Tuesday, September 11, 2007

அல்பசினோ Vs ஷாரூக்கான்

ஆலிவர் ஸ்டோனின் எனி கிவன் சண்டே(ANY GIVEN SUNDAY-1999) படத்தை வெகு நாட்களுக்கு முன்பு பார்த்திருந்தேன்.நேற்று சித்தார்த்துடன் சக் தே இந்தியா படம் பார்த்தபோது அல்பசினோவிற்கும் ஷாரூக்கானுக்குமான ஒற்றுமைகளை யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு விளையாட்டு அணியின் பயிற்சியாளர் பணி மிக மிக சிக்கலானது.விளையாட்டின் வெற்றி தோல்விகள் நாடு,கவுரவம், தேசப்பற்று (நம்மைப் பொறுத்தவரை நம்முடைய தேசப்பற்றை தோற்று விட்டு வரும் விளையாட்டு வீரர்களிடம்தான் காண்பிப்போம்) சார்ந்து இருப்பதால் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் விளையாட்டை அதன் சுதந்திரத்தோடு வீரர்களால் விளையாட முடிவதில்லை.உணர்ச்சிகளின் இடையூறு வந்துவிடும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் குறைந்து போகிறது.இந்த சமயத்தில் ஒரு பயிற்சியாளரின் பணி முக்கியப் பங்கு வகிக்கிறது.எனி கிவன் சன் டே, சக் தே இந்தியா திரைப்படங்கள் பயிற்சியாளரை முன் வைக்கிறது.அவர்களின் தனித்திறமைகள் வெற்றிக்கு எத்தனை பக்க பலமாய் இருக்கும் என்பதை இரண்டு படங்களும் பேசுகிறது.


மியாமி ஷார்க் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்(கோச்) அல்பசினோ.இருபது வருடங்களாக (அந்த அணி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து) அவர்தான் கோச்.அவரின் உணர்ச்சிகரமான பேச்சுகளும் விளையாட்டு வியூகங்களும் வெகுவாய் போற்றப்படுபவை.அந்த அணி உரிமையாளர் இறந்த பிறகு அவரது மகள் கேமரூன் டையாஸ் பொறுப்பிற்கு வருகிறார்.டையாஸின் அத்துமீறல்கள்,அணி வீரர்களுக்கிடையேயான அரசியல்,விமர்சகர்களின் குத்தல்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு அந்த அணியை முன்னனியில் கொண்டு வருவதற்காக உழைப்பவராய் அல்பசினோ.வெகு நேர்த்தியான நடிப்பு, உடைந்த குரலில் சத்தமாய் பேச யத்தனிக்கும் காட்சிகளில் மனிதர் அசத்துகிறார்.ஆலிவர் ஸ்டோன் படங்களைப் பொறுத்தவரை படத்தில் வேகத்திற்கு எவ்வித குறையும் இருக்காது.பரபரப்பாய் ஒரு காட்சியை எடுக்க இவரிடம் கற்றுக் கொள்ளலாம்.சிறந்த உதாரணம் JFK.

அல்பசினோ வின் உற்சாகமூட்டும் புத்துணர்வூட்டும் வசனங்கள் இந்த படத்தின் முக்கிய ப்ளஸ்..SEE IT BEFORE DO IT நேரடியான மிக முக்கியமான தாரக மந்திரம் விளையாட்டைப் பொறுத்த வரை இதுதான்.



ஷிமிட் அமீன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சக் தே இந்தியா படம் இந்திய சூழலில் மாறுபட்ட ஒரு படம்.லகான் தான் முன்னோடி என்றபோதும் மகளிர் ஹாக்கியை களமாய் தேர்ந்தெடுத்ததிற்கு பாராட்டியே ஆக வேண்டும்.பதினாறு பெண்களை தேர்வு செய்த குழுவிற்கு பிரத்யேக பாராட்டு அத்தனை பெண்களும் அட்டகாசமாய் பொருந்துகின்றனர்.எனக்கு மிகவும் பிடித்திருந்த துரு துரு பெண் கோமல் செளதாலா என்ற கதாபாத்திரத்தில் வரும் சித்ராஷி ரவாட் என்கிற பதினேழு வயதான இந்த பெண்தான்.தேசிய அளவில் விளையாடிய ஹாக்கி வீரர் என்பதும் இந்த கதாபாத்திரம் மிளிர காரணமாய் இருந்திருக்க கூடும்.

ஷாரூக்கானின் நடிப்புத் திறமைகளை கண்டெடுத்த சொற்பமான படங்களில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.இறுக்கமான முகத்தோடு கொந்தளிப்பான கதாபாத்திரம் ஷாரூக்கானுக்கு (திக்கி திக்கி பேசாதிருப்பது மிகப்பெரிய ஆ(மா)றுதல்)ஒரே ஒரு கோல் தவறியதற்காக தோல்விக்கு தள்ளப்பட்ட அவமானத்தை சந்திக்க நேர்ந்த கபீர் கான் கதாபாத்திரம் ஷாரூக்கானுக்கு ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டு வரும் ஷாரூக்கான் மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்கிரார்.ஒற்றுமை இல்லாத பெண்களிடமும் எவ்வித லட்சியங்களுமில்லாத அசோசியேசனிடமும் கிடந்து அல்லாடுகிறார்.பெண் சார்ந்த பிரச்சினைகள், பெண்ணினால் உருவாகும் பிரச்சினைகள், உற்சாகமே இல்லாத அணி என ஷாருக்கானுக்கு சவாலான பிரச்சினைகள் அதிகம்.எல்லாம் மீறி ஜெயிப்பது சுகம்.

ஹாக்கி என்ற விளையாட்டு முற்றிலுமாய் புறக்கணிக்கப் படுவதின் கோபங்கள்.மகளிர் விளையாட்டு என்றாலே எழும் எள்ளல்கள்களுக்கான எதிர்ப்பை சரியாய் பதிவித்திருக்கிறார் இயக்குனர்.தன்னம்பிக்கையை புகுத்துவதென்பது சிரமமான பணி அதற்கான தாரக மந்திர சொற்களெதுவும் இப்படத்தில் பயன்படுத்தாது ஒரு குறை.மிகக் கடுமையாக நடந்து கொள்ளும் கோச்சாக மட்டும்தான் ஷாரூக்கான் சித்தரிக்கப்படுகிறார்.இருப்பினும் பெண் என்றால் மட்டமா என்கிற தொணியில் வீரர்களின் உணர்ச்சிகளை தூண்டி வெற்றி பெறுவது மிக இயல்பான மற்றும் சிறப்பான யுக்தி.விளையாட்டைத் தவிர வேறெதும் திணிக்காததும் நேர்கோட்டில் படத்தை கொண்டு சென்றிருப்பதும் பாராட்டப்பட வேண்டியது.

இறுதியில் இந்திய அணி ஹாக்கி உலககோப்பையை வென்று வருவது சினிமாத்தனமாய் இருந்தாலும் கைத்தட்டத்தான் தோன்றிற்று.

4 comments:

மஞ்சூர் ராசா said...

இரண்டு படங்களின் விமர்சனங்களும் கச்சிதம்.

நாகை சிவா said...

//விளையாட்டைத் தவிர வேறெதும் திணிக்காததும் நேர்கோட்டில் படத்தை கொண்டு சென்றிருப்பதும் பாராட்டப்பட வேண்டியது.

இறுதியில் இந்திய அணி ஹாக்கி உலககோப்பையை வென்று வருவது சினிமாத்தனமாய் இருந்தாலும் கைத்தட்டத்தான் தோன்றிற்று. //

பார்க்க வேண்டும் என முடிவு செய்தாச்சு நண்பா....

The last king of Scotland பாத்துட்டேன், அந்த ஆளோட நடிப்ப பார்த்து அதிர்ந்துட்டேன்...:-)

கோபிநாத் said...

\\இறுக்கமான முகத்தோடு கொந்தளிப்பான கதாபாத்திரம் ஷாரூக்கானுக்கு (திக்கி திக்கி பேசாதிருப்பது மிகப்பெரிய ஆ(மா)றுதல்)\\

சூப்பர சொன்னிங்க அய்ஸ்...பாடத்தில் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும்.

சரி இந்த படத்தையும் முடிஞ்ச பாருங்க http://www.coachcarter.com/movie.htm

Jazeela said...

என் நண்பர் படம் பார்த்து வந்து சொன்ன அதே வார்த்தை //இறுதியில் இந்திய அணி ஹாக்கி உலககோப்பையை வென்று வருவது சினிமாத்தனமாய் // ஆனா அவர் கைத்தட்டவில்லையாம் :D

Featured Post

test

 test