“ அவ்வளவுதானா எல்லாம் முடிந்ததா? இந்தப் பேச்சு முடியவே முடியாதென நினைத்தேன். இது மதுவிற்கான நேரம். வாருங்கள் நாம் மதுவருந்துவோம்”
கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த எனக்குமே கூட அப்படி ஒரு எண்ணம்தான் தோன்றியது. ஆனால் அதிகாலை எழ வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே, கனத்த இதயத்தைப் போர்த்திவிட்டுப் படுத்தேன்.
மா ஆனந்த் ஷீலா - நிச்சயம் இந்தப் பெயர் எனக்குப் புதிது கிடையாது. இருபதுகளிலேயே அறிந்து கொண்ட பெயர். ஓஷோவின் பேச்சுக்களின் வழியாய் ஷீலாவை அறிந்திருந்தேன். ஷீலா அமெரிக்காவில் ஓஷோவின் சரிவுகளுக்கு காரணமாய் இருந்தவர். ஓஷோ ஆசிரமத்தை மிகத் தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டவர் என்பதுதான் இதுநாள் வரைக்குமான ஷீலா பற்றிய என் அறிதல். ஆனால் இந்த ஆவணப்படம் அதை மாற்றியிருக்கிறது.
ஷீலா நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று. தவறான ஆட்களின் தூண்டுதலால் ஷீலாவின் மீது வெஞ்சினம் கொண்ட ரஜனீஷ், ஷீலாவிற்கு குழி தோண்டுவதாய் நினைத்துக் கொண்டு தானும் விழுந்தார். அதேக் குழியில் அவரை நாடி வந்தவர்களையும் விழ வைத்தார். ஆனால் ஷீலா என்கிற அற்புதம் மட்டும் தன் குருவின் மீதான தீராக் காதலுடன் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
தான் நினைத்ததை செயல்படுத்த ஷீலா கையாண்ட விதங்கள் வேண்டுமானால் சட்டத்திற்கு புறம்பாக இருக்கலாம் ( இந்தச் சட்டங்கள் என்பவையே யாரோ ஒரு சாரருக்கு சாதகமானவைதானே) ஆனால் ஷீலாவின் செயல்பாடுகளுக்குப் பின் இருந்த நோக்கங்கள் ரஜனீஷ் மீதிருந்த காதலால் அன்பால் பக்தியால் உருவானவை. அதில் என்ன பிரச்சினை இருக்க முடியும். ஷீலாவை இத்தனை வருடங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தமைக்காக இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்து விட்டு வருந்தினேன்.
0
என்னுடைய சகோதரன் வழியாய் ஓஷோ எனக்கு அறிமுகமானார். புத்தகங்கள் பேச்சுக்கள் வழியாய் மெது மெதுவாய் ஈர்க்கப்பட்டு பின்னர் ஒரு மீட்சிக்கு வேண்டி ஓஷோவின் சந்நியாசியாகவும் மாறினேன். என்னுடைய இருபத்தோராவது வயதில் திருச்சி ஆசிரமத்தில் ஸ்வாமி ப்ரேம் அய்கா என்கிற சந்நியாசப் பெயர் எனக்கு கிடைத்தது. தியானங்கள், ஓஷோ நண்பர்களுடனான பயணங்களென முழுக்கப் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஓஷோவின் பேச்சுக்களில் ’தனித்துவம்’ ’சுதந்திரம்’ ’கற்பனை’ என்கிற மூன்று விஷயங்கள் என்னைப் பெரிதும் பாதித்தன. இருபதுகளில் உள்ள ஒரு சிறுநகரத்து இளைஞனுக்கு பெரிதாய் என்ன துக்கங்கள் இருந்துவிட முடியும்? ஓஷோவின் தியானங்களும் நடனங்களும் அதைக் கரைத்தன. நான் தன்னம்பிக்கையும் ஆற்றலும் கொண்டவனாய் மாறவும் உதவின. இதோ இதையெல்லாம் இப்படி எழுத விதையாகவும் அந்த அறிதல்கள் இருந்திருக்கக் கூடும்.
இந்தப் பின்புலத்தால் ’வைல்ட் வைல்ட் கண்ட்ரி’ என்கிற ஆவணப்படத்தோடு என்னால் முழுவதுமாக கரைந்து போக முடிந்தது. இதன் ஆறு பகுதிகளையும் பார்க்கும் நாட்களில் ஆச்சர்யம் அதிர்ச்சி வியப்பு என மாறி மாறி உணர்வுகளால் அலைக்கழிக்கப் பட்டேன்.
ஷீலாவின் முதல் பேச்சிலிருந்து கடைசிப் பேச்சு வரைக்குமான ஒவ்வொரு சொல்லும் என்னை அசர வைத்தது. என்ன ஒரு ஆளுமை . என்ன மாதிரிப் பெண் இவள்! எவ்வளவு புத்திக் கூர்மை!, எவ்வளவு ஆற்றல்! என மாய்ந்து போனேன். உண்மையில் ஹாலிவுட் ஆட்களை ஓஷோ தொலைவில் வைத்திருந்தால், ஷீலாவை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இன்றைய அமரிக்காவில் பாதியை ரஜனீஷ்- இசம் கைப்பற்றி இருக்கும். கிறிஸ்துவ மதம் பெரும்பான்மையானதாக மாறி இருக்காது. அமெரிக்க வரலாறே திருத்தி எழுதப்பட்டிருக்கும்.
தன் இரும்புக் கரங்களால் உலகையே வேட்டையாடிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பெரியண்ணன்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டிருப்பார்கள். ரஜனீஷ்-இசம் ஒரு மதமாக மாறி மக்களை கொண்டாட்டத்தில் திளைக்க வைத்திருக்கும். இன்றைய முழு மூட அமெரிக்க சமூகம் உருவாகியே இருக்காது. உலகமே அமைதியாக இருந்திருக்கும். ஓஷோவின் முட்டாள்தனத்தால் எல்லாம் பாழானது.
எப்படி?
எழுதுகிறேன்.
No comments:
Post a Comment