Thursday, March 29, 2018

ஓரிதழ்ப்பூ என்பது ஒரு பூ தானா?




நதியின் பெயர் பூர்ணா

 முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறைக்கு தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில் தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்
கருவறை விட்டெழுந்த அவசரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை
கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள் துளியாய் விழுந்தேன்
“யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்”
பூர்ணா நதியின் மடிப்புகளில் ஒடுங்க மறுத்து
அலைகிறது சூரியவெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நெடியில் பூமி மயங்கி மீண்டும் விழித்தது
கற்படியின் குழியில் தேங்கிய நீர் வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில்
குளிர் நதியும் அத்வைதிதான்-
போதையும் களவும் போல
கடவுளைப் புணர்ந்த ஆனந்தம் கொண்டாட நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய நீயும்
முழுகிக் கொண்டிருக்கிறோம் தேவி ஒரே நதியில்.

 - சுகுமாரன் 


 நான் செய்த தவறுகள்

என்னுடைய முதல் தவறு
கடவுளில்லாத உலகத்தில் பிறந்தது
இரண்டாவது தவறு
கடவுளை எனக்காக உருவாக்கிக் கொண்டது
மூன்றாவது தவறு
பால்பேதமற்றிருந்த கடவுளை
இரண்டாகப் பகுத்து மனித சாயலில் ஆண்-பெண் ஆக்கியது நான்காவது கடைந்தெடுத்த முட்டாள் தனம்
இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டி விட்டது
ஐந்தாவது தவறு
ஆண்கடவுளுக்கு ஆணுறை வழங்க மறுத்தது
ஆறாவதாக குட்டிக் கடவுளைக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்தது
ஏழாவது தவறு
எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே கோயிலைக் கட்டிக் குடியமர்த்தியது
எட்டாவது தவறு
என் துணைவியை ஆண்கடவுளிடம் சோரம் போக விட்டது ஒன்பதாவது பெருந்தவறு
பழி வாங்கும் எண்ணத்தோடு பெண்கடவுளை நான் வன்புணர்ச்சி செய்தது
பத்தாவது தவறு
என் துணைவியின் வயிற்றில் கடவுள் உண்டானதையும் பெண்கடவுளின் வயிற்றில் மனிதர் உண்டானதையும் கருவழிக்க மறந்தது
நான் செய்த பத்து தவறுகளுள் எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான்.

 - ரமேஷ் பிரேம்

 தவறுகளின் நிமித்தம், நான் உட்செல்கிறேன். பின் வெளி வருகிறேன். அணைக்காமல் விட்டுச் சென்ற சிகரெட் புகைச்சுருள் சிவந்து பின் அமர்கிறது. காற்றுவெளியின் துகள்களின் நடுவே அதன் மீந்த சாம்பல் இன்னும் சின்னஞ்சிறு துகள்களாக, பின் துகள்கற்ற அகாலப்பரப்பாக, ஏதுமற்றதாக மறைகிறது. சுருண்ட புகை மென்மேலும் உயர்ந்து உயர்ந்து, அருகமர்ந்த நாசிகளில் நிரம்பி, சுவாசத்திற்குள் புகப்புக, அதன் திட்டுத்திட்டான அரூபம் படிந்து எண்ணங்களை உரசத் தொடங்கியது. எத்தனை முறை பார்த்திருக்கிறோம். என் முதல் தொடுகை எப்பொழுது நடந்தது. மாமா மறைத்து வைத்திருந்த நிர்வாணப்படங்களையும் அதன் தலைகீழான புணர்வுகளையும், குறிகள் எதன் பொருட்டு அலைக்கழிகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறேன். கடவுளர்களும் மனிதர்களும் புரளும் நிலையற்ற பரப்பில் தொடர்ச்சியாக உள் நுழைவதும் வெளித் தள்ளுவதும். கனவின் நிலத்தில் தவறுகளினால் (தவறுகளா) உருவாக்கிய உடல்களை விடாது கடித்துக் கொண்டே இருக்கிறது ஆண் மனம். பற்களாலான குறிகள் கொண்டிருக்கிறேன். எண்ணிலடங்கா உடல்களின் சுழலில் மீள மீள உள் செல்கிறேன் வெளித் தள்ளுகிறேன். ஆனால் தொடர்ச்சியாக பீய்ச்சப்பட்ட விந்துவிற்கு பின் எளிய உயிரியாக தன்னை பாவித்துக் கொள்ளாத ஆண்களே இல்லை போலும். எதனையோ தூக்கி சுமந்து கொண்டிருக்கும் பொழுது கால்கள் நழுவி அத்தனையும் கரையற்ற நீர்ப்பரப்பில் கரைந்து ஒன்றுமில்லாமலாவது.

 “கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்தி பிளவில் பூக்கும் மலரையறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்”

 ஓரிதழ்ப்பூ பெண்குறி. அகத்தியர், போகர், ரமணர், சங்கமேஷ்வரன், அய்யனார், ரவி, சாமிநாதன், ஜோசியர், பெரியசாமி, மான், திருவண்ணாமலை. மையமற்று அங்கும் இங்குமாக செல்லும் கதை உத்தி. பெண்கள், காளி, துர்கா, லட்சுமி, அங்கயற்கண்ணி, மலர்ச்செல்வி, ரமா, அமுதா, டீச்சர் அம்மா. அவர்களுடைய ஒவ்வோரு ஓரிதழ்களும். திரும்பத் திரும்ப பூக்கள். இவர்களின் உலகிற்குள், கனவிற்குள், உறக்கத்திற்குள், நிலத்திற்குள், உணவிற்குள் என சமனின்றி பாயும் கதையில் தொடர் கண்ணியாக ஒரே பெண்கள். இந்தப் பெரும் சங்கிலியில் ஊளையிட்டுக் கொண்டே இருக்கும் வன மிருகம் ஒன்று கழுத்து கட்டுண்டு இருக்கிறது. கட்டுண்டால் மட்டுமே கிடைக்கும் ஊன். ஆனால் தன்னால் கட்டவிழ்க்க முடியும் என்று அறிந்து கொண்ட பின் தான் அந்த கனத்த சங்கிலியை தன் உடல் முழுதுக்குமாய் கட்டிக் கொள்ள முனைகிறது. பெரிதும் சிறிதுமான இந்தச் சங்கிலியின் அழுத்தம் அதன் உடலை ஒரு எரிவாயு போல உறிஞ்சிக் குடிக்கத் தொடங்குகிறது. ஒரு சமயம் இன்னும் இன்னும் என அந்த மிருகம் லயிக்கையில் நிகழ் உலகில் வெத்துக் கூடாக கிடக்கும் என்றால் அப்படியுமில்லை. அந்த சங்கிலிகள், மிருகம், லயிப்பு, கனவு எல்லாம் கதை சொல்லலில் மையமின்றி போய் விடுகிறது. காமம் தான், பெண் உறுப்பில் பூ பூத்திருக்கிறது.

அமானுஷ்ய குணாதீசயங்களுடன் இருக்கிறார்கள் பெண்கள். மான்களுடன் புணர்ந்து பிள்ளைகள் பெறுவார்கள். பித்தனுடன் கூடி இன்பம் துய்ப்பார்கள். நெஞ்சு மிதித்து காளியாவார்கள். கழுத்துடைந்து பலி ஆடாய்க் கிடக்க விரும்புவார்கள். எதற்கு இப்படி ஒரு பயம் அவனுக்கு அவள் யோனியைப் பார்த்ததும் தொற்றுகிறது. அவன் ஏன் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூத்திரம் மலம் வாந்தி எனப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் திரும்பத் திரும்ப பெண் பூ பூ நாற்றம் நாற்றம் என்று எனக்கு தலைகீழாக்கம் ஆகியிருந்தது. உவர்த்த மத நீரின் ருசி, பிசுபிசுப்பு, மணம் என அதன் வாதையின் ரீங்கரிப்பு என்னுள் புகும் பொழுது, இன்னும் ஆழமாக அவள் விரல்கள் உள் நுழைந்து வெளியே பீய்ச்சிக் கொண்டிருந்தாள். திரும்பத் திரும்ப தெளிவற்ற பாதையினுள் போய்க்கொண்டிருப்பதைப் போலவே இருந்தது. ஆனால் சொல்ல விளைவது என்ற கருத்திற்குள் நான் நுழையவே இல்லை.

புனைவு மொழி படிமங்களால் ஆனது என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த ஒவ்வொருவனாகவும் ஆகிக் கொண்டிருக்க வேண்டும். விழுந்து எந்திரிக்க வேண்டும். மாயயதார்த்தம், யதார்த்தம், புனைவு, பின் நவீனத்துவம், மிகு கற்பனை, மீளுருவாக்கம், முரணான கதை சொல்லல் முறை என்று எதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் வெகு காலமாக ஆண் மனம் உருவாக்கிய பிரக்ஞையைத் தேடிக் கொண்டிருந்தேன். சாத்தியமற்ற வழிகளில் அதன் பைத்தியக்களையைப் பிடித்து விடலாம் என்று நம்பினேன். பெண்கள் தேவதைகளாக இல்லை காளிகளாக உருவானவர்களா என்று நம்பவில்லை. இளகியவர்களா நிச்சயமில்லை. அரதப்பயலுக்கு பொறைந்தைகள, தேவடியாப்பய, புளையாடி மோன, புண்டாச்சி மவன, புண்டைக்கு பொறந்தைகள, தள்ளைய ஓத்தவன, அக்காள வோளி இப்படி உறவுகளுக்குள் தினமும் புணரும் வார்த்தைகளை பெண்களின் மொழி வழியாகவே அறிந்து உணர்ந்திருக்கிறேன். அதனால் அது மிக எளிதாக பெண்ணுக்கான வசை, பெண்களை மைய்யப்படுத்தி ஆணைக் குறிக்கும் வசை. ஆனால் ஆண் பெண் எனும் உறவிற்குள் காமம் அற்றுப் போகையில் அவர்களுக்குள்ளான உறவு என்பது எதனை அமைக்கிறது. எந்தப் பிடிமானம் இருக்கும்.

தன் எளிய தாழ்வுணர்ச்சியிலிருந்து அவன் பெண்களை அறிகிறான். அம்மையை விரும்பும் அகம், காதலியை அங்கு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே நேரம் அம்மை காளியாகி விடுவதில்லை. காதலியின் காளியின் கணங்கள் அவனுக்கு தேவை. அதே நேரம் சந்தன வல்லியாக அவள் வந்து அணைத்துக் கொண்டு நெஞ்சில் மிதிக்க வேண்டும் என உள்ளூற ஆசைப்படுகிறான். காதலியின் முலையை சப்பாத ஆண் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவன் குழந்தையாகவும் வன் மிருகமாகவும் திரும்ப காதலனாகவும், எளிய உயிரியாகவும், வெறும் உடலாகவும், புனைந்து கொண்டே இருக்கும் பாவனையில் பெண் தன்னை காதலியாக, அம்மையாக, தமக்கையாக, காளியாக, பிள்ளையாக, அனாதரவானவளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்களோ?

பிம்பங்களுக்கான எதிர்பிம்பங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கையில் ஒன்றை உணர்கிறேன். பிம்பங்களின் ஆடி யார் வசம் இருக்கிறது என்று. அதனால் வானம் அழைக்க பொதி மூட்டையக் கொண்டு நகரும் ரவி என்னிடம் வசப்படவே இல்லை. வந்திருந்தால் அவன் தொங்கிக் கிடக்கும் மொன்னைக் குறியை நான் அறிந்து கொண்டிருக்ககூடும். கூடவே மொன்னை மனிதனாய் சாமி நாதனின் கால் இடுக்கில் அகப்பட்டுக் கிடக்கும் வெத்துக் களச்சிகளையும். பின் எதற்காக இந்தக் கவிதை. ஏன் அய்யனார் புத்தி பேதலித்திருக்கிறான். அவன் சுகித்த அந்த ஓரிதழ்ப்பூவை, இவர்கள் ஏன் விலக்கினார்கள். ஆமாம். ஒரு பித்து நிலை வேண்டும் போலும் இந்தப் பெண்களுக்கு. அய்யனாரின் பெண்களுக்கு மான் தான் வேண்டும். மான் தலை உள்ள ஆண்களிடம் விடைத்த குறிகள் உண்டோ. இல்லை. இது குறி சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. ஏன்! திருவண்ணாமலையே ஒரு பெருத்து எம்பி நிற்கும் குறிதானே. வானம் அளக்க, உள் சென்று வெளி செல்கிறேன். மறுபடியும் நான் செய்த தவறுகள். உண்மையில் காமத்தின் பொருட்டு நான் சென்ற தூரத்தின் வழியில் தென்பட்டனர் இவர்கள்.

ஆனால், எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான். போதைக்கும் களவுக்கும் இடைப்பட்ட காலமற்ற பொழுதில் வந்தாய் நீ


நன்றி,

 நந்தகுமார்

http://nanthangl.blogspot.ae/

No comments:

Featured Post

test

 test