Wednesday, May 31, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினெட்டு


அங்கையற்கன்னியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் அழுகிறோம் என்பதும் அவளுக்குப் பிடிபடவில்லை. கண்களிலிருந்து நீர் வழிந்தபடியும் இதயம் விம்மியபடியும் இருந்தது. சங்கமேஸ்வரன் அவளை ஆறுதல் படுத்த முயன்று தோற்றான். பொது இடமாக இருக்கிறது, அவளை அணைத்துக் கொள்ளவும் முடியவில்லை. உள்ளங்கையை அழுத்தி அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவன் தொடத் தொட அவள் மேலும் மேலும் உடைந்து கொண்டிருந்தாள். அருகில் இருந்த சிமெண்ட் திண்டில் அவளை அமர வைத்தான். அவசரமாய் ஓடிப்போய், தியான அறைக்கு சமீபமாய் வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு வந்து குடிக்க வைத்தான். அவனும் நெகிழ்ந்திருந்தான். அங்கை சற்று நிதானமானாள். தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். எழுந்து நின்று, வாங்க போகலாம் என அவனை அழைத்தாள். எங்கு போவதென இருவருக்குமேத் தெரியவில்லை. சங்கமேஸ்வரன் எங்கு எனவும் கேட்கவில்லை.  ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தார்கள்.

அவனிடம் பைக் இருந்தது. இவள் ஏறி இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து கொண்டு அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். சங்கமேஸ்வரனுக்கு பித்து கூடியது. இந்த வாசனை மலர்ச்செல்வியின் வாசனை. வண்டியை அதன் போக்கில் விட்டான். வண்டி அரசுக் கல்லூரி தாண்டி இடது பக்கம் உள்ளே திரும்பியது. மண் சாலையில் வெயில் தகித்தது. கருங்கல் சாலையில் வண்டி துள்ளித் துள்ளி நகர்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு துள்ளலுக்கும் அங்கை அவனை இன்னும் நெருங்கினாள். சமுத்திர ஏரிக்கரை வந்திருந்தது. இருபுறமும்  மரங்களடர்ந்த ஒற்றையடிப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அடிபருத்து கிளைகள் விரித்துப் படர்ந்திருந்த ஓர் அரசமரத்தடியின் நிழலில் வண்டியை நிறுத்தினான். வெயில் பசும் இலைகளில் பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது. அரசம் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடந்தன. பறவைகளின் ஒலி ஆர்ப்பரித்தது. நெடுந்தொலைவிற்கு யாருமில்லை. அந்த ஒற்றையடிப்பாதையின்  முடிவில் சில ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஓரிரு மனிதத் தலைகள் தென்பட்டன.

அங்கை வண்டியை விட்டு இறங்கியதும் சங்கமேஸ்வரனை முன்புறமாய் தழுவிக் கொண்டாள். ஆறுதலாய் அவளை விலக்கி மரத்தின் பின்புறம் அழைத்துப் போனான். தரையில் கிடந்த சிறு சிறு முட்களை விலக்கி மண்ணில் அமர்ந்தான். அங்கை அவன் மடியில் படுத்து வயிறைக் கட்டிக் கொண்டாள். என்ன நடக்கிறதென்று அவனுக்குப் புரியவில்லை. யார் இந்தப் பெண், ஏன் இப்படித் துவண்டு தன் மீது விழுகிறாள் என்பதெல்லாம் பிடிபடாமல் இருந்தது. ஒரு வேளை.. ஒருவேளை.. மலர்செல்வியின் ஆன்மா இவளிற்குள் புகுந்திருக்கிறதோ, இதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா, இதென்ன சுத்தப் பைத்தியக்காரத்தனம் என மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.

அங்கை சற்று நிதானமானதும். அவன் மெல்லக் கேட்டான்

”உன் பேர் என்ன?”

அந்தக் கேள்வி அங்கையின் உலகத்தை சடுதியில் தரைக்கிழுத்தது. மயக்கமும் கிறக்குமாய்  வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளின் இயல்பு தடுமாறிப் போனது.

”என்ன.. என்ன கேட்ட?”

”உன் பே..ரு என்ன..?”

”அப்ப என்ன உனக்கு தெரியாதா?”

”நீ மலர்..” மென்று முழுங்கினான்

”மலரும் இல்ல கொடியும் இல்ல, நான் அங்கை. அங்கையற்கன்னி.
நான் நினைச்சேன் உன்ன பாத்த ஒடனே எனக்கு என்னலாம் ஆனதோ, அதெல்லாம் உனக்கும் ஆனதுன்னு..”

’அது.. அது’

’அப்ப என்ன பாத்ததும் உனக்கு ஒண்ணும் ஆகலையா, கடவுளே இதென்ன சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ எனச் சொல்லியபடியே அங்கை எழுந்து நின்றாள். அவசரம் அவசரமாக நான் போகனும் என்றாள்.

சங்கமேஸ்வரன் தடுமாறினான்.

”இல்ல இல்ல எனக்கு தெரிஞ்சது.. நீ ....நீ”

”நிறுத்து. போதும் போகலாம்.”

சங்கமேஸ்வரன் கோபமுற்றான்.

”ஏய் என்ன நீயா வந்து மேல உழுந்து பிராண்டுன. இப்ப போறன்ற, என்ன பாத்தா எப்படி தெரியுது..?”

அங்கையின் கண்களில் நீர் தளும்பிற்று. இவன் அவனில்லை. அவன் முகச் சாயல் மட்டும்தான் இவனிடம் இருக்கிறது

தழுதழுப்பாய் அவனிடம் சொன்னாள்.

“எனக்கு சிறு வயதிலிருந்து ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் வருபவனின் முகமும் உன்னுடைய முகமும் ஒரே போல இருந்தது. நீயும் நானும் பல யுகங்களாய் காதலர்கள் என நினைத்துக் கொண்டேன். என் இத்தனைக் காத்திருப்பிற்குப் பிறகு, துன்பங்களிற்குப் பிறகு நீ என்னிடம் வந்து சேர்ந்துவிட்டதாய் உணர்ந்தேன். எனவே உன்னிடம் தஞ்சமடைந்தேன்” என்றாள்.

சங்கமேஸ்வரன் தெளிந்தான். பின்பு குழம்பி நின்று தளும்பிக் கொண்டிருந்த அவளை நெருங்கி ஆதூரமாய் அணைத்துக் கொண்டான். மலர் செல்வியும் அவனும் காதலித்த கதையை சொன்னான். ஒரு நாள் பைக்கிலேயே ஓடிப்போனதை, மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவில் அவள் காணாமல் போனதை, இறுதியில் அவள் உடலை ஒரு புள்ளி மான் சுமந்து வந்ததை என எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

”புள்ளி மானா?” அங்கை திகைத்தாள்

”ஆமா புள்ளிமான் தான் ”

”எனக்கு வரும் கனவில் முகம் மட்டும்தான் உன்னைப் போல இருக்கும்.. உடல் புள்ளிமான் போலதான் இருக்கும்”

”அப்ப இதெல்லாமே அந்தப் புள்ளி மானின் விளையாட்டுகள்தானா?”

இருவருமே ஒரே நேரத்தில் சொல்லிச் சப்தமாய் சிரித்தார்கள்.

சங்கமேஸ்வரன் அங்கையை முழுக் காதலோடும் யுகாந்திர தொடர்புகளோடுமாய் அணைத்து உதடுகளில் முத்தமிட்டான்.
அங்கை அவனை மூர்க்கமாய் அணைத்துக் கீழே தள்ளி அவன் மீது ஆகாயத் தாமரையாய் படர்ந்தாள்.

அதுவரை சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயில் மங்க ஆரம்பித்தது. அங்கை அவன் உதடுகளைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருக்கையில் மொத்தப் பகுதியும் நடுநடுங்குமளவிற்கு அந்தக் கோடையின் முதல் இடி சப்தம் கேட்டது. சங்கமேஸ்வரன் திடுக்கிட்டு மேலே படர்ந்திருந்தவளை விலக்கிப் பார்த்தான். மேகங்கள் அடர்ந்திருந்தன. காற்றில் குளுமையும் சீற்றமும் கூடியிருந்தது.

“அங்கை மழை வரும் போல இருக்கு வா கிளம்பலாம்” என்றான்.

அவள் கோபமுற்று

“மழ வர்ரது நமக்காகத்தான் இதுகூடவா புரியல?”

 என அவன் மீது பாய்ந்தாள்.

சங்கமேஸ்வரன் புன்னைகைத்து தன்னை அவளிடம் ஒப்படைத்தான்.

மழை தொடங்கியது.

அந்த மழை, இடியும் மின்னலும் காற்றுமாய் இருந்தது. சுழன்று சுழன்று அடித்தக் காற்றில் நீர்த்துளிகள் நாற்புறமும் சிதறின. அங்கையின் புடவையைக் காற்றே அவிழ்த்திருந்தது. சங்கமேஸ்வரன் அரை உடம்போடு அவளுடன் புரண்டு கொண்டிருந்தான். மழைச் சீற்றமாய் உயர்ந்தது. ஆட்கள் வருவார்கள் என்கிற அச்சமும் அவர்களை விட்டு அகன்றிருந்தது.  ஏரிச்சரிவிலிருந்து நீர் வெள்ளமாய் வழிந்து அவர்களின் உடல்களின் மீது ஏறிப் பாய்ந்தது. உடன் அது முற்செடிகளையும் காய்ந்து ஒடிந்து கீழே கிடந்த சிறு சிறு கிளைகளையும்  கொண்டுவந்து இவர்களிடம் சேர்த்துவிட்டு உற்சாகமாய் அகன்றது. மயக்கமும் பித்தும் கூடி சங்கமேஸ்வரன் அவளிற்குள் இறங்கிக் கொண்டிருந்தான்.  அவர்களின் கலவிக்கு இடையில் செம்மண் துகற்களும் சிறு சிறு கற்களும் உரசுவதை உணர்ந்தார்கள். மொத்த இயற்கையும் அவர்களோடு கலவியது. அந்திக் கருத்து இருள் மொத்தமாய் அப்பகுதியை மூடியது. மழை மேலும் அடர அடர அப்பகுதி வெள்ளக் காடானது. இருவரும் பிரபஞ்சத்தின் துகள்களாய் மாறியிருந்தனர்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test