Saturday, June 7, 2008

மீண்டும் ஒரு காதல் கதை


அறிமுகம் / சிலாகிப்பு

என் பெயர் தமிழ்செல்வன்.நான் தமிழ்செல்வி என்றொரு பெண்ணைச் சந்தித்தேன்.என்ன பொருத்தம் பாருங்கள்! தமிழ்செல்வன்/செல்வி.இந்தப் பெயர் ஒற்றுமைக்காகவே அவளைப் பிடித்துப் போனது.தமிழ்.. தமிழ்...என கூப்பிடலாம் நீங்களும் ஒருமுறை கூப்பிட்டு பாருங்களேன் தமிழ்,தமிழ்,தமிழ்,தமிழ்..நன்றாக இருக்கிறதல்லவா! இதுதான்..இதுதான.. அவளின்பால் என்னைப் பைத்தியமாக்கத் தூண்டியது.சரி விடுங்கள் பெயர் ஒருபுறம் இருக்கட்டும் அவளின் நிறத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்..அவள் மாநிறமெல்லாம் இல்லை,கருப்பு,நல்ல கருப்பு,அழகான கருப்பு.கருப்பான வட்டமான முகத்தில் வெண்மை நிற வரிசைப் பற்கள் எத்தனைக் கிளர்ச்சி தெரியுமா! நாள்தோறும் நீங்கள் தவிர்க்கவிடும் அழகு பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியமானது.எதுவெல்லாம் அழகு, சிறந்தது, மேன்மையானது என சொல்லப்பட்டு வந்ததோ அதை முற்றாகப் புறக்கணியுங்கள்.இந்த தமிழெழுத்து உருவான கணத்திலிருந்து இந்த கணம் வரை நாமனைவரும் அழகு குறித்தான சரியான புரிதல்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை.சொல்லப்போனால் மிக வன்மையாய் இந்த எழுத்துக்களால் பழிவாங்கப்பட்டு வந்திருக்கிறோம்.சரி விடுங்கள..இது குறித்துப் பிறகொரு முறை பேசுவோம்.நானொரு காதல் கதையை எழுதத் தொடங்கினேன்.ஆகவே அதனைத் தொடர்கிறேன்.குறைந்தபட்சம் தலைக்கு மேலே வானமிருப்பதையாவது உணர்ந்திருக்கிறீர்களா?இல்லையெனில் உங்களால் அவளைக் காதலிக்கமுடியாது.வானம் நீலநிறமென்பதை ஒத்துக்கொள்ளும் நபரா நீங்கள்? அப்படியெனில் உங்களாலும் அவளைக் காதலிக்க முடியாது.மலர்களை முத்தமிடுவது, அதிகாலையில் எழுவது, வேம்பூக்களை நுகர்வது போன்ற பழக்கங்கள் இருக்குமெனில் நீங்கள் ஆபத்தானவர்கள்.ஒருவேளை எனக்குப் போட்டியாய் நீங்களும் அவளை காதலிக்க கூடும்.

சந்திப்பு / முதல் தருணம்

மலை சுற்றும் வழியிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போகும் வழியில்தான் அவளைச் சந்தித்தேன்.வெயிலின் தகிப்பில் மினுமினுத்த கொன்றை மரங்களின் கீழ் நடந்து வந்துகொண்டிருந்த பிற்பகலில் அவள் என்னைக் கடந்து போனாள்.
நான் திசைமாற்றித் தொடர்ந்து போனேன்.புகழ் தியேட்டர் சந்தில்தான் அவளின் வீடு.மலை சுற்றும் வழியிலிருந்து புகழ் தியேட்டர் எவ்வளவு தூரம் என்பதை என் ஊரைப் பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.திங்கட்கிழமை பச்சையம்மன், செவ்வாய் கருமாரியம்மன், புதன் ரமணர் விசிறி ஆசிரமங்கள், வியாழன் தட்சிணாமூர்த்தி, வெள்ளி அண்ணாமலையார், சனி ஆஞ்சநேயர் என எல்லா நாட்களிலும் ஒரு கோயில். எல்லா கோயில்களுக்கும் நடந்துதான் போவாள்.எத்தனை தூரம் நடந்தாலும் அவளுக்கு வியர்த்து நான் பார்த்ததில்லை.பூக்களுக்கு வியர்ப்பதில்லை எனவெல்லாம் என்னால் எழுதித்தொலைக்க முடியாது என்பதினால் அவளின் அழகு மற்றும் இன்ன பிற க்களின் வர்ணிப்புகளை மிகவும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அதற்காக 'ரா'வான ஒரு காதல் கதை என நீங்கள் பழித்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

காதல் மொழிதல் /ஒளறிக் கொட்டுதல்

ஒரு பெண்ணிடம் போய் காதலிக்கிறேன் என சொல்வதெல்லாம் எத்தனை அபத்தம். தயங்கி, பயந்து, விழுங்கி, தடுமாறி, ஏங்கி, கனவி, கடேசியாய் ஒளறி,.... சரி விடுங்கள் இப்போது இருவரும் காதலிக்கிறோம் அவ்வளவுதான். அவள் தினம் கோயிலில் மெனக்கெட்டு வேண்டிக் கொண்டதெல்லாம் ஒரு நல்ல புருசன் வாய்க்கத்தானாம்.ஊரில் உள்ள கோயில்கள் மட்டுமல்லாது வெளியூர் உள்ளிட்ட கோயில்களையும் அவள் விட்டு வைக்கவில்லை அத்தனை அம்மன் கோயில்களிலும் மஞ்சள் கயிற்றை மரத்தில் கட்டி வைத்திருக்கிறாளாம்.திருமணத்திற்கு பிறகு எல்லாவற்றையும் நான் போய் அவிழ்க்க வேண்டுமாம்.என்ன கொடும சார்! நான் ஒரு மாதம் பழகிவிட்டு அப்புறம் எஸ் ஆகி விட்டேன்.ஒரு மாதத்தில் எண்பத்தி இரண்டு முத்தங்கள்.மூன்று முறை மேலோட்டமான ஸ்கலித வெளியேற்றம், விதிர்த்த துடிப்பு அவ்வளவுதான். எந்த ஒன்றினையும் ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவது அல்லது அதிலிருந்து வெளியேறிவிடுவது அல்லது தீவிரமான விதயங்களில் தொடர்ச்சியாய் ஈடுபடாமல் தப்பிப்பது இதுவே என் மகிழ்ச்சியான வாழ்வினுக்கான அடிப்படை ரகசியம்.

கதையில் நவீன மசாலாக்களைச் சேர்த்தல்1 - கதைசொல்லி கதாநாயகியிடம் சொன்னது

மன்னித்து விடு தமிழ்! நீ இந்த நிலைக்கு வந்தமைக்கு நானும் ஒரு காரணம்.இந்த இடத்தில் உன்னை எதிர்பார்க்கவில்லை.உனக்கிருந்த அழகிற்கு என்னை விட சிறந்தவன் எவனையாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்வாய் இருப்பாய் என நம்பிக்கொண்டிருந்தேன்.ஆனால் ஏன் ஏன் ஏன் தமிழ்?.இந்த நொடியில் என்னை மாய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.உன் வாழ்வில் நான் கடந்து போன பிறகு என்ன நிகழ்ந்தது என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை.இதை தேர்ந்தெடுக்கும் எல்லாருக்குமான காரணங்கள் மிக குரூரமானது என்பதையறிவேன்.இருப்பினும் நானிப்போது கையறு நிலையிலிருக்கிறேன்.உன்னோடு சேர்ந்து வாழ நான் தகுதியானவனில்லை என்பதினால் மட்டுமே உன்னை இந்நிலையிலிருந்து மீட்க முடியாதவனாயிருக்கிறேன்.மேலதிகமாய் உன்னை இங்கிருந்து பெயர்த்துச் சென்றாலும் உனக்கு மூன்றுவேளை உணவளிக்க முடியுமா என்பது சந்தேகமே.என்னுடைய உணவிற்கே சில நாட்கள் வேட்டு வைத்துவிடுகிறேன்.உனக்கு தெரியுமா தமிழ்? எனக்கு வேலை என்கிற வழக்கத்தின் மீது மிகுந்த வெறுப்புகள் இருக்கின்றன.எந்த ஒரு நிறுவனத்தையும், நிறுவனமயமாதலையும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.களவு,கொலை இவற்றுக்கான உடல் தகுதியும் எனக்கில்லை.அதுவுமில்லாமல் இயல்பிலேயே நானொரு பயந்தாங்கொள்ளி.பெண்களை மட்டுமே வீழ்த்தத் தெரிந்த வீரன்.ஆகவே இத்தருணத்தில் என்னால் முடிந்தது உன்னோடு இந்த போதை வெளிறிப் போகாதவரை பேசிக் கொண்டிப்பது மட்டும்தான்.நீ பேசு, ஏதாவது கேள் , கன்னத்தில் அறை, காறி உமிழ், என் கழுத்தை நெறித்து உன் கோபங்களைத் தீர்த்துக்கொள்.எப்போது வெளியில் போகச் சொல்லுகிறாயோ அப்போது போய் விடுகிறேன்.

கதையில் நவீன மசாலாக்களைச் சேர்த்தல் 2 - கதாநாயகி் சொன்னது

என் பிரியத்திற்குரிய கதைசொல்லி என்னை நீயொரு பிற்பகலில் கொன்றை மரங்களடியில் சந்தித்ததாய் சொன்னாய்.என்னைப் பொருத்தவரை உன் பதிமூன்றாம் வயதிலிருந்து உன்னை எனக்குத் தெரியும். எட்டாம் வகுப்பு அ பிரிவிலிருந்து பத்தாம் வகுப்பு சி பிரிவு வரை நீயும் நானும் ஒன்றாய்த்தான் படித்தோம்.எனக்கான முதல் கிளர்வுகளைத் தந்தவன் நீ! உனக்கான என் காத்திருப்புகளாய்த்தான் நான் அய்ந்து வருட வாழ்க்கையை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.எந்த ஒன்றினுக்கான காத்திருப்புகளும் வீண்போவதில்லை என்பதுபோல் நீயென்னைக் கண்டறிந்தாய.ஆனால் நான் உனக்குள்தான் இருந்தேன் என்பது உனக்கு இந்த நிமிடம் வரை தெரியாமல் இருந்துவிட்டது பாரேன!!.அந்தத் தருணங்களில் எனக்கேற்பட்ட அலைக்கழிப்புகளிலிருந்து என்னை மீட்டெடுக்க அங்கங்கே இருந்த சிலைகளை நம்பிக்கொண்டிருந்தேன.வேறெந்த வழிகளும் அப்போதெனக்கு தெரியாமல் இருந்துவிட்டது.உனது முத்தங்களில் முழுமையடைந்த அல்லது விழிப்படைந்த என்னுடைய தாமதமான பெண்மை தனக்கான அபரிதங்களில் மூழ்கிப்போனது.நீ என்னை துரோகித்திருந்தாலும, ஒளிந்துகொண்டிருப்பினும் என் வாழ்வில் நீயொரு முக்கியப் பங்கு.உன்னை எப்போதுமென்னால் வெறுக்க இயலாது.இந்த கணத்தில் எதைத் தேடி இங்கு வந்தாயோ அதை முழுமையாய் எடுத்துக்கொள்.உனக்காய் மட்டுமான சிறப்பான தயாரிப்புகள் என்னிடம் ஏதுமில்லை.இது எல்லாருக்குமான ஒன்று.உன்னிலிருந்து ஆரம்பித்தது.இன்று உன்னோடு மட்டும் முடிந்துபோனால் எனக்கான முழுமை போன்ற ஒன்றினை நான் ஒருவேளை அடையலாம்.

கதையில் டுவிஸ்ட்

கதை சொல்லி:நீ எப்படி என்னுடன் படித்திருக்கமுடியும்?நான் படித்தது ஆண்கள் பள்ளி..
கதாநாயகி :ஆம் அப்பொது என் பெயரும் தமிழ்செல்வன் தான். சே.தமிழ்செல்வன்.

புகைப்படம்: http://www.comm.unt.edu/histofperf/pmp1.gif
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...