Wednesday, September 19, 2007

அவநம்பிக்கைகளை எழுதுதல்



"அவநம்பிக்கையை, மறுப்பை எனது நிலைப்பாடாகக் கொண்டிருப்பவன் நான். அதுவே எனது முற்போக்கான அம்சமெனக் கூறிக்கொள்ளலாம்"
“பதில்களே இல்லாத கேள்விகளை, தீர்வுகளே இல்லாத பிரச்சினைகளைக் கொண்டிருக்கிற நாட்களே மகிழ்ச்சியானவை"
-போத்ரியா
--------------- 01 ----------------------
இன்றைய நாள் ஒரு பழகிய நாய்குட்டியைப் போன்று வாலசைத்து நகர்கிறது

நாளையும் சாதுவான பூனைக்குட்டியைப் போலத்தான் இருக்கும்

நேற்றைய பொழுது சாம்பல் நிற அணிலின் சாயல்களில் கடந்துபோனது

பேண்ட்டில் புடைத்து கொண்டிருக்கும் மணிபர்சில் என் தேவைகளுக்கான பணம் விழித்திருக்கிறது

இன்னும் பார்ப்பதற்கு பத்து திரைப்படங்களும் படிக்க முப்பது புத்தகங்களும் மீதமிருக்கிறது

அதற்க்குப்பின் படிக்க/பார்க்க எவையெவை என நேற்றே பட்டியலிட்டுவிட்டேன்

அவ நம்பிக்கைகள் குறித்து சிலாகித்து எழுதலாமென தகுந்த மேற்கோள்களோடு இதை ஆரம்பிக்கிறேன்……….
--------------- 02 ----------------------
நம்பகத்தன்மைகள் போன்று அவநம்பிக்கைகள் துரோகமிழைப்பதில்லை.பல்லிளிப்புகளோ,மனதை தொடும் பாசாங்குப் பேச்சுகளோ மிகுந்த ஒப்பணைத் தீற்றல்களோ இருப்பதில்லை. அவநம்பிக்கைகள் அவ நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.மேலும் இவை காயமேற்படுத்துவதில்லை,வெறுப்பை உருவாக்குவதில்லை(இயல்பிலே வெறுப்பாயிருப்பதாலும்)சோர்வடையச் செய்வதில்லை தற்கொலைக்குத் தூண்டுவதில்லை வன்புணர்வு, கொலை, திருட்டு, கள்ளக்காதல் போன்றவற்றிர்கு மறைமுக காரணிகளாயும் இருப்பதில்லை.அவை அவையாக மட்டுமே இருக்கின்றன.ஒருவேளை தன்னிலையிலிருந்து பிசக நேரிடினும் அதன் பிசகலை இவ்வுலகம் கொண்டாடுகிறது
தான் தானாகவே இருப்பது தன்னிலையிலிருந்து விலக நேரிட்டாலும் பழிக்கு உள்ளாகாமலிருப்பது எத்தனை அற்புதமானது?அவநம்பிக்கைகளின் உலகம் மிகவும் பாதுகாப்பானது
--------------- 03 ----------------------

நீங்கள் இரண்டாம் அத்தியாயம் நன்றாய் வந்திருப்பதாய் நினைத்தால் முதலாம் அத்தியாயம் மிகச் சரியாய் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நீங்கள் இரண்டாம் அத்தியாயம் சரியாய் வரவில்லை என நினைத்தாலும் முதல் அத்தியாயம் மிகச் சரியாய்தான் எழுதப்பட்டுள்ளது.
பிரதிக்கும் எழுதுபவனுக்கும் தொடர்பிருக்கலாம் அல்லது தொடர்பிருக்கத் தேவையுமில்லை
பிரதி பிரதியாக மட்டுமே இருக்கிறது மேலும் அப்படி இல்லாமலிருந்தால் மட்டும்தான் என்ன?
--------------- 04 ----------------------
இதோடு அது..
அதோடு இது..
எதோடு எது?
எதனோடும்
எதனோடும் இருந்து தொலையட்டும்
நீ எழுதிக்கொண்டிரு

5 comments:

சுகுணாதிவாகர் said...

good one.

Unknown said...

சுத்தம்,கண்ணைக்கட்டி காட்டுல உட்ட மாதிரி இருக்கு. நீங்கள் அவநம்பிக்கைகளை எழுதுதாமல் நம்பிக்கைகளையே எழுதுங்கள். இதோடு அது,அதோடு இது,எதோடு எது, சத்தியமா புரியலிங்க சாமி.

தமிழ்நதி said...

துண்டு துண்டாக எழுதும் உத்தி பிடித்திருக்கிறது. துண்டு துண்டாக்குவது அல்ல.

நாகை சிவா said...

நல்லா இருக்கு அய்யனார்...

Ayyanar Viswanath said...

சுகுணா,தாமோதர் தமிழ்நதி மற்றும் புலி மீண்டும் ஒருமுறை வாசிக்கையில்தான் நன்றி விடுபட்டிருப்பது தெரிய வந்தது..மேலும் எனக்கிது பிடித்துமிருக்கிறது...:)

Featured Post

test

 test