Thursday, November 11, 2010

அத்தியாயம் 7. துண்டிப்பு

படிக்கட்டுகளில் இறங்கி வரும் அரவம் கேட்டு விஜி தலை தூக்கிப் பார்த்தாள். அவளின் பெரிய கண்கள் சிவந்து, குளமாகியிருந்ததை மென் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. இத்தனை இறுக்கமான, தவிப்பான ஒரு மனநிலை எப்போதும் எனக்கு வாய்த்ததில்லை. என்ன மாதிரியான உணர்விது? என்பதைப் புரிந்து கொள்ள முயன்று தோற்றேன். விஜி மெல்ல தலை தூக்கி என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் தலை கவிழ்ந்து கொண்டாள்.

“விஜி” என்றேன். மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தாள்.
”நான் போறேன்”
”நீங்க எதுக்கு போகனும்? அது தூங்கி எந்திரிச்சதும், நாங்க கிளம்பிடுறோம்” என்றாள்
அதில் தெறித்த விலகலை, சடாரென என்னை யாரோவாய் சித்தரித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
”எப்படி உன்னால முடிஞ்சது விஜி?”
”தெரில. திடீர்னு எனக்கு எல்லாம் தப்பா நடக்கிறா மாதிரி பட்டது.. ஒருவேளை நீங்க ஊருக்குப் போகாம இருந்திருந்தா இது நடந்திருக்காதோ என்னவோ.. நீங்க இல்லாத முத நாள் இரவு என்னால தூங்க முடியல. ஏதோ ஒரு மயக்கம் உங்க மேல இருந்தது போல. அது அன்னிக்கு தீர்ந்தா மாதிரி இருந்தது… நான் என்ன பண்ணிட்டிருக்கேன்னு யோசிச்சப்ப பயமா இருந்தது… என் மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிருச்சி… என் வீட்டுக்காரர் எனக்காகதான் ஒரு கொல பண்ணிட்டு போலிசுக்கு மாட்டாம தலமறைவா சுத்திட்டிருக்கார். நான் என்னடான்னா இன்னொருத்தரோட எந்த குத்த உணர்வுமே இல்லாம ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கேன்னு ஏதோதோ தோண ஆரம்பிச்சிருச்சி… சரியா விடியற்காலைல இந்த மனுசன் கண்ணு முன்னால நிக்குறார்… என்ன மன்னிச்சிடு விஜயான்னு கால்ல விழுந்தார்… பதறிப் போய்ட்டேன்… நீங்க கொடுத்த பணத்த வச்சி ஆந்திரால ஒரு சின்ன கடை போட்டிருக்காராம்... எனக்கு துரோகம் பண்ணிட்டத நெனச்சி இங்கிருந்து போன நாள் ராத்திரில இருந்து தூக்கம் வராம ரொம்ப அழுதாராம்… ஆவறது ஆவுட்டும்னு என்ன கூட்டிப் போக வந்திருக்கார்… உண்மைய சொல்லனும்னா நான் தான் அவருக்கு துரோகம் பண்ணேன்… இன்னொரு ஆளோட மூணு மாசம் வாழ்ந்தும் என்ன வந்து கூட்டிப் போய் வச்சி வாழ நினைக்கிறார்... எனக்கும் அவரோட போறதுதான் சரின்னு படுது… உங்க கிட்ட சொல்லாம போக கூடாதுன்னுதான் ரெண்டு நாள் காத்திருந்தோம்… உங்க கிட்ட வாங்கின பணத்தை இரண்டு மூணு மாசத்துல திருப்பிக் கொடுத்திருவேன்னு சத்தியம் பண்ணி இருக்கார்… உங்களுக்கு என்ன விட நல்ல பெண் கிடைக்கும்... உங்க வாழ்க்க நான் இல்லனாலும் நிச்சயம் சந்தோஷமாதான் இருக்கும்...” விஜி தரையைப் பார்த்தபடி விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

எனக்கு சகலமும் அந்நியமாகிப் போனதைப் போலிருந்தது. கொண்டு வந்திருந்த பையை அப்படியே எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு முன் வாசலுக்காய் நடந்தேன். விஜி பதறிப் பின்னால் வர, திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். விடியற்காலை இருட்டு கண்களுக்கு முன்னால் லேசான குளிருடன் விழித்திருந்தது. விஜி வாசலில் என்னங்க! என்னங்க! என மெல்லமாய் கூப்பிடக் கூப்பிட சாலைக்கு வந்துவிட்டேன். நடை தள்ளாடுவதை உணர முடிந்தது. நீள் சாலையின் இடையிடையே குறுக்கும் மறுக்குமாய் சிறு சிறு சந்துகளிலிருந்து ஆட்டோக்கள் ப்ரேக்குள் தேய கிறீச்சிட்டபடி, வசையுடனும், பெருத்த சப்தத்துடனும் என்னைத் தாண்டிப் போயின. கடற்கரைக்கு வந்துவிட்டிருக்கிறேன். சடுதியில் என் வாழ்வு அற்பமாகிப் போனாற்போலிருந்தது. அப்படியே நடந்து போய் கடலில் கலந்து விடும் உந்துதல்கள் எழ ஆரம்பித்தன.

கரையோரப் பாறைகள் தாண்டி சிறிய மணற்பரப்பில் போய் அமர்ந்து கொண்டேன்.கடல் ஹோ வென இரைந்தது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாமல் இருந்தது. எங்கு போக? என்ன செய்ய? என்றெல்லாம் யோசித்து குழம்பிப் போனேன். இதுதான் வாழ்வு, இதுதான் எதிர்காலம் என்றெல்லாம் நம்பி இருந்த ஒரு விஷயம் திடீரென தன் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்துக் கொண்டு காணாமல் போய்விடுவதன் பயங்கரத்தை நம்பக் கடினமாய் இருந்தது. திரும்பத் திரும்ப எப்படி முடிஞ்சது விஜி? எப்படி முடிஞ்சது விஜி? என்கிற கேள்விகள்தாம் விடாமல் நினைவை மோதிக் கொண்டிருந்தன.

கற்பனையில் போயிருந்த பிரான்ஸ் நகரமும் திராட்சைத் தோட்ட வாழ்வும் கைகொட்டி சிரிப்பதைப் போலிருந்தது. வஞ்சிக்கப்பட்ட உணர்வுகள் பெருகி வழிந்தன. என்னை விஜியின் இடத்தில் வைத்துப் பார்த்து ஏதாவது சமாதானங்களை வலிந்து செய்து கொள்ள முடியுமா என்றெல்லாம் யோசித்தும் கூட விஜி செய்தது துரோகமாகத்தான் எனக்குப் பட்டது. ஆனால் எதுதான் துரோகமில்லை விஜிக்கு நீ செய்தது மட்டும் என்ன? துரோகம்தானே. சமூக ஒழுங்குகளின் அடிப்படையில் உனக்கும் விஜிக்கும் இருந்தது ‘கள்ள காதல்’தானே காதலே கள்ளமாகிவிட்டபின்பு துரோகம் ஏன் நிகழக் கூடாது? சொல்லப் போனால் இந்த துரோகம் என்ற வார்த்தையே மிகுந்த அருவெறுப்பானது, சுயநலமானது. காதலை கள்ளமென ஒத்துக் கொள்ளாத நீ சந்தர்ப்ப சூழலை மட்டும் துரோகம் என முத்திரை குத்துவதேன்? வேலை, குடும்பம் என்றிருந்த பெண்ணை வார்த்தைகளைத் தூவி வளைத்துப் போட்டதுமில்லாமல் அவளை பிழியப் பிழிய மூன்று மாதங்கள் உன் உடல் இச்சைக்கு பயன்படுத்தியுமிருக்கிறாய். இந்தக் கருமத்திற்கு காதல் என்ற பெயர் வேறு ஒரு கேடா?. ஆனாலும் நான் விஜியை காதலித்தேன். மீதமிருக்கும் என் வாழ்நாள் முழுவதையும் அவளோடு வாழ்ந்துவிட தீர்மானித்திருந்தேன். இந்த நிழல் உலகத்திலிருந்து பிய்த்துக் கொண்டு தூரதேசம் எங்காவது ஓடிப்போய் விஜியுடன் வாழவே நான் விரும்பினேன். பிறகு ஏன் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தாய்? சட்டப்படி விஜிக்கு விவாகரத்து கிடைக்க அல்லவா நீ முயற்சி செய்திருக்க வேண்டும்? அவ புருஷன் சமூகத்தின் முன்னால ஒரு குற்றவாளி..போலீசு வேர தேடிட்டு இருக்கு, இந்த லட்சணத்துல எந்த அட்ரஸுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்ப? நீ மட்டும் சமூகத்துக்கு குற்றவாளி இல்லயா?உனக்குலாம் அட்ரஸ் இல்லயா? என்னாங்கடா டேய்? அதான் அவனுக்கு அவ்ளோ பணம் குடுத்திட்டமே, வாங்கிட்டு பல்ல இளிச்சிட்டு வேர போனானே.. இனிமே திரும்ப மாட்டான், எந்த தொந்தரவும் இருக்காதுன்னு நம்புனேன். எல்லாம் சரிதான் ராசா, நீ ஏன் இவளுக்கு தாலி கட்டல? ஏன் வீட்டுக்குள்ளாரயே பொத்தி பொத்தி வச்சிருந்த? ங்கொய்யால அந்த பொண்ணுக்கு துணி போட கூட நீ சுதந்திரம் கொடுக்கல. காமாந்தகப் பேய்டா நீ! என்ன கொடும துணி இல்லாம இருந்தாதான சுதந்திரம். அது உன்னோட கற்பிதம்.. பைத்தியக்காரன் மாதிரி அந்த பொண்ண டார்ச்சர் பண்ணி இருக்க.. அதான் அவ புருசன் வந்ததும் பாதுகாப்பு கருதி போய்ட்டா.. ஒலகத்துல எந்த பொண்ணுமே தன்னோட பாதுகாப்புத்தான் மொத இடம் கொடுப்பா.. அததான் விஜியும் பண்ணியிருக்கா..பொத்திட்டு போய் வேலய பாருடா.

இந்தப் போதை மிகுந்த பின்னிரவில் நானும் நானுமாய் சப்தமாய் சண்டையிட்டுக் கொள்ள துவங்கினோம். உள்ளுக்குள் கேள்விகளும் எதிர்கேள்விகளும் பொங்கிப் பெருகி மண்டைக்குள் ஓயாத கூச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது. என்னை மிக அதிகமாய் வெறுக்கத் துவங்கினேன். விஜியின் மீது ஏற்பட்ட அதிர்ச்சியும் வெறுப்பும் மெல்ல என் மீது திரும்ப ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வெறுப்புகள் அடர்த்தியாய் மிகுந்து வர ஆரம்பித்தன. எந்த அர்த்தமுமே இல்லாத என் இருப்பின் மீது அசாத்திய வெறுப்பும் கோபமும் ஒருமித்து எழுந்தது. எழுந்து ஈர மணலில் சிறிது தூரம் நடந்தேன். மண்டைக்குள் கூய்ச்சல் ஓய்ந்தது போலிருந்தது. தூக்கம் கண்களை அழுத்தவே மணற்பரப்பை ஒட்டி இருளில் தனித்து பிரம்மாண்டமாய் தெரிந்த ஒரு பாறைக்கு அடியில் போய் படுத்துக் கொண்டேன். ஏதேனும் பாம்போ, தேளோ என்னைக் கடித்துக் கொன்றுவிட்டால்கூட நிம்மதியாகப் போகும். மறுநாளை உணரமுடியாமல் போனால் அதுவே எனக்குக் கிடைத்த பெரிய வரம் என வாய்விட்டுச் சொல்லியபடி தூங்கிப் போனேன்.

துரதிர்ஷ்ட வசமாய் ஓரிரு மணி நேரத்திலேயே மீனவர்களால் எழுப்பப்பட்டேன். என் மீது சிறிய கல் ஒன்று வந்து விழுந்தது. எழுந்து பார்த்தபோது நான்கு பேர் நின்றிருந்தனர். அதிகாலையில் கடலுக்கு செல்பவர்கள் போல. வலை சகிதமாய் நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் என்னை கரையில் ஒதுங்கிய பிணம் என நினைத்திருக்கிறார்கள். உயிர் இருப்பதை தெரிந்து கொள்ளவே கல்லெறிந்திருக்கிறார்கள். என்ன? ஏது? என விசாரித்தார்கள். எதுவும் பதில் பேசாது பாறைகளின் மீதேறி சாலைக்கு வந்தேன். கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. ஒரு பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டேன்.

ஆறு மணிக்கு சமீபமாய் ஒருவன் பக்கத்தில் வந்து அமர்ந்தான். “வா போலாம்” என்றான்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்படி இவர்கள் தேவையான போதெல்லாம் மிகச் சரியாக கண்டுபிடிக்கிறார்கள்? என்பது புரியாமலிருந்தது. என்ன செய்ய வேண்டுமென குழம்பி போயிருந்ததில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தோன்றியது பதில் பேசாமல் போனேன். கார் ஒன்று தயாராய் இருந்தது. ஏறிக்கொண்டேன். அழைக்க வந்தவன் கையிலிருந்த ஜோல்னாப் பையில் கைவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியில் எடுத்தான். “இதான் பீசு. ஊர் சேலம். அட்ரஸ் பின்னால இருக்கு. கழுத்த கீறனும். காரியம் முடிஞ்சதும் பின் பக்கமா வெளில போகனும். முன் கதவ தாப்பா போடனும். நாளைக்கு மதியம் ஒரு மணிக்குள்ள நடக்கனும். நீ தங்கப்போற ஓட்டல் வாசல்ல கொண்டுபோய் கார் விடும்.” எனச் சொல்லி முடித்துவிட்டு ட்ரைவருக்கு சைகை தந்தான். காந்தி சிலை தாண்டி கார் நின்றது. இறங்கிக் கொண்டான். கதவை அடித்து சாத்தினான். நான் இருக்கையில் சரிந்து கண்களை மூடிக் கொண்டேன். பின் அவன் வைத்து விட்டுப் போன புகைப்படத்தைப் பார்த்தேன். சிவப்பு நிற சேலையை முக்காடிட்ட வெளுத்த குண்டுப் பெண். சேட்டுப் பெண்ணாய் இருக்கலாம் என நினைத்தபடியே தூங்கிப் போனேன்.

ஓவியம்: salvador dali

- (முதல் பாகம் முற்றும்)
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...