அல்போன்ஸோ க்வெரானின் ரோமா படத்தைப் பார்த்து முடித்தேன். முதன் முறையாய் ஒரு நெட்பிலிக்ஸ் திரைப்படம் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கரின் பல்வேறு பிரிவுகளில் இடம் பிடித்திருப்பது நல்ல விஷயம்தான். திரைப்படம் திரையரங்குகளை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை. தமிழ்சூழலில் 'ரிலீஸ்' தான் மிகப் பெரியச் சிக்கலாக இருக்கிறது. ரோமா போன்ற உதாரணங்கள் நம் சூழலில் நல்ல நம்பிக்கைகளை விதைக்கலாம்.
அல்போன்ஸோ க்வெரானின் எல்லாத் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். Y Tu Mamá También, படமும் Children of Men திரைப்படமும் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக சில்ரன் ஆஃப் மென் என்னை நடுங்க வைத்தது. தொழில் நுட்ப ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் இவரின் திரைப்படங்கள் உச்சமானவை. ரோமா வின் ஒவ்வொரு காட்சியுமே இவரது Technical Brilliance க்குச் சான்று.
கருப்பு வெள்ளையில்தான் உணர்வுகள் மிகத் துல்லியமாக வெளிப்படுகின்றன. அதுவும் ரோமா போன்ற சற்றுக் கூடுதலாக நெக்குருக வைக்கும் படங்கள் கருப்பு வெள்ளையில் இன்னும் மிளிர்கின்றன.
ஒரு மத்தியதரவர்க்க வீட்டின் பணிப்பெண்ணைக் குறித்த கதை என ஒருவரியில் சொல்லிவிடக் கூடிய விஷயதாம்தான். 1970 களில் மெக்சிகோ நகரமே உள்நாட்டுக் கலவரங்கள், மாணவர் போராட்டங்களெனத் தடுமாறிக் கொண்டிருந்த காலம். அதே நெருக்கடிகள் பெரும்பாலான குடும்பங்களையும் அலைக்கழித்தது. குறிப்பாய் பெண்கள் எல்லாவித துரோகங்களிற்கும் உள்ளாகினர். இந்த நெருக்கடிகளும் இழப்புகளும் மாறி மாறி மக்களைத் துன்புறுத்திய கருப்பு வெள்ளை நாட்களை அல்போன்ஸோ க்வெரான் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ஒற்றைச் சொல்லில் துயரும் காலம் அல்லது துயர் என சுருக்கி விடலாம். ஆனால் இந்த உணர்வைக் கையாண்ட விதம்தான் ஆச்சரியத்தைத் தருகிறது. ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட பலக் காட்சிகள் வியப்பைத் தந்தன. எவ்வளவு பெரிய ஒத்திசைவு இந்த குழுவினருக்கு இருந்திருக்க வேண்டும். மிகவும் அர்ப்பணிப்பான பணியின் பலனே இந்த அங்கீகாரம்.
இறுதிக் காட்சியில் நெகிழ்ந்தும் பதபதைத்தும் போனேன். ஏனோ யூமாவாசுகியின் இரத்த உறவு நாவல் படம் நெடுக நினைவில் வந்து கொண்டே இருந்தது. மீண்டும் அந்த நாவலை வாசிக்கும் எண்ணத்தையும் இந்தப் படம் தூண்டியது. துயரமும் இழப்பும்தான் மானுடத்தை இணைக்கிறது. சமூக அடுக்குகள், கருப்பு வெள்ளை மனநிலைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாவற்றையும் துயர் சமன் செய்து விடுகிறது. ரோமா திரைப்படம் இதன் சாட்சியமாய் விளங்குகிறது.
அறிவுத் தளத்தில் இந்தத் திரைப்படத்தை 'சென்டி' என ஒதுக்கிவிடலாம்தான் ஆனால் உணர்வுத் தளத்தில் அப்படிச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை.
சமீபமாய் என்னைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் 'சென்டி' யாக மாறிக் கொண்டிருக்கிறது. நானும் இந்தக் கத்தியைப் பள்ளத் தாக்கில் விசிறி எறிந்துவிட்டு அதி 'சென்டி'யாய் எழுதிக் கொண்டிருப்பதை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
No comments:
Post a Comment