ம்ருணாள் சென் இயக்கத்தில் 1989 இல் வெளியான Ek Din Achanak படத்தைப் பார்த்தேன். படத்தின் துவக்கத்திலேயே இது அப்பாவைப் பற்றியது என அறிந்ததும் மாற்றி விட நினைத்தேன். ஆனால் நாம் எதிலிருந்து ஓடி ஒளிகிறோமோ அதுவே நம்மை விரட்டும் என்பதால் அப்பாவின் நினைவுகளுடனே தொடர்ந்தேன். குடும்பத்தில் திடீரென ஒருவர் இல்லாமல் போவது - இதுதான் ஒட்டு மொத்தப் படத்தின் ஒரு வரிக் கதை. உறவுகளுக்கிடையில் அது ஏற்படுத்தும் விளைவுகளைப் படம் அவ்வளவுக் கூர்மையாய் சொல்கிறது. பிற தொழில்நுட்ப உதவிகள் ( காட்சி, இசை, எடிட்டிங் போன்ற) இல்லாமல் நூறு சதவிகித நடிப்பாற்றலால் மட்டுமே ஓர் அழுத்தமான கதையை பார்வையாளருக்கு கடத்துவது எவ்வளவு சிரமம்! ஷபானா ஆஸ்மி, அபர்ணா சென், ரூபா கங்குலி போன்றவர்கள் இதை அநாயசமாகக் கடந்து கதாபாத்திரங்களுக்கு உயிர்ப்பைத் தந்திருக்கிறார்கள். உண்மையில் நாம் இந்தியக் கலைப்பட மேதைகளான சத்யஜித் ரே, கட்டக், ம்ருணாள் சென்னை வைக்கும் அதே இடத்தில் அவர்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த நஸ்ருதின் ஷாக்களையும் ஷபான ஆஸ்மிகளையும் வைக்க வேண்டும்.
ஒரு மழை நாளில் வீட்டை விட்டு வெளியேறும் ஓய்வு பெற்ற பேராசிரியர் மீண்டும் வீடு திரும்புவதில்லை. மனைவியும் மகள்களும் மகனும் நண்பர்களும் உறவினர்களும் ஒரு கட்டத்தில் நாமும் ஏன் அவர் வீடு திரும்பவில்லை என்கிற காரணத்தைத் தேடி, படத்தின் வழியாய் அதற்கான விடையை அறிந்து கொள்ள முனைகிறோம். யாருக்கும் விடை அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை. ஏதேதோ சந்தேகங்கள் நாளையடைவில் எல்லாமும் நீர்த்துப் போகின்றன. ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் மனைவிக்கு அவர் போனதிற்கான காரணம் புரிகிறது. அந்த ஒற்றைச் சொல் அதுவரைக்கும் இயல்பான தளத்தில் இருந்த படத்தை, கதை சொல்லலை தத்துவார்த்த தளத்திற்கு மாற்றுகிறது. அந்த ஒற்றைச் சொல் அல்லது அந்தக் கருத்தாக்கம் என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த ஒரு வார்த்தை முடிவு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. கவிதையின் கடைசி வரி போன்றோ, சிறுகதையின் இறுதிப் பத்தி போன்றோ ஒரு திரைப்படத்தையும் முழுமையாய் வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிட முடியும் என்பதே திகைப்பான இனிப்பாக இருக்கிறது. ம்ருணாள் சென்னிற்கு அஞ்சலி.
No comments:
Post a Comment