Pirates of the Caribbean திரைப்பட வரிசையை நான் பார்த்ததில்லை. இப்போது வெளிவந்திருக்கும் அதன் ஐந்தாம் பாகம் குறித்து நண்பர்கள் இணையத்தில் பேசிக் கொண்டதை வாசித்ததும் பார்க்கத் தோன்றியது. முதலில் இருந்து ஆரம்பிக்க எண்ணி இவ்வரிசையின் முதல் படமான The Curse of the Black Pearl ஐ நேற்றுப் பார்த்தேன். அரை மணி நேரம் கடந்தும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. இடையில் நிறுத்திவிடலாமா என்றும் கூட தோன்றியது. எதையும் உடனே முடிவெடுத்துவிடக் கூடாது, ஒன்றுமில்லாமலா ஐந்து பாகம் வரை வந்திருக்கும் என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பார்த்தேன். ஒரு மணி நேரம் கடந்தும் ஒரு விஷயம் கூட உள்ளே போகவில்லை. கடனே என்று பார்த்து முடித்தேன். எந்த ஆழமான பின்புலக் கதையுமில்லாமல், வியப்பூட்டும் கற்பனையுமில்லாமல் எப்படி இந்தப் படம் தொடர்ந்து எடுக்கப்படுகிறது என்பது விளங்கவில்லை. ஒருவேளை கேம் ஆஃப் த்ரோன் தந்த மயக்கத்தில் இருந்து நான் இன்னும் விடுபடாததால் இந்த மேலோட்டமான ஃபேன்டஸி படங்கள் ஈர்க்கவில்லையோ என்னவோ. இத்தனைக்கும் கதாநாயகியான கெய்ராவைக் குறித்து இரண்டு நாட்கள் முன்னர்தான் வியந்து எழுதியிருந்தேன்.
கேப்டன் ஜாக் ஸ்பேரோ ஓர் அதிநாயகன் கிடையாது. கோமாளித்தனமான சாகஸங்களும், அங்கும் இங்குமாய் தாவுவதும் நாயக பிம்பத்தைக் கட்டமைக்கவில்லை. டர்னரிடம் கொஞ்சம் வீரம் இருப்பதுபோல் தோன்றினாலும் இருவருமே எதையும் சாதிப்பதில்லை. பின்புலக் கதையோ அரதப் பழசு. மொத்த குழுவினரும் மறை கழண்ட கேசுகளைப் போன்ற தோற்றம் எழுந்தது. ஒருவேளை இந்தக் கேணைத்தனம்தான் இத்தொடரின் சிறப்போ என்னவோ. நாயகி மட்டும் கொஞ்சம் தமிழ்த்தனத்தோடு வில்லன்களிடம் இருந்து - அதுவும் சாகா ‘வரம்’ பெற்றவர்களிடமிருந்து - தன்னைக் காத்துக் கொள்ள பழக்கத்தியை எடுத்து மறைத்து வைத்துப் பயன்படுத்துகிறார். மனதிற்குள் அடேய் என்கிற குரல் எழுந்து அடங்குகிறது.
பைரேட்ஸ் களின் சாகஸ வாழ்வைக் குறித்துச் சொல்ல ஏராளம் இருக்கிறது. கடற்பேய்கள் இவ்வளவு பரிதாபமாகவா இருக்கும். நிச்சயமாக நான் ஃபேண்டஸி படங்களில் லாஜிக்கைத் தேடவில்லை. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஆன்மா அல்லது மெனக்கெடல் என்ற ஒன்று இருக்க வேண்டும்தானே, அது இதில் இல்லை.
ஜானி டெப் நடிப்பில் வெளிவந்த 'அரிஸோனா ட்ரீம்ஸ்' எனக்கு மிகப் பிடித்த படம். எமீர் கஸ்தூரிகா உருவாக்கிய ஆக்ஸல் என்கிற கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாகப் பொருந்தியிருப்பார். போலவே 'சார்லி அண்ட் சாக்லேட் ஃபேக்டரி' படத்தில் வரும் வில்லி வோன்கா கதாபாத்திரமும் எப்போதும் நினைவில் நிற்பவை. துரதிர்ஷ்டவசமாக ஜானி டெப் இந்த பைரேட்ஸ் வரிசைத் திரைப்படங்களில்தான் வெகுசன புகழடைந்திருக்கிறார். நடிகருக்கான அதிகபட்ச சம்பளமும் இத்திரைப்பட வரிசைக்காக அவர் பெற்றிருக்கிறார்.
மொத்த வரிசையையும் பார்க்காமல் இப்படி தீர்ப்பெழுதக் கூடாதுதான் என்றாலும் முதல் படத்தையே பார்க்க முடியவில்லையே நான் எப்படி மற்ற படங்களைப் பார்ப்பேன். மொத்த படத்திலும் என்னை ஈர்த்த விஷயம் பார்போஸோ வின் குரங்கு மட்டும்தான். அத்தனைக் கூட்டத்திலேயும் அக்குரங்கு மட்டும்தான் அவ்வளவு விழிப்பாக இருந்தது. டர்னாரால் நீரில் மூழ்கியும் கண்டுபிடிக்க முடியாத மெடலினை, குரங்கு அசால்டாக வாயில் கவ்விக் கொண்டு வந்து பார்போஸாவிடம் சேர்த்துவிடுகிறது. அபாரமான குரங்கு.
இந்த ஹாலிவுட் சாகஸ்ப் படங்களின் மீது எனக்கு எப்போதுமே விருப்பமிருந்தது கிடையாது. மனதளவில் பேணும் தூய இலக்கியத்தைப் போலவே சினிமாவையும் தூயதாகக்
கருதுபவன். அப்படியும் ஓரிரு படங்களைப் பார்த்து அதில் ஒன்ற முடியாமல் போய் இப்படிப் புலம்புவதுண்டு.
Fast & Furious இன்னொரு ஒன்றமுடியாத டப்பா பட வரிசை. கருமம் இது எப்படி எட்டு பாகம் வருகிறது என வியந்து கொள்வதுண்டு. சிறுவர்களுக்கான திரைப்படமான cars வரிசைப் படங்கள் FF வரிசைத் திரைப்படங்களைக் காட்டிலும் பன் மடங்கு மேலானவை. மெக் குயின் எனப் பெயரிடப்பட்ட அந்தக் கார், ஓர் அபாரமான கதாபாத்திரமாகவே மாறியிருக்கும். இந்த திரைப்படங்களில் இருக்கும் புத்துணர்வும் விரிவான பார்வையும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களில் இல்லை.
அடுத்தடுத்த பாகங்களாக எடுக்கப்படும் சிறுவர் திரைப்படங்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தமானவை. டாய் ஸ்டோரி வரிசையிலிருந்து ஹாரி பாட்டர் திரைப்பட வரிசை வரைக்குமாய் பலமுறை இத்திரைப்படங்களை சேர்ந்து பார்த்து குடும்பம் சகிதமாய் வியந்திருக்கிறோம்.
பெரியவர்களுக்கான சாகஸப் படங்கள் தான் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதுவும் கேம் ஆஃப் த்ரோன் போல விரிவும் ஆழமான பின்னணியும் அபாரமான நுட்பமும் கொண்ட தொடரைப் பார்த்த பின்னர் சாகஸப் படங்களுக்கான எதிர்பார்ப்பின் எல்லை சற்று விரிவடைந்திருக்கிறது.
என்னை ஏமாற்றாத சில தொடர் வரிசைப் படங்களில் மேட் மேக்ஸ் முக்கியமானது. இத்தொடரின் சமீபத்திய படமான Fury Road ஐப் பார்த்துப் பிடித்துபோய் அதன் முந்தைய படங்களை வரிசையாய் பார்த்து முடித்தேன். இத் தொடரின் தீவிரத் தன்மை எல்லாத் தரப்பையும் ஈர்க்கும் ஒன்று. ஜார்ஜ் மில்லர் புறவயமான காட்டுத்தனமான விஷயங்களை மட்டும் உருவாக்குவதில்லை, ஒவ்வொரு திரைப்படமும் ஒரு முக்கியமான அரசியலைப் பேசுவதால் இத் தொடர் வெகுசன விஷயங்களைத் தாண்டியும் கவனம் பெறுகிறது. சாகஸப் படங்களில் உள்ளீடாய் இருக்க வேண்டிய அம்சமும் அதுதான்.
No comments:
Post a Comment