Tuesday, September 6, 2011
இருபது வெள்ளைக்காரர்கள் – குறு நாவல் – காட்சி நான்கு
அடுத்த நாள் காலை அந்த வெள்ளைக்காரரும் இரண்டு பெண்களும் என்னைத் தேடி ஆட்டோ ஸ்டேண்டிற்கு வந்தனர். நன்றியை வெகு நேரம் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு அவர் பர்ஸ் எடுத்து நீட்டினார். ஐம்பது ரூபாய் எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன். அவர்கள் மலை சுற்றும் வழியிலிருக்கும் ஒரு ஆசிரமத்திற்கு போக வேண்டுமென்றனர். ஏற்றிக் கொண்டேன். நான் அடிக்கடி சவாரி போகும் ஆசிரமம்தான் அது. மலையடிவாரத்தை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த ஆசிரமம் இறக்கி விட்டதும் காத்திருக்க முடியுமா? எனக் கேட்டனர் சரியென்றேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் இரண்டு பெண்களில் ஒரு பெண் பார்க்க மிகக் கவர்ச்சியாக இருந்தார். அவரைப் பார்க்கவும் முடியாது பார்க்காமலிருக்கவும் முடியாது தவித்துக் கொண்டிருந்தேன். இருவரும் மிகக் குறைந்த ஆடைகளையே அணிந்திருந்தனர் என்றாலும் அதில் ஒருவரை சகஜமாய் பார்க்க முடிந்தது. இன்னொருவரை அவ்வப்போது கண்ணாடியில் இரகசியமாய் பார்த்துக் கொண்டேன். ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்தார்கள். ஆணாய் பிறந்தான் கிராமத்திலிருக்கும் வீட்டிற்கு போகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். மூவரும் சத்தமாகப் பேசியும் சிரித்தும் அவ்வப்போது என்னை ஏதோ கேட்டபடியும் வந்தார்கள். இடையில் ஒரு முறை இரண்டு பெண்களும் தமக்குள் முத்தமிட்டுக் கொண்டனர். கிராம எல்லையிலேயே பிரியும் மண் பாதையில் வண்டியை வளைக்கச் சொன்னார்கள். அரை கி.மீ போனதும் வெள்ளை சுண்ணாம்பு அடித்த உயரமான காம்பவுண்ட் சுவர் வைத்த ஒரு வீடு தென்பட்டது. அங்கு நிறுத்தச் சொன்னார்கள்.
அந்த வெள்ளைக்காரர் என்னை உள்ளே அழைத்தார். நான் தயங்கி மறுத்தேன். அந்த வசீகரமான பெண் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனாள். உயரமான சுவர்கள் வைத்துக் கட்டிய ஒரு ஓட்டு வீடு உள்ளடங்கி இருந்தது. பக்க வாட்டில் இரண்டு புல் வேய்ந்த குடிசைகள் இருந்தன. வீட்டிற்குள் நுழைந்தோம். கூடத்தில் கையில் புல்லாங்குழலோடு நடனமாடும் ஒரு பெரிய கிருஷ்ணர் சிலை வைக்கப்பட்டிருந்தது. வெள்ளைக்காரர்கள் பெரும்பாலும் இரமணரையும் சிவனையும் கும்பிடுவார்கள். முதன் முறையாய் கிருஷ்ணரைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. ஒரு சமையல்காரப் பெண்மணி உள்ளே இருந்து வந்தார். வெள்ளைக்காரர் அவரிடம் எனக்கு சாப்பாடு வைக்கச் சொன்னார். டைனிங் டேபிள் தரையில் அமர்ந்து சாப்பிடும்படி இருந்தது. அவர்கள் பிறகு சாப்பிடுவதாகவும் என்னை இப்போது சாப்பிடும்படியும் வற்புறுத்தினர். நான் ஏகப்பட்ட தயக்கத்தோடு அமர்ந்து சாப்பிட்டேன். நல்ல ருசியான உணவு. சாப்பாடு முடிந்ததும் என்னை அவர்களுக்கு மட்டும் வண்டி ஓட்ட முடியுமாவெனக் கேட்டனர். காலை எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மாலை போய்விடலாம் என்றனர். நான் உடனே சரியென ஒத்துக் கொண்டேன். அந்தப் பெண் என்னை என்னவோ செய்திருந்தார். நாளையிலிருந்து வந்து விடச் சொல்லி முன் பணமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். நான் மறுத்துவிட்டு அப்போது தர வேண்டிய வாடகையை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
அடுத்த நாளிலிருந்து அவர்களுக்கான தனி ஓட்டுனரானேன். அந்த வீட்டில் மொத்தம் ஒன்பது வெள்ளைக்காரர்கள் இருந்தனர். நான்கு ஆண்கள் ஐந்து பெண்கள். ஒன்பது பேரும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். வெள்ளைக்காரர்கள் என்றால் அமெரிக்கர்கள் என்ற என் எண்ணம் மாறியது. ஒன்பதில் ஒருவர் கூட அமெரிக்கர் கிடையாது. டேனிஷ்,பிரெஞ்ச் என எல்லாமும் கலந்திருந்தனர். மாலை ஏழு மணிக்கு அந்த வீடு அதிரத் துவங்கும். எப்படியும் பத்திலிருந்து பதினைந்து பேர் கூடி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என சத்தமாய் பாட ஆரம்பிப்பார்கள். அல்லது பாட்டை ஒலிக்கச் செய்து விட்டு நடனமாடுவார்கள். யாரும் குடித்து நான் பார்க்கவில்லை. ஆனால் கஞ்சா வெள்ளம் போல் ஓடியது. மேலதிகமாய் போதை ஊசிகளையும் மாத்திரைகளையும் பயன்படுத்தினார்கள். எல்.எஸ்டி என ஏதோ பெயர் சொன்னார்கள். மலை சுற்றும் வழியிலிருக்கும் ஆசிரமத்தில்தான் கஞ்சா முதல் எல்.எஸ்.டி வரை எல்லாமும் சில்லறையாக விற்கப் பட்டது. சில காவி உடை அணிந்த உள்ளூர்காரர்களும் அவ்வப்போது அங்கு வருவார்கள். நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். பெரும்பாலும் மாலை ஏழு மணிக்கு பார்டி தொடங்கும்போது கிளம்பிப் போய்விடுவேன். ஓரிரு நாட்களில் சுய நினைவிழந்தவர்களை வீடுகளில் சேர்க்கும் பொறுப்பும் வரும். ஆணாய் பிறந்தான் கிராமத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து தங்கிக் கொண்டேன். நல்ல வருமானம் கிடைத்ததால் உள்ளூரிலேயே சமைத்துப் போட ஒரு பாட்டியை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். இப்படியே மூன்று மாதங்கள் ஓடிப் போயின. ஓரளவிற்கு நிறைவான வாழ்க்கையை வாழ்வது போல் தோன்றியது.
மேலும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
No comments:
Post a Comment