Sunday, June 25, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபது


ஸ்கந்தாசிரமத்தை சென்றடைந்தபோது நேரம் உச்சியைத் தாண்டியிருந்தது ஆனாலும் வெயில் தெரியவில்லை. உயர்ந்த மரங்களின் நிழல் அந்தச் சிறு வீட்டை முழுமையாய் மூடியிருந்தது. பிரதான வீட்டிலிருக்கும் சிறு புத்தக அடுக்கின் அருகாமையில் ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். குறுகலான தியான அறையில் இன்னொரு வெள்ளைக்காரப் பெண் கண்மூடி அமர்ந்திருந்தாள். சப்தமெழுப்பாமல் காம்பவுண்ட் சுவருக்கு அருகாமையில் சென்றேன்.மலை இறக்கம் பார்க்க சற்றுக் கிறுகிறுப்புத் தோன்றியது. மீண்டும் திரும்பி வந்தேன். ஒரு நல்ல மணம் நாசியை நிறைத்தது. இதென்ன மணம் என யோசித்தபோதுதான் தலைமீது ஒரு பவழமல்லிப் பூ வந்து விழுந்தது. இரண்டு மூன்று பவழமல்லி மரங்கள் ஒடிசலாய் நின்று கொண்டிருந்தன. சற்று உற்றுப் பார்த்தேன். காற்றின் பாடலுக்கு அப்பூக்கள் சிறுசிறு கிளைகளில் தொற்றியபடி காம்பை அசைத்துக் கொண்டிருந்தன. மனம் அப்படி ஒரு உவகை அடைந்தது. முதன்முறையாக வாஞ்சை என்ற உணர்வு எனக்குள் எட்டிப் பார்த்தது.மெல்ல நடந்து ஆசிரமத்தின் பின் பக்கம் போய் அங்கு ஆண்டாண்டுகளாய் நின்று கொண்டிருக்கும் மாமரத்தின் மிகப் பருத்த வேர்களின் இடைவெளியில் அமர்ந்தேன். என்றுமே உணர்ந்திராத பசியை உணர்ந்தேன். அந்தப் பசி உணர்வு அவ்வளவு நன்றாக இருந்தது. குடியும் புகையும் என் மூளையை மட்டுமல்ல சுவை நரம்புகளையும் துண்டித்து விட்டிருக்கிறது.

வீட்டின் அமைதி நினைவிற்கு வந்தது. குளுமையான பின்புறத் தோட்டம் நினைவில் வந்து அழைத்தது. அங்கையின் அகலப் பொட்டு வைத்த முகம். பசி. உடல் திண்மமானது. பயம் அகன்றதைப் போலிருந்தது. உடனே வீட்டிற்குப் போய் அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. எழுந்தேன். தியான அறையைக் கடக்கும்போது அநிச்சையாய் கைகள் கூப்பின. ரமணரை விழுந்து வணங்கிவிட்டு மலைச்சரிவில் நடக்க ஆரம்பித்தேன். காற்று சுழன்றது. திடீரென சூரியனை மேகங்கள் மூடின. வானம் பத்து நிமிடத்தில் கருத்தது. மனம் திக் கென ஆகியது. இதென்ன திடீர் இருள். நடையை துரிதப்படுத்தினேன். அடுத்த பத்து நிமிடத்திற்குள் மூக்கின் மீது முதல் மழைத்துளி வந்து விழுந்தது. மெல்ல மெல்ல தூறல் வலுக்க ஆரம்பித்தது. மழை தொடங்கியதும் பயம் போனது.

முதன் முறையாய் மழை பெய்யும் போது மலையில் நிற்கிறேன். உடல் சிலிர்த்தது. மேகம் அடர்வாய் மலை உச்சியில் இறங்குவது தெரிந்தது. மலைச்சரிவில் காய்திருந்த பாறைகள் அனைத்தும் ஈரத்தில் மினுமினுத்தன. நடக்க நடக்க கால் வழுக்கியது. இறக்கம் என்பதால் நீர் கால்களை நனைத்துத் தாண்டி வழிந்தது. சற்று நேரம் இந்த மழையில் அமர்ந்திருக்கத் தோன்றியது. படிக்கட்டுகளை விட்டு விலகி மேற்குப் பக்கமாய் இருந்த ஒரு உயரமான பாறையின் மீது வழுக்கலாய் ஏறி அமர்ந்து கொண்டேன். மலைச்சரிவும், சரிவிற்கு அப்பால் விரிந்த வயல் வெளிகளும் தென்பட்டன. பசுமை பசுமை அவ்வளவு பசுமை. இவ்வளவு பசுமையானதா நம் நகரம் என்ற ஆச்சரிய உணர்வு தோன்றியது. திருவண்ணாமலை ஒரு வறட்சிப் பகுதி. வெயில் நகரம் என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மழை என் ஊரையே எனக்குப் புதிதாய் அறிமுகப்படுத்தியது. இந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன. ஒரு நாள் கூட இவ்வளவு மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம். என்ன மாதிரியான பைத்தியம் என்னை பீடித்திருந்ததோ எல்லாமும் மழையில் கழுவி காலடியில் வழிந்து ஓடுவதைப் போலிருந்தது.

மழை மேலும் வலுத்தது. மழைத்தாரைகள் உடலில் ஊசியாய் குத்தின. உணர்வுகளை மறந்து மொத்தமாய் மரத்துப்போன உடல் புத்துணர்வடைந்தது. கொஞ்சம் கூட அசையாமல் அம்மழையை முழுவதுமாய் எனக்குள் வாங்கிக் கொண்டேன். எவ்வளவு நேரமானதெனத் தெரியவில்லை. வானம் மெல்ல மெல்ல தெளிவடைந்தது. மழை, தூறலாய் ஓய்வெடுத்தது. கடைசிச் சொட்டு மழைத்துளி நிற்கும் வரை அசையாமல் அமர்ந்திருந்தேன். காற்றில் ஈரம் கூடியது. உடல் மெல்ல நடுங்க ஆரம்பித்தது. மறந்திருந்த பசி மீண்டும் நினைவில் வந்தது. பாறையில் இருந்து தளர்வாய் இறங்கினேன். இனி நான் சரியாகிவிடுவேன் எனத் தோன்றியது. சரியாகிவிட்டேன். மனம் உறுதியடைந்தது. மீண்டும் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தேன். மழை உலகையே சுத்தமாய் கழுவித் துடைத்து விட்டிருக்கிறது. அத்தனையும் பரிசுத்தம். மஞ்சம் புற்களின் ஈர வாசம் கிளர்வாய் இருதது. காமம் துளிர்விட்டது. வேக வேகமாய் இறங்கினேன். ரமணாசிரமத்தின் கம்பிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். ஒரு சிறு ஓடை உருவாகியிருந்தது. செம்மண் குழம்பலாய் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. வெளியில் வந்தேன்.

செங்கம் சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. ஆசிரமத்தின் எதிரிலிருக்கும் டீக் கடை திறந்திருந்தது. குளிருக்கு ஒரு டீ குடிக்கலாம். தெப்பலாய் நனைந்திருந்த என்னை கடையில் வித்தியாசமாய் பார்த்தார்கள். டீ சொன்னேன். சூடான அந்த டீயை வாங்கும்போதுதான் ஈரத்தில் விரல்கள் விரைத்திருப்பதைப் பார்த்தேன். சிறுவயதில் கிணற்றில் ஊறிக் கிடந்து வெளியே வரும்போது இப்படித்தான் கை விரல்கள் நமுத்திருக்கும். டீ யை வாங்கி ஊதி ஊதிக் குடித்தேன். ஒரே வார்த்தைதான். அமுதம். அந்த டீயில் ஏலக்காய் மணத்தது. ஸ்நேகமாய் கண்களை உயர்த்தி டீ மாஸ்டரைப் பார்த்து தலையசைத்தேன். அவர் புரிந்து கொண்டிருப்பார். இன்னோர் டீ போடவா எனக் கேட்டார். வேண்டாம் என தலையசைத்து விட்டு வெளியில் வந்தேன். கால்களில் செருப்பில்லாததை அப்போதுதான் உணர்ந்தேன். ஆசிரமத்தில் செருப்பை விட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் போய் எடுத்துக் கொள்வதற்காக சாலையை கவனிக்காமல் கடக்க முற்பட்டேன்.

ஏய் ஏய் ஏய் என்கிற குரல்கள் என்னைச் சூழந்தன. என்ன நடக்கிறது எனப் புரிவதற்குள் ஒரு பைக் எனக்கு அருகாமையில் வந்துவிட்டிருக்கிறது. அதன் ப்ரேக்குகளின் கதறலை ஈரச் சாலை கேட்கவில்லை. பேங்க் என மூளைக்குள் குரல் கேட்டது. என் அடிவயிற்றில் ஏதோ பலமாய் மோதியது. தூக்கி வீசப்பட்டேன். உடல் காற்றில் இருப்பதை உணர்ந்தேன். பைக்கை ஓட்டி வந்தவன் சறுக்கி விழுந்தான். அவன் பின்னால் அமர்ந்திருந்த பெண் பக்கவாட்டில் விழுந்தபோதுதான் கவனித்தேன். அவள் அங்கை. என் ப்ரிய அங்கை. என் மனைவி அங்கையற்கன்னி. கீழே விழுந்தபோது கையைத் தரையில் கவனமாய் ஊன்றிக் கொண்டேன். கையின் எலும்பு உடைந்திருக்கலாம். ரத்தம் வழிந்தது. சுதாரித்து எழுந்து கொண்டேன். விழுந்து கிடந்த அவர்களை நோக்கி ஓடினேன். அங்கையின் ஒரு கால் பைக்கிற்கு அடியில் மாட்டியிருந்தது. ஓட்டி வந்தவன் தலையை தரையில் இடித்துக் கொண்டதால் நினைவைத் தப்பி இருந்தான். ஓடிப்போய் பைக்கை தூக்க இன்னும் இரண்டு மூன்று கரங்கள் நீண்டன. அங்கை வலியில் முனகினாள். ஆறுதலாய் அணைத்துக் கொண்டேன். ஓட்டி வந்தவன் எழவில்லை. ஆட்டோவை யாரோ கை காட்டி நிறுத்தினார்கள். டீ மாஸ்டர் அவனைத் தூக்கி ஆட்டோவில் போட்டோர். ஏறுங்க எல்லாரும் ஆஸ்பத்திரி போலாம் என்றார். அங்கையின் கால் முட்டியிலும் கையிலும் ரத்தம் வழிந்தது. என் கையைத் தூக்க முடியவில்லை. ஏறினோம். அருகாமையில் இருந்த பெரியாஸ்பத்திரியில் போய் விழுந்தோம். பசியிலும் திகைப்பிலும் நான் மூர்ச்சையானேன்.

 கண் விழித்தபோது அங்கை எனக்கு அருகாமையில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை நிலைக்குத்தியிருந்தது. என் கையில் பலமான கட்டு  போடப்பட்டிருந்தது. அசைக்க  முடியவில்லை. அங்கையைப் பார்த்து புன்னகைக்க முயன்றேன். அவள் பார்வை இன்னும் தீவிரமானது. கண்களில் இருந்து நீர் வழிந்தது.

 "எனக்கு ஒண்ணும் இல்ல அங்க" என்றேன் பலகீனமாக.

 அங்கை பற்களைக் கடித்தபடி சொன்னாள். "நீ என் புள்ளிமான கொன்னுட்டடா"

நான் அதிர்ந்தேன். "என்ன, என்ன சொல்ற?"

 அவள் குரல் உயர்ந்தது அந்த ஆஸ்பத்திரியே திரும்பிப் பார்க்கும்படி கத்தினாள். "நீ என் புள்ளிமானக் கொன்னுட்டடா கொலகாரப் பாவி" என்றபடியே என் மீது பாய்ந்தாள். என் கழுத்தை நெருக்கினாள். மூச்சுத் திணறியது. கையை அசைக்க முடியாததால் அவளை விலக்கவும் முடியவில்லை. தொண்டை நசிந்தது. உயிர் பிரியும் கணத்திற்கான முன் நொடியில் யாரோ அவளை என் மீதிருந்து இழுத்து கீழே போட்டனர். நெஞ்சே வெடித்துவிடும்படி இருமினேன். அங்கையின் ஆக்ரோஷமான அழுகை அந்த பெரியாஸ்பத்திரியின் சுவர்களில் மோதியது. நான் மீண்டும் நினைவை இழந்தேன்.

 - மேலும்  

No comments:

Featured Post

test

 test