Sunday, April 9, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் ஒன்பது


கத்திய மாமுனியின் காதுகளில் வாத்தி என்றழைக்கப்பட்டவரின் வார்த்தைகள் கேட்டுக் கொண்டே இருந்தன. எவ்வளவு எளிமையாய் சொல்லிவிட்டார். தானென்ற அகம்பாவம் அத்தனையும் நொடிப்பொழுதில் பொடிப்பொடியாய் நொறுங்குவதைப் பார்த்தபடி அவரால் சமுத்திர ஏரிக்கரையில் அதிக நேரம் நிற்க முடியவில்லை. நர உடல் என்பதால் ஏராளமான அமிலங்கள் உடலில் சுரக்க ஆரம்பித்திருந்தன. எப்போதுமில்லாதபடி புதுப்புது உணர்வுகள் மேலெழுவதையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.  சாமியும் வாத்தியும் நுணா மரத்தடிக்காய் போன பின்பு, மாமுனி எதிரில் நின்றிருக்கும் பிரம்மாண்ட அண்ணாமலையைப் பார்த்தார். பிறகு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அடிவாரம் வந்ததும் மலையேறும் பாதை அவர் கண்ணிற்குப் புலப்படவில்லை. ஆனாலும் மலையுச்சியைத் தொடும் ஆவல் அவர் மனதில் சுரந்தது. காரைச் செடிகளும் கோரைப் புற்களும் பாறை இடுக்குகளில் மண்டிக் கிடந்தன. வழியில்லா வழியில் அவர் சிறு சிறு பாறைக் கற்களின் மீதேறி உச்சியை அடைய விரைந்து கொண்டிருந்தார். உடலும் மனமும் தகித்துக் கொண்டிருந்தது.


வாத்தி என அழைக்கப்பட்ட  நபர் போகர்தான் என்பதை ஆழமாக   நம்பினார். அவரால் மட்டுமே இப்படி பட்டுத் தெறிக்கும்படியான   அறிதலை தந்துவிட முடியும். இத்தனை வருட அலைவிற்குப் பிறகு  நிகழ்ந்த திறப்பிது. அடேயப்பா! அகத்திய மாமுனி அந்தத் திறப்பு   நிகழந்த நொடியை நினைத்து  நினைத்து மருகினார். ”ஓரிதழ்ப்பூ ஒரிதழ்ப்பூ” என அவர் உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன. அந்தச் சொல் உதட்டில் இருந்து வெளிப்படும்போது நடையின் வேகம் கூடியது. காரைச் செடிகள் அவர் பாதத்தையும் கால்களையும் பதம் பார்த்தன. ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாவும்போது அவர் கணுக்கால் சிக்கி உயிரைப் பிழியும் வலி ஏற்பட்டது. மாமுனி அவரின் ஆயிரம் வருடத்திற்கு மேற்பட்ட வாழ்வில் முதன்முறையாய் ”அம்மா” என முனகினார்.

மாமுனியின் வேதனையும் ஆற்றாமையும் தன் ஸ்கந்தாசிரமக் குளிர் கல் வீட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாய் உறங்கிக் கொண்டிருந்த ரமணரை எழுப்பியது. தன் நெடியத் தூக்கத்தை ஒரு சிறு கொட்டாவியால் உணர்த்தியபடி, அவர் நெடுந்துயில் கொண்டிருந்த அறையின் மிகச் சிறு நுழைவாயிலில், தன் உருவத்தை இரண்டாய் மடித்து வெளியே வந்தார். கமண்டலத்தையும் கைத்தடியையும் எடுக்க மறந்ததை உணர்ந்து திரும்பி நின்று வாயிலைப் பார்த்தார்.  நூற்றைம்பது வயதான அவரின் வளர்ப்புக் காகம் சற்றுத் தளர்வாய் இரண்டையும் அலகினால் கவ்விக் கொண்டு வந்து தந்தது. கைத்தடியை ஊன்றி மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தார். பத்தடி நடந்து சென்று அங்கிருந்த பெரிய பாறை ஒன்றின் மீது ஏறி நின்றார். வெயிலை உள்ளங்கையால் விலக்கி, அகத்தியரை இடுக்குகளில் தேடினார்.  

தென்படாது போகவே அகத்தியா எனப் பெருங்குரலெடுத்து கத்த முயன்றார். தொண்டையிலிருந்து காற்றுக் கூட வரவில்லை. மீண்டும் காகத்தை திரும்பிப் பார்த்தார். அது பறக்க ஆரம்பித்தது. மலைச்சரிவில் கிடந்த பாறை இடுக்கில் மாமுனி சிக்கிக் கொண்டிருந்தார். அவரால் எழ முடியவில்லை. காகம் அவர் அருகில் சென்று "காக்" என்றது. முன்பொரு காலத்தில்  கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்த நதியைத் தட்டி விட்ட அதே காகமாக இருக்குமோ? என்கிற சந்தேகத்தோடும் எரிச்சலோடுமாய் 

”என்ன?” என்றார். 

இரமணர் நின்றிருந்த பாறைக்காய் தலையை உயர்த்திக் காட்டி 

”அங்கே பார்” என்றது. 

மாமுனியால் நம்ப முடியவில்லை. அன்று வரை இரமணரை ஒரு சாமியார் என்ற அளவில் மட்டுமே பார்த்து வந்திருந்தார். அவரும் தம்மைப் போல காலங்கள் கடந்து வாழும் சித்தர் என்பதை அறிந்ததும் அவர் உள்ளம் உவகை கொண்டது. ஆ! ரமணா என்னை இரட்சித்தாயா? என்றபடியே  எழுந்து அவரை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

மாமுனியை ஆரத்தழுவிக்கொண்ட ரமணர், தன் வீட்டிற்கு அழைத்துப் போனார்.  போனதுமே ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒருவர் மட்டுமே அமர  இயலும்  அந்தக் குறுகிய பொந்தில்  மாமுனி உடல் நீட்டிப் படுத்து விட்டார். அடுத்த நொடியே ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். ரமணர் செய்வதறியாது வீட்டை ஒட்டி இருக்கும் அருவியைப் பார்த்து வரச் சென்றார். அங்கே மிகப் பிரம்மாண்டமாய் பாறை மட்டும் நின்று கொண்டிருந்தது. முன்பொரு  காலத்தில்  அங்கே  ஓர் வற்றாத அருவி இருந்தது என்பதற்கான  தடயம்  கூட அப்பாறையில்  இல்லாததுகண்டு சிறிது நேரம்  மனம் வெதும்பி நின்றார்.  

அந்தப் பக்கமாய் போன ஓர் ஆன்மீக பக்தர். 

“பெரிஸு தள்ளி நில்லு, வூந்திர கீந்திரப் போற” என தன் அன்பைச் சொல்லிச்  சென்றார். 

அநிச்சையாய் ரமணரின் பாதங்கள் இரண்டடிப் பின்னால் நகர்ந்தன.

திரும்பி வந்தபோது, மாமுனி எழுந்து அமர்ந்து காகத்துடன் பேசிக் கொண்டிருந்தார். 

”என் கமண்டலத்தைத் தட்டி விட்ட காகம் உனக்கு என்ன முறை வேணும்?” 

எனத் திரும்பத் திரும்ப அவ்வயோதிக காகத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார். அருகில் வந்த இரமணர் தொண்டையை கனைத்துக் கொண்டு, 

“இந்தப் பயல் அந்தப் படத்தைப் பார்க்காததால் விவரங்கள் தெரியல” 

என மெல்லமாய் சொன்னார்.

சமாதானமான மாமுனி, பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு  

”பசிக்குது சாமி” என்றார்.

ரமணர், காகத்தை அதே மாதிரிப் பார்க்க, சலிப்பை வெளிக்காட்டிக்கொல்லாமல் அது பறந்தது. ஐந்து நிமிடம் கழிந்து இவ்வளவுதான் கிடைத்தது என்பது போல் இரண்டு மாம்பழங்களை மாமுனியின் முன்னால் கொண்டு வந்தது போட்டது.

மாமுனி பாய்ந்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டதை ரமணர் சலனமில்லாமல் பார்த்தார். 

சரி எனச் சொல்லி மெல்ல எழுந்து சென்று அவர் வீட்டிற்குள் ஒடுங்கிக் கொண்டார்.

உச்சி வெயில் தகிக்க ஆரம்பித்தது. பாறைகள் வெயிலை வாங்கி, இருமடங்காய் திரும்பத் தந்து கொண்டிருந்தன. மாமுனி அருவிப் பாறைக்காய் நடந்து போனார். மஞ்சப் புற்கள் மண்டியிருந்த புதர் ஒன்று பாறைக்கடியில் நிழலாய் இருந்தது. அங்கு போய் ஒடுங்கிக் கொண்டார். மீண்டும் நித்திரையில் ஆழ்ந்து போனார்.

கத்திய மாமுனி மீண்டும் கண் விழித்தபோது இரவாகியிருந்தது. பசியும் சோர்வும் அவருடலை வதைத்தன. எழுந்து நின்றார். கணுக்கால் விண்ணென வலித்தது. கமண்டலம் காலுக்கடியில் கிடந்தது. காகத்தின் கருணையாக இருக்கும். தன் சக்திகளை மீட்டுக் கொண்டு மீண்டும் பொதிகைமலைச் சாரலுக்கு போய் விடலாமா என யோசித்தார். பின்பு ’ஓரிதழ்ப்பூ’ என்கிற சொல் அடிமனதிலிருந்து மேலெழுந்து வந்தது. வேண்டாம் என்பது போல் தலையை அசைத்து மறுத்தவராய் மெல்லப் புதரிலிருந்து வெளியே வந்தார். மலைச்சரிவிலிருந்து பார்க்கையில் கீழே திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.  மேகங்களற்ற வானில் நிலா பெரும் வெளிச்சத்தை அம்மலைச்சரிவிற்குத் தந்துகொண்டிருந்தது. முழு நிலவிற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருக்கும் போல. கோடை கால நிலவின் குளுமை அந்தத் தகித்த பகலுக்குச் சற்று ஆசுவாசம் தந்தது.

சிறிது தூரம் நடந்ததும் கையில் வைத்துக் கொண்டிருந்த கமண்டலத்தைப் பார்த்தார். இதை ஏன் சுமந்து கொண்டிருக்கிறோம், என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. வெறுமனே வீசாமல் தன்னுடைய அத்தனை அறிதலையும் சக்திகளையும் ஞானத்தையும் கையிலிருந்த சிறு  கமண்டலத்தில் அடைத்து எறிந்துவிட முடிவு செய்தார்.  அங்கனமே அகத்திய மாமுனியின் சர்வமும்   கமண்டலத்திற்குள் போனது.  அருகிலிருந்த பாறை     உச்சிக்குப் போய் கமண்டலத்தைக் கீழே எறிந்ததும் பசியால்  துவண்டார். அவரது ஒடிசல் உடம்பில் சோர்வு அடையென மண்டியது. தளர்ந்து போய் பாறையின் மீதிருந்து  கீழிறங்கினார். மெல்ல நடக்க ஆரம்பித்தவரின் கால்களை  ஏதோ இடற  தடுமாறி விழப்போய்   நின்றார். குனிந்து பார்த்தால், அவரது கமண்டலம்.  

மாமுனி வெளிறினார். 

ஐயோ இது என்னை விடாது போலிருக்கிறதே 

எனப் புலம்பியபடியே விரைந்து நடக்க ஆரம்பித்தார்.  மரங்கள் அடர்ந்த அப்பகுதியில் இருள் முழுமையாக   சூழ்ந்திருந்தது.  மலைச்சரிவாக இருந்ததால் சிரமமின்றி வேகமாக நடக்க முடிந்தது. நடக்க நடக்க கமண்டலம் மென் சப்தத்தோடு  அவரைத் தொடர்ந்தது. அச்சப்தம் அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஓட ஆரம்பித்தார்.  

பாதையில் இடறும் சிறு  பாறைகளின்  மீதேறி குதித்தும்  விரைந்தும் மாமுனி  கீழே  இறங்கிக் கொண்டிருந்தார்.  கமண்டலம் உருளும்  ஓசை அந்த முன்னிரவில் மிகத் துல்லியமாய் அவர்    காதில் விழுந்து கொண்டே  இருந்தது. 

அவர் அந்த ஓசையிலிருந்து தப்பிக்க விரும்பினார். பறந்தே பழகிய  அவர்  உடல் வெகுதூரம்   ஓட அனுமதிக்கவில்லை.  மேலும்  செங்குத்தான சரிவை வந்தடைந்த போது  சறுக்கி   விழுந்தார்.  சற்று தூரம் உருண்டு எழுந்து ஓடினார். மனதிற்குள் “ரமணா காப்பாற்று”   எனக் கத்தினார். விருபாட்சிக் குகையை தாண்டிய பிறகு கமண்டலம் உருளும் ஓசை நின்று போனது.  மாமுனியின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. 

 ரமணர் குகைத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து விட்டிருக்க வேண்டும். ”நல்லது நண்ப” என மாமுனி மனம் ததும்பினார். அடுத்த அரைமணி நேரத்தில் மாமுனி திருவண்ணாமலை நகரத்திற்குள் பிரவேசித்தார். 

பே கோபுரத்தை ஒட்டிய  ஒரு சாப்பாடுக் கடையின் முன்பு போய் நின்றார். பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த பெண்மணி எதுவும் பேசாமல் எழுந்து, கடைக்குள் போய் ஒரு இலையில் இரண்டு தோசைகளை வைத்து சட்னி ஊற்றித் தந்தார். நின்றபடியே தொசையைப் பிட்டு வாயில் அவசர அவசரமாகப் போட்டுக் கொண்டார். மாமுனியின் ஆயிரம் ஆண்டு வாழ்வில் அருந்தும் முதல் நர உணவு. வயிறு நிறைந்ததும் அமிர்தம் அற்பம் என்பதை உணர்ந்தார். மானிட வாழ்வு தரும் ஆனந்தத்தை மிக ஆதாரப்பூர்வமாக உணர்ந்தார். 


”யோவ் ரமணா நீ அப்பளப்பாட்டு எழுதியில் தப்பில்லையா”

என வாய்விட்டு சொல்லியபடியே மிக உற்சாகமாய் இலையை வீசிவிட்டு கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார்.


- மேலும்


No comments:

Featured Post

test

 test