Monday, September 7, 2009

நடிகைக் கடவுளர்களும் பத்திரிக்கைச் சாத்தான்களும்


மற்றவர்களின் அந்தரங்கம், மற்றவர்களின் ரகசியங்கள் மீது ஏற்படும் ஈர்ப்பினுக்கான காரணங்கள் எவையாய் இருக்குமெனத் தெரியவில்லை. பிராட் பிட்டும் ஏஞ்சலினா ஜூலியும் சமீபமாய் தனித்தனி படுக்கையறையில் உறங்குவதற்கான காரணங்களை இங்குள்ள ஆங்கிலப் பத்திக்கை ஒன்று வண்ணப் புகைப்படங்களுன் அலசி ஆராய்ந்துள்ளது. என் இன்றைய காலையை அச்செய்தியுடன் தான் துவங்கினேன். அந்தப் பக்கத்தை முழுவதுமாய் படித்து முடிக்கும்வரை என் தேநீரை ஒரு மிடறு கூட அருந்தியிருக்கவில்லை. இருக்கைக்குத் திரும்பிய பின்னர் என் செயலின் அபத்தம் உணர்ந்து வெட்கினேன்.

கிசுகிசு உலகத்திலிருந்து தப்பிக்கவே முடியாது போலிருக்கிறது. அதே போல் இவரைப் பற்றி அவர், அவரைப் பற்றி இவர் என மாற்றி மாற்றி நம் முன் உரிக்கப்படும் பிறரின் அந்தரங்கத் தகவல்களையும் தவிர்க்க முடிவதில்லை. அந்தரங்கம் முழுமையாய் தெரிந்தவனே சிறந்த நண்பன் என்கிற நம்பிக்கைகள் நம்மிடையே பொதுவாக இருப்பதால் “எனக்கும் என் நண்பன் / நண்பி / காதலன் /காதலி / மனைவி / கணவனு க்கும் இடையே ரகசியங்களே இல்லை” என சொல்லிக் கொள்வதே நம் அனைவரின் பெருமையாகவிருக்கிறது. அதில் தெறிக்கும் அவநம்பிக்கைகளும் போலித்தனங்களும் ஒருபோதும் நம்மை உறுத்துவதில்லை. இயல்பாக மாறிப்போய்விட்ட இந்தக் கிசுகிசுக் கலாச்சாரத்திலிருந்து அத்தனை சீக்கிரம் வெளியே வந்து விட முடியாதெனத்தான் தோன்றுகிறது.

அயல் வாழ்வு எனக்குச் செய்த நன்மைகளில் மிகவும் முதன்மையானது தமிழ் சூழலில் வெளிவரும் தினசரிப் பத்திரிக்கைகள், இலவச இணைப்புகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் போன்றவைகளின் தொடர்பைத் துண்டித்ததுதான் அல்லது என்னை அவற்றிலிருந்து காப்பாற்றியதுதான். கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக வலைப்பதிவுகள் மட்டுமே என்னை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால் தமிழ் நடிகைகளின் உள்ளாடை அளவுகள், சம்பள விபரங்கள், காதல்கள், படுக்கையறை ரகசியங்கள் போன்ற அரிய தகவல்களை பெற முடியாமல் போனது. அந்தக் குறையைத் தீர்க்கவும் முளைத்திருக்கும் பல வலைப்பதிவுகளை அவ்வப்போது கடந்து போக முடிகிறது. வெகுசனக் குப்பை இதழ்களில் கிசுகிசுக்கள் எழுதிக் கொண்டிருந்த மகாத்மியங்கள் வலைப்பதிவு ஆரம்பித்து அதிலேயும் தங்களின் வக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கும் பக்கமொன்றைச் சமீபத்தில் காண முடிந்தது. நடிகைகளின் அந்தரங்கத்தை கிசுகிசுக்களாக எழுதுபவனின் சட்டைக் காலரைப் பிடித்து “நடிகைக்கும் உன் அம்மாவிற்கும் இருப்பது இரண்டு முலைகள்தாம் தோழரே” என அடித் தொண்டையிலிருந்து கத்த வேண்டும் போலிருந்தது. அப்படிக் கத்த இயலாமல் போனதால் கோபி கிருஷ்ணன் சிறுகதையொன்றில் வரும் “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்ற வாசகத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டேன்.

தமிழ்சூழலைப் பொறுத்தவரை சாமான்ய சினிமா ரசிகனுக்கு நடிகைகள் மீது பெரும் காதலிருக்கிறது. கட்சித் தலைவியிலிருந்து கடவுள் வரைக்குமான அங்கீகாரங்களை சாமான்யன் நடிகைகளுக்குக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறான். ஆனால் சாமான்யனுக்கும் சினிமாவிற்கும் பாலமாய் இருக்கும் அல்லது இருவரையும் தனது பிழைப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளும் வெகுசன/மஞ்சள் பத்திரிக்கைகளும் அதில் தனது வக்கிரங்களை கொட்டித் தீர்க்கும் எழுத்தாள/நிருப புண்ணாக்குகளும் இரண்டு உலகத்திலும் நஞ்சைக் கலக்கின்றனர். சினிமாச் செய்திகள் என்ற பெயரில் எல்லா தமிழ் பத்திரிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டிருப்பதெல்லாம் பெரும்பாலும் வக்கிரத்தைத் தவிர வேரென்னவாய் இருக்கிறது?

குமுதம், விகடன் (குங்குமம் உள்ளிட்ட பிறவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) என்கிற இரண்டு வெகுசனப் பத்திரிக்கைகளும் தமிழ் சினிமாவிற்காக ஆற்றிவரும் தொண்டு அளப்பறியாதது.’ நடிகையின் கதை’ என்கிற பெயரில் குமுதம் கொட்டித் தீர்த்த வக்கிரங்களை நம்மால் அத்தனை எளிதில் மறந்து விட இயலாது. குமுதத்தைப் பொறுத்தவரை வாசகனிடத்தில் எப்போதும் ஒரு நமைச்சலை உண்டாக்கிக் கொண்டிருக்க வைப்பதுதான் அதனது விற்பனைச் சூத்திரமாக இருக்கிறது. நமீதா, சோனா போன்ற பெருத்த உடல் கொண்ட நடிகைகளின் கவர்ச்சிப் புகைப்படங்கள் இல்லாமல் போனால் விகடன் என்னவாகுமெனத் தெரியவில்லை. விகடனின் எப்போதைக்குமான விற்பனைச் சூத்திரமான ரஜினியை நமீதா இந்நேரம் ஓரங்கட்டியிருக்கக் கூடும்.

பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் சினிமாவின் தொழில் நுட்பத்தை, அதன் பின்னாலிருக்கும் நுணுக்கங்களை, எது நல்ல சினிமா என்கிற அடிப்படைத் தகவல்களை, வாசகனிடத்தில் / பார்வையாளனிடத்தில் ஏன் கொண்டு சேர்ப்பதில்லை? ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமிடும் நடிகையின் உடல் மீது மொய்க்கும் புகைப்பட ஒளிகள் ஏன் அத்திரைப்படத்தில் முக்கியப் பங்காற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் மீது விழுவதில்லை?

தமிழ் நடிகைகளின் உடல் இங்கு அனைவருக்குமான மூலதனமாக இருக்கிறது. ஒரு வேளை அனைத்து நடிகைகளும் போர்த்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தால் நம் சூழலில் நிறைய பத்திரிக்கை அலுவலகங்களை மூட வேண்டியிருக்கும். கணிசமான அளவில் வேலை வாய்ப்புகள் பறிபோகும். ஆண்கள் தத்தம் சுய புணர்ச்சி பிம்பத்திற்கான பற்றாக்குறைகளால் நிறைந்து அவரவர் காதலிகளின் / மனைவிகளின் பிம்பத்தையே நினைவில் தருவிக்க வேண்டி வரும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படலாம். இப்படிப் பல வகையில் ஆண் சமூகத்தை உய்விக்கும் கடவுளர்களான நடிகைகளை நம்முடைய ஆழ்மன வக்கிரங்களின் வடிகாலாகவே பார்க்கப் பழகியிருப்பது எத்தனை குரூரமானது! தமிழ் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் தத்தம் அலுவலகங்களில் வைத்திருக்கும் கடவுள் புகைப்படங்களுக்கு மாற்றாய் கவர்ச்சி நடிகைகளின் சிலைகளை நிறுவுவதே நியாயமானது.
Post a Comment

Featured Post

Wild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்

இந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...