Monday, December 28, 2009

கலைந்து பரவும் காதலும் காமமும் - அய்யனாரின் சிறுகதைகள் - ஜமாலன்

அய்யனாரை எனக்கு பதிவுகள் வழியாக மட்டுமே தெரியும். பதிவுகளில் எழுதத் துவங்கிய காலத்தில் அய்யனார் பதிவுலக பிரபலங்களில் ஒருவராக இருந்தார். இன்றும்கூட தமிழ் பதிவுலகில் அய்யனாருக்கு என்று ஒரு வாசக தளம் உள்ளது. அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்பது வளைகுடாவில் வசிக்கும் இலக்கிய எழுத்துலக அனாதைகள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதிலும் அய்யனாருக்கு வாய்த்த அமீரகத்தின் சுதந்திரங்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டில் வாழ்பவன் நான். புத்தக கடைகள் இல்லாத, திரை அரங்குகள் இல்லாத, பார்-கள், பஃப்-புகள் இல்லாத ஏன் முகந்தெரிய பெண் நடமாட்டம் இல்லாத பிரேமின் “புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்” நாவலில் வரும் வறண்ட “இருள்நகர்“தான் நான் வசிக்கும் நாடு. சங்கத் தமிழகத்தின் திணை திரிந்த பாலையைப்போல இணை திரிந்த பாலையிது. அந்தவகையில் அய்யனாரின் உலகம் இளைப்பாறலுக்கான ஓடைகளும், சோலைகளும் நிறைந்தது, ஈரம் படர்ந்தது, விசாலமானது, பரந்து விரிந்தது. இலக்கியமும், உணர்வுகளும் வறண்ட இந்த பாலையில் திடிரென என்னிடம் அவரது சிறுகதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி தரும்படி கேட்டபோது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. முன்னுரை, பின்னுரை போன்ற உரைகூறும் பழக்கம் இல்லை என்பதைவிட இலக்கிய வாசிப்பும், எழுத்தும் எனக்கு மிகவும் அரிதானவையும்கூட. அய்யனார் எழுத்து புரிவதில்லை என்கிற பதிவுலகில் உள்ள பெயரால், புரியாமல் எழுதும் என்னிடம் முன்னுரை கேட்க எண்ணியிருப்பார் போலும்.

அவரது 30 கதைகளை ஒரேசேர வாசித்தபோது, அவரது இலக்கிய வளர்ச்சியின் படிநிலைகளை புரிந்துகொள்ளமுடிகிறது. எல்லா இலக்கியவாதிகளைப் போலவே தமிழில் சிறுவர்கதை, படக்கதை எனத்துவங்கி கல்கி, சுஜாதா, பாலகுமாரன் என கற்பணாவாதத்தில் (ரொமாண்டிசத்தில்) வளர்ந்து, பாய்ச்சலாக தமிழில் பின்னைய-நவீன எழுத்து முயற்சிகளை இடைவிடாது செய்துவரும் பிரேம்-ரமேஷை வந்தடைந்திருக்கிறார். அய்யனாரின் எழுத்துலகம் என்பது இந்த இரண்டு கடைக்கோடி புள்ளிகளிலும் பேசுபொருளாகக் கொண்டிருப்பது பெண்கள், காதல், காமம் மற்றும் உடல்கள். விடலைப்பருவத்தின் அல்லது அய்யனாரின் வார்த்தைகளில் பதின்மப் பருவக்காதலின் ஏக்கம் தொனிக்கும் கதைகளாகத் துவங்கி, காதல், பிரிவு, துயரம் என்று விகசிக்கும் அந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக காமத்திற்கு தாவி இறுதியில் உடலின் இருத்தலியல் வாதைகளில் முடிவதாக உள்ளன. கதைகளில் வரும் மீராவும், சாராவும் இந்த இரண்டு நிலைகளின் பெண் சித்தரிப்புகளாக உள்ளன. மீரா பாலகுமாரனின் முதிர்-பெண்களை நினைவூட்டுபவள்.

முதல் சிறுகதை தொகுப்பு என்றவகையில் அய்யனாரின் இக்கதை முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. இக்கதைத் தொகுதியில் முதல் 9 கதைகள் சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்து நடைகளைக் கொண்ட கதையாடலாக எழுதப்பட்டிருந்தாலும், அதன் கரு அல்லது கதையின் பேசுபொருள் காதல் மற்றும் பதின்மப் பருவ காதல் முனுமுனுப்புகள் எனலாம். “சாமியார் செத்துப்போனார்” (கதைசொல்லியும் சாமியாரும் இரட்டைகளைப்போல இறுதி வாக்கியங்களில் ஏற்படுத்தும் தடுமாற்றம் கதையினை அடுத்த தளத்தில் நகர்த்திச் செல்கிறது. கதையே சாமியாரின் குறிப்பேட்டின பக்கங்களாக மாறிவிடுகிறது இறுதியில்.) மற்றும் ”சந்தோஷின் கிளி” தவிர மற்றவை காதலை மையமாகக் கொண்டவையே. இவைகள் பெரும்பாலானவர்களின் பதின்மப் பருவ அனுபவங்கள் என்றாலும் அய்யனார் அவற்றை தனக்கென வாய்த்த நேர்ப்பேச்சு தன்மையிலான ஒரு மொழிநடையில் செய்துள்ளார். வழக்கமான வர்ணனைகள் தத்துவ உரையாடல்கள் மூலம் வாசகனுக்கு புதிய உலகையும் தனது தத்துவ முடிச்சுகளையும் அவிழ்த்துவிடும் அளப்பரைகள் போன்ற தமிழின் பெரும் கதாசிரியர்களின் பழகிய பாணிகளைக் கைக்கொள்ளாமல் நேர்ப்பேச்சில் எழுதிச் செல்வது ஆசுவாசமானது. அதனால் வாசிப்பு எளிமையாக உள்ளது. பேச்சும் அனுக்கமாக உள்ளது. ரொமாண்டிசத்தை தாண்டிச் செல்லாத கதைகள் என்றபோதிலும், கதையாடலைவிட உரையாடலை (அதாவது பேச்சை) அதிகம் பயன்படுத்தும் ஒரு உத்தி இவருக்கு வாய்த்துள்ளது. எல்லாக் கதைகளிலும் கதாசிரியன் என்பவனின் தன்கூற்றாகவே கதைகள் எழுதப்பட்டுள்ளன. இது வாசிப்பிற்கு ஒரு இதத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அல்லது தன்முனைப்பின் அறிக்கையிடலாகவோ அல்லது பகற்கனவின் ஒரு எடுத்துரைப்பாகவோ இவை வெளிப்பட்டுள்ளன.

பொதுவாக, இக்கதைகளின் உள்ளார்ந்துள்ள நுட்பம் என்பது இருத்தலியல் வாதை என்பதாக கதாசிரியன் செய்துகொண்டுள்ள கற்பிதம் எனலாம். இக்கற்பிதத்தின் விளைவாகவே, ஆசரியனின் தன்னடையாளக் கதைகளாக இவை வெளிப்பட்டுள்ளது. ரொம்பவும் ஆசுவாசமான விசயம் இக்கதைகளில் தமிழ்ச் சினிமா தந்துள்ள செண்டிமெண்ட என்கிற “உணர்வெழுச்சிகள்“ இல்லை. தனது கதைக்கூறுகளின் எழுத்துருக்களாக படைக்கப்பட்ட பாத்திரங்கள் பற்றி தனது மதிப்பீடுகளை முன்வைப்பதில்லை. 10 வது கதை துவங்கி பின்வரும் கதைகள் சிலவற்றில் பிரேம்-ரமேஷின் பாதிப்பு இருப்பதையும், அப்படி இருப்பதை வாக்குமூலமாகவும் சொல்லிச் செல்கிறது ஒரு கதை. இந்த கடைசி 20 கதைகளில் அய்யனார் பின-நவீனத்துவக் கதைக்கூறலுக்கான முயற்சியில் இறங்கியிருப்பதை வாசிக்க முடிகிறது. துவக்கம் என்றவகையில் இது வரவேற்கத்தக்கது என்றாலும், இவற்றிலும் காதல், காமம் என்கிற எதிர்வுகளுக்கிடையிலேயே கதையாடல் நகர்த்தப்படுகிறது.

இக்கதைகளில் அய்யனாரின் வாசிப்பனுபவம் மற்றும் அரசியல் நுட்பங்களை அறியமுடியும். குறிப்பாக ”பதினான்காம் நகரம்” கதையில் வரும் மதங்களுக்கு எதிரான கதையாடல் மற்றும் ”மூங்கில்பூ” கதையில் வரும் கடவுளரின் உருவகங்கள் முக்கியமானவை. இக்கதைகளில் அய்யனாரின் இலக்கிய வளர்ச்சிக்கான தடத்தை உணர முடிகிறது. இக்கதையாடல்களில் சித்தரிக்கப்படும் சங்கமித்ரா, வீணா, தீவிலிருந்து வந்தப் பெண், உரையாடலினி, கரிபியன் கபேஃவின் கருப்புப் பெண், இரவு முழுக்க டிண்டோ பிராஸ் துவங்கி பலவற்றைப் பேசும் தோழியான பெண், ஆணுடலிலிருந்து அப்புறமாகி பெண் உடலிலும் அப்புறமாகி சாலை நடுவில் அழும் இறகு முளைத்த சாரா - என தமிழ்ச்சமூகத்தில் உள்ளே அழுத்தப்பட்டு மீறிக்கிளம்பும் பெண்கள் அல்ல இவர்கள், இயல்பாக காமத்தையும் தோழமையும் ஏற்கும் பெண்களாக உள்ளனர். இயல்பு மற்றும் இயற்கை இவற்றுடனான ஆசிரியனின் பற்றுருதி ஒரு காரணமாக இருக்கலாம். மனித உடலும், விலங்கின் சுதந்திரத்தை தரும் இறகும், வாலும் என இறகு முளைத்த மீன்-கன்னி என எண்ணத் தோன்றும் சாரா ஒரு தொன்மப் பாத்திரமாக வெளிப்பட்டு பெண்-காமத்தின் உச்சமாக மாறுவதாக ஒடுக்கப்பட்ட உடலின் மீட்பாக எழுதப்பட்டுள்ளது அக்கதை. நிர்வானம், போதை, தியானம், எழுத்து, காமம் என தனது இருத்தலின் வாதையை பதிலீடு செய்ய தவிப்பதாக பெரும்பாலான கதையாடல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. காதல் என்கிற முதற்பகுதி கதைகளைவிட காமத்தைப் பேசும் இந்த இரண்டாவது பகுதி கதைகள் பல அவதானங்களைத் தரக்கூடியவை. சுயஇன்பம், லெஸ்பியானிஸம் துவங்கி பெண் உடலின் காமம் பற்றிய விஷயங்கள் இக்கதைகளில் பேசப்படுகின்றன.

90-களுக்குப்பிறகான தமிழ்ச் சமூகத்தில் உடலைப் பேசுதல் என்கிற ஒரு இலக்கிய வகைமை முதன்மைப் பெற்றது. கெட்டது, அசிங்கம், பொது இடத்தில் பேசக்கூடாதவை என்கிற சமூகத் தணிக்கைக்கு உட்பட்ட பல விடயங்கள் இன்று இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்டு எழுத்தாக மாறி உள்ளன. அத்தகைய எழுத்துக்கள் வழி உடலையும், காமத்தையும் முதன்மைப்படுத்தும் பாலியல் அரசியல் மற்றும் உடலரசியல் போன்றவை இன்று பேசுபொருளாக மாறியுள்ளன. எல்லாமே உடல் குறித்தனவே, உடலுக்கு அப்பால் எதுவும் இல்லை எனத்துவங்கும் இவைகள் தமிழ்ச் சமூகத்தின் காமத்தை முன்னுக்கு கொண்டு வந்து அலசி ஆராய்ந்து கொண்டுள்ளன. அவற்றின் விளைவாக இன்றைக்கான இலக்கிய படைப்புகளான கவிதை, நாவல், கதைகள் எல்லாம் காமத்தை ஒரு முக்கியப் பேசுப்பொருளாக கொண்டுள்ளன. கதைகள் மற்றும் இலக்கிய வாசிப்பின் வழியாக முன்னுக்கு வந்த இந்த அரசியல்கள், இன்று கதைகள் மற்றும் வாசிப்புகளை கட்டமைப்பதாக மாறியுள்ளன. ஆக, காமம் என்பதை உள்ளடக்கியோ விலக்கியோ இந்தவகை எழுத்துக்கள் கட்டமைக்கப்படுகின்றன.

பெண்ணின் காமத்தை ஒரு ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடுகள் முக்கியமானவை. பெண்ணின் காமத்தை பெண்ணே எழுதுவதற்கான சூழலை உருவாக்க இத்தகைய கதைகளும், வாசிப்பும் முன்நகர்த்தப்பட வேண்டியது அவசியம். அத்தைகய ஒரு எழுத்து முயற்சியே அய்யனாரின் இச்சிறுகதைகள். இவற்றில் சில கதைகளாக, பேச்சாக, நிகழ்வுகளாக, கவிதையாக மற்றும் சக இலக்கிய உலக அறிவுஜீவிதத்தின் போலியாக, புல்லரிப்பாக, உடல்மீதான இச்சையாக, உடலை உள்ளடக்கிக் கொள்வதற்கான ஈர்ப்பாக வெளிப்படுகிறது. அத்தகைய ஒரு வெளிப்பாட்டிற்கான முயற்சியே இக்கதைகள். இவற்றை வாசிப்பதன்மூலம் எழுத்தின் ஒரு உடல்சார் தடத்தை பற்றிச் செல்வதற்கு வாசகர்களுக்கு ஒரு வாசலாக இருக்கும். இக்கதைகளை இங்கு விளக்கி விமர்சிப்பது திறந்த ஒரு வாசிப்பனுபவத்தை பாதிக்கும் என்பதால் இந்த அறிமுகக் குறிப்புகளோடு நிறுத்திவிட்டு இனி கதைகளை நீங்களே வாசிக்கத் துவங்கலாம்.

- அன்புடன்
ஜமாலன்
ஜெத்தா - சவுதி அரேபியா
07-12-2009

5 comments:

சென்ஷி said...

என்ன எழுதன்னு தெரியலை. ஜமாலன் அவர்களுடைய முன்னுரையோட உங்க புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கப் போற அந்த நிமிடங்களுக்கான காத்திருத்தலை இருத்தலில் கொண்டும்...

சென்ஷி

நந்தா said...

நானும் ஆவலுடன் காதிருக்கின்றேன்.

ஆடுமாடு said...

புக்பேர்ல முதல்ல உங்க நூல்களை வாங்க முடிவு பண்ணிட்டேன். புத்தகங்களின் வடிவமைப்பு, நன்றாக இருக்கிறது.

தமிழ்நதி, ஜமாலனின் முன், பின், நடு உரைகள் அருமை. வாழ்த்துக்கள்.

அருண்மொழிவர்மன் said...

மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அய்யனார், உங்கள் புத்தகங்கள் இணையமூடான விற்பனைக்கு கிடைக்கின்றனவா?

குப்பன்.யாஹூ said...

மிக அற்புதமான முன்னுரை ஜமாலன், நன்றிகள் பல.

இந்தி பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி அய்யனார், பவா, ஜாமலன், தமிழ்நதி மற்றும் நண்பர்களுக்கு.

ஜமாலன் சொல்வது போல அய்யனார் சக பதிவர்களுக்கும் இலக்கிய சுவையை ஊட்டினார் என்பதே உண்மை.

Featured Post

test

 test