Tuesday, September 6, 2011

இருபது வெள்ளைக்காரர்கள் : காட்சி ஐந்து மற்றும் காட்சி இரண்டு


சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை விடை பெறும் முன் அந்த வெள்ளைக்காரர் என்னை அழைத்தார். அவரின் பெயர் மெக்ராத்தி. மெக் என கூப்பிடுவார்கள். ஒன்பது பேரும் வீட்டை காலி செய்யப் போவதாகவும் என்னை அவர்களோடு அழைத்துப் போக விரும்புவதாகவும் சொன்னார். எங்கு போகிறீர்கள் எனக் கேட்டேன். பெரிதாய் எதுவும் திட்டங்கள் கிடையாதெனவும் இந்த வருட ஹிப்பித் திருவிழா ஜவ்வாது மலை அடிவாரத்தில் நடக்க இருப்பதாகவும் அது முடிந்ததும் அடுத்தது எங்கே போவதென யோசித்துக் கொள்ளலாம் எனவும் சொன்னார். எனக்கு குழப்பமாக இருந்தது நாளை சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு வந்தேன். இரவு முழுக்க யோசனையாய் இருந்தது. அதென்ன ஹிப்பி எனத் தெரியவில்லை. இவர்கள் ஹிப்பிக்கள் என்பதே இன்றுதான் தெரிய வந்தது. போனால்தான் என்ன எனத் தோன்றியது. உள்ளூர அந்த வெள்ளைக்காரப் பெண் மீதிருக்கும் ஈர்ப்புதான் இதற்கு காரணம் என்பதும் புரிந்தது. அவளின் பெயர் ஜோன். இன்னொருத்தியின் பெயர் ரோசலின். மூவர் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும். மற்ற ஆறு பேருடன் புன்னகையோடு சரி. ஜோன் என்னிடம் வெகு அன்பாக நடந்து கொண்டாள். முடிவெடுத்த பின்பு தூங்குவதற்காக முயன்றும் தூங்க முடியவில்லை. வழக்கம்போல் ஜோனை நினைத்துக் கொள்ள வேண்டியதாய் போயிற்று.

அடுத்த நாள் மெக்கிடம் போய் வருவதற்கு சம்மதித்தேன். மெக் மகிழ்ந்து போனான். எல்லாரையும் சத்தமாய் கூப்பிட்டு நான் ஒத்துக் கொண்டதைச் சொன்னான். ஜோன் புன்னகைத்தாள். ரோசலின் நல்லது என்றாள்.மூட்டை முடிச்சுகளை கட்டும் வேலை தொடங்கியது. நான் ஆட்டோ ஓனரிடம் போய் ஆட்டோவைக் கொடுத்தேன். அதிக பட்சம் ஒரு பை என்னிடம் இருந்தது அவ்வளவுதான். நாளைக் காலை கிளம்புகிறோம். ஒரு ட்ராவல்சில் வேன் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஜவ்வாது மலை வரைதான் வாகனம். அதற்குப் பிறகு உள்ளே எட்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டுமாம். இந்த ஊரில் சொல்லிக் கொண்டு போக யார் இருக்கிறார்கள் என யோசித்துப் பார்த்தேன். ஏரியின் நினைவு வந்தது. காலை பத்து மணிக்கு வந்து இங்கு உட்கார்ந்தேன். சூரியன் மறையப் போகிறது இன்னும் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நினைவை பால்யத்திலிருந்தும் பதின்மத்திலிருந்தும் விடுவிக்க பெரும் போராட்டம் நிகழ்த்த வேண்டியிருந்தது. என் ப்ரியத்திற்குறிய ஏரியே போய்வருகிறேன்.

No comments:

Featured Post

test

 test