தற்செயலாக இருபது வெள்ளைக்காரர்கள் குறுநாவல் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனத்தை வாசித்தேன். திண்ணை இணையப் பத்திரிக்கையில் இரா. ஜெயானந்தன் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் எழுதியிருக்கிறார். சமீபமாகத்தான் கண்ணில் பட்டது. வழக்கமான விமர்சன சொற்களைப் பயன்படுத்தாமல் அவர் மனதிற்கு என்ன பட்டதோ அதை எழுதியிருக்கிறார்.
இருபது வெள்ளைக்காரர்கள் - புத்தக வெளியீட்டு விழாவிற்கு நானே போகவில்லை. எழுதுவதோடு எழுதுபவனின் வேலை முடிந்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். புத்தகம் பார்த்தீர்களா என்கிற சாதாரணக் கேள்வியைக் கூட நண்பர்களிடம் வெகு கவனமாகத் தவிர்த்தேன். என்னுடைய எந்த முயற்சியும் இல்லாமலேயே இருபது வெள்ளைக்காரர்கள் அது சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்தது. படைப்பு அதற்கான வாசகரைத் தேடிக் கொள்ளும் என்பதெல்லாம் உண்மைதான். மேலதிகமாய் இத்தொகுப்பின் மூன்று குறுநாவல்களையும் இணையத்தில்தான் எழுதினேன். உடனுக்குடன் அதை வாசித்தவர்கள் தங்களின் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.
பழி எழுதப்பட்ட காலத்தில் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல புதிய வாசகர்கள் அறிமுகமானார்கள். நானுமே பழியைப் பித்து நிலையில்தான் எழுதினேன். இன்றளவும் எனக்கு பிடித்த நாவல் பழிதான். பழி தந்த பரவசத்தை இனி எப்போதுமே அடையமுடியாது எனதான் நினைக்கிறேன். முதல் நாவல் என்பதால் தோன்றிய எண்ணம் மட்டுமில்லை என்பதை வாசித்தவர்கள் அறிந்திருப்பார்கள். காமமும் வன்முறையும் அதன் ஆழத்திலிருந்து வெளிப்பட்டன. பழியை இரண்டு பாகங்களாக எழுதினேன். இரண்டாம் பாகத்திற்கு அதிகம் உழைக்க வேண்டி இருந்தது. நான் ஒருபோதும் சென்றிருக்காத ஆந்திராவின் பல பிரதேசங்களில் கதை நிகழ்ந்தது. கோதாவரியாறு தொடங்கி கங்காவரம் வரை ஊர்களை கூகுலில் பிடித்தேன். மேப்பைத் துருவித் துருவி கதை நிகழ வேண்டிய களங்களை அமைத்தேன். தெலுங்கு வார்த்தைகள் அனைத்தையும் நண்பர் கென்னிடமிருந்து பெற்றேன். ரோட் மேப் இன்று வரை மனப்பாடமாகி இருக்கிறது. உண்மையிலே பழியை சாகஸ மன நிலையில்தான் எழுதினேன். அப்படியே அது எழுத்திலும் வந்தது. இன்றளவும் நேர்ப் பேச்சில் பழியைப் பற்றி யாராவது பேசுகிறார்கள். பயங்கரமான ரைட்டப் என்பது அவர்களிடமிருந்து வரும் முதல் சொல். அதை ஏன் யாரும் அச்சில் கட்டுரையாக எழுதவில்லை என்பது எனக்குத் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு அது அவசியமும் இல்லை. ஒன்றை எழுதும்போது பெரும் பரவசத்தை விடவா, அதைப் பற்றி பிறர் எழுதி வாசிப்பதில் வந்துவிடப் போகிறது?
மழைக்காலம் நிறையப் பெண் வாசகர்களைத் தந்தது. அதில் பயன்படுத்திய கவிதைகள், புதுவை நகரம், மழை, காமம், பேச்சு, போதை, இளமையின் ஊசலாட்டம் என மிதமான வாசிப்புற்குத் தேவையான எல்லாமும் இருந்தன. என் வாழ்வின் முக்கியமான ஒரு காலகட்டத்தை எழுதிப் பார்க்க விரும்பினேன். எழுத எழுத அது வேறு வடிவத்தைப் பெற்றது. பழிக்கு அப்படியே நேரெதிராய் அந்நாவல் இருந்தது. பெயர் உட்பட மழைக்காலம் நாவலில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் மாற்றவில்லை. அப்படியே இருந்தது, அப்படியே எழுதினேன். சில நண்பர்கள் தாமதமாகப் படித்து அடப்பாவி என்றனர். சிரித்துக் கொண்டேன்.
இருபது வெள்ளைக்காரர்கள் இன்னொரு தளம். சுதந்திரத் தன்மையின் மீதிருக்கும் என் விருப்பமும் அதற்கு நேரெதிரான குமாஸ்தா வாழ்வின் யதார்த்தமும் சேர்ந்து இதை வடிவமைத்திருக்கும் என எண்ணுகிறேன். இதன் திரைக்கதை வடிவம் இன்னும் நன்றாக வந்திருக்கிறது. பார்ப்போம்.
அச்சில் பழியைத் தனியாகக் கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறது. ஓரிதழ்ப்பூவை எழுதி முடித்த உடன் நான்கு குறுநாவல்களையும் தனித் தனியாக அச்சில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஓரிதழ்ப்பூ வை எழுதும் இந்நாட்களில் மனம் முழுக்க திருவண்ணாமலை அடிவாரத்தில் தஞ்சமடைந்திருக்கிறது. அகத்திய மாமுனியை வேறு அங்கு அலையவிட்டிருக்கிறேன். முன்பு வரைவு செய்திருந்த வடிவம் மாறிப் போய்விட்டது. கொஞ்சம் நெருக்கடியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மனம் தீவிரத் தன்மை அடைந்திருக்கிறது. விரைவில் முடித்துவிடுவேன் என நம்புகிறேன்.
இந் நான்கு குறுநாவல்களுக்கும் பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.
திண்ணையில் விமர்சனம் எழுதிய ஜெயானந்தன் அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment