Thursday, March 29, 2018

ஓரிதழ்ப்பூ - கனவுப் பிரியன்







“ புத்தக அறிமுகம் "



" ஒரு இடத்துல இருக்கமாட்டேன்கிறான். துருதுறுன்னு வாரான். எது கொடுத்தாலும் கொஞ்ச நேரம் தான் வேலையாடுறான். அடுத்ததுக்கு போயிறான் “ என்பது தான் என் குழந்தைகளைப் பற்றி யாரேனும் சொல்லும் அதிகபட்ச குற்றச்சாட்டாக இருக்கும்.

 “ மனசுக்குள்ள நினச்சுக்குவேன் தக்காளி, நெல்லு வச்சா நெல்லு தானே வெளையும்ன்னு “

என்னை ஒருமுகப்படுத்துவது கஷ்டம். என்னை மட்டுமல்ல கூடுதல் சிந்தனை கொண்டவனை நிலைப்படுத்தவே முடியாது. சதா ஏதேனும் ஓடிக்கொண்டே இருக்கும் அவனுள். 

“ தட்டலிஞ்சு திரியிறான் “ என்பார்கள் ஊருக்குள். 

வெளிகாட்டுவதற்கு அவனுக்கு ஏதேனும் தடம் கிடைக்கும் போது வார்த்தை வடிவில் கொட்டத் துவங்கி விடுகிறது அவனது அலைகழிப்பு. 

அதிலும் என்னமாதிரி அகங்காரம் கொண்டவனுக்கு குக்கர்ல மூணு விசில் எல்லாம் பத்தாது. ஏழு விசில் வைக்கணும் அப்போ தான் எதுவுமே வேகும். 

எதையாவது வாசிக்கிறப்போ அல்லது எதையாவது பாக்கிறப்போ அதுக்குள்ளே என்ன மறந்து நிக்கனும். அப்போ தான் எதுவுமே தொடரும். இல்லைன்னா சட்ன்னு நான் சுய நினைவுக்கு வந்துடா அதுக்குள்ளே பயணப்பட என்னால முடியாது. 

கொஞ்சமேனும் எளிமையான புரிதல் இருக்கணும்

புதுசா ஏதாவது இருக்கணும் 

தகவல் இருக்கணும் 

நூறு இருபது வார்த்தைகள் கொண்டு ஏன் இந்த எழவெல்லாம் சொல்லுறேன்னு பாக்குறீங்களா. என்ன எதையாவது  வாசிக்க வைக்கிறது கஷ்டம்ங்கிறதை சொல்லவேண்டி இவ்வளவு மெனக்கெடல். 

எப்போமாவது, இத விடக்குடாது முழுசா வாசிச்சிரனும் எனும் இந்த அற்புதம் நிகழும். 

“ அய்யனார் விஸ்வநாத் “ அவர்களின் “ ஓரிதழ்ப்பூ “ புத்தகம் அதை சாத்தியப்படுத்தியது. 

உண்மையிலே “ ஓரிதழ்ப்பூ “ ன்னா என்ன தெரியுமா ஆறாவது அத்தியாயத்தில் வாத்தியார் கோவத்துல சொல்லுவான் பாரு  “ என்று நண்பன் பீடிகை போட 

பூங்காவனத்தின் புருஷன் மாமுனி போல நானும் 

“ கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஒரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி – நிலையில் நிறுத்து பிளவில் பூக்கும் மலரை யரிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம் “  

எனும் வரிகளில் குடியிருக்கும் அந்த ஒரிதழ்ப்பூ பற்றி தெரிந்து கொள்ளும் ஆசையில் 

பெய்யும் பேய்  மழையையே ஒரு முறை வானத்தை உற்றுப் பார்த்து நிறுத்தும் வரம் கொண்ட மாமுனிவனோடு சேர்ந்து தேடத் துவங்கினேன். 

ரவி – அமுதாக்கா 

அமுதாக்கா – அவ புருஷன் 

ரவி – ரமா 

ரவி – அங்கயர்க்கண்ணி 

அங்கயற்கண்ணி – சங்கமேஸ்வரன் 

சங்கமேஸ்வரன் – மலர்ச்செல்வி 

அங்கயற்கண்ணி – துர்க்கா 

துர்க்கா – சாமிநாதன் 

சாமிநாதன் – லட்சுமி  

துர்க்கா – அய்யனாரு 

அய்யனாரு – பூங்காவனம்ன்னு கதையில் சம்பவங்கள் ஊடே அஞ்சு ஓரிதழ்ப்பூவை ஆசிரியர் வார்த்தையில் பரப்பிக் காட்டுகிறார். 

கதை அப்படியே திருவண்ணாமலையை சுத்தி பேயா சுத்துது. பேய்ன்னா அப்படி ஒரு பேய்த்தனம். 

இந்த புத்தகத்தின் கதையை நிஜம்ன்னு நம்புறதா, புனைவுன்னு சொல்லுறதா இல்லை அதீத புனைவுன்னு எடுக்கவான்னு, வாசிப்பவனை உன் தரத்துக்கு ஏத்தமாதிரி நீயே எது எதுல சேத்தின்னு தேடிக்கோ என்று கொடுத்துவிடுகிறார்.

அகத்திய முனியா கண்டா அகத்திய முனி அதுவே அய்யனாரா கண்டா அய்யனாரு. 

ஓரிதழ்ப்பூ வைத்தேடி அலைஞ்சா ஓரிதழ்ப்பூ, இல்ல ஊருக்குள்ள நடக்கத்தானே செய்யுதுன்னு எடுத்துக் கிட்டா சம்பவம் அவ்வளவு தான். 

ஆனா சொல்லுற விதம் இருக்கே அது ரொம்ப கிளாசிக்கா இருக்கு. 

ஆசிரியரே முன்னுரையில் சொல்லுவது போல முதல் ஏழு அத்தியாயம் மிரட்டாலா இருக்கு. 

உண்மையிலே வந்திருக்கிறது முனிவன் தானா. 

மகரிஷியைத் தேடி வந்தவனா. 

ஓரிதழ்ப்பூ என்ற அந்த வரிகளை எழுதியது யார். 

உண்மையிலே போகர் யாரு. 

இதெல்லாம் மானிட வடிவமா. 

மலர்ச்செல்வி உண்மையிலே அந்த பர்வதமலை காட்டுல காணாம போயிட்டாளா. 

மனிதத் தலை கொண்ட மான் வருமா அங்கயர்கன்னியை தேடி. 

இது எந்த காலத்துல நடக்குது. 

இப்படி பல கேள்விகள் வாசிப்பவன் முன் அடிபட்ட திறந்து இருக்கும் புண் மீது சுற்றிவரும் ஈ போல கோய்ங்ங்ங்.. என்று சுற்றுகிறது.

மகரிஷி, அகத்தியர் எல்லாம் கதையில் வருகிறார்கள். அதற்காக கொதிக்காமல் விசுவாமித்திர்ராக சிவாஜி நடித்த " ராஜரிஷி " யும் தமிழ்ப்படம் தான் என்பதை சமூகம் நினவில்  கொள்ள வேண்டும்.

ஓரிதழ்ப்பூ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ஏகப்பட பூக்கள் பூ மரங்கள். அதி அற்புதமான ஒரு வீதி வழி நடப்பது போல உள்ளது. 

மழைக்கு இடையே ஒரிதழ்ப்பூவை ஒவ்வொருவரும் தரிசிக்கும் நிகழ்வுகளை எல்லாம் நல்ல கவிதைத் தனத்துடன் விவரிக்கிறார். அதிலும் கூடுதலாக அவர் பெண்கள் பகுதியில் இருந்து அவற்றை பேசுவதால் இன்னும் அழகாக உள்ளது. 

“ ஆதி உறவு அந்து போகும் ......உறவு அக்காது “ என்ற வட்டார வழக்கு ஒன்று உண்டு. 

காதல் என்றும் பெண் போக்கிலே என்பார்கள். 

வாழ்வியலும் பெண் போக்கில் தான் 

அப்போ ஓரிதழ்ப்பூ.............?

எங்க ஊருல பஜாருல என்னோட வண்டியை நிறுத்திட்டு ஏதாவது வாங்கப் போவேன். 

திரும்பி வரும் போது சிலநேரம் அழுக்கு உடையோட மெலிந்த பெண் நிற்பாள். என்னைக் கண்டதும் கையை நீட்டுவாள். நானும் சிரித்தபடி பணம் தருவேன். வாங்கிக் கொண்டு எதுவும் பேசாமல் போய் விடுவாள். ரோட்டில் யாராவது சீண்டினால் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கி விடுவாள். 

அந்த கிறுக்கச்சியை காணும் போதெல்லாம் எனது நண்பர்கள் அது என்ன உன்கிட்ட மட்டும் பணம் கேக்கிறா. நீயும் கொடுக்கிற. பைத்தியக்காரிக்கி போய் பணம் கொடுக்கிற என்றெல்லாம் கூறுவதுண்டு. நான் ஒன்றும் பதில் சொன்னதில்லை. 

ஆனால் கல்யாணம் ஆனதும் மனைவியுடன் முதன் முதலாக அவளை சந்திக்க நேர்ந்த போது மனைவி அவள் என்னிடம் பணம் வாங்கிக் கடந்ததும் கேட்டாள் 

“ யாரு இந்த கிறுக்கி “

“ ............ஸ்கூலோட இங்கிலீஷ் டீச்சர் “ என்றேன் 

திக் என்று பயந்தவளாக “ என்னது “ என்றவளிடம் 

“ நம்ம வீட்டுக்கு எதிரே இருக்கிற அல்லல்காத்தான் வீட்டுக்கு டியுசன் எடுக்க வருவா. நேருல அப்போ பாகிறப்போ ஒரு சிரிப்பு சிரிப்பா அவ்வளவு தான். அப்போ அவளுக்கு கல்யாணம் ஆகல. நல்ல அழகா இருப்பா. ............ளோட ஆட்கள் அஞ்சாறு பேரு சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க. பைத்தியம் மாதிரி திரியிறா.  “ என்றேன். 

எல்லாமே தோற்ற மயக்கம் தான். 

நீ எதுவாக காண்கிறாயோ அதுவாக இருப்பேன். 

இந்த புத்தகமும் அப்படித்தான்.

x

No comments:

Featured Post

test

 test