Wednesday, April 19, 2017

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் பதிமூன்று

கத்திய மாமுனி எங்கெங்கோ அலைந்து திரிந்து இரமணாசிரமம் வந்துச் சேர்ந்தபோது அதன் கேட்டை சாத்தியிருந்தார்கள். சாலையை ஒட்டி இருக்கும் எல்லாக் கடைகளும் ஏற்கனவே அடைந்திருந்தன. என்னச் செய்வதெனத் தெரியாமல் திகைத்த மாமுனிக்கு யோகி ராம்சுரத் குமார் நினைவு வந்தது. அவரின் ஆசிரமத்திற்காய் நடக்கத் துவங்கினார். பத்தடி நடந்ததும் குழம்பினார். அவருக்கு யோகியின் இருப்பிடம் தெரியவில்லை. இரவு மங்கலான வெளிச்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. நினைவில் யோகியின் சுருட்டுப் புகை வாசனையைக் கொண்டு வந்துவிட்டால் போதும், அந்த வாசனையே இடத்திற்குக் கூட்டிப் போய்விடும். சாமி மூக்கை ஆழமாய் உள்ளிழுத்தபடி நடந்து கொண்டிருந்தார்.

வேப்பம் பூக்களின் மணம் காற்றில் அடர்ந்திருந்தது. அந்த இறக்கமான தெரு, கரடுமுரடாக இடறியது. மாமுனி சற்றுத் தடுமாறித்தான் நடந்துக் கொண்டிருந்தார். திடீரென வேப்பம்பூ வாசனை மாறி மல்லிகைப் பூவின் மென் வாசம் நாசியைத் தீண்டியது. சன்னமான கொலுசொலி கேட்டது. சாமி நின்றுவிட்டார். எதிரில் துர்க்கா வந்து கொண்டிருந்தாள்.

நிலவொளி சரியாக அவள் முகத்தில் இறங்கியதில் அணிந்திருந்த மூக்குத்தி நடையின் அசைவிக்கேற்ப மின்னி மின்னி மறைந்தது. மாமுனி அவ்வெளிச்ச அசைவைப் பார்த்தார்.  உதடுகள் தாமாக ஓரிதழ்பூ ஓரிதழ்பூ என முணுமுணுக்க ஆரம்பித்தது. விழிகள் துர்க்காவின் மீது நிலைக்குத்தின. என்ன செய்கிறோம் என்பதை சுத்தமாய் மறந்திருந்தார். அவர் கால்கள் உடலை இழுத்துக் கொண்டு போய் துர்க்காவின் முன் நிறுத்தின.

துர்க்கா அதட்டினாள். யாரு?

மாமுனி எதுவும் பேசவில்லை

அட நவுருஎன அவரை கைகளால் நகர்த்திப் பார்த்தாள் முடியவில்லை

மாமுனி அவள் முன் சிலை போல நின்றிருந்தார்.

இரண்டடிப் பின் வாங்கிய துர்க்கா மாமுனியை நிமிர்ந்து பார்த்தாள்.

மாமுனியின் விழிகள் அவளை என்னவோ செய்தன.

உடன் வந்த சிறுமிக்காய் திரும்பி

பாப்பா நீ வூட்டுக்கு போ நா வந்திர்ரேன்என்றாள்

சிறுமி, சீக்கிரம் வா என சலித்துக் கொண்டே இருவரையும் விலக்கி முன் நடந்தாள்.

துர்க்கா மாமுனியின் கைகளைப் பற்றி

வா போலாம்என்றாள்.

துர்க்கா கைகளைப் பிடித்த தருணத்திலேயே மாமுனியின் உடல் குளிர்ந்துவிட்டது. தன்னை முழுவதுமாய் மறந்துவிட்டு அவளோடு நடந்தார். பிடித்த அவர் கைகளை விடாமல் பிரதான செங்கம் சாலைக்கு வந்தாள். மலை சுற்றும் பாதைக்காய் நடக்க ஆரம்பித்தாள். உறங்க ஆரம்பித்திருந்த ஹவுஸிங் போடிற்குள் நுழைந்து மலையும் குறுங்காடும் துவங்கும் பகுதிக்காய் நடந்தாள். நிலவு அவர்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கால்களில் காரைப்பழச் செடியின் சுள்ளிகள் இடறின. மழைக்காலங்களில் தண்ணீர் வரும் சிறு ஓடையில் மணல் நிறைந்திருந்தது. அவ்வோடையில் நடக்க ஆரம்பித்தாள். மாமுனியால் உடன் நடந்து வர இயலா வண்ணம் பாதை இருந்தது. கிட்டத்தட்ட துர்க்கா அவரை இழுத்துக் கொண்டு போனாள். மலை துவங்கும் இடத்திலிருந்த பெரும் பாறைக்கடியில் போய் அமர்ந்தாள். நிலவால் பார்க்க முடியா இருட்டு அங்கிருந்தது. அதைத் தேடித்தான் இவ்வளவு தூரம் வந்தாள். மேலும் அந்த இருள் அங்கிருக்கும் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. நிதானமாய் தன் உடைகளை விடுவித்தாள். பய பந்து ஒன்று வயிற்றிலிருந்து மேலெழுவதை மாமுனி உணர்ந்தார். 

அந்தக்காரத்தில் அவளின் நிர்வாண உடல் கரைந்தது. வா எனக் கை நீட்டினாள். மாமுனி நடுங்கியபடி அவள் உடல் மீது பாய்ந்தார். அவரின் உடல் வியர்வையில் குளித்திருந்தது. குருட்டு வெளவாலாகியிருந்தார். கனிகளை மட்டுமே கொண்டிருந்த பெரும் பழமரமொன்று வெளவாலை இழுத்து அணைத்துக் கொண்டது. கிளை இலை வேர் எங்கும் கனிகள். வெளவாலின் குருட்டுக் கண்களால் கனிகளைக் காணமுடியவில்லை. அதன் சிறு வாயால் எத்தனைக் கனிகளைச் சுவைக்க முடியும்?. வெளவால் அரற்றியது. பைத்தியமானது. தாங்க முடியவில்லை எனக் கதறி அழுதது. கருணைமிக்க அம்மாமரம் எழுந்து அமர்ந்து, வெளவாலை முழுவதுமாய் தன் அமுதம் சுரக்கும் பூக் காம்பினுள் தள்ளியது. அம்மாமுதத்தில் விழுந்த வெளவால் தன் ஆயிரம் வருடப் பிறவியின் பயனை அடைந்தது. இளைப்பாறட்டும் என துர்க்கா, மாமுனியின் களைத்திருந்த கிட்டத்தட்ட சவமாகியிருந்த உடலைத் தன் மீது போட்டுக் கொண்டு விரித்திருந்த அவளின் உடைகளின் மேல் படுத்தாள்.

மலைப் பாம்பொன்று தன் நெடியத் தூக்கத்திலிருந்து பசியோடு விழித்தெழுந்தது. பாறைக் கற்களும் முரட்டு வேர்கள் கொண்ட மஞ்சம் புற்களும் சூழந்திருந்த அதன் உடலை அசைக்க முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன் தலையைத் தூக்கி உடலைச் சுருட்டிப் பின் நீட்டியதில் சில கற்கள் பெயர்ந்து மலைச் சரிவில் உருண்டன. பந்து வடிவில் ஒரு கல் துர்க்காவின் மீது படர்ந்திருந்த மாமுனியின் தலையில் சொத் தென வந்து விழுந்தது. மாமுனி அலறி அந்த ஆழத்திலிருந்தும் அவளின் பருண்ம உடலிலிருந்தும் துள்ளியபடி வெளியே வந்து விழுந்தார்.  

மாமுனி அருகில் விழுந்ததை உணர்ந்த துர்க்கா சலனமில்லாமல் எழுந்தாள். அவரை உலுக்கி எழுப்பிப் பார்த்தாள். தலையைத் தொட்டுப் பார்த்தாள். சொத சொத வென இரத்தம் அப்பிக் கிடந்தது. சற்றுப் பரபரப்பாகித் முதலில் தன் உடைகளை அணிந்து கொண்டாள்.  நிலவொளிக்காய் அவரை வெளியே இழுத்து முகத்தைத் தட்டியபடியே மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சிருந்தது. தலையையைச் சோதித்தாள். சிறிய காயமாகத்தான் தோன்றியது. சேலைத் தலைப்பைக் கிழித்து தலைக்கு ஒரு கட்டு போட்டாள். பெண்ணுடலையே தொட்டுப் பார்த்திராத ஒரு மனிதனாக இவன் இருந்திருப்பானோ என எண்ணிணாள். ஒரு சின்னப் புன்முறுவல் அவள் கடைவாயில் ஒட்டிக் கொண்டது.  எழுந்து பிரதான சாலைக்காய் நடக்க ஆரம்பித்தாள்.

ஆயிரம் கைகளைக் கொண்ட சிம்மவாகினி, அகத்தியர் வசிக்கும் மூடிய குகையின் முன்பு வந்து இறங்கினாள். நெடுந்தொலைவைப் பறந்தே கடந்து வந்திருந்த அவளின் வாகனமான அச்சிங்கம் கடும் சோர்வில் இருந்தது. பெருங்குரலில் தன் வருகையைச் சொன்னது. குகைக்குள் கண்மூடித் தியானத்தில் இருந்த அகத்தியர் அதன் கர்ஜனையைக் கேட்டுக் கண் விழித்தார். தன் நூறு வருட தியானம் ஒரு நொடியில் பாழானக் கோபத்தில் வெளியே வந்தவர் சிம்மவாகினியைக் கண்டு வியந்தார். அவளின் ஆயிரம் கைகளிலும் ஆயிரம் கொலைக்கருவிகள் இருந்தன. அப்போர்க்கோலத்தை உணர்ந்து நடுநடுங்கினார். பாதம் விழுந்து தொழுதார். தாயே என்னைத் தேடி வந்த நோக்கம் என்ன என்று வினவினார். சிம்மவாகினி அவரிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிங்கத்திடம் சொன்னாள். உன் பசியாறிக் கொள். சிங்கம் அவரின் மீது பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட அகத்தியர் அலறியபடியே எழுந்து ஓடினார். அவரின் சகல வித்தைகளும் மறந்து போயின. உயிர் பயத்தில் குழம்பியவர் மலையாய் உருமாரும் மந்திரத்தைச் சொல்வதற்குப் பதில் மானாய் வடிவெடுக்கும் மந்திரத்தைச் சொல்லிவிட்டார். சடுதியில் அகத்திய மாமுனி செழித்து வளர்ந்த புள்ளி மானாய் வடிவெடுத்தார். சிங்கத்தின் பசியுடன் ஆசையும் சேர்ந்து கொண்டது. ஒரேப் பாய்ச்சலில் அப்புள்ளிமானின் அழகியக் கழுத்தைக் கவ்வியது. மாமுனியின் மூச்சுத் திணறியது. உயிர் பயம் மாபெரும் அலறலாய் அடிவயிற்றியில் எழும்பியதே தவிர வாயிலிருந்து வெளிவரவில்லை. திக்கித் திணறி அம்மா என்கிற அலறலோடு எழுந்தார். அருகிலிருந்த காகங்கள் அவரின் சப்தத்தால் பயந்து எழும்பிப் பறந்தன. சூரிய வெளிச்சம் கண்ணைக் கூசியது. மாமுனிக்கு ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை. தலையை ஏதோ அழுந்தியது. தொட்டுப் பார்த்தார். கட்டுப் போடப்பட்டிருந்தது. இரத்தம் தலையிலும் கழுத்திலும் காய்ந்திருந்தது. தலை வலியும் பசியும் சேர்ந்து கொண்டன.

மெல்ல மெல்ல இரவு நிகழ்ந்தவை யாவும் ஒவ்வொன்றாய் அவரின் நினைவிற்கு வந்தது. உடலில் படபடப்புத் தொற்றிக் கொண்டது. தானொரு நர உடலைத் தேர்ந்தெடுத்தது போல தெய்வத்திற்கெல்லாம் தெய்வமானவளும் அப்பெண் உடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறாளோ? எத்தகைய தவறை இழைத்திருக்கிறேன். மாமுனி பயத்திலும் குற்ற உணர்விலும் நடுங்கினார். மிகச் சிரமப்பட்டு எழுந்து நின்றார். போதும் இந்த விளையாட்டுக்களென அவருக்குத் தோன்றியது. கண் மூடி மீண்டும் தன் ஸ்தூல உடலுக்குச் செல்லும் மந்திரத்தைச் சொல்லிக் கண்விழித்தார். தலைவலி மண்டையைப் பிளந்தது. ஐயோ இதென்ன கொடுமை என்று அலறியவராய் மீண்டும் மீண்டும் மந்திரத்தை உச்சரித்துப் பார்த்தார். பசிதான் வயிற்றைக் கிள்ளியதே தவிர ஒன்றும் சம்பவிக்கவில்லை. மாமுனிக்கு எல்லாம் புரிந்தார் போலிருந்தது. இதிலிருந்து விடுபட அவளைச் சரணடைவதே ஒரே வழி என உணர்ந்தவராய் வந்த வழியிலேயே திரும்ப நடக்க ஆரம்பித்தார். அம்மையை எங்கே சென்று தேடுவேன் என அரற்றிபடியே நடந்து கொண்டிருந்தார். காலையிலேயே வெப்பம் தாங்க முடியாததாக இருந்தது. வியர்த்து வழிய பிரதான சாலையை நோக்கி நடையைத் துரிதப்படுத்தினார்.


No comments:

Featured Post

test

 test