Friday, January 11, 2019

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்


Y

ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை சமீபமாய் மீண்டும் வாசித்தேன். என் இருபதுகளில் மிகுந்த உணர்வெழுச்சியைத் தந்த  நாவல் இது.  ஹென்றி கதாபாத்திரம் என்னுடனேயே தங்கிவிட்டது என்றும் கூட சொல்லிவிடலாம். சில மாதங்களுக்கு முன்பு இந்நாவலின் பிடிஎப் வடிவம் கிடைத்தது.  மீண்டும் வாசிக்க விரும்பினாலும் ஒரு சின்னத் தயக்கம் இருந்தது. நம் ஆரம்பகாலத்தில் வாசித்த, மிகவும் பிடித்துப் போன படைப்புகளை இப்போது வாசித்துப் பார்க்கும்போது அது மிகவும் சாதாரணப் படைப்பாக தோன்றிவிடலாம்.  மோகமுள்ளை மறுவாசிப்பு செய்து அப்படி ஒரு உணர்வை அடைந்தேன். இதையா அப்படி கொண்டாடினோம் என்கிற மனநிலை உருவானது. ஆனாலும் மரப்பசு நாவல் மறு வாசிப்பிலும் பிடித்திருந்தது. ஒரு குழப்பமான மனநிலையில்தான் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். முழுமையாய் வாசித்தே மீண்டேன். இந்த நாவல் இன்னும் அதிகமாய் என்னை ஈர்த்துக் கொண்டது.

இப்போதைய வாசிப்பில் ஹென்றி கதாபாத்திரத்தை கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கஸண்ட்ஸாசிஸ் உருவாக்கிய ஸோர்பா கதாபாத்திரத்தோடு ஒப்பிட முடியும் எனத் தோன்றியது. இருவருமே கணங்களில் வாழ்பவர்கள். பழைய மரபான விஷயங்களை உடைத்து தன்னியல்பான ஒரு வாழ்வை முன்னெடுப்பவர்கள். ஸோர்பாவின் கொண்டாட்ட முறைகள்  (குடி, பெண், நடனம்) வேறாக இருந்தாலும் இருவரின் மனநிலையும் ஒன்றுதான் எனத் தோன்றியது. இதயத்திலிருந்து பேசவும் வாழவும் முடிகிற ஒரு மனிதனாக இருவரையும் ஒரே தராசில் வைக்க முடியும்.

ஹென்றியின் வளர்ப்புத் தந்தை கதாபாத்திரமான சபாபதிப் பிள்ளை இன்னொரு அற்புதமான குணவார்ப்பு. அவரின் அடியொற்றித்தான் ஹென்றி என்கிற முழுமையான மனிதன் உருவாகிறான். ஹென்றி பள்ளிக்கூடம் போவதில்லை. அவனுக்கு என்ன செய்யப் பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்யும் சுதந்திரத்தை பப்பா தருகிறார். பப்பா ஹென்றியிடம் சொல்வது ஒன்றைத்தான் எப்போதும் சந்தோஷமாக இரு அதுவே தர்மம். ஹென்றி அப்படித்தான் இருக்கிறான்.

ஜேகே உருவாக்கியிருக்கும் கிருஷ்ணராஜபுரம் ஒரு கற்பனை கிராமம். ஆனால் கிராம மக்கள் பேசும் வட்டார வழக்கு வட தமிழகத்தின் மொழியாக இருக்கிறது. மல்லாட்டை, காசி என பணத்தை சொல்வது - எளிய மக்கள் சதா எச்சிலைத் துப்பியபடி, துப்பிய எச்சிலின் மீது காலால் மண்ணை நகர்த்தி மூடுவது, வேட்டியை தலைப்பாகையாக கட்டிக் கொள்வது போன்ற விவரிப்புகள் ஒரு வடதமிழக கிராமத்தை அடையாளம் காட்டுகின்றன. மக்களின் பேச்சு மொழியும் வட தமிழக மொழிதான்.

இந்த கிருஷ்ணராஜ புரத்திற்கு ஆங்கிலோ இந்தியனைப் போன்ற தோற்றம் கொண்ட தமிழ் சரிவரப் பேசத் தெரியாத ஹென்றி வந்து சேருகிறான்.  அவன் வரும் லாரியில் அறிமுகமான தேவராஜனுடன் நட்பு உருவாகிறது. தேவராஜன் அந்த கிராமத்து பள்ளிக்கூடத்து வாத்தியார். அவர் வீட்டிலேயே தங்குகிறான். தேவராஜன் ஒரு முறை ஹென்றியை குடிக்க அழைக்கிறார். ஹென்றிக்கு குடிப்பழக்கமில்லை ஆனால் மறுப்பேதும் சொல்லாமல் தேவராஜனுடன் குடிக்க அமர்கிறான். அவனுக்காக ஊற்றப்பட்ட மது காலியாவதே இல்லை. தேவராஜன் எனக்காக உங்கள் கொள்கையை தளர்த்துகிறீர்களா எனக் கேட்கிறார். ஹென்றி என் கொள்கையே Flexible ஆக இருப்பதுதான் என்கிறார். இந்த வரியைப் படித்துவிட்டு ஒரு கணம் ஆடிப்போனேன்.

எவ்வளவு பெரிய தத்துவம் இது. மனிதன் மட்டும் Flexible ஆக இருந்துவிட்டால், மதங்களும் சாதிகளும் அவனை கூறு போட்டிருக்காது இல்லையா?

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - என்றென்றைக்குமான நாவல்.




1 comment:

Unknown said...

ஆக சிறந்த நாவல் எனக்கு ஒரு புத்தகம் வேண்டும் எப்படி பெருவது. ஹன்றி,கதாபாத்திரம் சூப்பர்.

Featured Post

test

 test