Saturday, June 14, 2008

சிலேபிக் கதைகள்


கொன்றை மரங்களிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த பூக்களின் பன்னீர்துளிகள் உலர்ந்து கொண்டிருக்க, இன்றைய காலையின் முதல் சிகரெட்டினைப் பற்றவைத்தேன். நேற்றைய பொழுதின் சிந்தனைகளினூடே மெல்லப் புகையினை உள்ளிழுக்க இருமல் வந்தது. ஒரு தேனீர் அருந்தினால் இதமாக இருக்குமெனத் தோன்ற பார்வையை உட்புறமாகத் திருப்பியபோது திரும்பிய விழிகளை பின் பக்கமாய் திருப்பியது அவளின் வெளிர் நீல உடை. அவளிடம் இன்று பேசிவிடலாமா? ......நேற்றைய பொழுதின் சிந்தனைகள் மீண்டும் துவங்கின. நேற்றென்றும் சொல்ல முடியாது எப்போதுமிருக்கின்றன இச்சிந்தனைகள். ஆனால் சொல்லத் தெரியாத ஒரு தயக்கமும் கூச்சமும்
விரவியிருக்கிறது. இது தயக்கமும் கூச்சமும் மட்டும்தானாவென யோசிக்கையில் அவள் என் மீது கொண்டிருக்கும் நம்பகத் தன்மைகளை குலைக்க விரும்பாத என் அச்சமும் நினைவில் வந்து போனது. அவளாக தெரிந்துக்கொள்ளும் வரை பேசாமலிருப்பதே உசிதமென்ற முடிவுக்கு வந்தேன் கடைசி புகையை உள்ளிழுத்தபடியே. நேசத்தை பிரியங்களைச் சொல்லாமலிருப்பதை விட இம்சையானது வேறெதுவுமிருக்காது.இது மிகுந்த சோர்வை வரவழைத்து விடுகிறது. செய்ய எதுவுமற்றவனின் வீணான விழைவென்றோ மிகக் கடுமையாய் கடந்து போகும் இந்நாட்களின் தணிவுகளுக்கான முயற்சியென்றோ நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்வீர்களேயானால் உங்களின் மீது உமிழவும் தயாராய் இருக்கிறேன். இந்தத் தீவிரத் தன்மைக்கான காரணங்களையும் உங்களிடம் சொல்ல விருப்பமாகத்தானிருக்கிறது ஆனாலும் காரணங்கள் மூலமாக என் நேசத்தை கட்டமைப்பது அபத்தமாக படுவதால் அவற்றைத் தவிர்க்கிறேன் அவளிடம் வேறொன்றையும் சொல்லாமல் தவிர்த்ததைப்போல் .......

இது போல அபத்தமாக கதை எழுத சலிப்பாயிருக்கிறது....படிக்கும் உங்களை
உற்சாகமூட்ட ஒரு கவிதை எழுதட்டுமா? வேண்டாம்....அது கதையை விட அதிபயங்கர சலிப்பை தந்துவிடக்கூடும். வேறென்ன செய்ய?..ஒரு பாட்டு
பாடட்டுமா?..குத்து பாட்டு பிடிக்குமா உங்களுக்கு? ஆனால் என் கொடுமையான குரலில் நான் பாடி நீங்கள் கேட்டு....அதுவும் வேண்டாம்.என் அத்தை நிறைய கதை சொல்லுவாள்....அதில் ஒரு கதை திரும்ப திரும்ப அவள் குரல் தீண்டாமலே ஒலித்ததுண்டு என்னுள். அதை இப்போது சொல்லுகிறேன்... உங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட என்னவெல்லாம் செய்து தொலைய வேண்டியிருக்கிறது பாருங்கள் :(

ஜான்வின்னு ஒரு பொண்ணு அவளுக்கு பதினேழு வயசா இருந்தப்ப ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து ஒரு கால் நசுங்கிப்போச்சு. ஒருவழியா தேறிவந்ததும் காலேஜ் போகமாட்டேனிட்டா. சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிச்சு பரிசோதிக்கப்பட்டபின்புதான் இன்னொரு விஷயமும் தெரிய வந்துச்சு. அவளுக்கு புற்றுநோய். அவளோட பெற்றோர்கள் இத அவளுக்கு தெரியப்படுத்தாம இருந்தாங்க. ஆனா ஜான்வி எத பத்தியும் கவலப்படலை. இருக்கிற காலத்துக்கு சந்தோசமா வாழ்ந்து செத்திடனும்னு முடிவு பண்ணா.3மாசம் கழிச்சு தீடீர்ன்னு ஒரு நாள் கல்லூரிக்கு போய் மீண்டும் படிக்கனும்னு ஆசைப்பட்டா. அடுத்த நாளே கல்லூரிக்கு கிளம்பினா.ராதாவ தெரியுமா உங்களுக்கு...அவ செம அழகு.. அவ கண்கள மட்டும் பாத்திட்டே இருக்கலாம்... அத்தன அழகு... அவ பேச்சுல ஒரு வசீகரம் இருக்கு...இதுக்கு காரணம் அவ பேச்சுல இருக்க குழைவா...இல்ல அவ குரலா....பேசற விஷயங்களா...இல்ல எல்லாம் சேர்ந்த காரணமான்னு தெரில...இருக்கலாம்.அவளும் நானும் ஒண்ணா படிச்சோம்.

ஜான்வி காலேஜிக்கு போனான்னு சொன்னவுடனே எனக்கு ராதா நினைவு வந்திடுச்சி... படிக்கிற உங்கள குழப்பறேனா? மன்னிச்சிடுங்க... சரி இப்போ என் அத்தை சொன்ன கதைக்கு வரேன். அதுக்கு முன்னாடி....நான் போறவழியில அந்த ரெண்டாவது சந்து திரும்பற இடத்துல இருக்க குள்ள மரத்துல இருந்து ஒரு நாளுக்கு சராசரியா எத்தனை பூ உதிருதுன்னு
கணக்கெடுத்திருக்கீங்களா நீங்க? அப்படி உதிரும் பூக்கள் தோராயமா எத்தன கால்கள்ல மங்கிவிடும் முன்பாக மிதிபடுதுன்னு தெரியுமா உங்களுக்கு? இத ஏன் சொல்றன்னா பூ மிதிபடுறத தாங்கிக்க முடியாதவங்களால மட்டும்தான் இந்த கதய சரியா உள்வாங்க முடியும். உங்களில் யாருக்காச்சும் அந்த மன நிலை இல்லனா தயவுசெய்து இதுக்கு மேல படிக்காதீங்க. தொடர்ந்து படிக்கலான்னு முடிவு செஞ்சவங்க பின்னனியில மடோனாவோட bad girl பாட்ட போட்டு கேட்டுக்கிட்டே படிங்க. ஏன் சொல்றேன்னா இந்த கதை எனக்கு எவ்ளோ பிடிக்குமோ அதே அளவு அந்தப்பாட்டும் பிடிக்கும்.கதயே சொல்லாம ஏன் இப்படி சுத்தி வளைக்கிறேன்னு கடுப்பானிங்கன்னா சாரி பாஸ்/பாஸீ எனக்கு அந்த கதை மறந்து போச். கததான் மறந்துப்போச்சே தவிர....எனக்கு உங்ககிட்ட பேச இன்னும் நிறைய இருக்கு. இப்ப இந்த பேருந்து என்ன எங்க அழைக்கிட்டுப்போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா?.....ஜான்வியோட இறுதி சடங்கிற்கு.

இறுதி சடங்கின்னவுடனே அதிர்ச்சியா இருக்கா..மொதல்ல இந்த சாவுக்கு பயப்படறத நிறுத்துங்க... சாவு ஒரு சப்ப மேட்டர் அப்படீன்னெல்லாம் நான் உளரமாட்டேன். நீங்க பயப்படறத நிறுத்திட்டீங்கன்னா...அப்படியே எப்படி பயப்படாம இருக்கனும்னு எனக்கும் கத்துக்கொடுத்துடுங்க. ஏன்னா எனக்கு சாவுன்னா ரொம்பவே பயம். தினகரன்னு ஒருத்தன் சாவுக்கு பயந்து.. பயந்து.. தேடி.. தேடி ..சாவுன்னா இன்னான்னு கண்டுபுடிச்சிட்டான்.. செம ஆள் அவன். உதிர்தல், பிரிதல், மறித்தல், நீங்குதல்......இதெல்லாம் என்னன்னு புரியுதா உங்களுக்கு? அட ரொம்ப சிம்பிளா சொல்ல போனா சாவுங்கிறது இடைவெளி தாம்பா அப்படீன்னு சொல்லிட்டு சொன்னவனும் செத்துப்போயிட்டான். இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க நமக்கு தான் பயம் போக மாட்டேங்குது.

சரி ஜான்விக்கு போவோம் அப்படீன்னு தோனினாலும்...செத்த மூதேவிங்கள பத்தி நமக்கு என்ன பேச்சு.....கடகட்டுவோம்... போய்வாங்க. கிளம்பறத்துக்கு முன்னாடி இன்னொன்னும் தெரிஞ்சிக்கிட்டு போங்க....நானும் இன்னைக்கு சாகப்போறேன்.

நானும் நண்பி ஒருத்தியும் எழுதியது ..எந்த முன் முடிவுகளும் இல்லாது, மய்யக் கருத்தென ஒன்று இல்லாது, போகிற போக்கில் கதைகளை உருவாக்க முடியுமா? என்கிற பேச்சின் நீட்சி இதை எழுத வைத்தது.அவளொரு வாக்கியமும் நானொரு வாக்கியமுமாய் எழுதிய வடிவம் இது.நெடுநாட்கள் ட்ராப்டில் இருந்த இதை இப்படி பெயரிட்டு வெளியிட தோன்ற காரணமாயிருந்த வலையுலக நட்புகளுக்கும் தொடர் விளையாட்டுகளுக்கும் நன்றி..
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...