Thursday, March 29, 2018

ஓரிதழ்ப்பூ - அமுதமொழி



ஓரிதழ்ப்பூ - அய்யனார் விஸ்வநாத் அவர்களின்  புதினம். அதன் இறுதி வடிவ நகலை அச்சுக்கு முன் படித்து   கருத்து சொல்லும்படி  அனுப்பி வைத்துள்ளார் . படித்துகொண்டிருக்கிறேன் . அகத்திய முனிவரின் தேடலும் போகனின் பதிலுமாய் தேடல் தொடரும் ஆரம்பம் திகைப்பை தருகிறது .

"கொம்பில்லா இலையில்லா காம்பில்லா ஓரிதழ் பூவாம்
கண்டு தெளிந்து உண்டு நீங்கி -நிலையில் நிறுத்து 
பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண்
யறிந்த கண்ணை சுவைத்த நாவை அறிந்தறிந்து அடைவாய் உன்மத்தம் "

இந்த பாடல் தேடலுக்கான உந்துதலாக இயக்குகிறது கதை 

ஓரிதழ்ப்பூ  -  என் பார்வையில் .

வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றி சேர்த்தே வேடிக்கை காட்டுகிறது. அதிலிருந்து தப்பித்து அவர்கள் அவர்களுக்கான இடத்தை கண்டடைய செய்யும் முயற்சிகளின் சிராய்ப்புகள் வலிகள் வேதனைகள் பரிதவிப்புகளை   எல்லாம் விரிவாய் பேச ஒரு கதையாகிறது ஓரிதழ் பூ.

தனக்குள் உரைவுற்றிருக்கும் மென்மையை எழுப்பத் தெரிந்த புரிதல் தேடி ஆண்களும் பெண்களும் இப்பிரபஞ்ச வெளியெங்கும் அன்பை தொலைத்த அகதிகளாய் அல்லலுற்று அலைவதை படிப்பவர் மனதில் அழுத்தமாய் பதிய வைக்கிறார். தன்னை தன் கதா பாத்திரங்களில் ஒளிந்துகொண்டு கதை ஆசிரியர் பேசாமால் கதை மாந்தர்களின் வாழ்க்கை நகர்வில் அதை உணர்த்திப் போவது இந்தப் புதினத்தின் சிறப்பு.

காமத்தை அதன் அகவியல் சார்ந்த நிறைவை எய்த யத்தனிக்கும் இவரது கதை மாந்தர்கள் நம்முள் நம் அருகில் எதிரில் எங்கும் வியாபிதமாகி நிறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்திப் போகிறார்.

கதையின் ஓட்டம் ஆரம்பத்தில் உள்ளே நுழைய முடியாத ஒரு சின்ன சிக்களை வைக்கிறது. கதை மாந்தர்களின் அறிமுகம் இன்னும் தெளிவான நிறைவில் நேரடியான அறிமுகத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்த நெருடல் உணராமல் சுலபமாய் கதைக்குள் ஒன்றி இருக்க முடியும் 

கதையின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் இடங்கள் புதிய சுவாரஸ்யமான பரவசத்தில் படிப்பவரை ஆழ்த்துகிறது.

மாமுனியின் ஓரிதழ் பூவுக்கான தேடல் அது பெண்ணின் அந்தரங்க உறுப்பின் கலை வடிவாய் பரிமளிப்பதை ஆசிரியர் கதை முழுவதும் தொடர்ந்து வரைந்துப் போகிறார். சில இடங்களில் அது சலிப்பையும் எட்டி பார்க்கச் செய்கிறது .

பெண்ணுடன் கூடல் என்பது உடல் தேவையின் உச்சம் என்பதை விட மனத்திருப்தி, ஆத்மா நிறைவுக்கான தாகம் என்பதான புரிதலை முன் மொழிந்து நகரும் புதினம் இறுதி பக்கங்களில் வேகமெடுத்து ஓடுகிறது . 

புத்தகத்தை தரையில் வைக்க முடியாத ஈர்ப்பை கொட்டியிரைத்து நகர்கிறது. இதோ முடிந்து விடுமோ என்ற பரவச தவிப்பை படிப்பவரின் அனுபவத்தில் விட்டுச்செல்கிறது.

துர்க்கா, அங்கையற்கண்ணி, அமுதா, மலர் எல்லாம் தங்கள் தீரா காதலின் சுதந்திர வேட்கை துரத்த துரத்த அதை கண்டடைய ஓடிய ஓட்டத்தின் களைப்பில் விடுதலை நோக்கி பயணிப்பதாக கதையை முடிக்கிறார்.
இவர் பெண் பாத்திரங்கள் தங்களின் மினுங்கலான அக அழகின் ஒளிர்வில் நிறைந்திருக்கிறார்கள். துர்காவுடன் அங்கையற்கண்ணி பயணமாகிறாள். சங்கமேஸ்வரன் எனும் குறியீட்டு வடிவின் நிஜ உருவின் அன்பில் திளைக்கிறாள் .
அமுதா தனித்தே இப்பிரபஞ்ச அழகை தேடிக்கொண்டு போகிறாள். அதில் அவளுக்குத் துணையாக அவளே போதுமென்ற நிறைவை எட்டுகிறாள்.
மாமுனி துர்காவால் அவரது மனைவி வசம் ஒப்படைக்கப் படுகிறார்.
சில மனிதர்களின் அறிமுகத்தில் நாம் தரிசணங்கள் கண்டடைந்த பரவசத்தில் சிலிர்ப்பதை துர்கா மூலம் நிகழ்த்துகிறார் . அது கேலி செய்கிறாரோ அப்படியான புரிதலை என்றும் கேள்வி எழுப்புகிறது .
இன்னுமொரு வாசிப்பில் வேறு புரிதலையும் தரலாம் இந்தப்பூ. இன்னுமொருவர் வாசிப்பில் பல் வேறு புரிதலும் வசப்படலாம் .

அனைத்தையும் கருத்தேற்று பதிப்பித்தால்  இன்னும் மெருகேறலாம் இந்தப்பூ.

நிறை நன்றியும் வணக்கமும் அய்யனார் விஸ்வநாதன். வாழ்த்துகள் .

ச. கனியமுது 
காவேரிப்பட்டினம்.

No comments:

Featured Post

test

 test