Saturday, September 1, 2007

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-1




சிவனுக்கு அந்தி அலங்காரங்கள் ஓய்ந்து
நடையை சாத்தியபின்
பின்னிருந்த நந்தவன பூச்செடி மறைவின்
இடுக்குகளில் அமர்ந்தபடி
நீ வேறொருவனுடன் போவது குறித்தான
துயரங்களை சொல்லிக்கொண்டிருந்தாய்..
போவதென முடிவாகிவிட்டபின்
அப்படியே போயிருக்கலாம் ஸரயூ..
என் கன்னத்தில் முத்தமிட்டிருக்க வேண்டாம்

என் பாடலை கடைசியாய் கேட்க முளைத்த
உன் ஆசைகளை நிறைவேற்றும் விதமாய்
கண்கள் மூடி
பைரவி துணையோடு பாடிக்கொண்டிருந்தேன்
ஒரு வெளியில் உன் முகம் தேடி அலைந்த என் பாடல்
தன் துயரங்களை முடித்துக்கொண்டு
உன்னைத் தேடியபோது
நீ அருகிலில்லை
எப்போதோ சென்றுவிட்டிருந்தாய்..

உன் தகப்பனுக்காக என்னை துறந்தாய்
உன் கணவனுக்காக உன்னுடலை விற்றாய்
உனக்கென நீ என்ன செய்தாய் ஸரயூ?

என் நேற்றைய தோழி சொன்னாள்
எந்த ஒரு அன்பையும் நிராகரிக்க முடிவதில்லையென்று
அதில் நிரம்பி வழியும் அபத்தங்கள் உனக்குப் புரிகிறதா ஸரயூ?
எது அன்பென்பதே புரியாத வெளியில்
எங்கிருந்து வந்தன நிராகரிப்பும் ஏற்றுக்கொள்ளலும்?..

அன்பைப் பற்றிய வியாக்கியானங்கள்
எதுவும் சொல்லும் மனோநிலையில் நான் இப்போதில்லை ஸரயூ
ஒருவேளை புகாரியையும் சேதுக்கரசியையும்
நேசிக்கமுடியுமென்கிற என் நெகிழ்தலின் கணத்தில்
உன்னிடம் சொல்லவருவேன்
அன்பிற்கான வரையறைகளை

6 comments:

Ayyanar Viswanath said...

உபயோகமற்ற சில அடிக்குறிப்புகள்

ஸரயூ கானல்நதி நாவலின் கதாபாத்திரம்
புகாரி சேதுக்கரசி அன்புடன் குழும நண்பர்கள்

கண்மணி/kanmani said...

அய்யோ சாமி வழக்கம்போல பிரியலை
ஆன்னா தமிழும் கவிதை நயமும் நல்லாருக்கு
அய்யனார் என்ன மாதிரி சின்ன புள்ளைங்களுக்காக ;) பிரியற மாதிரி ஒரு கவுஜ எழுதுங்க

Jazeela said...

//ஒரு வெளியில் உன் முகம் தேடி அலைந்த என் பாடல்
தன் துயரங்களை முடித்துக்கொண்டு
உன்னைத் தேடியபோது
நீ அருகிலில்லை
எப்போதோ சென்றுவிட்டிருந்தாய்..// ரொம்ப கொடுமையா இருந்திருக்கும் சொல்லாம கொள்ளாமல் ஓடியிருப்பாங்க.

//ஒருவேளை புகாரியையும் சேதுக்கரசியையும்
நேசிக்கமுடியுமென்கிற என் நெகிழ்தலின் கணத்தில் // அந்த அளவுக்கு வெறுப்பா?

கோபிநாத் said...

உள்குத்து கவிதை :)

Ayyanar Viswanath said...

டீச்சர் நன்றி

ஜெஸிலா
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கோபி அதான் நேரா எழுதி இருக்கேனேய்யா

மிதக்கும்வெளி said...

இதென்ன கவிதையா, ஸ்டேட்மெண்டா?

Featured Post

test

 test