Tuesday, September 6, 2011

இருபது வெள்ளைக்காரர்கள் – குறு நாவல் – காட்சி ஏழு



முகத்தில் ஈர ஸ்பரிசம் பட திடுக்கிட்டு விழித்தேன். ஜோன் எனக்கருகில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். தலைக்கு டவலைச் சுற்றியிருந்தாள். அவசரமாய் உடலைப் பார்த்தேன். ஒரு முழு நீள இரவு ஆடையை அணிந்திருந்தாள். அவளின் முகம் இரவின் பின்னணியில் தாமரையாய் ஜொலித்தது.எழுந்து வெளியில் வா என்றாள். மழை சுத்தமாய் நின்றுவிட்டிருந்தது எல்லா கூடாரங்களிலும் வெளிச்சம் மென்மையாய் கசிந்து கொண்டிருந்தது. கொண்டு வந்திருந்த பேட்டரிகள் உதவியுடன் மையமான இடத்தில் ஒரிரு மின் விளக்குகளை எரியச் செய்திருந்தனர். ஒரு தார்ப்பாயை புல்வெளியின் மீது விரித்திருந்தனர். சிலர் துணியாலான மடக்கு சேர்களை அங்கங்கே சிதறாய் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். சிலர் கண்ணாடித் தம்ளர்களை உறிஞ்சிக் கொண்டும் சிலர் புகைத்துக் கொண்டுமாய் மெளனமாய் அமர்ந்திருந்தனர். நேரம் என்னவாகி இருக்கும் எனத் தெரியவில்லை. எப்படியும் நள்ளிரவாக இருக்கலாம். ஒரு பேரமைதி அந்தப் பிரதேசத்தில் படர்ந்திருந்தது. ஓடையின் நீர் சப்தம் கிட்டத்தட்ட அருவின் இரைச்சலை ஒத்திருந்தது. எல்லோருமே மெளனமாய் அந்த நீர் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்ததைப் போலிருந்தது. சற்றுத் தள்ளி காலியாய் இருந்த சேரில் அமர்ந்து கொண்டேன் ஜோன் போய் தார்ப்பாயில் அமர்ந்து கொண்டாள்.

என் தலையை வருடிய அந்தத் தமிழ்பெண் ஒரு புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். நிசப்த இரவை அந்தப் புல்லாங்குழலிசை மெல்லக் கிழிக்க ஆரம்பித்தது.நீர் சப்தம் சுத்தமாய் கேட்காமல் போய் குழலிசை முழுவதுமாய் மனதை நிறைத்தது. குழலிலிருந்து மாபெரும் துயரம் ஓசையாக வெளிவந்து அனைவரையும் மூழ்கடிக்க ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல அந்த இசை சீராய் உயர்ந்தது. என்னையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தன. நெஞ்சு விம்மி வெடிப்பதைப் போலிருந்தது என்னவென்றே தெரியாத துயரம் முழுமையாய் என்னை ஆட்கொண்டது. அதற்கு மேல் தாங்காமல் வெடித்து அழுதேன். அவள் விடாமல் வாசித்துக் கொண்டிருந்தாள். அங்கங்கே ஓரிருவர் அழ ஆரம்பித்தனர். நான் சேரில் இருந்து ஈரப் புல்தரையில் விழுந்து கதறினேன். ஒருவர் என்னருகில் வந்து அமர்ந்து கொண்டார். அவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. இதயம் எங்கே வெடித்து விடுமோ என பயந்து இசையை நிறுத்தச் சொல்லிக் கதறினேன். அந்தப் பெண்ணிற்கு அதெல்லாம் கேட்டிருக்குமா எனத் தெரியவில்லை. அவரையும் அந்த இசை உள்ளிழுத்துக் கொண்டிருக்க வேண்டும். நான் எழுந்து ஓடிப்போய் அவர் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதேன்.இசை மெல்ல அடங்கியது. தொடர்ந்து விம்மல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

ஜோன் ஒரு கண்ணாடித் தம்ளரை எடுத்து வந்து கையில் கொடுத்து குடி என்றாள். மாட்டேன் எனத் தலையசைத்தேன். குடி எனப் புகட்டினாள். லேசான எரிச்சலாய் புளிப்பாய் அந்த திரவம் தொண்டைக்குள் இறங்கியது. எரிந்து கொண்டிருந்த தீயின் மீது நீர் ஊற்றியதைப் போல நெஞ்சம் தணிந்தது. சற்று நேரத்தில் தன் உணர்வை அடைந்தேன். அழுததிற்காக வெட்கப் பட்டேன். அந்தத் தமிழ்பெண் என்னை உட்கார்ந்த வாக்கிலேயே லேசாய் அணைத்துக் கொண்டாள். மெல்ல அவளை விடுவித்துக் கொண்டு எழுந்து போய் மீண்டும் என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். யாரும் பேசவில்லை. மீண்டும் நீரின் சப்தம்.

இப்போது ரோசலின் கையில் ஒரு வயலின் இருந்தது. ரோசலின் மெதுவாய் கம்பிகளை மீட்ட ஆரம்பித்தாள். சொல்லி வைத்தாற்போல் அதே துயர இசை வேறொரு வடிவத்தில் எங்களை மூழ்கடிக்க ஆரம்பித்தது. இம்முறை உடைந்து போகக் கூடாது என மிகக் கவனமாக இருந்தேன். ஆனால் அடிவயிற்றிலிருந்து பந்தாய் துக்கம் மேலெழுந்தது. அந்தத் தமிழ் பெண் எழுந்து என்னருகே வந்து அமர்ந்து கொண்டாள். கையில் சிகெரெட் புகைந்து கொண்டிருந்தது. குட்டி சேரை எனக்காய் இழுத்துப் போட்டுக் கொண்டு புகைத்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். கம்பியின் அதிர்வுகள் உள்ளுக்குள் கேட்க ஆரம்பித்தன. என் உடல் நடுங்க ஆரம்பித்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். சிகெரெட்டை நீட்டினாள். நான் மறுத்தேன். எழுந்து போய் ஒரு புட்டியோடு வந்தாள். ஒரு மிடறு குடித்துவிட்டு எனக்காய் நீட்டினாள். அவசரமாய் வாங்கி சரித்துக் கொண்டேன். அதே புளிப்பு சுவை ஆனால் எரிச்சல் குறைவாய் இருந்தது.வயிற்றுக்குள் திரவம் போனதும் அதிர்வு அடங்குவது போலிருந்தது. மீண்டும் மடமடவென குடித்தேன். லேசாக உடல் மறத்து நினைவு விழித்துக் கொண்டது. இப்போது அதே இசை வேறொரு மனநிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது.

கம்பியதிர்வுகள் ஒரு மாய வெளியை உருவாக்கின. அந்த வெளிக்குள் நான் திளைத்தேன். மீண்டும் அவளின் கை சிகெரெட்டை எனக்காய் நீட்டியது. இம்முறை வாங்கி புகையை உள்ளிழுத்தேன். தொண்டைக் கமற இருமல் வந்தது. அதிர அதிர இருமினேன். ஓரிரு தலைகள் எனக்காய் திரும்ப ஆரம்பித்ததும் எழுந்து டெண்டிற்காய் தள்ளாடி நடந்தேன். புகை உள்ளே போனதும் பிரளயமொன்று வயிற்றுக் குள் நிகழ்ந்தது போலிருந்தது. பிரட்டிக் கொண்டு வாந்தி வர மறைவாய் ஓடிப் போய் வாந்தி எடுத்தேன். கண்கள் முன் பூச்சி பறக்க தலை கிறுகிறுத்தது தடுமாறி எழுந்தது எச்சிலும் கோழையும் வாயிலிருந்து வடிய நினைவு தன் கடைசி நொடியை இழப்பதற்கு முன்பு ஏதோ ஒரு டெண்டில் போய் விழுந்தேன்.

மேலும்

No comments:

Featured Post

test

 test