’ஆன்ட்டி க்ரைஸ்ட்’ படத்தின் வழியாகத்தான் லார்ஸ் வோன் ட்ரையரின் உலகத்திற்குள் நுழைந்தேன். அது தந்த அதிர்ச்சியும் துக்கமும் வெகு நாட்கள் நீடித்திருந்தன. அடுத்ததாக ’ப்ரேக்கிங் த வேவ்ஸ்’ இவ்வளவு பைத்தியத் தன்மையும் துக்கமும் காதலில் இருக்க முடியுமா என என்னை அரற்ற வைத்தது. எமிலி வாட்ஸன் என்கிற நடிகையின் ஒரே மகத்தான படமாக இதுவே அமைந்தது. ’இடியட்ஸ்’ - டாக்மி 95 தியரி அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் போர்னோ அடிப்படையில் கூட என்னைக் கவரவில்லை. கூட்டுக் கலவி, நிர்வாணத்தின் சுதந்திரம் போன்றவை ஐரோப்பாவில் தேய்ந்த ஜானர்கள். ’டிண்டோ ப்ராஸ்’ மாதிரியான ஜாம்பவான்கள் கோலோச்சிய தளம். இது லார்ஸ் வோன் ட்ரையரின் படமில்லை என்கிற எண்ணமே இடியட்ஸ் பார்த்த பிறகு தோன்றியது. டாக்மி தியரிப்படியே டைரக்டர் க்ரெடிட் டும் இடியட்ஸ் படத்திற்கு கிடையாது. போலவே ’டாக்வில்லே’ படமும் தலைச் சுற்றலைக் கொண்டுவந்தது. அவ்வளவு நவீனமான திரைமொழி. நவீன ஸ்டேஜ் ட்ராமாவாகவும் புரிந்து கொள்ள முயன்று தோற்றேன். லார்ஸ் வோன் படங்களைத் திரும்பப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றக் காரணமாக இருந்ததும் இப்படத்தின் புரிந்து கொள்ள முடியாதத் தன்மைதான்.
’டான்சர் இன் த டார்க்’ திரைப்படம்தான் லார்ஸ் வோனின் சாதனைப் படம் என்பேன். அவரின் மற்ற படங்களின் ஒப்பீட்டளவில் இதுவே அகதி அரசியலை மிக நேரடியாகப் பேசியது. ’நிம்போமேனியாக்’, ’மெலன்கோலியா’ போன்ற படங்கள் வதையின் உச்சம். குறிப்பாகப் பெண்ணுடலின் கிளர்ச்சியையும் வலியையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டன. ஐந்து மணி நேர நிம்போமேனியாக்கை ஒரே அமர்வில் அயராது பார்த்து முடித்தது என் தனிப்பட்ட சாதனை.
த எலிமெண்ட் ஆஃப் க்ரைம், ஈரோபா போன்ற திரைப்படங்களும் கிங்க்டம் உள்ளிட்டத் தொலைக் காட்சித் தொடர்களும் இன்னும் பார்க்க வேண்டியுள்ளன. ஒரே இயக்குனரின் மொத்த படங்களையும் தொடர்ச்சியாகப் பார்ப்பது நிஜமாகவே தனி அனுபவம்தான். தற்சமயம் இவரின் ஆழமானப் படங்களைக் காணும் மனநிலையும் வாய்த்திருக்கிறது. பிடித்ததில் இருந்து ஆரம்பிப்போமே என ’டான்சர் இன் த டார்க்’ திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்தேன். இரண்டாம் முறை பார்க்கும் போது முதல் தடவை பிடிபடாத அமெரிக்க அரசியல் பார்வைகள் துலங்கின. விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
No comments:
Post a Comment