Tuesday, May 9, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதினைந்து

சாமிநாதன் பெரிய மஞ்சள் பை ஒன்றுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். என்றாவது ஒரு நாள் இங்கிருந்து போய்த்தான் ஆக வேண்டும் என்பதை அறிந்தே இருந்தான். ஆனால் அது ஏன் இத்தனை சடுதியில் நிகழ வேண்டும் என்பதை நினைக்க நினைக்கத்தான் ஆற்றாமையாக இருந்தது. ஒரு மரத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் வேரோடு பிடுங்கிப் போட்டதைப் போலிருந்தது. பதினைந்து வருடங்கள் வாழ்ந்த  இடமிது, குடிசையாகவே இருந்தாலும் அவன் வாழ்ந்த வீடு. பழகிய மனிதர்கள், மரம் செடி கொடி எல்லாமும் இன்று காலை முதல் அவனுக்குச் சொந்தமானதில்லை என்பதை  அவனால் நம்ப முடியவில்லை.  மனித வாழ்வின் மிக முக்கியமானவை முதல் இருபத்தைந்து வருடங்கள்தாம். மிகத் தூய்மையான அந்த இளம் பிராயத்தை சாமிநாதன் இந்த வயதான ஜோசியருக்கு அர்ப்பணித்திருந்தான். கடைசி வரை அவர் ஒன்றுமே இவனுக்குச் சொல்லித் தரவில்லை. இவனாய் கைக்கு கிடைத்த பஞ்சாங்கங்கள், அவரின் பழைய நோட்டுப் புத்தகங்களைத் திருட்டுத்தனமாய் படித்து மோடாமொத்தமாய் சிலவற்றைத் தெரிந்து கொண்டான். எதனால் இன்று காலை இவனை வெளியேறச் சொன்னார் என்பது எத்தனை யோசித்தாலும் பிடிபடவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோசியம் கேட்க வந்தவர்களிடமும் இப்படித்தான் விநோதமாக நடந்து கொண்டார் . வயதானால் இப்படித்தான் புத்தி பிசகிவிடுமோ என்னவோ. ஜோசியம் கேட்க வந்தப் பெண்ணை நினைத்த மாத்திரத்தில் சாமியின் உடல் தகித்தது. எப்பேர்ப்பட்ட பெண்ணவள். எதற்காக இந்த ஜோசியர் அவளை ஒரே ஒரு கணம் மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து  வெளியேறச் சொன்னார் என்பது இன்னும் பிடிபடவில்லை.  ஒருவேளை ஜோசியர், தான் அவள் நினைவாகவே இருப்பதை தெரிந்து கொண்டிருப்பாரோ  அதற்காகத்தான் தன்னையும் வெளியேற்றினாரோ என்கிற எண்ணம்  வந்து போனது. ஆனால் அடுத்த கணமே இருக்காது, எண்ணங்களையெல்லாம் தெரிந்து கொள்ள அவரென்ன கடவுளா என தன்னைச் சமாதானம் செய்துகொண்டான்.

சாமிநாதனுக்கு பெண்ணுடல் லட்சுமி வழியாய் அறிமுகமானது. பதினைந்து அல்லது பதினாறு வயதில் கிணற்றில் குளிக்கிற சாக்கில்,  அவளறியாமல் அவளின் குறுமுலைகளை உரசிப் பார்த்துக் கொள்வான். விளையாட்டுத் தருணங்களில் ரகசியமாய் அவள் உடலைத் தொட்டுப் பார்த்து அப்போதுதான் விழித்திருந்த காமத்தை மெல்ல வளர்த்தான்.  அவன் நினைவில் எப்போதும் லட்சுமியே இருந்தாள். தினமும் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அவள் மாடுகளை ஓட்டிக் கொண்டு ஏரிக்கரைக்கு வந்துவிடுவாள். பின்னாலேயே சாமியும் அவள்  தின்பதற்கு எதையாவது எடுத்துக் கொண்டு சாணியள்ள ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு வந்து சேர்வான். இப்போதெல்லாம் சாமி மாடு மேய்க்க வரும் பயல்களுடன் விளையாடுவதை நிறுத்தி விட்டிருந்தான். சதா லட்சுமியோடு சுற்றிக் கொண்டிருந்தான். அவளோடு மண்ணில் கோடுகளைக் கீறி ஆடுபுலி ஆட்டமோ அல்லது புளியங்கொட்டை ஆட்டமோ விளையாடுவான். ஏரிக்கரைச் சரிவில் நாவல் பழம் பறிக்க, கொடுக்கலிக்காய் பறிக்க இருவரும் சேர்ந்து போவார்கள். மரத்தின் மீது ஏற்றி விடும் சாக்கில் அவளைத்  தொட்டுப் பார்த்து விடுவான். முலைகள் அவன் மீது உரசும்போதுதான் அவனுக்குத் தீப்பற்றிக் கொண்டதைப் போலிருக்கும். ஓரிரு வருடங்கள் வரை அவன் தைரியம் அதுவரைதான்  அவனை அனுமதித்தது.

லட்சுமிக்கு காமம் இன்னும் விழித்திருக்கவில்லை. அவள் சிறு பெண்ணாக, கள்ளம் கபடம் இல்லாமல் அவனுடன்  பழகினாள். சாமிக்கு எப்படியாவது அவளிற்கு முத்தம் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.  நாட்பட நாட்பட முத்த எண்ணம் புணர்ச்சிக்கு கூட்டிப் போனது.  எப்போதும் நினைவில் அவளின் மேல் விழுந்து புரண்டு கொண்டிருந்தான். சம்பவங்களை உருவாக்கி அதன் முடிவில் அவள் தன் மேல்  விழுவதாகவும், தான் உடனே அவள்  உடைகளைக் களைவதாகவுமாய் அவன் பகற் கனவுகள் நீண்டு கொண்டிருக்கும்.

 லட்சுமி மேலும் களையாக, அழகானவளாக அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தாள். அவன் வயதையொத்த பயல்களுடன்  லட்சுமி குறித்து ரகசியமாய் பேசிக் கொள்வான். அவள் தன்னைக் காதலிப்பதாகவும் ஆலமரத்தடிக்குப்  பின்னால் வரச் சொல்லித்  தன்னை எப்போதும் கூப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் அடித்து விடுவான். லட்சுமி குறித்து அறிந்த பயல்கள் அவனை நம்ப மாட்டார்கள். போடா ஆண்டி, என அவனை கிண்டலடித்துவிட்டு ஓடிவிடுவார்கள். அப்போதெல்லாம் சாமிக்கு இன்னும் வெறியேறும்.

ஒரு முத்தம் கொடுத்துவிட்டால் மடங்கி விடுவாள் என இன்னொருவன் சொன்னதைக் கேட்ட நொடியில் அவன் மனதில் ஒரு திட்டம் மெல்ல உருவானது. சாமி அதற்கு மேல் பொறுமையற்றவன் ஆனான். எப்படியாவது அந்தத் திட்டத்தை செயல்படுத்தி விடும் முனைப்பில் இருந்தான். சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

ஒரு மாலையில் ஏரிக்கரையில் லட்சுமி தனியாக இருந்தாள்.  மேற்கில் சூரியன் விழுந்துவிட்டது. மாடுகள் மேய்ச்சலை முடித்திருந்தன.  சாமி வீட்டிற்குப் போவதாய் அவளிடம் சொல்லிக் கொண்டு முன்னரே கிளம்பி வழியில் இருக்கும் பெரிய ஆலமரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். லட்சுமி மாடுகளை ஏரிச்சரிவிலிருந்து வீட்டிற்கு விரட்ட ஆரம்பித்தாள். ஏரிக்கரை சரிவில் இரண்டு பெரிய ஆலமரங்கள் இருந்தன. அதைத் தாண்டினால் இடுப்பளவிற்கு புதர் மண்டியிரு க்கும். அதைக் கடந்துதான் ஊருக்குள் செல்லும் மண்பாதைக்குப் போக வேண்டியிருக்கும்.

அவள் அப்புதரைக் கடக்கும்போது  சாமிநாதன் வெளிப்பட்டான். லட்சுமி இங்க வரியா என அழைத்தான்.

“என்னா சாமிநாதா நீ இன்னும் வூட்டுக்கு போவலயா” என்றபடியே அவனை நோக்கி வந்தாள். அன்று லட்சுமி  வெளிர் நீல தாவணி அணிந்திருந்தாள். கழியை வீசி மாடுகளை விரட்டியிருந்ததால் மாராப்பு ஒதுங்கி ஜாக்கெட்டில் முலை துருத்திக் கொண்டு அவனையேப் பார்ப்பது போலிருந்தது. நெருங்கியவளின் மீது
சற்றும் தாமதிக்காமல்  பாய்ந்தான். அதை ஒருபோதும் எதிர்பாராதவள் நிலைகுலைந்து கீழே விழுந்தாள். சாமி மேலே படுத்து அவள் முலைகளைப் பிசைந்தான். லட்சுமி அலறினாள். தன் வாய் கொண்டு அவள் வாயைப் பொத்தினான். அவசர அவசரமாக அவள் பாவாடையை மேலேற்றினான். அன்று அவள் உள்ளாடை  அணிந்திருக்கவில்லை. அவன் உடையைக் களைவதற்குள் சுதாரித்துக் கொண்ட லட்சுமி  பலங்கொண்ட மட்டும் அவனைப் பிடித்து கீழே தள்ளினாள். எழுந்து நின்று அவன் அடிவயிற்றில் ஒரு எத்து விட்டாள்.

“அட எச்சக்கல நாயி யார்கிட்ட வச்சிக்கிற?”

 என இறைந்தவள், ஆத்திரம் அடங்காது மாடு மேய்க்க வைத்திருந்த நீண்ட கழியால் அவனை அடித்து நொறுக்கினாள் . வலி தாங்க முடியாமல் எழுந்து ஓட ஆரம்பித்தான். ஆத்திரமும் கோபமும் மிக, சுற்றி முற்றிக் கீழே பார்த்தவளுக்கு வாகாய் ஒரு கருங்கல் கிடைத்தது. அதை எடுத்து அவன் தலையைக் குறிபார்த்து வீசினாள். நல்ல கூரான கருங்கல் ’னங்’ கென அவன் மண்டையைப் பதம் பார்த்தது. ரத்தம் வழிய வழிய நிற்காமல் ஓடினான்.

பின்னும்  ஆத்திரம் தீராத லட்சுமி தன் உடைகளை சரிசெய்து கொண்டு

”தேவிடியாபையா நாளைக்கு வர்ரண்டா உன் வூட்டாண்ட, மவன செத்தடா நீ”

எனக் கத்தியபடியே காற்றில் கழியை வீசிக்கொண்டு முன்னால் போன மாடுகளை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தாள்.

மூச்சு வாங்க ரத்தகாயத்துடன்குடிசையை அடைந்த சாமிநாதனை ஜோசியர் பார்த்து, உடனடியாக வெட்டுகாயச் செடியின் தழையைப் பறித்து  அரைத்துக் கட்டினார். என்னாயிற்று எனக் கேட்டதற்கு கீழ விழுந்துட்டேன் எனச் சொல்லி சமாளித்தான்.

அன்று முழுவதும் சாமிநாதன் பயத்தில் வெளிறிப் போய் கிடந்தான். இரவில் தூக்கம் சுத்தமாய் வரவில்லை. தலை வேறு விண் விண் என வலித்துக் கொண்டிருந்தது. எப்படியும் நாளைக் காலை லட்சுமி அவள் சொந்தக்காரர்களை கூட்டி வந்து விடுவாள். தலைகீழாகக் கட்டி தொங்கவிடுவார்களோ அல்லது போலிஸில் பிடித்துக் கொடுத்து விடுவார்களோ என்றெல்லாம் எண்ணிப் பயந்து கொண்டிருந்தான். நள்ளிரவில் எழுந்து போய் ஜோசியர் பூஜை செய்யும் கடவுள் படங்களுக்கு முன் நின்று மனம் உருக வேண்டிக் கொண்டான். இனி செத்தாலும் இப்படி ஒரு தவறைச் செய்யமாட்டேன். இந்த ஒரு முறை மட்டும் காத்து ரட்சி தேவி என மனமுருக துர்க்கை அம்மனை வேண்டிக் கொண்டான்.

அடுத்த நாள், ஒன்றும் அசம்பாவிதமாக நிகழவில்லை. சாமிநாதன் குடிசையை விட்டு வெளியே போகவே இல்லை. காலை முதல் மாலை வரை வீட்டில் இருந்த வேலைகளை செய்து கொண்டிருந்தான். எருமட்டை நிறைய சேர்ந்து கிடந்ததால் ஜோசியரும் அவனை ஒன்றும் கேட்கவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் கூட சாமி குடிசையை விட்டு நகரவில்லை. அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். பயம் அவனை விட்டு அகலாதிருந்தது.

நான்கு நாட்கள் கழித்து எருமட்டை தீர்ந்துவிட்ட பின்பு சாணியெடுக்கப் போயே ஆக வேண்டும். தயங்கியும் பயந்துமாய் வீட்டை விட்டு வெளியேறி ஏரிக்கரைக்குப் போனான். நுணா மரத்தடியில் லட்சுமியும் வழக்கமாய் மாடு மேய்க்க வரும் பாட்டியும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். இவன் அவசர அவசரமாய் போய் அங்கங்கே கிடந்த சாணக் குவியலை அள்ளி கூடையில் போட்டுக் கொண்டான். அந்தப் பாட்டி இவனைப் பார்த்து

”டேய் சாமிநாதா இங்க வா” எனக் கூப்பிட்டது,

காதில் விழாதவன் போல அவசர அவசரமாய் கூடையை நிரப்பி எடுத்து தலையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தவனை லட்சுமியின் ஏய் சாமி என்கிற குரல் நிறுத்தியது.

அசையாமல் கூடையோடு கல் மாதிரி நின்றான். லட்சுமியே எழுந்து அவனருகில் வந்தாள். அவனைப் பார்த்து குறும்பாய் புன்னகைத்தபடியே. தலையில அடி ஜாஸ்தியா எனக் கேட்டாள். முறைத்து விட்டு நகரப் பார்த்தவனை தடுத்து நிறுத்தினாள்.

“எங்கூட்ல மட்டும் சொல்லியிருந்தேன் மவனே இன்னிக்கு நீ இங்க இருந்திருக்க மாட்ட, ஒழுங்கு மரியாதயா நடந்துக்க இனிமே, சரியா?” என்றாள்.

சரி எனும் விதமாய் அவசர அவசரமாய் தலையாட்டினான்.

“சரி போ”  எனச் சொல்லி விட்டு மரத்தடிக்காய் திரும்ப நடக்க ஆரம்பித்தாள்.

சாமிநாதனுக்கு அப்போதுதான் உயிர் வந்தது. நான்கு நாட்களாய் அரண்டு போய் கிடந்தவனுக்கு சிரிப்பு வந்தது. தேவிடியா இருடி உன்ன வச்சிக்குறேன் என மெல்ல மனதிற்குள் கறுவிக் கொண்டான். அதோடு சாமிநாதனின் பதின்மம் முடிவிற்கு வந்தது.

 பஞ்சாங்கத்தை தினம் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். ஜோசியர் இன்னும் தளரவே சமையல் பொறுப்பும் அவன் மீது  விழுந்தது. அவ்வளவுதான் அடுத்த எட்டு வருடங்கள் அவனால் குடிசையை விட்டு நகரமுடிந்ததில்லை. எப்போதாவது சினிமா பார்க்க அல்லது ஊர் திருவிழாவிற்கு மூங்கில் துறைப் பட்டு போய் வருவதோடு சரி. அவன் வயதையொத்த பயல்களின் சகவாசமும் மொத்தமாய் விட்டுப் போயிற்று.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, கனவில் நினைத்துக் கொள்ளக்கூட பெண் பிம்பங்கள் இல்லாத இளம் பருவமாய் இருந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் வந்தாள். அன்று கார்த்திகை தீபம்.  நேற்று இரவிலிருந்தே நல்ல மழை வேறு. அதிகாலையில் மழை சற்று விட்டிருந்தது. ஜோசியர் அந்த மழையிலும் வழக்கம்போல் எழுந்து குளித்துவிட்டு எட்டு மணி வண்டிக்கு திருவண்ணாமலை போக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர்கள் வந்தனர். அந்தப் பெண் கருமாரியம்மன் சிலை போன்ற நிறமும் உடற்கட்டும் கொண்டிருந்தாள். அதிகாலையிலேயே குளித்திருக்க வேண்டும், மஞ்சள் பூசி சாந்து பொட்டு வைத்திருந்தாள். பார்க்க பார்க்க அவனால் கண்களை அவள் மீதிருந்து எடுக்க முடியவில்லை. உடன் வந்த வயதானவர் ஜோசியரைப் பார்க்க வேண்டும் எனச் சொன்னபோது அமரச் சொல்லிவிட்டு குடிசைக்குப் பின்னால் போய் நின்று கொண்டான். மறைவாக இருந்து கொண்டு அவளையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி ஒரு பெண்ணை இதுவரையும் இனிமேலும் பார்க்க முடியாது என்ற எண்ணம் தோன்றியது. திருமணம்தான் அவர்களின் பிரச்சினை என்றதும் அவனுக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதுமில்லாததாய் ஜோசியர் அவர்களைப் பார்க்கவும் மறுத்து விட்டார். அவர்களை அனுப்பி விடச் சொல்லி அவனிடம் சொன்னார்.

அந்தப் பெண் தான் அவனிடம் விலாசத்தைக் கொடுத்தாள். குரலில் அவ்வளவு திண்மை. கோவில் மணி ஒலியைப் போல பேசினாள். தேவபாண்டலம்தான். அதிகபட்சம் அரை மணி நேரத்தில் போய்விடக் கூடிய ஊர். அவர்கள் போன பின்பு சாமிக்கு அவள் மீதான பித்து இன்னும் கூடியது. அறியாப் பருவத்தில் லட்சுமியின் மீது வந்த மையல் எல்லாமும் இப்போது நினைவிற்கு வந்தது. இரண்டு நாட்கள் அவள் நினைவாகவே கிடந்தான்.

இன்று காலை ஜோசியர் அவன் பெயர் சொல்லி அழைத்தார். அவர் பெயர் சொல்லி அழைப்பது அபூர்வம். யோசனையாய் சென்றவனிடம் ஒரு கட்டு பணத்தை கையில் திணித்தார். துணிமணிகளை எடுத்துக் கொண்டு புறப்படச் சொன்னார். எங்கே என திகைப்பாய் கேட்டவனிடம் எதுவும் சொல்லாது குடிசைக்குள் போய் சாமிப் படங்களின் முன் கண் மூடி அமர்ந்துவிட்டார். சிலையாய் சில நேரம் நின்றவன். மெல்ல தன் உடைகளைத் தேடி எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

பேருந்து எதுவும் வரும் வழியைக் காணோம்.  சாமி நாதன் சட்டைப் பையைத் தடவினான். ஒரு பேப்பர் கையில் கிடைத்தது.  அந்தப் பெண்ணின் விலாசம். சாமிநாதனுக்கு உடல் ஜிவ்வென்றானது. கையில் பணம் வேறு இருந்தது. போய்த்தான் பார்ப்போமே என்ற எண்ணம் உதித்தது. சுற்று முற்றும் பார்த்தான். மஞ்சு ஒயின்ஷாப் என்கிற போர்ட் கண்ணில் பட்டது. ஒரிருமுறை பியர் குடித்திருக்கிறான். திருவிழா சமயத்தில் ஊருக்குள் வரும்போது அவன் செட்டுப் பயல்களோடு குடித்து அதன் சுவை பிடிக்காமல் போகவே தொடராதிருந்தான். இன்று ஏனோ குடிக்க வேண்டும் போல் இருந்தது. நேராய் கடைக்குள் போனவன். அங்கிருந்த பழைய உடைந்த சேரில் உட்கார்ந்தான். என்ன என்று கேட்ட பையனிடம் ஒரு பீர் என்றான். காலையில் குளுமையாய் பீர் அவன் வயிற்றில் இறங்கியதும் அவன் வேறொரு ஆளானான்.

சட்டைப்பையிலிருந்த விலாசத்தை மீண்டும் படித்தான். அருகில் இருந்தவரிடம் பாண்டலத்துக்கு எப்ப பஸ்ஸு என்றான். பன்னண்டுக்கு வள்ளிசெல்வன் வருவான் என்றார். ஒரு பீர் முடிந்திருந்தது. உலகமே தெள்ளத் தெளிவாய் ஆனது போல இருந்தது. தள்ளாட்டமாய் எழுந்து கொண்டவன் 12 பணி பஸ்ஸைப் பிடித்து தேவ பாண்டலம் என்கிற கிராமத்தில் இறங்கினான். பஜனைக் கோவில் தெரு எதுவென அங்கிருந்த டீக் கடையில் விசாரித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். மிகச் சிறிய ஊர். அந்தத் தெருவில் கடைசி வீடு. கொஞ்சம் உயரமான கூரை வீடு. இரண்டு பக்கமும் சாணத்தால் மெழுகிய   திண்ணை இருந்தது. வாசலில் அகலமாய் கோலம் போட்டிருந்தது. கதவு லேசாக ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. சாமி வெளியில் நின்றபடியே பெரியவரே எனக் கூப்பிட்டான். அந்தத் தெரு கனத்த மெளனத்திலிருந்தது. ஒரே ஒரு மனிதத் தலையைக் கூட காணவில்லை. எல்லோரும் வயல் வேலைகளுக்கு போய்விட்டிருக்கக் கூடும். பதில் வராமல் போகவே வீட்டிற்குள் நுழைந்து கதவைத் தள்ளினான்.

அந்தப் பெண் நடு வீட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு தலைவாரிக் கொண்டிருந்தாள். இவனுக்கு சற்றுத் திக் கென்றானது. ஏதோ சொல்ல வாயெடுத்தவனை உள்ள வாங்க என்ற அவளின் வெண்கலக் குரல் தடுத்து நிறுத்தியது. உள்ளே போய் அமர்ந்தவனை சாப்புட்ரீங்களா எனக் கேட்டாள். தலையாட்டினான். உள்ளே போய் ஒரு அகலத் தட்டில் பழைய சோற்றைப் போட்டு நிறைய மோர் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அரைப் போதை சுத்தமாய் தெளிந்திருந்தது. நல்ல பசி வேறு, சோற்றை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தான். அவள் அவ்வளவு நிதானமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிந்ததும். சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். தட்டிலேயே கைக் கழுவிக் கொள்ளச் சொன்னாள். அவன் பொம்மையைப் போல அவள் சொன்னதைச் செய்தான். தட்டை உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு திரும்பி வந்து வாசல் கதவை அழுத்திச் சாத்தினாள். அவனுக்காய் திரும்பி நின்று அவனை ஆழமாய் பார்த்தாள். சாமி  பயமும் தடுமாற்றமுமாய்எழுந்து நின்றான். சிவப்பு நிறப் புடவை அணிந்திருந்தாள். அன்று போலவே மஞ்சள் பூசிய முகத்தில் வட்டமாய் சாந்து பொட்டு. சாமியின் இருபத்தைந்து வருட இளம் காமம் சடாரென தலைக்கேறியது. ரத்தம் ஓட்டம் குபீரென அவன் உடம்பில் தாறுமாறாகியது அவள் மீது பாய்ந்தான். அவள் அவனை ஏந்திக் கொண்டாள்.

- மேலும்

No comments:

Featured Post

test

 test