Tuesday, May 23, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினேழு



அகத்திய மாமுனி நேற்றிரவு துர்காவைப் பார்த்த இடத்தில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் மூன்று சிறு பாதைகள் பிரிந்தன. எதில் போவது என அறியாமல் திகைத்து நின்றார். துர்கா எந்தப் பாதையிலிருந்து வந்திருப்பாள் என்பதையும் யூகிக்க கடினமாக இருந்தது. எதிரெதிரே நின்றுகொண்டிருந்தவள் திரும்பி உடன் வந்த சிறுமியை வீட்டிற்குப் போகச் சொன்னது நினைவில் இடறியதும் தேனிமலைக்கு போகும் பாதையில் நடக்க ஆரம்பித்தார்.  தாமரை நகர் தொகுப்பு வீடுகளைக் கடந்து பிரதான தண்டராம்பட்டு சாலையை வந்தடைந்தார். இனி எங்கு போவது என குழப்பமாக இருந்தது. மணி ஒன்பதரை இருக்கும். வெயில் முற்ற ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்தனர். ஒரு சிறுவனை மடக்கி

”இது எந்த இடம்”? என்றார்

”எந்த எடம்னா? ”  சிறுவன்

”எடத்தோட பேர் என்ன?”

”இது தேனிமல, இது பார்வதி நகர், இது தாமர நகர் ”

என அனைத்து திசைகளிற்கும்  ஒவ்வொரு பெயரைச் சொன்னான். மாமுனி மேலும் குழம்பினார். அவனிடமே குத்து மதிப்பாக கேட்டார்.

”ஒரு அம்மா பெருசா பொட்டு வச்சிட்டு ஒரு சின்ன பொண்ண கூட்டிகிட்டு வருவாங்களே அவங்கள பாத்திருக்கியா?”

”அவங்க வூட்டுக்காரு சாமியாரா? ”

மாமுனி மையமாய் தலையாட்டினார்.

”இதோ இந்த ஸ்கூல் தெருவிலதான் வூடு”

எனச் சொல்லிவிட்டு ஓடிப்போனான்.

அரை நம்பிக்கையில்  சாலையைக் கடந்து பள்ளிக்கூடத் தெருவிற்குள் நுழைந்தார்.

எதிரில் வந்து கொண்டிருந்த பள்ளிப் பிள்ளைகளில் ஒரு சிறுமி இவரைப் பார்த்து தயங்கி நின்றாள்.

”ஆயாவ பாக்கவா வந்திருக்கீங்க? எனக் கேட்டாள்.

மாமுனி பரபரப்படைந்து

“ஆமா ஆமா அவங்க வீடு எங்க?” என்றார்.

”இதோ இப்படியே கொஞ்ச தூரம் போனதும் ஒரு புங்க மரம் வரும், அங்க திரும்பினீங்கனா மூணாவது வீடு. திண்ண இருக்கும்.”

என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

மாமுனிக்கு ஒரு கணம் எல்லாமும் சரியானது போல் பட்டது. இரண்டே நிமிடத்தில் வீட்டை அடைந்தார். வீடு திறந்து கிடந்தது.  உள்ளே எட்டிப் பார்த்தார். யாரையும் காணவில்லை. குரலெடுத்து அழைக்கத் தயங்கி திண்ணையிலேயே சோர்வாய் அமர்ந்தார்.
ஐந்து நிமிடத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து கையில் துடைப்பத்தோடு கலைந்த கூந்தலும் தளர்ந்த உடலுமாய் துர்கா வந்தாள்.  திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தவரைப் பார்த்துத் திகைத்தாள்.

”எப்படி வூட்ட கண்டுபிடிச்ச?”

மாமுனி அவசரமாய் எழுந்து நின்று அவளை வணங்கினார். பகலில் வேறு மாதிரி இருக்கிறாளே என மனதில் நினைத்துக் கொண்டார்.

”ஐயே கையெட்த்துலாம் கும்பிடாதே. உள்ள வா” என்றாள்

சாமிக்கு இவள் அம்மனாய் இருக்க முடியாது என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடியது. வீட்டிற்குள் வந்து அமர்ந்தார்.

”பழையது கீது சாப்புட்றியா?” என்றாள்

அவசர அவசரமாய் தலையசைத்தார்.

துர்கா ஒரு அலுமினிய குண்டானில் இருந்து சோற்றை அள்ளி எவர்சில்வர் தட்டில் போட்டுக் கொடுத்தாள். மேலே தொங்கிக் கொண்டிருந்த உரியில் இருந்த தயிர் கலயத்தை எடுத்து கெட்டித் தயிரை ஊற்றி கல் உப்பை கொஞ்சம் சோற்றில் போட்டாள்.  மாமுனி சரியாகக் கூட பிசையாமல் அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.

நல்ல பெசைஞ்சு மெதுவா சாப்டு என்றபடியே ஒரு ஈயத் தட்டில் பழைய சுண்ட வைத்த குழம்பை கொஞ்சம் ஊற்றி அவருக்காய் தள்ளினாள்.

மாமுனி நர உடல் கொண்ட நாளிலிருந்து அவ்வளவு சுவையான உணவை உண்டதில்லை. நிதானமாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டார். தொண்டை வரை நிறைந்ததும் போதும் எனச் சொல்லிவிட்டு பெரிய ஏப்பம் ஒன்றை விட்டார். எழுந்து  பின் வாசலுக்காய் போய் கை கழுவிட்டு வந்தார். அதற்குள் துர்கா ஒரு புதுப்பாயை எடுத்து தரையில் போட்டிருந்தாள்.

”தலையில அடி வேற பட்டிருக்கு படு” என்றாள்.

மாமுனியின் கண்கள் ஏற்கனவே சோர்ந்து உறங்கி விழ இருந்தன. எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டார்.

துர்கா குளிப்பதற்கு தயரானாள்.   தன் கொண்டையை அவிழ்ந்து கூந்தலை கையால் விசுக் விசுக் என அடித்தாள். கொடியில் தொங்கிக் கொண்டிருந்த உள்பாவாடையையும் பாடியையும் எடுத்துக் கொண்டு பின் வாசல் கதைவை சாத்திக் கொண்டு தோட்டம் போன்ற ஒரு சிறிய இடத்தின் மூலையில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தாள். தகரக் கதவு  இருந்தது ஆனால் மேற்கூரை இல்லாத நான்கு சுவர் தடுப்பது. அதற்குள் ஒரு சிறிய நீர் தொட்டி இருந்தது. அதில் குளுமையான நீரை நிரப்பியிருந்தாள். நிதானமாய் உடைகளை முற்றும் களைந்து விட்டு நீரின் மேல் மிதந்து கொண்டிருந்த அலுமினியப் பாத்திரத்தில் டபுக் கென சத்தம் வர நீரை அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டாள். அக்குளுமையில் ஸ்ஸ் என சப்தமும் எழுப்பினாள்.

சோர்வுற்றிருந்த கண்களை மூடிக் கொண்டாலும் மாமுனிக்கு காதுகள் திறந்தே இருந்தன.  துர்கா வின் ஸ்ஸ் சப்தமும் நீர் விழும் சப்தமும் கேட்டதும் அவருடல் கிளர்ச்சியடைந்தது. வயிறு நிறைந்திருந்ததால் சற்றுத் தெம்பாக உணர்ந்தார். காமம் சிலிர்ப்பாய் அவருடலில் எழுந்தது. அக்கணமே குளியலறைக்குள் நுழைந்து அவளைத் தழுவ விரும்பினார். ஆனால் உடன் பயமும் சேர்ந்தது. நினைவில் அவளைத் தழுவி முத்தி தரையில் கிடத்திப் படர்ந்தார். நிஜத்தை விட இந்தக் கனவு இன்னும் கிளர்ச்சியைத் தந்தது. மாமுனி முதன் முறையாய் அவருடலும் மனமும் ஏற்படுத்தும் அதிசயங்களையும் இன்பத்தையும் உணர்ந்தார். கிட்டத்தட்ட காமத்தில் ஈடுபடும் சுகத்தையும் பரவசத்தையும்  நினைவே தந்தது. மேலும் அந்நினைவில் நுழைந்தார். குறி கிளர்ந்து விறைத்து எழுந்தது. மேலும் மேலும் நினைவில் காமத்தின் உச்சியைத் தொட்டார்.  ஸ்கதலிதப் பிசுபிசுப்பும் நிறைவும் சோர்வும் ஒருங்கே மண்டி ஆழமானத் தூக்கத்தினுள் விழுந்தார்.

குளித்து விட்டு வந்த துர்கா உடை மாற்றிக் கொண்டு, குண்டானில் மீந்து கிடந்த பழைய சோற்றை நீராகாரமாய் குடித்துவிட்டு முன் கதவை ஒருக்களித்து சாத்திவிட்டு பூக்கூடையை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்குப் போனாள்.

வீட்டின் அமைதி மாமுனியை இன்னும் ஆழமானத் தூக்கத்திற்கு இழுத்துப் போனது. பல வருடங்களாய் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்த எல்லாமும் சாந்தமடைந்து விட்டிருந்தது. அவர் இனி அறிய வேண்டிய மானுட உண்மைகள் எதுவுமில்லை.

மாமுனி விழிந்தெழுந்த போது ஒளி மங்க ஆரம்பித்திருந்தது. வீட்டில் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அதுவரை இல்லாத நிதானமும் அமைதியும் அவருக்கு கிடைத்திருந்தது. எழுந்து கொண்ட மாமுனி மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்தார். கதவை முழுவதுமாய் சாத்திவிட்டு நடக்க ஆரம்பித்தார். பள்ளிப் பிள்ளைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தான் திரும்ப வேண்டிய வீடு குறித்த அச்சம் மெல்ல அவர் மனதில் படர்ந்தது. மலைக்குப் போய் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ரமணரிடம் சொல்லிக் கொண்டு அகத்தீஸ்வரம் போய்விடலாம் என முடிவெடுத்தார். நல்ல வேளையாக அவள் அம்மனில்லை. அந்தக் குடிகாரன் போகராகவும் இருக்க முடியாது. அந்தப் பூவும் இதில்லை. இது எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஊழ்வினை. சாபம் என்பது தான் மட்டுமே இடுவது என நம்பிக் கொண்டிருந்தவர் அவர். இத்தனை அலைக்கழிப்புகளுக்கும் காரணம் வேறொருவரின் சாபமாகத்தான் இருக்கக் கூடும் என முதன் முறையாய் நம்பினார்.

எதிரே நிமிர்ந்து பாத்தார். மலை அகலக் கால் பரப்பி சம்மணமிட்டு அமர்ந்திருப்பது போல் அத்தனை பிரம்மாண்டமாய் அமர்ந்திருந்தது. இந்நகரின் வேறெந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் இத்தனை அழகாய் இம்மலை தோன்றவில்லை. இந்த இடம்தான் மலையின் முழு அழகையும் காணத் தந்தது. மாமுனிக்கு உள்ளே ஏதோ உடைவது போல் தோன்றியது. தாம் தேடி அலைந்த ஓரிதழ் பூ இம்மலைதானோ. எப்போதும் பூத்திருக்கும் நித்தியப் பூ இம்மலையாகத்தான் இருக்கமுடியும். மாமுனிக்கு எல்லாமும் தெளிந்து வந்தது. உள்ளில் ஏதோ ஒன்று நிறைவடைந்தது. இதுதான் எல்லாமும். இயற்கையின் ஓரிதழ்ப்பூ அண்ணாமலைதான். இதுவே நித்தியமும். மாமுனி அப்பிரம்மாண்டத்தை விழுந்து வணங்கினார். இனி அவருக்கு எங்கு போவது என்பது குறித்த குழப்பங்கள் ஏற்படாதவாறு இப்பிரம்மாண்டம் பார்த்துக் கொள்ளும்.

மாமுனிக்கு ஒரே ஒரு முறை துர்காவைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு வரலாமா என்கிற எண்ணம் தோன்றியது. உடனே தலையை வேகமாய் அசைத்து தனக்குத் தானே மறுப்பு தெரிவித்துக் கொண்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test