Monday, April 17, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பனிரெண்டு


காலைச் சூரியன் சுட்டெரித்து எழுப்பியது. நேற்று முன்னிரவில் இங்கே வந்து விழுந்தவன் தான். மொட்டை மாடியில் காய்ந்த வேப்பம் பூக்கள் சிதறிக்கிடந்தன.தலையணையும் ஒரு போர்வையும் அருகில் கிடந்தது. அந்த சாமியாருக்கு உணவு கொண்டு வந்தவள். ஐயோ என்ன மாதிரிப் பெண் அவள்... அம்மன்... சாமியேதான். நினைக்க நினைக்கப் பயமாக இருந்தது. நேற்றிரவு மூச்சிரைக்க ஓடிவந்து நேராய் மாடிக்குப் போய் படுத்துக் கொண்டதை அங்கையற்கன்னி பார்த்தாள். ஆனால் பார்க்காதது மாதிரி இருந்தாள். எப்போது இந்த தலையணையும் போர்வையும் இங்கு வந்ததெனத் தெரியவில்லை. கீழிறங்கி வந்தேன். வீடு அப்படி ஒரு மெளனத்தில் இருந்தது. அம்மா இல்லை. இவள் அடுக்களையில் மும்முரமாக இருந்தாள் அவசரமாகப் போய் குளித்துவிட்டு உடைகளை அணிந்து கொண்டேன் . அங்கை கேட்டுக் கொண்டதால் பேருக்கு டேபிளில் வைத்திருந்ததைக் கொரித்துவிட்டு வெளியேறினேன். சுவாசம் சீரானதைப் போல் பட்டது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். வழக்கமாகப் போகும் பஸ்ஸில் ஏறவில்லை. மயிர்புடுங்கி ஸ்கூலு என வாய்விட்டுசொல்லிக் கொண்டேன். சட்டைப் பாக்கெட்டில் நூறு ரூபாய் இருந்தது. அங்கையாய் இருக்கும். சட்டென ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

“போடாங்கோத்தா” என வண்டியில் விரைந்த எவனையோ சத்தமாய் திட்டினேன். வழக்கமாகப் போகும் மூத்திர பாருக்காய் நடக்க ஆரம்பித்தேன். இந்த ஏப்ரல் மாதத்தைக் கடந்து விட்டால் போதும். மே மாதம் முழுக்க வேலைக்குப் போக வேண்டியதில்லை. மனம் மிக உற்சாகமாக இருந்தது. காலை வெய்யிலுக்கு உடல் வியர்த்து வழிந்தது. பார் இன்னும் திறந்திருக்க வில்லை. பத்து மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. சலிப்பாய் சாலையோர புளிய மரத்தடிக்கு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். புகையை ஊதியதும் முதுகிற்குப் பின்னாலிருந்து ஒரு குரல் ஒலித்தது. மிக மென்மையான ஒரு குரல்.

“கொஞ்சம் அந்தப் பக்கம் போய் புடிக்கிறீங்களா?”

 திரும்பிக்கூடப் பார்க்காமல் சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தேன். தலைகுனிந்தபடி நகர நினைத்தவனை மீண்டும் அக்குரல் தடுத்தி நிறுத்தியது.

 “ஏய் ரவி ”

 துணுக்குற்றுத் திரும்பி நிமிர்ந்து பார்த்தேன். ரமா நின்று கொண்டிருந்தாள். காலத்தின் எந்த ஒரு அசெளகரியமும் அவளிடமில்லை. சொல்லப்போனால் காலம் அவளை இன்னும் அழகாக்கி விட்டிருந்தது. ரமா என்னோடு ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிக் கடைசி வருடம் வரை ஒன்றாகப் படித்தவள். கடைசி வருடத்தின் தேர்வுகள் கூட எழுதாமல் நல்ல வரன் கிடைத்ததென்று திருமணம் செய்து கொண்டுப் போனவள். எனக்கிருந்த ஒரே தோழி. எனக்கிருக்கும் இந்தப் பூ பைத்திய நினைவுகளின் காரணகர்த்தா.

 இல்லையென மறுத்து விட்டு நகர்ந்துவிட நினைத்தும், புன்னகையையும் ஆச்சரியத்தையும் என்னாலேயே கட்டுப்படுத்த இயலவில்லை.

” எப்படி இருக்க?”  எனக் கேட்டுவிட்டேன்.

“ பாத்தா எப்படி தெரியுது?” எனப் பளிச்சென சிரித்தாள்.

 அவள் அணிந்திருந்த வெளிர் நீலப்புடவை வெயிலில் மினுமினுத்தது. குட்டைக் கூந்தலின் சில முடிகள் கழுத்து வியர்வையில் ஒட்டிக் கொண்டிருந்தன. சின்னக் கண்கள் மினுங்க நெற்றி சுருக்கி என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். என் காலடியில் உலகம் நழுவுவது போலிருந்தது. மெல்ல மீண்டு,

 "நீ இங்க என்ன பன்ற?" என்றேன்.

 "இதென்ன கேள்வி இது என் ஊர்" என்றாள்.

 அம்மா பஸ் வந்திடுச்சி என்றபடியே ஒரு சிறுமி ஓடி வந்தாள். எங்களுக்கு அருகில் ஒரு தனியார் பள்ளிப் பேருந்து வந்து நின்றது. இவதான் என் பொண்ணு மலர் எனச் சொல்லிக்கொண்டே அவளைத் தூக்கிப் பேருந்தில் ஏற்றி விட்டாள். பேருந்து நகர்ந்ததும் குழந்தை எனக்கும் சேர்த்துக் கை அசைத்தது. புன்னகையுடன் கை அசைத்தேன். எனக்காய் திரும்பியவள்,

 “நாம பேச எக்கச்செக்க கத இருக்கு எங்கயாச்சிம் போய் உட்காரலாமா” எனக் கேட்டாள். எனக்குத் திகைப்பாய் இருந்தது. எங்கு அமர்ந்து பேசுவது எனத் தெரியவில்லை. இந்த தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்து விடும் நோக்கில்,

எனக்கு ஸ்கூல் என இழுத்தேன்.

 ”எதா இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு தள்ளிப்போடு இப்ப என்னோட வா” என்றாள்.

அவளோடு சேர்ந்து நடக்க கூச்சமாக இருந்தது. எல்லா முகங்களும் தெரிந்த முகங்கள்.

“நான் சாயந்திரம் வீட்டுக்கு வரேன். நீ இப்ப போ” என்றேன்

”நான் ஊருக்கு வந்து ஒரு மாசமாச்சு உன்னப் பாக்க ரெண்டு மூணு சாயந்திரம் உங்க வீட்டுக்கு வந்து போனேன் உனக்கு நடுராத்திரிதான் சாயந்திரமாமே அப்படியா?”

”ஓ  அம்மா என்கிட்ட சொல்லவே இல்லையே”

”நீ மரியாதையா இப்ப என்னோட வா”

”வீட்டுக்கு வேணாம் ரமா, நான் ரமணாசிரமம் போறேன். நீ அங்க வந்துடு”

”சரி நான் வீட்டுக்கு போய் வண்டி எடுத்து வர்ரேன். இங்கயே நில்லு . சேர்ந்து போய்டலாம்.”

”ஒண்ணும் வேணாம் நான் போறேன். நீ பின்னால வண்டில வா”

என்றதற்கு சிரித்தாள்.

“ஏண்டா இப்படி பயப்படுற. உன் பொண்டாட்டிகிட்ட போய் யாராச்சும் ஏதாச்சும் சொல்லிடுவாங்களா?”

என்றவளை முறைத்துவிட்டு “சீக்கிரம் வந்து சேரு” என்றபடி நடந்தேன்.

பள்ளி விடுமுறை நாட்களில்  என்னுடைய  சைக்கிளில் ரமா வை உட்கார வைத்துக் கொண்டு ரமணாசிரமம் போவேன்.  ஆசிரமம் தான் எங்களின் வியப்புகளை இரட்டிப்பாக்கும் இடம். மயில்கள், குரங்குகள், நாகலிங்கப் பூ, பாதம் கொட்டைகள், மாங்காய் என ஒவ்வொன்றுமே ஓர் அபூர்வ நினைவாக இன்றுத் தங்கிப்போனது. ரமா என் கண் முன்னால்தான் பருவமடைந்தாள். ஓர் மழைநாளில் சைக்கிளிலிருந்து சிறுவர்களாய் வழுக்கி விழுந்த நாங்கள் எழும்போது எங்கள் பால்யத்தைத் தொலைத்துவிட்டு எழுந்தோம். ஆனாலும்  எப்போதும் போலத்தான் இருந்தோம். என்னோடு சைக்கிளில் ஆசிரமம் வருவதற்கு பதிலாய் அவள் சைக்கிளில் தனியாக வந்தாள். மற்றபடி எங்கள் வீடுகள் இருவருமே புழங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்தன. மேலதிகமாய் அப்போது நான் அமுதா அக்காவின் மீதுதான் காதல் வயப்பட்டிருந்தேன். சீக்கிரம் வளர்ந்து  அமுதா அக்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்ததே தவிர கூடவே இருந்த ரமாவின் மீது ஈர்ப்பு வரவில்லை.

அமுதா அக்காவின் திருமணத்தன்று நான் ரகசியமாய் அழுதேன். பெண், காதல் குறித்தெல்லாம் புதிய திறப்புகள் அப்போது நிகழ்ந்தன. நண்பர்கள், விளையாட்டு, படிப்பு என வெவ்வேறு விஷயங்கள் உள்ளே வர அமுதா அக்காவை மறந்தே போனேன். பதினோராம் பனிரெண்டாம் வகுப்புகளில் சக மாணவர்கள் என்னையும் ரமாவையும் இணைத்துக் கிசுகிசுப்பார்கள் அதை உள்ளூர நான் ரசித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. சில நேரிடையான கிண்டல்களுக்கு கோபத்தை மறுப்பாய் வைத்தேன்.  ரமாவும் அப்படித்தான் இருந்தாள் என நினைக்கிறேன். திடுதிப் பென்று அவள் போனது சில நாட்கள் பித்துப் பிடிக்க வைத்தது. ஒருவேளை நான் ரமாவைக் காதலித்தேனோ என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்போது  ’நட்பு வேறு காதல் வேறு’  ’நட்பு காதலை விட புனிதமானது’  ’தோழியைக் காதலிப்பது பாவம்’  என்றெல்லாம் போதிக்கும் தமிழ் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலம். அதையெல்லாம் பார்த்திருந்த நான் மீளமுடியாக் குற்ற உணர்வில் கிடந்தேன்.

சோக ஒலிப் பின்னணியில் ’என் நட்பை அசிங்கப்படுத்திட்டியேடா’ என ரமா கலங்கிய கண்களோடும் கலைந்தத் தலைமுடியோடுமாய் அலறும் கனவெல்லாம் கண்டு விழித்துக் குற்ற உணர்வை இரட்டிப்பாக்கிக் கொள்வேன். பின்பு அவள் என் தோழி மட்டுமே ஒருபோதும் காதலிக்கவில்லை என திரும்பத் திரும்ப மனதிடம் கூறி இழந்த என் புனிதத்தை எனக்கு நானே மீட்டுக் கொண்டேன்.

நடக்கும்போது இந் நினைவுகள் மேலெழுந்து புன்முறுவலை வரவழைத்தன. ரமாவின் திருமணத்திற்கு நான் போகவில்லை. அம்மாதான் போய் வந்தாள். ஒருவேளை நான் ரமாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தாள் எல்லாமும் சரியாக இருந்திருக்கும் எனத் தோன்றியது.  எவ்வளவு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறேன் என்பதை யோசிக்க யோசிக்க ஆத்திரமும் இயலாமையும் ஒரு சேர எழுந்தது. அப்படியே திரும்பி ஒயின் ஷாப்பிற்கு போய் மூக்கு முட்டக் குடிக்கும் எண்ணம் தோன்றியது. ஆசிரம வாசலுக்கு வந்துவிட்டிருந்தேன்.  எனக்கு முன்னால், வண்டியை நிறுத்திவிட்டு நுழை வாயிலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். மெதுவாக தலையசைத்து  வா என்றாள்.

எழுந்த பெருமூச்சை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளோடு நடந்தேன்.

“இங்க எல்லாமே மாறிடுச்சி இல்ல?” என்றாள்.

எனக்குப் பெரிதாய் மாற்றம் ஒன்றும் நிகழ்ந்திருப்பதாய் தோன்றவில்லை. இருந்தாலும் ம் என்றேன்.

நாகலிங்கப் பூ மரத்தைக் கடக்கையில் இது மட்டும் அப்படியே இருக்கு, இந்தப் பூவும் வாசனையும் என்றபடியே கீழ விழுந்து கிடந்த சிலப் பூக்களை குனிந்து எடுத்தாள். இரண்டைத் தலையில் வைத்துக் கொண்டாள்.  ஒருப் பூவைக் கையில் வைத்து முகர்ந்தாள்.

“ஹப்பா மயக்குது டா” என்றாள்.


சிரிப்பு வந்தது.  அவளிடம் அதே பாவணை. அதே வியப்பு.

”நீ மார்கோ சோப் மாதிரி ரமா, மாறவே இல்லை.”

”ம்ம் அதான் எனக்கும் சேத்து நீ மாறி இருக்கியே.  என்னடா ஆச்சு உனக்கு?”

”ஓ, நீ எனக்கு அட்வைஸ் பண்ணதான் இங்க வர சொன்னியா? சரி நான் கிளம்புறேன்”

”அட்வைஸ்லாம் இல்ல எரும, உன் மூஞ்ச ஒடைக்கதான் வர சொன்னேன்”

கோபத்தில் அவள் முகம் சுருங்கி இன்னும் சிறியதாகிருந்தது. நெற்றியைச் சுருக்கியதில் புருவம் இணைந்து கொண்டது. அவளை அப்படிப் பார்க்க சிரிப்பு வந்தது. பதில் எதும் சொல்லாமல் நடந்தபடியே ஆசிரமத்தின் பின்புறம் போனோம். முன்பு பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த ஆசிரமத்தின் மருத்துவ சாலை பூட்டிக் கிடந்தது. இரமணர் வளர்த்த காகம் மற்றும் பசுவின் சமாதிக்கு அருகில் அமர்ந்தோம். ஆலமரங்கள் மிகப் பெரிதாய் வளர்ந்துவிட்டிருந்தன.

பேச்சை ஆரம்பித்தாள்.

”ரவி, நீ மனச விட்டு சொல்லு உனக்கு என்னப் பிரச்சின? அந்தப் பொண்ணு அவ்ளோ அழகா இருக்கா, பாக்கவும் ரொம்ப அமைதி,  அப்புறம் என்னடா உனக்கு பிரச்சின?”

”அதான் பிரச்சின”

”எது?”

”அழகா இருக்கிறது”

”நீ என்ன பைத்தியமா?”

”ஆமா. இத விடு ரமா. வேற பேசுவோம். நீ எப்போ வந்த இங்க? எங்க உன் புருசன்?”

”அவருக்கு சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்கு. போய் செட்டிலாகி அப்புறம் எங்கள கூட்டிப்பார். எப்படியும் ஆறு மாசம் ஆகும் ”

”ம்ம்”

”நான் நல்லாருக்கண்டா. உன்ன இப்படி பாக்கதான் கஷ்டமா இருக்கு”

...

”நான் இன்னொன்னு சொல்றேன் ரவி கேக்குறியா?”

”ம்ம்”

”உனக்கு அவளப் புடிக்கலனா அவகிட்ட பேசி சரிபண்ண முடியுமா பார். இல்ல ஒத்துவரலனா, சட்டப்படி பிரிஞ்சிட்டு வேற வேலய பார். குடிச்சிட்டு ஊர சுத்துறது எப்படிடா சரியாகும்?  கேட்கவே கொடுமையா இருக்கு. நீ எவ்வளவு நல்லவன் தெரியுமா ரவி”

அவள் பேசப்பேச உள்ளுக்குள் உடைந்தது. இங்கிருந்து ஓடிவிட வேண்டும், மட்டையாகும் வரை குடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

”அவ பாவம் ரமா, என் பிரச்சினைக்காக அவ வாழ்க்கைய ஏன் கெடுக்கனும்”

”இப்ப மட்டும் அவ வாழ்க்கைய கெடுக்காமயா இருக்க. நீ போனா இன்னொருத்தன் வருவான். அவன் கூட அவ சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே”

”சரி அப்ப நீ பேசு. அவளுக்கு சம்மதம்னா டைவர்ஸ்க்கு அப்பளை பண்ணலாம்”

”ரைட் நான் பேசுறேன், ஆனா உன் பிரச்சின என்னன்னு எங்கிட்டயாச்சும் சொல்லேன்”

”உங்கிட்ட சொல்ல முடியாது ரமா”

”ஏண்டா உனக்கு அவளோட செக்ஸ் வச்சிக்க முடியலயா? உடம்புல ஏதாச்சும் பிரச்சினயா?”

நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.

“அவ மோகினி ரமா. அவ உடம்புல பூப் பூக்குது. உன்ன மாதிரியே”

”என்ன மாதிரியா? என்னடா உளற்ற”

”அன்னிக்கு நீ சைக்கிள்ள இழுந்து விழுந்து ஏஜ் அட்டண்ட் பண்ண தெரியுமா? அப்பதான் உன் கால் நடுவுல இருந்து பூ பூத்தத பாத்தேன்”

”ரவி என்னடா ஏதேதோ பேசுற. ப்ளட் வந்ததுடா. அவ்வளவுதான். இந்த உலகத்துல இருக்க எல்லா பெண்களுக்கும் கருப்பை வளர்ச்சியை தெரிவிக்கிற ஒரு சிம்ப்டம். அவ்ளோதான் விஷயம். அங்க பூ பூக்குது அது இதுன்னு உளறாதே”

”நான் பாத்தேன் ரமா. உனக்கும் அங்கைக்கும் ரத்த கலர்ல அந்த இடத்துல பூ பூத்தது. நான் ஒவ்வொரு முறையும் அங்கையோட மேட்டர் பண்ண ட்ரை பண்ணும்போதெல்லாம் அந்த பூ குறுக்குல வருது”

ரமா அதிர்ச்சியை மறைத்துக் கொண்டது தெரிந்தது.

”ஏதாவது டாக்டர பாக்கலாமா ரவி?”

”என்ன பைத்தியம்னு சொல்றியா?”

”இல்லடா இது ஏதாவது போபியா வா  இருக்கலாம். சீக்கிரம் சரி பண்ணிடலாம் டா “

”இல்லடி வேற பொண்ணுங்ககிட்ட இந்த பிரச்சின இல்ல.”

அதற்கு மேல் ரமா ஒன்றும் பேசவில்லை.

”சரி வா போகலாம் பாப்பா ஸ்கூல்ல இருந்து வந்துருவா”

என்றபடியே எழுந்தாள்.

நானும் எழுந்து கொண்டேன். எங்கள் பொதுவான நண்பர்கள் குறித்துப் பேசிக்கொண்டோம். யார் யார் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்கிற தகவல்களை அடுக்கிக் கொண்டு வந்தாள். எனக்கு ஒருவர் குறித்து கூடத் தெரிந்திருக்கவில்லை.

“நீ ஏண்டா யார்கூடயும் காண்டாக்ட்ல இல்ல”  எனக்கேட்டதற்கு பதில் சொல்லத் தோன்றவில்லை.

“அப்படியே இருந்துட்டேன்” எனச் சொல்லி சிரித்தேன்.

முறைத்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள்.

“நான் போறேன். நீ சாயந்திரம் அஞ்சடிச்சா வீட்ல இருக்கனும். நான் ஆறு மணிக்கு வருவேன். ஒருவேள நீ இந்த விஷயத்த அவகிட்ட சொன்னா சரியாகும்னு நினைக்கிறேன். எல்லாம் சரி பண்ணிடலாம்  நீ தயவு செஞ்சி குடிக்காதே. சரியா ” என்றாள்

மெல்லக் கை அசைத்துச் சிரித்து சரி என்றேன்

இன்னும் கொஞ்ச நேரம் அவளோடு இருந்திருக்கலாம் என ரமா போனபிறகுத் தோன்றியது.

- மேலும்




No comments:

Featured Post

test

 test