப்பிக்கிறார்.
4. தன் திட்டங்கள் முறியடிக்கப்பட்டாலும் மனம் தளராத ஷீலா சந்நியாசிகளைப் பயன்படுத்தி பல்வேறு உணவகங்களின் உணவுகளில் விஷத்தைக் கலந்ததாகச் சொல்கின்றனர். இதனால் வாஸ்கோ கவுண்டியைச் சேர்ந்த 750 நபர்கள் ஒரே நேரத்தில் வயிற்று உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஷீலா இதை மறுக்கிறார். பிற்பாடு இந்தக் குற்றம் ஷீலாவின் மீது சுமத்தப் பட்டாலும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் நகரத்திற்கு தண்ணீர் வரும் நீர்த்தொட்டியில் எலியின் துணுக்குகளை ஷீலாக்குழுவினர் கலந்ததால்தான் 750 பேர் பாதிக்கப்பட்டனர் என்றொரு கதையையும் உள்ளூர் வாசிகள் சொல்கின்றனர். ஆனால் இரண்டிற்குமே ஆதாரம் இல்லை.
5. இந்தக் காலகட்டத்தில் ரஜனீஷின் புகழ் ஹாலிவுட் வரை பரவுகிறது. நிறைய புதுப் பணக்காரர்கள் உள்ளே வருகின்றனர். குறிப்பாக காட்பாதர் திரைப்படத் தயாரிப்பாளரின் முன்னாள் மனைவி Francoise Ruddy ரஜனீஷிடம் நெருக்கமாகிறார். அவரின் புதுக் கணவர் ரஜனீஷின் மருத்துவராகிறார். ஷீலாவிற்கு இந்த நபர்களின் நெருக்கம் பிடிக்காமல் போகிறது. குறிப்பாக ரஜனீஷின் மீது கொண்டிருக்கும் தனக்கு மட்டுமேயான தன்மைதான் அவரைக் கொலை வரைக்கும் இட்டுச் செல்கிறது.
6. ரஜனீஷின் மருத்துவரான ஜார்ஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்றம் ஷீலா மீது சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது. ரஜனீஷை மரணத்திலிருந்து காக்கவே மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதாக ஷீலா தன்னுடைய தரப்பாக கூறுகிறார். ரஜனீஷ் மருத்துவரிடம் வலிக்காமல் சாகும் முறையை கேட்டு அறிந்துகொண்டதை ஷீலா இரகசிய பதிவுக் கருவிகளின் மூலம் கேட்டதாகவும். மோர்பினைப் பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைத்ததை கேட்டு பதட்டமடைந்ததாகவும் கூறுகிறார். இந்தக் குழுவினர் அவரை மயக்க மருந்துகளிலேயே வைத்திருந்தனர் எனவும் ஷீலா குற்றம் சாட்டுகிறார். தனக்கு நெருக்கமான சந்நியாசிகளில் ஒருவளான ஸ்டோர்க் மூலம் விஷ மருந்து கொண்ட ஊசியை மருத்துவர் மீது செலுத்தி இருக்கிறார். ஆனால் மருத்துவர் தப்பித்துக் கொண்டார்.
7. ’பொசஸிவ் ’ குணம்தான் ஷீலா வீழ்ச்சியடைய முக்கியக் காரணமாக இருந்தது. ஷீலாவிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஸ்டோர்க்கிற்கே ஒரு முறை விஷம் வைத்திருக்கிறார் என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஒருமுறை ரஜனீஷ், தான் வந்த காரின் பானட் மீதிருந்த ரோஜாப் பூக்கள் முழுவதையும் அங்கு நின்று கொண்டிருந்த ஸ்டோர்க்கை எடுத்துக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஷீலா அடுத்த நாள் ஸ்டோர்க்கின் காபியில் விஷத்தைக் கலந்திருக்கிறார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஹாலிவுட் குழாமினரின் செல்வாக்கு கம்யூனில் அதிகரிக்கிறது. ஒருகட்டத்தில் ஷீலாவால் ரஜனீஷைப் பார்க்கக் கூட முடியாமல் போகிறது. தான் பாடுபட்டு உருவாக்கியவை எல்லாம் நொறுங்குவதைப் பார்க்க முடியாமல் ஷீலா தனக்கு நெருக்கமான 25 பேருடன் ஜெர்மனிக்குப் போய்விடுகிறார்.
இதுவரைக்குமே கம்யூன் மீது சுமத்த ஒரு குற்றமும் அரசிற்கோ, கம்யூன் மீது அதிருப்தியில் இருந்த மக்களுக்கோ கிடைக்கவில்லை. ஆனால் நான்கரை வருடங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ரஜனீஷ் முதன் முறையாய் பேச ஆரம்பிக்கிறார்.
ஷீலாவின் மீது அடுக்கடுக்காய் குற்றங்களை சுமத்துகிறார். ஐம்பதைந்து மில்லியன் பணத்தை எடுத்துக் கொண்டு ஷீலா ஓடிவிட்டதாக சொல்கிறார். தன் தனிப்பட்ட மருத்துவரைக் கொல்லப் பார்த்ததாகவும், ரஜனீஷ்புர வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அட்டர்னி டர்னரைக் கொல்ல முயற்சித்தார் எனவும் இதெல்லாம் தனக்குத் தெரியாமல் நடந்தது எனவுமாய் சொல்கிறார்.
மீடியாக்களும், அரசும், FBI ம் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கும் உள்ளூர் அரசியலுக்கும் எதிர்ப்பாய் முளைத்த இராட்சத மரத்தை வேரோடு பிடுங்கி எறிய தங்களின் அனைத்து சக்திகளையும் அவர்கள் முடுக்கி விடுகிறார்கள்.
ரஜனீஷ் அவர்களாகப் பிடுங்கிப் போடுவதற்கு முன்பு தாமாகவே உருவான எல்லாவற்றையும் அழிக்கிறார்.
“ என்னுடைய சாராம்சமே மதங்களுக்கு எதிரானதுதான், நானே ஒரு மத அடையாளமாக மாறுவேனா? சுத்த நான்சென்ஸ் எல்லாமே ஷீலாவின் விளையாட்டு” என அவர் ஷீலா கட்டி வைத்த கோட்டையை உடைக்கிறார். ரஜனீஷ் இசம் புத்தகங்களைக் கொளுத்துகிறார்கள். அதென்ன சிவப்பு ஆடை என்கிற அடையாளம்? அதையும் அழி என உடைகளைக் கொளுத்துகிறார்கள்.
ஒரு நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதைப் போல ரஜனீஷ் நடந்து கொள்கிறார். ஷீலாவின் நம்பிக்கையாளர்களை அதிரடியாக மாற்றுகிறார். ஹசியா வின் குழாம் அதிகார வட்டங்களுக்கு உள்ளே வருகிறது. மேயரான கிருஷ்ணாவை மாற்றுகிறார்கள். எல்லாக் கட்டுக் கோப்பும் குலைகிறது.
ஷீலா மீது கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் செய்யவே FBI உள்ளே நுழைகிறது. வயர் டேப்பிங் என்கிற ரகசிய ஒலிப்பதிவு அமரிக்காவில் குற்றமாகக் கருதப்படும். அதற்கான ஆதாரத்தை FBI கைப்பற்றுகிறது. ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றுகிறார்கள். மூன்றாவதுதான் மிகப் பெரிய குற்றம். குடியேற்ற உரிமை மோசடி. இதில் ரஜனீஷின் பெயரையும் சேர்க்கிறார்கள்.
மேயர் கிருஷ்ணா அப்ரூவராக மாறுவதால் FBI ன் வேலை இன்னும் எளிதாகிறது. ஷீலாவிற்கும் ரஜனீஷிற்கும் வாரண்ட் கிடைக்கிறது. உடனே கைது செய்யும் உத்தரவையும் நீதிமன்றம் இடுகிறது.
ரஜனீஷைக் கைது செய்த நாடகம்தான் அமெரிக்கா ஆடிய மிகப் பெரிய ஆட்டம். மொத்த மீடியாவும் ரஜனீஷ் கைது நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்தது. போலிஸ் கம்யூன் உள்ளே நுழைய பயப்படுவது போல் நடித்தது. உள்ளே அனைவரும் ஆயுதங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாக்குதல் நிகழலாம் என கதைகளை கட்டிவிடுகிறார்கள். கம்யூனிற்கு பின்னால் இருக்கும் காடுகள் வழியாய் போலிஸ்காரர்கள் பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைய முயற்சிப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை.
இந்த அபத்த நாடகத்தின் உச்சம்தான் இன்னும் அபத்தம். ரஜனீஷ் தன் விமானத்தின் மூலம் கம்யூனை விட்டு வெளியேறுகிறார். தப்பிக்க முனைகிறார். FBI சிரித்துக் கொள்கிறது. வான்வழிப் படைக்கு உத்தரவுகள் பறக்கின்றன. அங்கு அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. விமானம் தரையிறக்கப்பட்டு ரஜனீஷ் கைது செய்யப்படுகிறார்.
- மேலும்
No comments:
Post a Comment