Tuesday, September 15, 2009

இந்தி திரைப்பட இசையும் அற்புத ரகுமானும்

என்னுடைய இந்தி மொழியறிவைப் பொறுத்தவரை இன்னமும் ஏ காவ் மே! ஏ கிஸான்! என்ற அளவில்தான் இருக்கிறது. மலையாளத்தை தடம் பிடித்த அளவிற்கு இன்னமும் இந்தியை முழுமையாய் பிடித்து விட முடியவில்லை. பதின்மங்களில் இந்திப் பாடல் கேட்பதில் ஒரு வித பெருமிதம் இருந்தது. என்னுடைய சகோதரன் நல்ல பாடல்களாய் தேடித்தேடி பதிந்து வைக்கும் கேசட்டுகளை கல்லூரிக்கு எடுத்துச் சென்று பிலிம் காட்டுவதில் எனக்கு அப்போது அலாதி மகிழ்ச்சி இருந்தது. இந்தி பாட்டு கேக்குறான்! இங்கிலீஷ் புக் படிக்கிறான்! என்றெல்லாம் பெண்கள் என்னைப் பற்றிச் சொல்வதாய் கற்பனை செய்து கொண்டு மகிழ்வேன். பின்பு மெல்ல பெண் வசீகரங்கள் போய் பாட்டும் புத்தகமும் மட்டும் ஒட்டிக் கொண்டன. தொண்ணூறாம் வருட இறுதிகளில்தான் நான் "தேரே மேரே பீச்சுமே" வைக் கேட்டு உருகினேன். ஒரு வார்த்தை கூட புரியாதெனினும் உயிரைப் பிழியும் சோகம் அந்தப் பாடலில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் "ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்?" படத்தையும் பார்த்தேன். இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி இந்தி மசாலா திரைப்படங்களின் இசை, கதை, காட்சியமைப்புகளை பத்து வருடங்களுக்கும் மேலாக வேறு தளத்தினுக்கு நகர்த்தாமல் வைத்திருந்தது. மெகா பேமிலிகள், எக்கச்செக்க பாட்டுகள், ஒரு காதல், ஒரு கல்யாணம், ஒரு சாவு என்கிற மசாலா பார்முலாக்களுக்கு முன்னோடியாக இருந்த படமிது. மேலும் இதில் வரும் "தீதி தேரா" வை விட "பெஹலா பெஹலா" பாடலும் "ஹம் ஆப்கே" என்கிற டைட்டில் பாடலும்தான் எனக்கு அதிகம் பிடித்தது. ஒரு படத்தின் பிரபலமான பாடலை விட அதிகம் பேசப்படாத பாடலே என்னை எப்போதும் ஈர்க்கிறது.

ஹம் ஆப்கே விற்குப் பிறகு நான் வசித்த நகரங்களில் வெளியான வணிக இந்தித் திரைப்படங்கள எல்லாவற்றையும் பார்க்கத் துவங்கினேன். "தில்வாலே துல்ஹேனியா", "தில்தோ பாகல் ஹை", " ராஜா இந்துஸ்தானி" என தொடர்ந்த இந்த இந்தி பட ஆர்வம் "குச்குச் ஹோதா" விற்கு பிறகு வடிந்து போனது. ஒரு கட்டத்தில் "என்னா படம் எடுக்கிறானுங்க அரைச்ச மாவயே அரைச்சிட்டு ராஸ்கல்ல்ல்ஸ்!!" என இந்தியை முற்றாக புறக்கணித்துவிட்டேன். ஆனாலும் இந்திப் பாடல்கள் கேட்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. இரண்டாயிரம் வருடத்தின் துவக்கத்தில் "ஏக் லடுகி கோ தேகா சோ ஏசா லகா" தான் விழித்தெழுந்ததும் கேட்கும் பாடலாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சியமைப்பும் நன்றாக இருக்கும். இப்படிப் பட்டும் படாதவாறு இருந்த என் இந்தி இசை ஆர்வம் ரகுமானின் இந்தி நுழைவினுக்குப் பிறகு ஒரு வடிவத்தினுக்கு வந்தது. ரகுமான் இசையமைக்கும் எல்லா இந்தி பட கேசட்டுகளையும் வாங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். தில் சே, யுவா பாடல்களை இந்தியில் கேட்க இன்னும் பிடித்திருந்தது.

நான்கு மாதத்தினுக்கு முன்பான ஒரு இரவில்தான் தில்லி 6 பாடல்களை கேட்டேன். பத்து பாடல்களையும் முழுதாகக் கேட்டபின்பு இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போயிருந்தேன். ரகுமானின் இசை கேட்ட உடனே பிடிக்கும் இசை அல்ல. நாட்பட நாட்பட போதை மிகும் திராட்சை மதுவினைப் போன்றது. ஆனால் தில்லி 6 பாடல்கள் ஏற்கனவே நன்கு ஊறிய மதுவாக இருந்தது. கேட்ட உடனே பிடித்த பாடல் மஸாக்களி தான். அதில் திளைக்கும் உற்சாகத்தினையும் பொங்குதல்களையும் முழுமையாய் அனுபவித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். "மெளலா மேரே!" பாடல் பித்த நிலையின் உச்சம். சூபி தியான நிலையின் இன்னொரு வடிவம் இந்தப் பாடலின் ஆன்மாவினை ஒத்திருக்கலாம். கொண்டாட்டமும், மகிழ்வும், குழைவும், உருகுதலும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட பாடல் இது. நான்கு மாதத்தினுக்கும் மேலாய் என்னைக் கட்டிப் போட்ட பாடல் இதுவெனச் சொல்லலாம். 'தில் கீரா கஹி பல் தஃபதன்' என்கிற பாடல் இன்னொரு அற்புதம். கடைசி இரண்டு நிமிடங்கள் அற்புதத்தின் உச்சம். மெதுவாய் ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகம் கூட்டி நம்மை நிறைக்கும் தந்தி அதிர்வுகள் உடலுக்குள்ளும் பாய்வதை எதைக் கொண்டும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. இந்தப் பாடல் முடிந்த பின்னும் உடல் அதிர்வதை ஒவ்வொரு முறையும் உணரமுடிகிறது. ரகுமானின் மீது மிகப்பெரிய காதலை வரவழைத்த பாடல் "ரெஹ்னா து!" காற்றில் வார்த்தையை லயத்தோடு அடிவயிற்றிலிருந்து துப்பும் வித்தையைத்தான் ரகுமான் அவரது குரலில் நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் பாடலை விட, இசையை விட, ரகுமானின் குரல் எனக்குப் பிடித்திருந்தது. மற்ற ஆறு பாடல்கள் என்னை வசீகரித்ததே தவிர இந்த நான்கு பாடல்களைப் போல பைத்தியம் பிடிக்க வைக்க வில்லை.

இதற்கு முன்பு ஒரே திரைப்படத்தின் பாடல்களை அல்லது ஒரே ஆல்பத்தை தொடர்ச்சியாய் நான்கு மாதங்களுக்கு மேலாய் கேட்டதில்லை. தில்லி 6 பாடல்களை கேட்டிராத நாளே இல்லையெனத்தான் சொல்லவேண்டும். இன்றைய தினம் வரை குறைந்துவிடாத ஈர்ப்புடன் இவ்விசை இருக்கிறது. இதுவரைக்குமான ரகுமானின் இசை வாழ்வில் தில்லி 6 ஒரு அற்புதம். இதை அவராலே தோற்கடிக்க முடிந்தால் அதுவே ரகுமானின் சாதனையாகவிருக்கும். இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வமே எனக்கு இல்லாமலிருந்தது. இந்த இசைக்கு முகங்களையோ, நடன அசைவுகளையோ பொருத்திப் பார்க்க நான் விரும்பவில்லை. டிவிடி வாங்கி வெகு நாள் கழித்து கடந்த வாரம்தான் நண்பர்களோடு பார்த்தேன். இசையை சிதைக்காமல் படமாக்கியிருந்த விதம் மிகுந்த ஆறுதலாய் இருந்தது. "ரெஹ்னா து" இசையும் "மெளலா மேரே" பாடலும் படம் முழுக்க சிதறியிருந்தது மிகுந்த மகிழ்வைத் தந்தது. படத்தில் நிறைய விசயங்களை பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். எதையும் திணிக்காமல் காட்சிகளை அதன் போக்கில் விட்டிருப்பது நல்லதொரு காட்சி அனுபவமாக இருந்தது. " தில் கீரா கஹி பல் தஃபதன்" பாடலுக்கான கற்பனையும் ரசிக்கும்படி இருந்தது. மஸாக்களி பாடல் படு கச்சிதமாய் படமாக்கப்பட்டிருந்தது. தில்லி 6 இந்தி(ய) சினிமாக்களில் நல்லதொரு மாற்றமாகத்தான் இருந்தது.

தில்லி 6 தந்த அதே கிறக்கத்தை அன்வர் படப்பாடல்களும் தந்தன. சொல்லப்போனால் அன்வரில் வரும் "மெளலா மேரே மெளலா" பாடலை தில்லி 6 க்கு முன்பிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வகையில் ரகுமானின் பிரம்மாண்டத்தின் முன்பு Mithoon Sharma, Pankaj Awasthi க்களின் இசை காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அர்ஸியோனுக்கு சற்றும் குறைந்திடாத பாடல்தான் "துசே நைநோ" நண்பர் வெங்கியின் மூலம்தான் இப்பாடலை நான் தவறவிட்டிருந்தது தெரிய வந்தது. அவருக்கு என் நன்றி. மேலும் இப்படத்தில் வரும் மூன்று நிமிட பாடல் வரிகளில்லாத இசை ஆலாபணைகள் இந்த இரவுகளை அழகாக்கிவிட்டுப் போகின்றன.

இவ்விரண்டு தொகுப்புகள் தந்த உற்சாகம் இந்துஸ்தானி, கஜல் மற்றும் சூஃபி இசையைத் தேட வைத்தது. சென்ற வாரத்தில் சில கஜல் மற்றும் சூஃபி குறுந்தட்டுக்களை வாங்கினேன். Nayyara Noor, Noorjehan, Farida Khanum, Shahita Parveen, Munni Begum, Abida Parveen, Reshma போன்ற கஜல் பாடகர்களின் தொகுப்புகளும் கிடைத்தது. இப்பெயர்களை கஜல் மற்றும் உருதுக் கவிதைகளில் நன்கு பரிச்சயமான ஆசாத்திடம் சொன்னபோது
அவர் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்தான் என்றார். விரைவில் வரப் போகும் ஓய்வு நாட்களில் இந்த இசைகள் என் அமைதிப் பொழுதுகளை நிரப்பலாம்.

26 comments:

SurveySan said...

//இவ்விரண்டு தொகுப்புகள் தந்த உற்சாகம் இந்துஸ்தானி, கஜல் மற்றும் சூஃபி இசையைத் தேட வைத்தது. சென்ற வாரத்தில் சில கஜல் மற்றும் சூஃபி குறுந்தட்டுக்களை வாங்கினேன். Nayyara Noor, Noorjehan, Farida Khanum, Shahita Parveen, Munni Begum, Abida Parveen, Reshma போன்ற கஜல் பாடகர்களின் தொகுப்புகளும் கிடைத்தது//

அடேங்கப்பா! எதாச்சும் பிடிச்சா சொல்லுங்க.
எனக்குத் தெரிஞ்சதெல்லாம் jagjit singh மட்டுமே.

பழைய ஹிந்தி பாடல்கள் கேட்க முயற்சிக்கலையா? ரஃபி, முகேஷ், மன்னாடே,கிஷோர் பாட்டு கேட்டால் இன்னொரு புள்ளியில் தொலையும் அனுபவம் கிட்டும்.

வால்பையன் said...

இதையே தான் வேற ஒருத்தரும் சொன்னாரு!
ஆனால் இங்கே வேற பரிமாணம்

இளவட்டம் said...

நல்லா விமர்சனம் பண்ணிஇருக்கீங்க அய்யனார்."மஸாக்களி" பாடல் மிகச்சிறந்த பாடல்.பாடியவர் மிகுந்த உற்சாகத்தோடு பாடியுள்ளார்.அவரது உற்சாகம் நம்மையும் தொற்றி கொள்ளுகிறது."நீங்கள் Shyam Benegalலின் Welcome to Sajjanpur பார்த்து இருக்கீர்களா?

WordsBeyondBorders said...

Hi,

//இவ்விரண்டு தொகுப்புகள் தந்த உற்சாகம் இந்துஸ்தானி, கஜல் மற்றும் சூஃபி இசையைத் தேட வைத்தது. சென்ற வாரத்தில் சில கஜல் மற்றும் சூஃபி குறுந்தட்டுக்களை வாங்கினேன். Nayyara Noor, Noorjehan, Farida Khanum, Shahita Parveen, Munni Begum, Abida Parveen, Reshma போன்ற கஜல்
தொகுப்புகளும் கிடைத்தது//

'Nusrat Fateh Ali Khan'? He was one of the best exponents of Sufi style of music and singing.

Ajay

மண்குதிரை said...

masaakkalai padalum visual lum enakku romba pitikkum

sonamkaporrin pavanaikal arputham

ஆரூரன் விசுவநாதன் said...

"இசையில் கரைந்தேன்" என்ற சொல்லாடலை உறுதிப்படுத்தும் விதமான பதிவு.

நீண்ட இடைவெளிக்குபின் மீண்டும் இன்று அந்த பாடல்களை கேட்டப்போகிறேன்.

பகிர்வுக்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்

ராகவன் said...

அன்பு அய்யனார் அவர்களுக்கு,

ஏறக்குறைய என்னுடைய தளத்திலேயே நீங்கள் இயங்குவதாகப் படுகிறது, உங்களின் இந்த பகிர்வைப் படிக்கும்போது. இது எல்லா ஆர்வக்கோளாறு உள்ள பிரகிருதிகளுக்கே உண்டான நிறங்கள் போலும். இந்தியை பெயரளவு மட்டுமே தெரிந்த எனக்கு உங்களின் பதின்ம கால நினைவகழ்வுகள் எனக்கும் இருந்ததுண்டு. இந்தியில் ஒரு sophistication உண்டு என்று நினைக்கிறேன், ஒரு மிதமிஞ்சிய மென்மை, இறகு நிலை இந்தியில் சாத்தியமாக இருக்கிறது. அதனாலேயே அதன் பாடல்கள் மொழியறிவு இல்லாதவனையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. இதைப்படிக்கும் போது எனக்கு ஒரு லதா மங்கேஷ்கரின் பழைய பாடல், மொஹபத் கி சூட்டி கஹானி பே ரோயே (இதில் பிழை இருக்க வாய்ப்புகளை பொறுக்கவும்) என்னை உருக வைத்துள்ளது (தமிழில் கூட சுசீலா பாடினார் அதே டியூனில், கனவு கண்ட காதல்னு..) அதே கிஷோர் குமாரின், மேரே நாய்னா, சாவன் பாதோ, மேரா ஜீவனு கோரா காகஸ், சிங்காரி கோயி, என்ற பாடல்கள் என்னை கிஷோரின் தீவிர ரசிகனாய் மாற்றியது, இந்தி தெரியாத போதும்.
எதிர் பாலினரை கவர இது போன்ற ரசனைத் தெரிவுகள் இருந்தது மாறி, பாடல்கள் மட்டும் தங்கி விட்டது என்ற உங்களின் கூற்றில் எனக்கு ஏனோ உடன் பாடில்லை, எதிர் பாலினரை கவர்வது, ஜென்ம பரியந்தம் வரை தொடர்வதாகவே படுகிறது எனக்கு எப்போதும். இது என்னுடைய கருத்து மாத்திரமே.

டெல்லி 6 நான் இன்னும் பார்க்கவில்லை, உங்களைப் போலவே dvd வாங்கி வைத்துக் கொண்டு பார்க்காமல் இருக்கிறேன், இன்று பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன். அர்த்தங்கள் புரியும் போது அது நான்காவது பரிமானத்தையும் காட்டுகிறது. இளையராஜாவின் பழைய பாடல்கள், Aur Ek Prem Kahani மற்றும் Cheeni Kum படங்களில் இந்தியாய் கேட்கும் போது இன்னும் சுகமாய் இருக்கிறது உன்மை தான்.

நான் கிறுக்குவதை, உங்களுக்கு நேரம் இருந்தால், koodalkoothan@blogspot.com படித்து மதிப்பிட்டால், என் வளர்ச்சிக்கு உதவும்...

அன்புடன்
ராகவன்

Unknown said...

சூப்பரான பதிவு.

ரெம்பவும் ரசித்து படித்தேன். :)

<<
என்னா படம் எடுக்கிறானுங்க அரைச்ச மாவயே அரைச்சிட்டு ராஸ்கல்ல்ல்ஸ்!!
>>

ஹிஹி...

<<
தில் சே, யுவா பாடல்களை இந்தியில் கேட்க இன்னும் பிடித்திருந்தது.
>>

எனக்கும்தான்.

<<
ரகுமானின் இசை கேட்ட உடனே பிடிக்கும் இசை அல்ல. நாட்பட நாட்பட போதை மிகும் திராட்aசை மதுவினைப் போன்றது. ஆனால் தில்லி 6 பாடல்கள் ஏற்கனவே நன்கு ஊறிய மதுவாக இருந்தது
>>

அருமையான உண்மையான தத்துவமான அனபான பன்பான வரிகள். :D

எனக்கும் ரஹ்மான் என்றாலே மிகவும் பிடிக்க்கும், பாடல் அப்படி கேட்பேன்.

சந்தனமுல்லை said...

தங்கள் பதிவு, "ஹம் ஆப்கே கோன்" காலத்திற்கு என்னைத் தூக்கிச் சென்றுவிட்டது! வீட்டில், ஹிந்திபாடல்கள் RD பர்மன், கிஷோர்குமார் காலத்திற்குப் பின் நின்று போயிருந்தது! மேலும், தமிழ்பாடல்களுக்கு அதுவும் 'உனக்கு நான், எனக்கு நீ' போன்ற பாடல்களுக்கு தடா வேறு!இந்தியிலும் அதுதானென்றாலும் வீட்டில் யாருக்கும் சரியாக புரியாதே! இந்தி பாடல்களும், இந்திபாப்பும் தான் என் பதின்ம வயதில் நிரம்பி இருந்தது! சூஃபி பாடல்கள் கேட்டிருக்கிறேன் - ஹிந்துஸ்தானி, கஜல் என்றாலே ஓடிவிடுவேன்!! ஹரிஹரன் பாடும்போது முகபாவனையை பார்த்தபின்பு என்று நினைக்கிறேன்! :)

அ.மு.செய்யது said...

தில்லி 6ல் வீட்டு மாடியில் ஆன்டிகள் பாடும் ச்சையா சேடு தேவே பாடலை கேட்டீர்களா ???

ராஜஸ்தான் திருமணங்களில் பாடும் பாடல் அது....கிறங்கடிக்கும்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன் அய்யனார்.

உங்கள் எண்ண ஓட்டங்களை அழகாகப் பதிந்துள்ளீர்கள்.

இந்திப் படங்களில் மீது உங்களுக்கு இருந்த மயக்கம் எனக்கு இருந்ததுண்டு. சென்னை மெலோடி, சத்யம் தியேட்டரில் வெளியான பெரும்பாலான படங்களைக் கல்லூரி நாட்களில் பார்த்து வந்தேன். பிறகு சளித்துவிட்டது.

மசக்களி பாடல் உண்மையிலேயே அருமை தான் :) ஆமா மசக்களின்னா என்ன? எங்கூருப் பக்கம் மசக்காளிபாளையம்னு ஒரு ஊரு இருக்குது ;)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//பழைய ஹிந்தி பாடல்கள் கேட்க முயற்சிக்கலையா? ரஃபி, முகேஷ், மன்னாடே,கிஷோர் பாட்டு கேட்டால் இன்னொரு புள்ளியில் தொலையும் அனுபவம் கிட்டும்//

எங்கப்பா AANனு ஒரு படம் சொன்னாரு. பாடல்கள் மிக அருமையா இருக்குமாம். அந்தக் காலத்தில் பல பாடல்கள் அந்தப் படத்திலிருந்து சுட்டார்களாம்

Anonymous said...

facebookல இன்னும் வரல ;)

:)

-டீ

Ayyanar Viswanath said...

சர்வேசன்
பழைய பாடல்களில் கிஷோர் எனக்கு மிகவும் பிடித்தவர்.கஜல்களை கேட்டுவிட்டு நிச்சயம் பகிர்கிறேன்.நன்றி.

வால்
சாருவின் கட்டுரை படித்தேன்.

இளவட்டம் சாஜன்பூர் இன்னும் பார்க்கவில்லை.நினைவூட்டலுக்கு நன்றி.

அஜய்
உண்மைதான் நுஸ்ரத் மிக அற்புதமானவர்தான் அவரது தொகுப்புகளையும் வாங்கியுள்ளேன்.

நன்றி மண்குதிரை

Ayyanar Viswanath said...

ஆரூரன்
கரைந்துதான் போனேன் :) நன்றி.

ராகவன் விரிவான பகிர்வுகளுக்கு நன்றி
cheeni cum பாடல்கள் எனக்கும் பிடித்திருந்தன.குறிப்பாய் jano do na பாடல் இன்று கேட்கவும் புதிதாய் இருக்கிறது.உங்கள் பக்கத்தைப் படித்துவிட்டுப் பகிர்கிறேன்.

நன்றி மஸ்தான்

Ayyanar Viswanath said...

முல்லை
உச்சஸ்தாயில் பாடும்போது முகம் கோணலாகும்தான் அதற்காக பயப்படுவதா :)))
நன்றி.

செய்யது அந்தப்பாடலில் புறா மேய்க்கும் பின்னணியும் மிகுந்த இரசனையானது.நன்றி.

செந்தில் மஸாக்களி என்பது புறாவின் பெயர்.ஒரு வித புறா வகையைத்தான் மஸாக்களி என்கிறார்கள்.நன்றி.

சத்யா
இப்ப வந்திருக்குமே :)

குப்பன்.யாஹூ said...

எனக்கும் உங்களை போலத்தான் ஹிந்தி படங்கள் புடிக்காது. நான் இது வரை முழுதாய் பார்த்த ஒரே ஹிந்தி படம் கயா மத்ஷே கயா தக்.

ரஹ்மான் இசைக்கு பிறகுதான் ஹிந்தி பாடல்கள் கேட்டக ஆரம்பித்தேன், ரங்கீலா, தால், லகான், போன்றவை பிடித்தமான பாடல்கள்.

ஒரு தமிழ் இசை அமைப்பாளர் ஹிந்தியிலும் முன்னேறி வருகிறார் என்ற காரணம் கூட இருக்கலாம், ரஹ்மானின் ஹிந்தி பாடல்கள் மீஎது பிடிப்பு வர.
.

ச.பிரேம்குமார் said...

ஒரு முறை என் பதின்மங்களை திரும்பி பார்த்தது போல் இருந்தது மாப்ள. நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ரகுமான் பாடல்களை முதல் நாளிலேயே வாங்கிக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது :)

Mohandoss said...

அய்யனார்,

டெல்லி 6 பாடல்கள் பிடித்திருந்தாலும் தலை கிறங்க வைத்த பாடல்கள், குலால்-உடையவை.

நான் க்ளாஸ்-மேட்ஸ் மலையாளப்படம் பார்க்கலை, ஆனால் நினைத்தாலே இனிக்கும் பார்த்தேன். குலாலோட கம்ப்பேர் செய்வதற்காக மட்டுமே கூட என்னை கழுவிலேற்றலாம் என்றாலும், குலால் பேசும் அரசியல் அசாத்தியமானது. தேவ்.டி ஐ இன்னமும் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாலும் - குலால் அதன் வகையில் உசத்தியான படம்.

கமினே படம் கிடைத்தால் பாருங்கள், டைரக்டரின் அரசியல் பார்வையும் அதை நகைச்சுவையுடன் கலந்து அளிப்பதிலும் அசாத்தியமான வெற்றி. ஓம்காராவின் அடுத்த படம் என்று சொல்லிக் கொள்ளலாம். இதுவரை பிரியங்கா சோப்ரா என்னைக் கவர்ந்ததில்லை - அயர்ன் பாக்ஸ் மட்டும் காரணமல்ல என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், இந்தப் படம், படத்தில் வரும் பாடல் காரணமாய் தற்சமயம் பிரியங்கா சோப்ரா பித்து பிடித்து அலைகிறேன். கண்ணை மூடினால் அம்மணி ஆடும் நடனம் தான் கண் முன் வருகிறது.

ராணி முகர்ஜிக்குப் பிறகு நடிப்பில் தேர்ச்சியடைந்து வரும் கதாநாயகியாக நான் பிரியங்கா சோப்ராவைப் பார்க்கிறேன்.

//பின்பு மெல்ல பெண் வசீகரங்கள் போய்//

இதைப் பார்த்து நான் பயந்திருக்கிறேன், போய்விடுமோ என்று. போய்விடக்கூடாதென்ற ஆசையுடன். இதன் காரணமாக பிரியங்கா சோப்ராக்கள், சமீரா ரெட்டிகள், அலக்சாண்ட்ரியா அம்ராஸியோக்கள் ஜெஸ்ஸிகா பெஹ்ஹல்லுகள் வாழ்க.

திருமணம் என்னிலிருந்து இந்த பெண் வசீகரத்தை நீக்கிவிடக்கூடாதென்கிற விருப்பம் இருக்கிறது, வெளியில் போய்விட்டதென்று சொல்லும் படியாக வந்தால் கூட பரவாயில்லை உள்ளுக்குள் அப்படி ஒன்று வந்துவிடக்கூடாதென்று நினைக்கிறேன்.

ஆனந்தாகிவிடக்கூடாதென்பதைவிடவும் நீங்கள் சாருவாகிவிடக்கூடாதென்ற எண்ணம் அதிகம் இருக்கிறது ;)

Deepa said...

//தில்வாலே துல்ஹேனியா", "தில்தோ பாகல் ஹை", " ராஜா இந்துஸ்தானி" என தொடர்ந்த இந்த இந்தி பட ஆர்வம் "குச்குச் ஹோதா" விற்கு பிறகு வடிந்து போனது//சரியாக எனக்கும் இதே படத்துக்குப் பிறகு தான் ஹிந்திப் படங்கள் ரொம்பப் பிடிக்காமல் போனது. ஆனால் ஹம் தில் தே சுகே சனம் விதிவிலக்காக வந்தது.

ஆஹா இஸ்மாயில் தர்பார் மிரட்டி இருப்பாரே.

Ayyanar Viswanath said...

taal பாடல்கள் என்னையும் கட்டிப்போட்டிருந்தது ராம்ஜி.நன்றி.

நிர்வாகி நன்றி :)

மோகன்,
கமினேவை சென்ற வாரம் திரையில் பார்த்தேன்.விஷால்பரத்வாஜின் மீதிருந்த நம்பிக்கையின் காரணமாகக் கூட இருக்கலாம்.மகாராஷ்டிரா அரசியலை தொட்டிருப்பதும் ஆரம்ப பிரியங்காவின் உரையாடல்களும் மாற்று சினிமாவிற்கான நம்பிக்கையைத் தந்தாலும் இடைவேளைக்குப் பிறகு படம் வழக்கமான மசாலாதான். பிரியங்காவை எனக்கும் பிடிக்காதுதான் அயர்ன் பாக்ஸ்க்காக அல்ல நெடுநெடு உயரத்திற்காக :)
ஆனால் fashion திரைப்படத்தில் ஏனோ வெகுவாய் பிடித்துப் போனது.

பெண் வசீகரங்கள் நண்பர் ராகவன் சொல்லியிருப்பது போல குறைந்துவிடாத ஒன்றாகத்தான் இருக்கிறது.இங்கு நான் சுட்டியிருப்பது பெண்ணை வசீகரிக்க மெனக்கெடுவதைத்தான்.அதை நான் சரியாக சொல்லவில்லை :)

ஆனந்தாவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது மோகன் சாருவாக வாய்ப்புகள் சற்றுக் குறைவுதான்.அக்கறைக்கு நன்றி :))

குலால் படம் இன்னும் பார்க்காமல் இருக்கிறது பார்த்துவிடுகிறேன்.

Ayyanar Viswanath said...

தீபா
ஹம் தில் தே வில் விரவிக் கிடக்கும் ’ஐஸ்வர்ய’த்தினுக்காகவே அந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போனது நன்றி :)

Ayyanar Viswanath said...

செந்தில் வேலன்
மஸாக்களி என்பது புறாவின் பெயர்தான்.புறா வகை அல்ல தகவலுக்கு நன்றி மோகன்.

Unknown said...

I am in same line with you Ayys...D-6 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது. //தில் சே, யுவா பாடல்களை இந்தியில் கேட்க இன்னும் பிடித்திருந்தது.// கண்ணை மூடிக்கொண்டு 'தில் சே ரே" என்று ரஹ்மான் பாடுவதை கேட்கும் போது உலகை மறப்பேன்...

நல்ல பகிர்வு நன்றி அய்யனார்.

KARTHIK said...

கிட்டதட்ட எல்லாரும் ஒரே இடத்துல தான் ஆரம்பிச்சிருக்கோம்.
race படத்துல வர்ர Pehlinazar,மற்றும் Fashion,Dosthana,D6 பாட்டு தான் இப்போதையே நம்ம பாட்டு லிஸ்ட்.

நல்ல பதிவு அய்ஸ் :-))

Music Composer Vivek Narayan said...

Hi,
I'm Music Composer Vivek Narayan,
Your blog is good, with some good references of A.R.Rahman's Music.

A.R.Rahman is a strict follower of Ustad Nusrat Fateh Ali Khan. Some of his tunes are inspired his compositions.

Continue listening to Ustad Nusrat Fateh Ali Khan to get the feel of Sufi Music. Plenty of free MP3s of Sufi and Ustad Nusrat Fateh Ali Khan's musics are availbale in the net. Download and enjoy.

I wrote a small blog about Ustad Nusrat Fateh Ali Khan, few weeks ago. Read it.

Thanx

Featured Post

test

 test